M’Cheyne Bible Reading Plan
மோசேயின் பாட்டு
15 அப்போது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரை நோக்கி பின்வரும் பாடலைப் பாடினார்கள்:
“நான் கர்த்தரைப் பாடுவேன்!
அவர் பெருமைமிக்க செயல்களைச் செய்தார்,
அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலில் தள்ளினார்.
2 கர்த்தரே எனது பலம். அவர் என்னை மீட்கிறார்.
நான் அவரைத் துதித்துப்பாடுவேன் கர்த்தரே எனது தேவன், நான் அவரைத் துதிப்பேன்.
கர்த்தர் எனது முற்பிதாக்களின் தேவன்.
நான் அவரை மதிப்பேன்.
3 கர்த்தர் யுத்தத்தில் சிறந்தவர்,
கர்த்தர் என்பது அவரது பெயர்.
4 பார்வோனின் இரதங்களையும், வீரர்களையும் அவர் கடலில் தள்ளினார்.
பார்வோனின் சிறந்த வீரர்கள் செங்கடலில் அமிழ்ந்தனர்.
5 ஆழியின் தண்ணீர் அவர்களை மூடிக்கொண்டது.
அவர்கள் கடலினடியில் பாறைகளைப்போல் மூழ்கிப்போயினர்.
6-7 “உமது வலது கரம் வியக்கத்தகும் வல்லமை உடையது.
கர்த்தாவே, உமது வலது கரம் பகைவர்களைச் சிதறடித்தது.
உமது பெருமையால் உமக்கு எதிராக நின்ற ஜனங்களை நீர் அழித்தீர்.
உமது கோபம் அவர்களை வைக்கோலில் பற்றும் நெருப்பைப் போல அழித்தது.
8 உமது உக்கிரத்தின் பெருமூச்சால் தண்ணீர் மேலெழும்பிற்று, ஒழுகும் தண்ணீர் திடமான சுவராயிற்று.
ஆழத்தின் அஸ்திபாரம்வரைக்கும் கடல் தண்ணீர் திடன் கொண்டது.
9 “நான் தொடர்ந்து பிடிப்பேன், ‘நான் அவர்கள் செல்வத்தைப் பறிப்பேன்.
எனது வாளால் அவற்றை அபகரிப்பேன்.
நான் எல்லாவற்றையும் எனக்காக எடுப்பேன்’ என்று பகைவன் சொன்னான்.
10 ஆனால் நீர் அவர்கள் மேல் ஊதி, கடலால் அவர்களை மூடினீர்.
ஆழ்கடலில் அவர்கள் ஈயத்தைப் போல மூழ்கினார்கள்.
11 “கர்த்தரைப்போன்ற தேவர்கள் உள்ளனரோ?
இல்லை! உம்மைப்போன்ற தேவர்கள் எவருமில்லை!
நீர் மேலான பரிசுத்தமானவர்!
நீர் வியக்கத்தக்க ஆற்றல் வாய்ந்தவர்!
நீர் மாபெரும் அற்புதங்கள் செய்பவர்!
12 வலதுகரத்தை உயர்த்தி உலகத்தை அழிக்க உம்மால் முடியும்.
13 ஆனால் உமது இரக்கத்தால்
நீர் மீட்ட ஜனங்களை வழிநடத்துகிறீர்.
உமது வல்லமையால் அவர்களைப் பரிசுத்தமும்,
இன்பமுமான நாட்டிற்குள் நடத்துகிறீர்.
14 “பிற ஜாதிகள் இதைக் கேட்டு, பயந்து நடுங்குவார்கள்.
பெலிஸ்தியர் பயத்தால் நடுங்குவார்கள்.
15 ஏதோமின் தலைவர்கள் பயத்தால் நடுங்குவார்கள்.
மோவாபின் தலைவர் பயத்தால் நடுங்குவார்கள்.
கானானின் ஜனங்கள் துணிவிழப்பார்கள்.
