Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லேவியராகமம் 23

சிறப்பான பண்டிகைகள்

23 மேலும் கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கீழ்க்கண்ட பண்டிகைகள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த கூட்டங்கள் என்று அறிவி:

ஓய்வு நாள்

“ஆறு நாட்கள் வேலை செய்யுங்கள். ஏழாவது நாள் ஓய்விற்குரிய சிறப்பு நாள். பரிசுத்தமான சபை கூடும் நாள். அன்று ஒரு வேலையும் செய்யக் கூடாது. இது கர்த்தருக்குரிய சிறப்பு ஓய்வு நாளாக உங்கள் வீடுகளில் விளங்கவேண்டும்.

பஸ்கா

“கர்த்தர் தேர்ந்தெடுத்த விடுமுறை நாட்கள். பரிசுத்தக் கூட்டங்கள் கூடும் குறித்த காலங்களை நீ அறிவிக்கவேண்டும். முதலாம் மாதம் 14ஆம் நாள் அந்தி நேரத்தில் பஸ்கா பண்டிகை நடை பெற வேண்டும்.

புளிப்பில்லா அப்பப் பண்டிகை

“அதே (நிசான்) மாதத்தில் 15ஆம் நாள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை வரும். நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தை ஏழு நாட்கள் உண்ணவேண்டும். பண்டிகையின் முதல் நாளில் சிறப்பு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏழு நாட்களிலும் கர்த்தருக்கு தகன பலிகள் வழங்கப்பட வேண்டும். பிறகு ஏழாவது நாளும் சிறப்பான ஒரு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது” என்று கூறினார்.

முதல் அறுவடைப் பண்டிகை

மேலும் கர்த்தர் மோசேயிடம், 10 “இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல். நான் கொடுத்த நாட்டிற்குள் நீங்கள் சென்று அங்கே பயிர் செய்து அறுவடை செய்வீர்கள். அப்போது முதல் கதிரில் ஒரு கட்டை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். 11 ஆசாரியன் அக்கதிரை கர்த்தருடைய சந்நிதியில் அசைப்பான். பிறகு அது ஏற்றுக்கொள்ளப்படும். ஆசாரியன் அசைவாட்டும் பலியை ஞாயிற்றுக்கிழமை காலையில் செய்ய வேண்டும்.

12 “கதிரை அசைவாட்டும் பலி செய்கிற நாளில் ஒரு வயதுள்ள குறையற்ற ஒரு ஆண் செம்மறி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து தகன பலியாகக் கொடுக்க வேண்டும். 13 நீங்கள் தானியக் காணிக்கையையும் வழங்க வேண்டும். 16 கிண்ணங்கள் அளவுள்ள அரைத்த மாவையும், ஒலிவ எண்ணெயையும் கலந்து பலியாக வழங்க வேண்டும். மேலும் திராட்சைப் பழரசத்தில் கால் படியும் கொடுக்க வேண்டும். இக்காணிக்கையின் மணமானது கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். 14 புதிய தானியத்தையோ, பழங்களையோ, புதிய மாவால் செய்த அப்பத்தையோ உங்கள் தேவனுக்கு பலிகளை செலுத்துவதற்கு முன் உண்ணக் கூடாது. இது உங்கள் தலைமுறை தோறும் தொடர வேண்டிய சட்டமாகும்.

பெந்தெகோஸ்தே பண்டிகை

15 “அறுவடை செய்த கதிரை கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலியாக வழங்கிய ஞாயிறு காலையிலிருந்து ஏழு வாரங்களை எண்ணுங்கள். 16 50 நாட்களுக்குப் பிறகு வரும் ஏழாவது ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்கு புதிய தானியக் காணிக்கைகளை கொண்டு வாருங்கள். 17 அன்று உங்கள் வீட்டிலிருந்து இரண்டு அப்பங்களைக் கொண்டு வாருங்கள். இவை அசைவாட்டும் பலிக்குரியவை. 16 கிண்ணங்கள் அளவுள்ள மாவைப் புளிப்பு சேர்த்து அந்த அப்பங்களைத் தயார் செய்யப் பயன்படுத்துங்கள். இது முதல் அறுவடையானதும் கர்த்தருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய காணிக்கையாகும்.

