M’Cheyne Bible Reading Plan
16 ஜனங்கள் ஏலிமை விட்டு ஏலிமுக்கும், சீனாய்க்கும் நடுவில் உள்ள சீன் பாலைவனத்திற்கு வந்தனர். எகிப்தைவிட்டுப் புறப்பட்டபின் இரண்டாவது மாதத்தில் பதினைந்தாம் நாள் அவர்கள் அந்த இடத்தை வந்தடைந்தனர். 2 இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். பாலைவனத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: 3 “எகிப்து தேசத்தில் கர்த்தர் எங்களைக் கொன்றிருந்தால் நலமாக இருந்திருக்கும். அங்கு உண்பதற்காவது மிகுதியான உணவு கிடைத்தது. எங்களுக்குத் தேவையான எல்லா உணவும் கிடைத்தன. ஆனால் இப்போது எங்களை நீர் பாலைவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர். பசியால் இங்கு நாங்கள் எல்லோரும் செத்துப்போவோம்” என்றனர்.
4 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் வானத்திலிருந்து உணவுப்பொருளை விழச் செய்வேன். நீங்கள் உண்பதற்கு அது உணவாகும். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் வெளியே போய் அவர்களுக்கு அந்தந்த நாளுக்கு மட்டும் தேவையான உணவைச் சேகரித்துவரவேண்டும். இப்படி நான் அவர்களைச் சோதித்து, என் ஆலோசனைகளைப் பின்பற்றுகிறார்களா என்று பார்ப்பேன். 5 ஒவ்வொரு நாளும் ஜனங்கள் அந்த நாளுக்குத் தேவையான உணவை மட்டுமே சேகரிக்கவேண்டும்: ஆனால் வெள்ளிக் கிழமையன்று, ஜனங்கள் உணவைத் தயாரிக்கும் பொழுது, இரண்டு நாட்களுக்குப் போதுமான இருமடங்கு உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” [a] என்றார்.
6 மோசேயும், ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “இன்றிரவு நீங்கள் கர்த்தரின் வல்லமையைக் காண்பீர்கள். எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தவர் அவரே என்பதை நீங்கள் அறிவீர்கள். 7 நீங்கள் கர்த்தரிடம் முறையிட்டபோது அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே நாளைக் காலையில் கர்த்தரின் மகிமையைக் காண்பீர்கள். நீங்கள் எங்களிடம் முறையிட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்” என்றார்கள்.
8 மோசே தொடர்ந்து, “நீங்கள் முறையிட்டீர்கள், கர்த்தர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே இன்றிரவு கர்த்தர் உங்களுக்கு மாமிசம் கிடைக்கச் செய்வார். காலையில் உங்களுக்குத் தேவையான அப்பத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஆரோனிடமும் என்னிடமும் முறையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆரோனுக்கும் எனக்கும் எதிராக அல்ல, நீங்கள் கர்த்தருக்கெதிராகவே முறையிட்டீர்கள்” என்றான்.
9 மோசே ஆரோனை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம், ‘கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார் என்று சொல்’” என்றான்.
10 ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். ஆரோன் பேசும்போது, எல்லா ஜனங்களும் திரும்பிப் பாலைவனத்தை நோக்கினார்கள். மேகத்தில் கர்த்தரின் மகிமை வெளிப்படுவதைக் கண்டார்கள்.
11 கர்த்தர் மோசேயை நோக்கி, 12 “இஸ்ரவேல் ஜனங்களின் முறையீட்டைக் கேட்டேன். எனவே அவர்களிடம் ‘இன்றிரவு நீங்கள் இறைச்சி உண்பீர்கள், காலையில் உங்களுக்கு வேண்டிய ரொட்டி கிடைக்கும். பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்பலாம் என்று அறிவீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
13 அன்றிரவு, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பனிபடர்ந்திருந்தது. 14 பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் காணப்பட்டது. 15 இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, “இது என்ன?” [b] என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே. 16 ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவனுக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்” என்றான்.
17 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறே செய்தார்கள். ஒவ்வொருவனும் இந்த உணவைச் சேகரித்துக்கொண்டான். சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக்கொண்டனர். 18 ஜனங்கள் இந்த உணவைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். உணவை அளந்தபோது ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு இருந்தது. ஆனால் ஒருபோதும் அதிகப்படியான உணவு இருந்ததில்லை. ஒவ்வொருவனும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தேவையான உணவை மாத்திரம் சேகரித்துக்கொண்டான்.