16 அவர்கள் உமது ஆற்றலைக் காண்கையில் அச்சத்தால் நிரம்புவார்கள்.
கர்த்தரின் ஜனங்கள் செல்லும்மட்டும், உம்மால் உண்டாக்கப்பட்ட உமது ஜனங்கள் கடந்து செல்லும்மட்டும் அவர்கள் உறுதியான பாறையைப் போல ஸ்தம்பித்து நிற்பார்கள்.
17 கர்த்தாவே நீர் உம்முடைய ஜனங்களை உம்முடைய மலைக்கு வழிநடத்துவீர்.
உமது சிங்காசனத்திற்காக நீர் தேர்ந்தெடுத்த இடத்தினருகே அவர்களை வாழச்செய்வீர். ஆண்டவரே,
நீர் உமது ஆலயத்தைக் கட்டுவீர்!
18 “கர்த்தாவே நீர் என்றென்றும் ஆளுகை செய்வீர்!”
19 ஆம், அது உண்மையாகவே நிகழ்ந்தது! பார்வோனின் குதிரைகளும், வீரர்களும், இரதங்களும் கடலுக்குள் அமிழ்ந்தன. கடலின் ஆழத்து தண்ணீரை அவர்களுக்கு மேலாக கர்த்தர் கொண்டு வந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ கடலினூடே உலர்ந்த தரையில் நடந்தனர்.
20 அப்போது, தீர்க்கதரிசினியும், ஆரோனின் சகோதரியுமாகிய மிரியாம் ஒரு தம்புருவை எடுத்தாள். மிரியாமுடன் பெண்கள் பாடவும் நடனம் ஆடவும் செய்தனர். மிரியாம்,
21 “கர்த்தரைப் பாடுங்கள்!
அவர் பெரிய செயல்களைச் செய்தார்.
அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்தினார்” என்று பாடினாள்.
இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்திற்குள் செல்லுதல்
22 செங்கடலை விட்டு சூர் பாலைவனத்திற்குள் மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் சென்றான். அவர்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்தனர். ஜனங்களுக்குக் குடிப்பதற்கு அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 23 மூன்று நாட்களுக்குப் பின் ஜனங்கள் மாராவிற்கு வந்தனர். மாராவில் தண்ணீர் இருந்தது. ஆனால் குடிக்க முடியாதபடி கசப்பாக இருந்தது. (இதனால் அந்த இடம் மாரா என்று அழைக்கப்பட்டது)
24 மோசேயிடம் வந்து ஜனங்கள், “நாங்கள் இப்போது எதைக் குடிப்போம்?” என்று முறையிட ஆரம்பித்தனர்.
25 மோசே கர்த்தரை வேண்டினான், கர்த்தர் அவனுக்கு ஒரு மரத்தைக் காட்டினார். மோசே அம்மரத்தை தண்ணீருக்குள் போட்டான். அவன் அவ்வாறு செய்தபோது, அது நல்ல குடிதண்ணீராக மாறிற்று.
அவ்விடத்தில், கர்த்தர் ஜனங்களை நியாயந்தீர்த்து அவர்களுக்கு ஒரு சட்டத்தைக் கொடுத்தார். ஜனங்களின் நம்பிக்கையையும் சோதித்துப் பார்த்தார். 26 கர்த்தர், “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் சரியெனக் கூறும் காரியங்களை நீங்கள் செய்யவேண்டும். கர்த்தரின் எல்லாக் கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்தால், எகிப்தியர்களைப்போல நோயுறமாட்டீர்கள். கர்த்தராகிய நான் எகிப்தியருக்கு கொடுத்த எந்த நோயையும் உங்களுக்கு வரவிடமாட்டேன். நானே கர்த்தர். உங்களைக் குணப்படுத்துகிறவர் நான் ஒருவரே” என்றார்.