18 “ஒரு காளை, இரண்டு ஆட்டுக்கடா, ஒரு வயது நிறைந்த ஏழு ஆட்டுக் குட்டிகளையும் தகனபலியாக தானியக் காணிக்கையோடு ஜனங்கள் கொடுக்க வேண்டும். அம்மிருகங்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது. அவற்றைத் தகன பலியாக செலுத்த வேண்டும். இதன் வாசனை கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். 19 மேலும் நீங்கள் பாவப்பரிகார பலியாக ஒரு ஆட்டுக் கடாவையும், சமாதான பலியாக ஒருவயதான இரண்டு ஆண் ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவர வேண்டும்.

20 “ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலி செலுத்தவேண்டும். முதல் அறுவடையின் தானிய மாவால் செய்த அப்பத்தோடு இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் அசைவாட்டும் பலியாக செலுத்த வேண்டும். கர்த்தருக்குப் பரிசுத்தமான அவைகள் ஆசாரியர்களுக்கு உரியவை. 21 அதே நாளில் நீங்கள் பரிசுத்தமான சபைக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும். அன்று வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. எக்காலத்திற்கும் உங்கள் தலைமுறைதோறும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்.

22 “நீங்கள் உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது, வயலின் மூலைகள் வரை சேர்த்து அறுவடை செய்யாதீர்கள். தரையில் விழுந்த தானியங்களை பொறுக்காதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும், அந்நியர்களுக்கும், வழிப்போக்கருக்கும் பயன்படும்படி விட்டுவிடுங்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.

எக்காளப் பண்டிகை

23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 24 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஏழாவது மாதத்தில் முதல் நாள் உங்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாள் உண்டு. அன்று பரிசுத்த சபைக் கூட்டமும் உண்டு. அன்று எக்காளத்தை ஊதி சிறப்பு நேரத்தை நினைவூட்ட வேண்டும். 25 அன்று ஒரு வேலையும் செய்யாமல் கர்த்தருக்குரிய தகனபலியைச் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

பாவப்பரிகார நாள்

26 கர்த்தர் மோசேயிடம், 27 “ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாவப்பரிகாரம் செய்யும் பண்டிகை வரும். அப்போது ஒரு பரிசுத்த சபைக் கூட்டம் உண்டு. அன்று வேலை எதையும் செய்யாமலும், சாப்பிடாமலும் இருக்க வேண்டும். கர்த்தருக்குரிய தகன பலியைக் கொண்டு வரவேண்டும். 28 அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால் அது பாவப் பரிகாரநாள். அந்நாளில் ஆசாரியர்கள் கர்த்தருடைய சந்நிதியில் உங்களைச் சுத்திகரிப்பு செய்யும் சடங்குகளைச் செய்வார்கள்.

29 “அன்று எவனாவது உபவாசம் இருக்க மறுத்தால் அவன் தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிக்கப்படுவான். 30 இந்நாளில் எவனாவது வேலை செய்தால் அவனை மற்ற ஜனங்களிடமிருந்து நான் அழித்துப் போடுவேன். 31 நீங்கள் எந்த வேலையும் அன்று செய்யக்கூடாது என்பது என்றென்றும் தொடர்ந்து வருகிற சட்டமாகும். 32 அது உங்களுக்கு ஒரு சிறப்பான ஓய்வு நாளாகும். அந்நாளில் வேறு எதுவும் நீங்கள் செய்யாமல் தாழ்மையான மனதுடன் இருக்க வேண்டும். அந்த சிறப்பான பண்டிகை அம்மாதத்தின் ஒன்பதாவது நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலைவரை தொடர்ந்திருக்கும்” என்று கூறினார்.

கூடாரப் பண்டிகை

33 கர்த்தர் மோசேயிடம், 34 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு; ஏழாவது மாதத்தின் 15 ஆம் தேதி முதல் ஏழுநாட்கள் கூடாரப் பண்டிகை நடைபெறும். 35 முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 36 நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே பரிசுத்த சபைக் கூட்டமாகும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.