19 மோசே அவர்களை நோக்கி, “மறுநாள் உண்பதற்காக உணவை வைக்காதீர்கள்” என்றான். 20 ஆனால் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படியவில்லை. சிலர் அடுத்த நாளுக்காகச் சிறிது உணவை எடுத்து வைத்தார்கள். அந்த உணவைப் புழுக்கள் அரித்தபடியால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இவ்வாறு செய்தவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.
21 ஒவ்வொரு நாள் காலையிலும் உணவைச் சேகரித்துக்கொண்டனர். ஒருவன் தான் சாப்பிடக் கூடிய அளவு உணவை எடுத்துக்கொண்டான். வெயில் ஏறினதும் உணவு உருகி மறைந்துபோனது.
22 வெள்ளியன்று, ஜனங்கள் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் 16 கிண்ண அளவு உணவைச் சேர்த்தார்கள். எனவே ஜனங்களின் தலைவர்கள் மோசேயிடம் வந்து இதனை அறிவித்தனர்.
23 மோசே அவர்களை நோக்கி, “இவ்வாறு தான் நடக்கும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். நாளை கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாளாகிய ஓய்வுநாள் என்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. இன்றைக்குத் தேவையான எல்லா உணவையும் சமையுங்கள். மீதமாகும் உணவை நாளை காலைக்காக எடுத்து வையுங்கள்” என்றான்.
24 எனவே மீதமான உணவை ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்து அடுத்த நாளுக்காகப் பத்திரப்படுத்தினார்கள். அன்று அந்த உணவு கெட்டுப்போகவில்லை, புழுக்களும் அந்த உணவை அணுகவில்லை.
25 சனிக்கிழமையன்று மோசே ஜனங்களை நோக்கி, “இன்று ஓய்வுநாள், இது கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் விசேஷ நாள். எனவே உங்களில் ஒருவனும் வெளியே போகக்கூடாது. நேற்று சேர்த்து வைத்த உணவையே உண்ணுங்கள். 26 ஆறு நாட்கள் நீங்கள் உணவைச் சேகரிக்கவேண்டும், ஆனால் வாரத்தின் ஏழாவதுநாள் ஓய்வுக்குரிய நாள். எனவே பூமியில் விசேஷ உணவு எதுவுமிராது” என்றான்.
27 சனிக்கிழமையன்று சில ஜனங்கள் உணவைச் சேகரிக்கச் சென்றார்கள், ஆனால் அவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. 28 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “எனது கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய எத்தனை காலம் இந்த ஜனங்கள் மறுப்பார்கள்? 29 பார், உங்களுக்கு ஓய்ந்திருக்கும் நாளாக கர்த்தர் ஓய்வு நாளை உண்டாக்கினார். எனவே வெள்ளியன்று இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவை கர்த்தர் கொடுப்பார், பின் ஓய்வு நாளில் உங்களில் ஒவ்வொருவனும் ஓய்வெடுக்கவேண்டும். நீங்கள் இருக்குமிடத்திலேயே தங்கியிருங்கள்” என்றார். 30 எனவே ஜனங்கள் ஓய்வுநாளில் ஓய்வெடுத்துக்கொண்டார்கள்.
31 அந்த விசேஷ உணவை ஜனங்கள் “மன்னா” என்று அழைத்தார்கள். இந்த மன்னா தோற்றத்தில் சிறிய வெண்மையான கொத்து மல்லி விதைகளைப் போன்றிருந்தன. அவை ருசியில் தேனில் தோய்க்கப்பட்ட மெல்லிய வார்ப்புரொட்டி போன்று இருந்தன. 32 மோசே, “கர்த்தர் உங்கள் சந்ததியினருக்காக ‘இந்த உணவில் எட்டு கிண்ணம் எடுத்து வையுங்கள். அப்போது, உங்களை எகிப்திலிருந்து அழைத்து செல்கையில் வனாந்திரத்தில் நான் உங்களுக்கு கொடுத்த உணவை உங்கள் தலைமுறையினர் பார்க்க முடியும்’ என்றார்” என்று சொன்னான்.