27 பின்பு ஜனங்கள் ஏலிமுக்குப் பயணமாயினர். ஏலிமில் பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. எனவே தண்ணீர் இருந்த இடத்தினருகே ஜனங்கள் கூடாரமிட்டுத் தங்கினார்கள்.
பலன் தரும் தேவன்
18 சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும்பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்: 2 “ஓர் ஊரில் ஒரு நியாயாதிபதி இருந்தான். அவன் தேவனைக் குறித்துக் கவலைப்படவில்லை. மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவன் அக்கறையற்றவனாக இருந்தான். 3 அதே ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் இறந்து போனான். அந்தப் பெண் பல முறை நியாயாதிபதியிடம் வந்து, ‘எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்’ என்றாள். 4 அப்பெண்ணுக்கு உதவுவதற்கு நியாயாதிபதி விரும்பவில்லை. பல நாள்களுக்குப் பிறகு நியாயாதிபதி தனக்குள், ‘நான் தேவனைப்பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்கள் எண்ணுவதைக் குறித்தும் நான் அக்கறையில்லாதவனாக இருக்கிறேன். 5 ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான்.
6 “தீய நியாயாதிபதி கூறியதைக் கவனமுடன் கேளுங்கள். 7 தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார். தம் மக்களுக்குப் பதில் கூறுவதில் அவர் தயங்கமாட்டார். 8 நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார்.
தேவனுக்கு ஏற்றவன் யார்?
9 தங்களை மிக நல்லவர்களாக எண்ணிக்கொண்ட சில மனிதர்கள் இருந்தார்கள். பிறரைக் காட்டிலும் அவர்கள் மிக நல்லவர்கள் என்பதைப்போன்று அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதிப்பதற்கு இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தினார். 10 “ஒரு பரிசேயனும் வரி வசூலிப்பவனும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இருவரும் தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யச் சென்றார்கள். 11 வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 12 நான் நல்லவன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான்.
13 “வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. தன்னை உயர்ந்தவனாகக் கருதிக்கொள்கிற எவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான்.”
குழந்தைகளும்-இயேசுவும்(A)
15 இயேசு தொடுமாறு சிலர் தங்கள் சிறு குழந்தைகளை இயேசுவின் அருகில் கொண்டு வந்தார்கள். ஆனால் சீஷர்கள் இதைப் பார்த்ததும் மக்களை அதட்டித் தடுத்தார்கள். 16 ஆனால் இயேசு அந்தச் சிறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து, அதன் பின் சீஷர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இச்சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது. 17 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும் தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது” என்றார்.
செல்வந்தனும் இயேசுவும்(B)
18 ஒரு யூத அதிகாரி இயேசுவிடம், “நல்ல போதகரே! நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
19 இயேசு அவனை நோக்கி, “நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். 20 ஆனால் நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வேன். உனக்கு தேவனுடைய பிரமாணங்கள் தெரியும். ‘நீ தீய ஒழுக்கமாகிய பாவத்தைச் செய்யக்கூடாது. நீ ஒருவரையும் கொலை செய்யக்கூடாது. நீ எந்தப் பொருளையும் திருடக் கூடாது. பிறரைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. உனது தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும்’” [a] என்றார்.
21 ஆனால் அந்த அதிகாரி, “சிறுவனாக இருந்தபோதே இக்கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடந்து வருகிறேன்” என்றான்.
22 இதைக் கேட்டதும் இயேசு அதிகாரியை நோக்கி, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது. உன் பொருட்கள் எல்லாவற்றையும் விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடு. பரலோகத்தில் உனக்கு பலன் கிடைக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். 23 ஆனால் அம்மனிதன் இதைக் கேட்டபோது மிகவும் வருத்தமடைந்தான். அவன் பெரிய பணக்காரன், எல்லாப் பணத்தையும் தானே வைத்துக்கொள்ள விரும்பினான்.