37 “இவை கர்த்தரின் சிறப்பான விடுமுறைகள். அந்நாட்களில் பரிசுத்த சபைக் கூட்டங்களும் நடைபெறும். நீங்கள் கர்த்தருக்குத் தகன பலிகளையும், தானிய காணிக்கைகளையும், பானங்களின் பலியையும் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும். 38 கர்த்தரின் ஓய்வு நாட்களை நினைவுபடுத்துவதோடு இந்த விடுமுறை நாட்களையும் நீங்கள் கொண்டாடவேண்டும். மற்ற அன்பளிப்போடு இவைகளையும் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். சிறப்பான பொருத்தனைகளுக்கான பலிகளையும் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். கர்த்தருக்காகச் சிறப்பாக கொடுக்கப்படும் பலிகளோடு இவைகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

39 “ஏழாவது மாதத்தின் 15வது நாளில் நிலத்தின் விளைச்சலைச் சேர்த்து வைக்கும்போது கர்த்தருக்கு ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதல் நாளிலும் எட்டாவது நாளிலும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். 40 முதல் நாள் பழமரங்களில் இருந்து நல்ல பழங்களையும், ஈச்சமரத்தின் கிளைகளையும், தழைத்துள்ள மரக்கிளைகளையும், வில்லோ மரக்கிளைகளையும் எடுத்துகொண்டு வந்து, ஏழு நாட்கள் தேவனாகிய கர்த்தரின் சந்நிதானத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். 41 ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகையை கர்த்தருக்கு முன் ஏழு நாட்கள் கொண்டாடுங்கள். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியவையாகும். இதனை நீங்கள் ஏழாவது மாதத்தில் கொண்டாட வேண்டும். 42 நீங்கள் ஏழு நாட்களிலும் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருக்கவேண்டும். இஸ்ரவேலில் பிறந்த அனைத்து ஜனங்களும் இக்கூடாரங்களில் தங்க வேண்டும். 43 ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வரும்போது நீங்கள் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருந்தீர்கள் என்பதை உங்கள் சந்ததியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.

44 எனவே, மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தரைக் கனப்படுத்துகிற பண்டிகைகளைப்பற்றிக் கூறினான்.

சங்கீதம் 30

தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.

30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
    எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
    எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
    நீர் என்னைக் குணமாக்கினீர்.
கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
    என்னை வாழவிட்டீர்.
    குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.

தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
    அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”.
    ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
    மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!

இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
    அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
    “நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
    எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
    நான் மிகவும் பயந்தேன்.
தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
    எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
    மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
    என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
    என்னிடம் தயவாயிரும்!
    கர்த்தாவே, எனக்கு உதவும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
    என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
    மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
    ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
    எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

பிரசங்கி 6

செல்வம் மகிழ்ச்சியைக்கொண்டு வராது

வாழ்க்கையில் நான் நேர்மையாக இல்லாத இன்னொன்றையும் பார்த்திருக்கிறேன். இதனைப் புரிந்துக்கொள்ளவும் கடினமாக இருக்கிறது. ஒருவனுக்கு தேவன் பெருஞ்செல்வத்தையும், சிறப்பையும், சொத்துக்களையும் கொடுக்கிறார். ஒருவன் தனக்குத் தேவையானவற்றையும் தான் விரும்புகின்றவற்றையும் பெற்றுக்கொள்கிறான். ஆனால் தேவன் அவனை அவற்றை அனுபவிக்கும்படி விடுவதில்லை. எவனோ ஒரு அந்நியன் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போகிறான். இது மிகவும் மோசமான அர்த்தமற்ற ஒன்றாகும்.

ஒருவன் நீண்டகாலம் வாழலாம். அவனுக்கு 100 பிள்ளைகள் இருக்கலாம். ஆனால், அவன் நல்லவற்றில் திருப்தி அடையாவிட்டால், அவன் மரித்தப் பிறகு அவனை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளாவிட்டால், அவனைவிட பிறக்கும் முன்பே மரித்துப்போகும் குழந்தை சிறந்தது என்று என்னால் சொல்ல முடியும். ஒரு குழந்தை மரித்தே பிறக்குமானால் அது உண்மையில் பொருளற்றது. அது விரைவில் இருண்ட கல்லறைக்குள்ளே பெயர்கூட இல்லாமல் புதைக்கப்படும். அது சூரியனைப் பார்த்ததில்லை. அது எதையும் அறிந்துக்கொள்வதில்லை. தேவன் கொடுத்தவற்றை அனுபவிக்காத ஒருவனைவிட அது அதிக ஓய்வைப் பெறும். அவன் 2,000 ஆண்டுகள் வாழ்ந்தவனாக இருக்கலாம். எனினும் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்காவிட்டால், மரித்துப் பிறக்கும் குழந்தை அதே முடிவுக்குச் செல்ல எளிய பாதையைக் கண்டடைகிறது.