33 எனவே மோசே ஆரோனை நோக்கி, “ஒரு சிறிய ஜாடியை எடுத்து அதை 8 கிண்ணம் மன்னாவால் நிரப்பு. கர்த்தருக்கு முன் வைக்கும்படியாக அதைப் பத்திரப்படுத்து. அதை நமது சந்ததியினருக்காகவும் பாதுகாத்து வை” என்றான். 34 (கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே ஆரோன் செய்தான். உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் அந்த ஜாடியை ஆரோன் வைத்தான்.) 35 ஜனங்கள் 40 ஆண்டுகள் மன்னாவைச் சாப்பிட்டார்கள். ஓய்வுக்குரிய நாடாகிய, கானான் தேசத்தின் எல்லையை வந்தடையும் மட்டும் அவர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள். 36 (மன்னாவை அளப்பதற்காக அவர்கள் பயன்படுத்தியது ஒரு ஓமர். எட்டுக் கிண்ணங்கள் அளவு கொண்டது ஒரு ஓமர் ஆகும்.)
சகேயு
19 எரிகோ பட்டணத்தின் வழியாக இயேசு சென்றுகொண்டிருந்தார். 2 எரிகோவில் சகேயு என்னும் பெயருடைய மனிதன் இருந்தான். அவன் செல்வந்தனும், முக்கியமானவனுமான ஒரு வரி வசூலிப்பவனாவான். 3 அவன் இயேசுவைக் காண விரும்பினான். இயேசுவைக் காண விரும்பிய இன்னும் பலரும் அங்கு இருந்தார்கள். மக்களுக்குப் பின்னே நின்றபடி இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான். 4 எனவே, அவன் இயேசு கடந்து செல்லும் இடத்தையடைய வேகமாக ஓடிச் சென்றான். இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது சகேயு ஏறினான்.
5 இயேசு அவ்விடத்துக்கு வந்தபோது, மேலே ஏறிட்டுப் பார்த்து சகேயு மரத்தின்மீது இருப்பதைக் கண்டார். இயேசு அவனை நோக்கி, “சகேயுவே, விரைந்து வா. கீழே இறங்கு. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்கவேண்டும்” என்றார்.
6 சகேயு விரைந்து கீழே இறங்கினான். தன் வீட்டில் இயேசுவை வரவேற்பதில் அவன் மிகவும் மகிழ்ந்தான். 7 எல்லா மக்களும் இதைக் கண்டனர். அவர்கள், “எத்தகைய மனிதனோடு இயேசு தங்குகிறார் என்பதைப் பாருங்கள். சகேயு ஒரு பாவி” என்று புகார் கூறினார்கள்.
8 சகேயு கர்த்தரை நோக்கி, “நான் நல்லதைச் செய்ய விரும்புகிறேன். என் பணத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பேன். நான் யாரையாவது ஏமாற்றி இருந்தால் அவனுக்கு நான்கு மடங்கு பணத்தைத் திரும்பக் கொடுப்பேன்” என்றான்.
9 இயேசு, “இந்த மனிதன் நல்லவன். உண்மையில் ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்றைக்கு சகேயு அவனது பாவங்களில் இருந்து மீட்கப்பட்டான். 10 மனித குமாரன் இழந்துபோன மனிதர்களைக் கண்டு அவர்களை மீட்கவே வந்தார்” என்றார்.
இருப்பதைப் பயன்படுத்துங்கள்(A)
11 எருசலேமை நெருங்கி இயேசு பயணம் செய்துகொண்டிருந்தார். தேவனின் இராஜ்யம் சீக்கிரம் வருமென்று சில மக்கள் எண்ணினார்கள். 12 மக்களின் எண்ணத்தை இயேசு அறிந்தார். எனவே அவர்களுக்குப் பின்வரும் உவமையைச் சொன்னார்: “ஒரு உயர்ந்த கௌரவம்மிக்க மனிதன், மன்னனாக நியமனம் பெறும்படியாகத் தூர தேசப் பயணத்திற்காக ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தான். பின்னர் திரும்பி வந்து அவனது மக்களை அரசாள வேண்டுமென்று அவன் திட்டமிட்டான். 13 எனவே அவன் தனது வேலைக்காரர்களில் பத்து பேரை அழைத்தான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் ஒரு பை நிறைய பணத்தைக் கொடுத்தான். ‘இந்தப் பணத்தைக்கொண்டு நான் வரும் வரைக்கும் வியாபாரம் செய்யுங்கள்’ என்றான். 14 அந்த இராஜ்யத்தின் மக்கள் அம்மனிதனை வெறுத்தார்கள். எனவே அம்மக்கள் அவன் போகும் தேசத்துக்கெல்லாம் அவனைப் பின் தொடர்ந்து செல்லுமாறு ஒரு கூட்டத்தினரை அனுப்பினர். மற்ற தேசத்துக்கு அக்கூட்டத்தினர் சென்று ‘இந்த மனிதன் எங்களுக்கு அரசன் ஆவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்கள்.