24 அவன் வருத்தமடைந்ததை இயேசு கண்டபோது அவர், “செல்வந்தர் தேவனின் இராஜ்யத்தில் நுழைவது மிகவும் கடினமானது! 25 ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார்.
மீட்கப்படக்கூடியவர் யார்?
26 மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்றார்கள்.
27 பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார்.
28 பேதுரு “ஆண்டவரே, எங்களுக்குரிய அனைத்தையும் விட்டு உங்களைப் பின்பற்றினோமே” என்றான்.
29 இயேசு, “நான் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். வீடு, மனைவி, சகோதரர்கள், பெற்றோர் அல்லது குழந்தைகளை தேவனின் இராஜ்யத்துக்காகத் துறந்த ஒவ்வொருவனும் தான் விட்டவற்றைக் காட்டிலும் மிகுதியாகப் பெற்றுக்கொள்வான். 30 இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். அவன் இறந்த பின்னரும் தேவனோடு நித்தியமாக வாழ்வான்” என்றார்.
இயேசு மரணத்தினின்று எழுவார்(C)
31 பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும். 32 அவரது மக்களே அவருக்கு எதிராகத் திரும்பி அவரை யூதரல்லாத மக்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, அவர் மீது உமிழ்வார்கள். அவரை இகழ்ந்து அவமானப்படுத்துவார்கள். 33 அவரைச் சாட்டையினால் அடித்து பின்னர் கொல்வார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிரோடு மீண்டும் எழுவார்” என்றார். 34 சீஷர்கள் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன் பொருள் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது.
குருடனைக் குணமாக்குதல்(D)
35 எரிகோ பட்டணத்திற்கு அருகே, இயேசு வந்தார். பாதையருகே ஒரு குருடன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் மக்களிடம் பணத்துக்காகப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். 36 மக்கள் பாதையைக் கடந்து வருவதைக் கேட்டதும் அம்மனிதன், “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?” எனக் கேட்டான்.
37 மக்கள் அவனுக்கு, “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.
38 குருடன் பரவசமுற்று, “இயேசுவே தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.
39 அக்கூட்டத்திற்கு முன்னால் நடந்து கொண்டிருந்த மக்கள் அக்குருடனை அதட்டினார்கள். அவனைப் பேசாதிருக்கும்படியாகக் கூறினார்கள். ஆனால் அக்குருடன் இன்னும் அதிகமாகச் சத்தமிட்டவாறே, “தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.
40 இயேசு, “அந்தக் குருடனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி அங்கேயே நின்றுவிட்டார். அக்குருடன் அருகே வந்தபோது இயேசு அவனை நோக்கி, 41 “நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாய்?” என்று கேட்டார்.
குருடன், “ஐயா, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான்.
42 இயேசு அவனை நோக்கி, “உன் பார்வையை மீண்டும் பெறுவாய்! நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.
43 அப்போது அம்மனிதனால் பார்க்க முடிந்தது. அவன் தேவனுக்கு நன்றி கூறியவாறே இயேசுவைத் தொடர்ந்தான். இதைக் கண்ட எல்லா மக்களும் நடந்ததற்காக தேவனை வாழ்த்தினர்.
33 “இப்போது, யோபுவே, என்னைக் கவனித்துக் கேளும்:
நான் சொல்கிறவற்றிற்குச் செவிகொடும்.
2 நான் பேச தயாராயிருக்கிறேன்.
3 என் இருதயம் நேர்மையானது, எனவே நேர்மையான வார்த்தைகளைப் பேசுவேன்.
எனக்குத் தெரிந்தவற்றைக் குறித்து நான் உண்மையாக பேசுவேன்.
4 தேவனுடைய ஆவி என்னை உண்டாக்கிற்று.
என் உயிர் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து வந்தது.
5 யோபுவே, நான் சொல்வதைக் கேளும், முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்.
உனது பதிலைத் தயாராக வைத்திரும், அப்போது நீ என்னோடு விவாதிக்க முடியும்.