ஒருவன் மேலும் மேலும் வேலை செய்கிறான். ஏனென்றால், அவன் தனக்கு உணவு தேடிக்கொள்ளவே அவ்வாறு உழைக்கிறான். அதனால் அவன் திருப்தி அடைவதில்லை. இந்த வழியில், ஞானமுள்ள ஒருவன் அறிவற்றைவனைவிடச் சிறந்தவன் இல்லை. வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்வதை அறிந்த ஏழையாக இருப்பது நல்லது. நாம் மேலும் மேலும் பெறவேண்டும் என்று விரும்புவதைவிட இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சி அடைவதே நல்லது. எப்பொழுதும் மேலும் மேலும் விரும்புவது பயனற்றது. அது காற்றைப் பிடிக்கும் முயற்சியைப் போன்றது.

10-11 ஒரு மனிதன் தான் உருவாக்கப்பட்ட வண்ணமே, அதாவது மனிதனாக மாத்திரம் இருக்கிறான். இதைப்பற்றி விவாதம் செய்வது வீணானது. ஒருவன் இதைப்பற்றி தேவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாது. ஏனென்றால் தேவன் மனிதனைவிட வல்லமை வாய்ந்தவர். நீண்ட விவாதங்கள் உண்மையை மாற்றிவிட முடியாது.

12 பூமியில் ஒருவனது குறுகிய வாழ்நாளில், எது சிறந்தது என்று எவருக்குத் தெரியும்? அவனது வாழ்க்கை நிழலைப்போன்று கடந்துபோனது. பின்னால் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல முடியாது.

2 தீமோத்தேயு 2

நம்பிக்கைக்குரிய வீரன்

தீமோத்தேயுவே, நீ என் மகனைப் போன்றவன். இயேசு கிறிஸ்துவிற்குள் நாம் கொண்டுள்ள கிருபையில் உறுதியாக இரு. நீ கேட்ட என் போதனைகள் மற்றவர்களுக்கும் கூட போதிக்கப்பட வேண்டும். நீ விசுவாசம் வைத்திருக்கிற மக்களிடம் எல்லாம் அதனைப் போதிப்பாயாக. பிறகு அவர்களாலும் அவற்றை ஏனைய மக்களுக்குப் போதிக்க முடியும். நாம் அனுபவிக்க நேரும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம். அவற்றை ஒரு உண்மையான போர் வீரனைப்போன்று ஏற்றுக்கொள்வோம். போர் வீரனாயிருக்கும் ஒருவன் எப்பொழுதும் தனது மேலதிகாரியைத் திருப்திப்படுத்தவே விரும்புவான். எனவே அவன் மற்றவர்களைப் போன்று தன் பொழுதை வேறுவகையில் போக்கமாட்டான். விதிமுறைகளின்படி போட்டியிடாமல் எந்த விளையாட்டு வீரனாலும் வெற்றிக் கிரீடத்தை அடைய முடியாது. பாடுபட்டு விளைய வைக்கிற விவசாயியே, விளைச்சலின் முதல் பகுதி உணவை உண்பதற்குத் தகுதியானவன். நான் சொல்லிக்கொண்டிருக்கிற விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார். இவை பற்றிய முழுமையான அறிவை கர்த்தர் உனக்குத் தருவார்.

இயேசு கிறிஸ்துவை ஞாபகப்படுத்திக்கொள். அவர் தாவீதின் குடும்பத்திலிருந்து வந்தவர். இறந்த பிறகு அவர் மரணத்திலிருந்து எழுந்தார். இதுதான் நான் சொல்லும் நற்செய்தி. நான் இதனைச் சொல்வதால் பலவித துன்பங்களுக்கு உட்படுகிறேன். நான் ஒரு குற்றவாளியைப் போல் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறேன். ஆனால் தேவனுடைய போதனைகள் கட்டப்படவில்லை. 10 ஆகையால் நான் பொறுமையோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். தேவனால் தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் உதவும் பொருட்டே நான் இதனைச் செய்தேன். இதனால் மக்கள் இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பைப் பெறுவார்கள். அதனால் முடிவற்ற மகிமையைப் பெறுவர்.