15 “ஆனால் அம்மனிதன் அரசனானான். அவன் தன் நாட்டுக்குத் திரும்பிய பின்பு, ‘நான் பணம் கொடுத்துள்ள அந்த வேலைக்காரரை அழையுங்கள். அதைக்கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறிய நான் விரும்புகிறேன்’ என்றான். 16 முதல் வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் பத்து பை நிரம்பும் அளவுக்குப் பணம் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 17 அரசன் அந்த வேலைக்காரனை நோக்கி, ‘நல்லது, நீ ஒரு நல்ல வேலைக்காரன். சிறிய காரியங்களில் உன்னை நம்பக் கூடும் என்று காண்கிறேன். ஆகவே இப்போது எனது பட்டணங்களில் பத்து பட்டணங்களை ஆளும்படியாக உன்னை நியமிப்பேன்’ என்றான்.
18 “இரண்டாவது வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் ஐந்து பைகள் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 19 மன்னன் வேலைக்காரனை நோக்கி, ‘நீ ஐந்து பட்டணங்கள் மேல் ஆட்சி செய்யலாம்’ என்றான்.
20 “பின்பு மூன்றாவது வேலைக்காரன் வந்தான் அந்த வேலைக்காரன் அரசனை நோக்கி, ‘ஐயா, இதோ உங்களுடைய பணப் பை இருக்கிறது. நான் அதை ஒரு துணியில் பொதிந்து மறைத்து வைத்தேன். 21 உங்கள் வலிமையைக் கண்டு நான் பயந்து போய் இருந்தேன். நீங்கள் கடினமான மனிதர் என்பதை அறிவேன். உங்களால் சம்பாதிக்கப்படாத பணத்தைக் கூட நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். உங்களால் பயிரிடப்படாத தானியத்தைக் கூட நீங்களே சேர்த்துக் கொள்கிறீர்கள்’ என்றான்.
22 “அரசன் அந்த வேலைக்காரனை நோக்கி, ‘தீய வேலைக்காரனே, உனது சொந்த வார்த்தையாலேயே உன்னை நிராகரிப்பேன். நான் ஒரு கடினமான மனிதன் என்றாய். நான் சம்பாதிக்காத பணத்தை எடுத்துக்கொள்பவன் என்றும், நான் பயிரிடாத தானியத்தைச் சேர்த்துக்கொள்பவன் என்றும் கூறினாய். 23 அது உண்மையென்றால் நீ என் பணத்தை வங்கியில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்போது நான் திரும்பி வந்தபோது என் பணத்துக்கு வட்டியாவது கிடைத்திருக்கும்’ என்றான். 24 பின் அங்கு நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து பையை எடுத்து பத்து பைகள் நிரம்ப பணம் சம்பாதித்தவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
25 “அந்த மனிதர்கள் அரசனிடம், ‘ஐயா, அந்த வேலைக்காரனிடம் ஏற்கெனவே பத்துப் பைகள் பணம் இருக்கின்றனவே,’ என்றார்கள்.
26 “அரசன், ‘தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்துகிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்தாத மனிதனிடம் இருப்பவையும் எடுத்துக்கொள்ளப்படும். 27 இப்போது எனது பகைவர்கள் எங்கே? தமக்கு அரசனாக நான் ஆவதை விரும்பாத மக்கள் எங்கே? என் பகைவர்களை அழைத்து வந்து அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் மடிவதை நான் பார்ப்பேன்’ என்றான்.”