6 தேவனுக்கு முன்பாக நீயும் நானும் சமமானவர்களே.
தேவன் மண்ணைப் பயன்படுத்தி நம்மிருவரையும் உண்டாக்கினார்.
7 யோபுவே, எனக்கு அஞ்சாமல் இரும்.
நான் உன்னிடம் கடினமாயிருக்கமாட்டேன்.
8 “ஆனால் யோபுவே, நீ சொன்னதை நான் கேட்டேன்.
9 நீ, ‘நான் பரிசுத்தமானவன் நான் களங்கமற்றவன்.
நான் தவறேதும் செய்யவில்லை.
நான் குற்றமற்றவன்.
10 நான் தவறேதும் செய்யவில்லை.
ஆனால் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.
தேவன் என்னை ஒரு பகைவனைப்போல் நடத்தினார்.
11 தேவன் என் கால்களில் விலங்கிட்டார்.
நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் கண்ணோக்குகிறார்’ என்று சொன்னாய்.
12 “ஆனால் யோபுவே, நீ இவ்விஷயத்தில் தவறியிருக்கிறாய்.
நீ தவறு செய்கிறாய் என்பதை நான் நிரூபிப்பேன்.
ஏனெனில் தேவன் எல்லா மனிதர்களையும்விட அதிகமாக அறிந்திருக்கிறார்.
13 யோபுவே, நீ தேவனோடு விவாதிக்கிறாய்.
தேவன் எல்லாவற்றையும் உனக்கு விளக்கவேண்டுமென நீ நினைக்கிறாய்.
14 தேவன் தாம் செய்கிற எல்லாவற்றையும் விளக்கலாம்.
வெவ்வேறு வகைகளில் தேவன் பேசலாம், ஆனால் ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
15-16 தேவன் கனவில் ஜனங்களோடு பேசலாம், அல்லது இரவில் அவர்கள் ஆழ்ந்த நித்திரைக் கொள்ளும்போது தரிசனம் தந்து பேசலாம்,
அவர்கள் தேவனுடைய எச்சரிக்கையைக் கேட்கும்போது மிகவும் அச்சம்கொள்ளலாம்.
17 ஜனங்கள் தவறு செய்வதை நிறுத்தவும்
பெருமைகொள்வதை விடவும் தேவன் எச்சரிக்கை செய்கிறார்.
18 மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி அவர்களைக் காப்பதற்காக தேவன் ஜனங்களை எச்சரிக்கிறார்.
ஒருவன் அழியாதபடி காப்பதற்கு தேவன் அவ்வாறு செய்கிறார்.
19 “அல்லது ஒருவன் படுக்கையில் கிடந்து தேவனுடைய தண்டனையை அனுபவிக்கும்போது ஒருவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடும்.
வேதனையால் அம்மனிதனை தேவன் எச்சரிக்கிறார்.
எலும்பெல்லாம் நொறுங்கும்படி அம்மனிதன் நோவை அனுபவிக்கிறான்.
20 அப்போது அம்மனிதன் உண்ணமுடியாது.
மிகச் சிறந்த உணவையும் வெறுக்கும்படி அவன் மிகுந்த நோவை அனுபவிக்கிறான்.
21 அவன் மிகவும் மெலிந்து எலும்புகள் வெளித் தோன்றும்வரை
அவன் உடம்பு மெலிந்து போகும்.
22 அம்மனிதன் மரணத்தின் இடத்திற்கு அருகே இருக்கிறான்.
அவன் வாழ்க்கை மரணத்திற்கு அருகாமையில் உள்ளது.
23 தேவனிடம் ஆயிரக்கணக்காக தூதர்கள் இருப்பார்கள்.
அத்தூதர்களுள் ஒருவன் அம்மனிதனைக் கண்ணோக்கிக் கொண்டிருக்கலாம். அந்த தூதன் அம்மனிதனுக்காகப் பரிந்துபேசி அவன் செய்த நற்செயல்களை எடுத்துரைக்கலாம்.