11 இந்தப் போதனை உண்மையானது:

நாம் இயேசுவோடு மரணமடைந்திருந்தால் பிறகு நாமும் அவரோடு வாழ்வோம்.
12 நாம் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் பிறகு அவரோடு ஆட்சியும் செய்வோம்.
நாம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தால் பிறகு அவரும் நம்மை ஏற்க மறுப்பார்.
13 நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார்.
    ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட வேலையாள்

14 மக்களிடம் இவற்றைத் தொடர்ந்து சொல்லுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதபடி தேவனுக்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அது எவருக்கும் உதவாது. அதைக் கவனிப்பவர்களையும் அழித்து விடும். 15 தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறவகையில் அவரிடம் உங்களை ஒப்படைக்க உங்களால் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். தன் வேலையைப்பற்றி வெட்கப்படாத வேலையாளாக இருங்கள். கிறிஸ்துவின் உண்மையான போதனைகளைச் சரியான வழியில் போதியுங்கள்.

16 தேவனிடமிருந்து பெறப்படாத, பயன் இல்லாத காரியங்களைப் பேசுவோரிடமிருந்து விலகி இருங்கள். அவ்வகை பேச்சுகள் ஒருவனை மேலும் தேவனுக்கு எதிராக்கும். 17 அவர்களின் தீய போதனைகள் சரீரத்துக்குள் நோய் பரவுவது போன்று பரவும். இமெநேயுவும், பிலேத்துவும் இத்தகையவர்ளே. 18 அவர்களின் போதனைகள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. மரணத்திலிருந்து எழுங்காலம் ஏற்கெனவே நடந்து முடிந்துபோனது என்று அவர்கள் போதிக்கிறார்கள். அந்த இருவரும் சில மனிதர்களின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள்.

19 ஆனால் தேவனின் பலமான அஸ்திபாரம் அப்படியே தொடர்ந்து உள்ளது. அஸ்திபாரத்தின்மீது, “கர்த்தருக்குத் தன்னைச் சேர்ந்தவர்கள் எவரென்று தெரியும்.” “கர்த்தரில் விசுவாசம் கொள்கிற ஒவ்வொருவரும் தவறு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” [a]என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது.

20 ஒரு பெரிய வீட்டில் பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன. அதோடு மரத்தாலும், மண்ணாலும் செய்யப்பட்ட பொருட்களும் உள்ளன. சில பொருட்கள் சில விசேஷ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவை பிற காரியங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு உள்ளன. 21 எவனொருவன் தீய காரியங்களில் ஈடுபடாமல் விலகி தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ அவன் சிறப்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்குப் பயன்படுபவனாக இருப்பான். அவன் எவ்வித நற்பணி செய்யவும் தயாராக இருப்பான்.

22 ஓர் இளைஞன் செய்ய விரும்புகிற தீய செயல்களில் இருந்து விலகி இருங்கள். சரியான வழியில் வாழவும், விசுவாசம், அன்பு, சமாதனம் ஆகியவற்றைப் பெறவும் கடுமையாக முயற்சியுங்கள். 23 இவற்றை நீங்கள் சுத்தமான இதயம் உள்ளவர்களோடும் கர்த்தரிடம் நம்பிக்கை உள்ளவர்களோடும் சேர்ந்து செய்யுங்கள். முட்டாள்தனமான அறிவற்ற விவாதங்களில் இருந்தும் விலகி நில்லுங்கள். இப்படிப்பட்ட விவாதங்கள் வளர்ந்து பெரிதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 24 கர்த்தருடைய ஊழியன் சண்டைக்காரனாக இருக்கக் கூடாது. அவன் எல்லோரிடமும் இரக்கத்துடன் இருத்தல் வேண்டும். அவன் நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் பொறுமையுள்ளவனாக இருக்க வேண்டும். 25 தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும். அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் தேவன் அவர்களின் மனத்தையும் மாற்றுவார். 26 பிசாசானவன் இத்தகைய மக்களை வலை போட்டுப்பிடித்து தன் விருப்பப்படி செயல்பட வைப்பான். எனினும் அவர்கள் விழித்தெழுந்து, பிசாசு தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து, தம்மைப் பிசாசின் வலைக்குள் இருந்து விடுவித்துக்கொள்வர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center