எருசலேமுக்குள் இயேசு(B)
28 இவற்றையெல்லாம் கூறியபின்பு இயேசு, எருசலேமை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். 29 ஒலிவ மலையருகே காணப்பட்ட பெத்பகே, பெத்தானியா ஆகிய ஊர்களருகே இயேசு வந்தபோது, அவர் இரண்டு சீஷர்களை அனுப்பினார். 30 அவர், “நீங்கள் பார்க்கிற அந்த ஊருக்குள் செல்லுங்கள். ஊருக்குள் நுழையும்போதே அங்கு ஒரு கழுதைக் குட்டி கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். எந்த மனிதனும் அதன்மீது ஏறியதில்லை. அக்கழுதையை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். 31 எந்த மனிதனாவது அக்கழுதையை ஏன் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் நீங்கள், ‘எங்கள் எஜமானருக்கு இக்கழுதை வேண்டும்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
32 இரண்டு சீஷர்களும் ஊருக்குள் சென்றார்கள். இயேசு கூறியபடியே கழுதைக்குட்டியைக் கண்டார்கள். 33 சீஷர்கள் கட்டப்பட்டிருந்த அக்கழுதையை அவிழ்த்தார்கள். கழுதையின் சொந்தக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் சீஷரை நோக்கி, “எதற்காகக் கழுதையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்கள்.
34 சீஷர்கள், “ஆண்டவருக்குத் தேவையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்கள். 35 சீஷர்கள் கழுதைக் குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து தம் மேலங்கியை அதன்மேல் போட்டார்கள். பின்பு இயேசுவைக் கழுதையின் மேல் அமர்த்தினார்கள். 36 இயேசு எருசலேமுக்குச் செல்லும் பாதை வழியாகக் கழுதையின் மேல் ஏறிச் சென்றார். இயேசுவுக்கு முன்பாக சீஷர்கள் தம் அங்கிகளைப் பாதையில் விரித்தார்கள்.
37 எருசலேமுக்கு அருகில் இயேசு வந்துகொண்டிருந்தார். அவர் ஒலிவமலை அடி நகரத்திற்கருகே வந்திருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் மகிழ்வோடு இருந்தார்கள். அவர்கள் உரத்த குரலில் களிப்புடன் தேவனை வாழ்த்தினார்கள். அவர்கள் தாம் பார்த்த எல்லா வல்லமையான செயல்களுக்கும் தேவனுக்கு நன்றி தெரிவித்தார்கள். 38 அவர்கள்,
“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசரை தேவன் ஆசீர்வதிப்பாராக!” [a]
“பரலோகத்தில் அமைதியும் தேவனுக்கு மகிமையும் உண்டாவதாக!”
என்றனர்.
39 கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, இவற்றைக் கூறாதபடிக்கு சீஷருக்குச் சொல்லுங்கள்” என்றார்கள்.
40 ஆனால் இயேசு, “நான் உங்களுக்குச் சொல்கிறேன். இக்காரியங்கள் சொல்லப்பட வேண்டியவை. என் சீஷர்கள் இவற்றைக் கூறாவிட்டால், இக்கற்கள் அவற்றைக் கூறும்” என்று பதிலுரைத்தார்.
எருசலேமுக்காக அழுதல்
41 இயேசு எருசலேமுக்கு அருகே வந்தார். அவர் அப்பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழ ஆரம்பித்தார். 42 இயேசு எருசலேமைப் பார்த்துப் பேசினார். அவர், “உனக்கு சமாதானத்தை எது வரவழைக்கும் என்று இன்றைக்கு நீ தெரிந்துகொண்டிருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் உனக்கு அது மறைக்கப்பட்டிருப்பதால் உன்னால் அதை அறிந்துகொள்ளமுடியாது. 43 உன் பகைவர்கள் உன்னைச் சுற்றிலும் ஒரு மதிலை எழுப்பும் காலம் வந்து கொண்டிருக்கிறது. உன் பகைவர்கள் உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வளைத்துக் கொள்வார்கள். 44 அவர்கள் உன்னையும் உன்னிலுள்ள எல்லா மக்களையும் அழித்து விடுவார்கள். உன் கட்டிடங்களில் உள்ள கற்களில் ஒன்றும் ஒன்றின் மேல் ஒன்று நிலைத்திருப்பதில்லை. தேவன் உன்னை மீட்பதற்காக வந்த காலத்தை நீ அறியாததால் இவையெல்லாம் நடக்கும்” என்றார்.