24 அந்த தூதன் அம்மனிதனிடம் இரக்கம் காட்டலாம்.
அத்தூதன் தேவனிடம், ‘மரணத்தின் இடத்திலிருந்து அம்மனிதனைக் காப்பாற்றும்.
அவன் பாவத்திற்குப் பரிகாரமாக நான் ஒரு வழியைக் கண்டு பிடித்திருக்கிறேன்’ எனலாம்.
25 அப்போது அம்மனிதனின் உடல் மீண்டும் இளமையும், வலிமையும் பெறும்.
அவன் இளமையிலிருந்தாற்போன்று இருப்பான்.
26 தேவனிடம் ஜெபிப்பான், தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதில் தருவார்.
அம்மனிதன் களிப்பால் ஆரவாரித்து, தேவனைத் தொழுதுகொள்வான்.
அப்போது அம்மனிதன் மீண்டும் நல்வாழ்க்கை வாழ்வான்.
27 அப்போது அம்மனிதன் ஜனங்களிடம் அறிக்கையிடுவான்.
அவன், ‘நான் பாவம் செய்தேன்.
நான் நல்லதைக் கெட்டதாக்கினேன்.
ஆனால் தேவன் என்னைத் தண்டிக்க வேண்டிய அளவு தண்டிக்கவில்லை.
28 மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி, தேவன் என் ஆத்துமாவைக் காப்பாற்றினார்.
இப்போது மீண்டும் என் வாழ்க்கையை நான் அனுபவிக்க முடியும்’ என்பான்.
29 “அம்மனிதனுக்காக மீண்டும், மீண்டும் தேவன் எல்லாவற்றையும் செய்கிறார்.
30 ஏனென்றால், அம்மனிதனை எச்சரித்து, அவனது ஆத்துமாவை மரணத்தின் இடத்திலிருந்து காப்பதால்
அம்மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதற்காக இதைச் செய்கிறார்.
31 “யோபுவே, என்னை கவனியும்.
நான் கூறுவதைக் கேளும்.
அமைதியாக இரும், என்னை பேசவிடும்.
32 ஆனால் யோபுவே, நீர் என்னோடு கருத்து வேறுபாடு கொள்ளவிரும்பினால், அப்போது நீர் பேசத் தொடங்கும்.
உமது விவாதத்தைக் கூறும், ஏனெனில், நான் உம்மைத் திருத்த விரும்புகிறேன்.
33 ஆனால் யோபுவே, நீர் கூற எதுவுமில்லையெனில், நான் சொல்வதைக் கேளும்.
அமைதியாக இரும், உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.
புதிய உடன்படிக்கை
3 நாங்கள் மீண்டும் எங்களைப்பற்றியே பெருமையாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டோமா? மற்றவர்களைப் போன்று எனக்கோ அல்லது என்னிடமிருந்தோ அறிமுக நிருபங்கள் தேவையா? 2 எங்கள் நிருபம் நீங்கள் தான். எங்கள் இதயங்களில் நீங்கள் எழுதப்பட்டிருக்கிறீர்கள். அனைவராலும் அறியப்படுகிறவர்களாகவும், வாசிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறீர்கள். 3 கிறிஸ்துவிடமிருந்து எங்கள் மூலம் அனுப்பிய நிருபம் நீங்கள் தான் என்று காட்டிவிட்டீர்கள். இந்நிருபம் மையால் எழுதப்படவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய ஆவியால் எழுதப்பட்டுள்ளது. இது கற்பலகையின் [a] மீது எழுதப்படவில்லை. மனித இதயங்களின் மீது எழுதப்பட்டுள்ளது.