தேவாலயத்திற்குச் செல்லுதல்(C)
45 இயேசு தேவாலயத்திற்குள் சென்றார். பல பொருட்களை விற்றுக்கொண்டிருந்த மக்களை தேவாலயத்திற்குள் இருந்து துரத்த ஆரம்பித்தார். 46 அவர்களிடம் இயேசு, “‘என் வீடு பிரார்த்தனைக் குரிய வீடாக இருக்கும்’ [b] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதைத் திருடர்கள் ஒளிந்திருக்கிற இடமாக [c] நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள்” என்றார்.
47 ஒவ்வொரு நாளும் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். ஆசாரியரும், வேதபாரகரும் மக்களின் அதிகாரிகளும் இயேசுவைக் கொல்ல விரும்பினார்கள். 48 ஆனால் எல்லா மக்களும் இயேசுவைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இயேசு கூறிய விஷயங்களை மிகவும் உற்சாகமாகக் கவனித்தார்கள். எனவே தலைமை ஆசாரியருக்கும், வேதபாரகருக்கும், அதிகாரிகளுக்கும் இயேசுவை எவ்வாறு கொல்ல முடியும் என்பது தெரியவில்லை.
34 பின்பு எலிகூ தொடர்ந்து பேசினான். அவன்:
2 “நான் கூறுபவற்றை கேளுங்கள், ஞானிகளே,
நான் சொல்வதைக் கவனியுங்கள், அறிஞர்களே.
3 உங்கள் நாவு, அது தொடுகிற உணவை ருசிக்கிறது.
உங்களது காது, அது கேட்கிறவார்த்தைகளைச் சோதிக்கிறது.
4 எனவே நாம் அந்த விவாதங்களைச் சோதிப்போம், எது சரியென நாமே முடிவு செய்வோம்.
எது நல்லதென நாம் ஒருமித்திருந்து கற்போம்.
5 யோபு, ‘யோபாகிய நான் களங்கமற்றவன்,
தேவன் என்னிடம் நியாயமுடையவராயிருக்கவில்லை.
6 நான் களங்கமற்றவன், ஆனால் நீதி எனக்கெதிராக வழங்கப்பட்டது, அது நான் பொய்யனெனக் கூறுகிறது.
நான் களங்கமற்றவன், ஆனால் மிக மோசமாகக் காயமுற்றேன்’ என்கிறான்.
7 “யோபைப்போல வேறெவனாகிலும் இருக்கிறானா?
நீங்கள் அவமானப்படுத்தினால் யோபு அதைப் பொருட்படுத்துவதில்லை.
8 யோபு தீயோரோடு நட்புடையவனாயிருந்தான்.
யோபு கெட்ட ஜனங்களோடிருக்க விரும்புகிறான்.
9 ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன்?
ஏனெனில் யோபு, ‘ஒருவன் தேவனைத் தவறான வழிகளில் சந்தோஷப்படுத்த முயற்சி செய்தால் அதனால் அவனுக்கு நன்மையேதும் வாய்க்காது’ என்கிறான்.
10 “உங்களால் புரிந்துகொள்ள முடியும், எனவே நான் சொல்வதைக் கேளுங்கள்.
தேவன் தீயவற்றை ஒருபோதும் செய்யமாட்டார்!
சர்வ வல்லமையுள்ள தேவன் தவறிழைக்கமாட்டார்!
11 ஒருவன் செய்யும் காரியங்களுக் கேற்றபடியே தேவன் பலனளிப்பார்.
ஒருவனுக்கு உரியதை தேவன் அவனுக்குக் கொடுக்கிறார்.
12 இதுவே உண்மை, தேவன் தவறிழைக்கமாட்டார்,
சர்வ வல்லமையுள்ள தேவன் எப்போதும் நியாயந்தீர்ப்பார்.
13 பூமிக்குப் பொறுப்பாக இருக்கும்படி தேவனை எந்த மனிதனும் தேர்ந்தெடுக்கவில்லை,
உலகம் முழுவதற்கும் பொறுப்பை தேவனுக்கு ஒருவனும் கொடுக்கவில்லை.
தேவன் எல்லாவற்றையும் படைத்தார்.
எல்லாம் அவரது ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன.