4 கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு முன்னால் உறுதியாக நம்புவதால் எங்களால் இவற்றைச் சொல்ல முடிகிறது. 5 எங்களால் நல்லதாக எதனையும் செய்ய முடியும் என்று நாங்கள் கருதுவதாக அர்த்தம் இல்லை. செய்யவேண்டிய எல்லாக் காரியங்களுக்குமான வல்லமையை எங்களுக்குத் தருபவர் தேவனே ஆவார். 6 புது உடன்படிக்கை ஊழியராக இருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர் ஆக்கினார். இந்தப் புதிய ஒப்பந்தம் வெறும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமாய் இராமல் ஆவிக்குரியதாக இருக்கிறது. எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது.
புதிய உடன்படிக்கையும் மகிமையும்
7 மரணத்துக்கு வழி வகுக்கும் சேவைக்குரிய பிரமாணங்கள் கற்களில் எழுதப்பட்டன. அது தேவனுடைய மகிமையோடு வந்தது. அதனால் மோசேயின் முகம் ஒளி பெற்றது. அந்த ஒளி இஸ்ரவேல் மக்களைப் பார்க்க இயலாதபடி செய்தது. அந்த மகிமை பிறகு மறைந்துபோனது. 8 எனவே ஆவிக்குரிய சேவை நிச்சயமாக மிகுந்த மகிமையுடையதாக இருக்கும். 9 மக்களை நியாயம் தீர்க்கிற சேவைகள் மகிமையுடையதாக இருக்கும்போது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே சீரான உறவுக்கு உதவும் சேவைகளும் மிகுந்த மகிமை உடையதாக இருக்கும். 10 பழைய சேவைகளும் மகிமைக்குரியதே. எனினும் புதிய சேவைகளால் வரும் மகிமையோடு ஒப்பிடும்போது அதன் பெருமை அழிந்துபோகிறது. 11 மறைந்து போகிறவை மகிமையுடையதாகக் கருதப்படுமானால் என்றென்றும் நிலைத்து இருப்பவை மிகுந்த மகிமையுடையதே.
12 எங்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதால் நாங்கள் தைரியமாக இருக்கிறோம். 13 நாங்கள் மோசேயைப் போன்றில்லை. அவர் தன் முகத்தை முக்காடிட்டு மூடி மறைத்துக்கொண்டார். அவரது முகத்தை இஸ்ரவேல் மக்களால் பார்க்க முடியவில்லை. அந்த வெளிச்சமும் மறைந்து போயிற்று. அவர்கள் அதன் மறைவைப் பார்ப்பதை மோசே விரும்பவில்லை. 14 ஆனால் அவர்கள் மனமும் அடைத்திருந்தது. அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுதும் கூட அந்த முக்காடு அவர்கள் பழைய ஏற்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாதபடி செய்கின்றது. அந்த முக்காடு கிறிஸ்துவால்தான் விலக்கப்படுகிறது. 15 ஆனாலும் கூட இன்று, மக்கள் மோசேயின் சட்டத்தை வாசிக்கும்போது அவர்களின் மனம் மூடிக்கொண்டிருக்கிறது. 16 ஆனால் எவனொருவன் மாற்றம் பெற்று, கர்த்தரைப் பின்பற்றுகிறானோ அவனுக்கு அந்த முக்காடு விலக்கப்படுகிறது. 17 கர்த்தரே ஆவியாய் இருக்கிறார். எங்கெல்லாம் அந்த ஆவியானவர் உள்ளாரோ அங்கெல்லாம் விடுதலை உண்டு. 18 நமது முகங்கள் மூடப்பட்டில்லை. நாமெல்லாரும் தேவனுடைய மகிமையைக் காட்டுகிறோம். நாம் அவரைப்போன்று மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நம்முள் எழும் இம்மாற்றம் மேலும் மேலும் மகிமையைத் தருகிறது. இம்மகிமை ஆவியாக இருக்கிற கர்த்தரிடமிருந்து வருகிறது.
2008 by World Bible Translation Center