14 தேவன் மனிதனது ஆவியை எடுக்க முடிவெடுத்தால்,
அவனது மூச்சை நீக்கிவிட முடிவெடுத்தால்,
15 அப்போது பூமியின் ஜனங்கள் எல்லோரும் மரிப்பார்கள்.
எல்லா ஜனங்களும் மீண்டும் மண்ணாவார்கள்.
16 “நீங்கள் ஞானிகளாயிருந்தால்,
நான் சொல்வதற்குச் செவிகொடுப்பீர்கள்.
17 ஒருவன் நியாயஞ்செய்வதை வெறுத்தால், அவன் அரசனாக இருக்கமுடியாது.
யோபுவே, தேவன் வல்லவரும் நல்லவருமானவர்.
அவரைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
18 தேவனே அரசர்களிடம், ‘நீங்கள் தகுதியற்றவர்கள்’ என்கிறார்.
தேவனே தலைவர்களிடம் ‘நீங்கள் தீயவர்கள்’ என்கிறார்!
19 தேவன் ஜனங்களைக் காட்டிலும் தலைவர்களை நேசிப்பதில்லை.
தேவன் ஏழைகளைக் காட்டிலும் செல்வந்தரை நேசிப்பதில்லை.
ஏனெனில், தேவனே ஒவ்வொருவரையும் உண்டாக்கினார்.
20 ஜனங்கள் நள்ளிரவில் திடீரென மரிக்க முடியும்.
ஜனங்கள் நோயுற்று மடிவார்கள்.
தெளிவான காரணமின்றி வலிமையான ஜனங்களும்கூட மரிப்பார்கள்.
21 “ஜனங்கள் செய்வதை தேவன் கண்ணோக்குகிறார்.
ஒருவன் வைக்கிற ஒவ்வோர் அடியையும் தேவன் அறிகிறார்.
22 தேவனிடமிருந்து ஒளிப்பதற்கேற்ற இருள் நிரம்பிய இடம்
எதுவும் தீயோருக்குக் கிடைப்பதில்லை.
23 ஜனங்களைச் சோதித்துப் பார்க்கும் நேரத்தை தேவன் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.
தேவன், நியாயந்தீர்ப்பதற்குத் தனக்கு முன்னிலையில் ஜனங்களைக் கொண்டுவர தேவையில்லை.
24 வல்லமையுள்ள ஜனங்கள் தீய காரியங்களைச் செய்யும்போது, தேவன் கேள்விகளைக் கேட்கத் தேவையில்லை.
தேவன் அந்த ஜனங்களை அழித்துவிடுவார், வேறு ஜனங்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுப்பார்.
25 எனவே ஜனங்கள் செய்வது என்ன என்பதை தேவன் அறிகிறார்.
அதனால் விரைவில் தேவன் தீயோரைத் தோற்கடித்து அவர்களை ஒரே இரவில் அழித்துவிடுவார்.
26 கெட்ட ஜனங்கள் செய்த தீய காரியங்களுக்காக, தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
பிற ஜனங்கள் காணும்படியாக அந்த ஜனங்களை தேவன் தண்டிப்பார்.
27 ஏனெனில், கெட்ட ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள்.
தேவன் விரும்புகிறபடியே செய்வதற்கும் அந்த ஜனங்கள் கவலைப்படுவதில்லை.
28 அந்தக் கெட்ட ஜனங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறார்கள்.
தேவனை நோக்கி அவர்கள் உதவி வேண்டி அழும்படிச் செய்கிறார்கள். ஏழைகள் உதவி கேட்டு அழுவதை தேவன் கேட்கிறார்.
29 ஆனால் ஏழைகளுக்கு உதவ வேண்டாமென்று தேவன் முடிவுச் செய்தால், ஒருவரும் தேவனைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியாது.
தேவன் ஜனங்களிடமிருந்து தன்னை மறைத்து கொண்டாரானால் அப்போது அவரை ஒருவரும் பார்க்க முடியாது.
தேவனே ஜனங்களுக்கும் தேசங்களுக்கும் அரசர்.
30 ஒரு அரசன் தீயவனாக இருந்து பிறர் பாவம் செய்யும்படி பண்ணினால், அப்போது, தேவன் அவனை அரசாளும்படி அனுமதிக்கமாட்டார்.
31 “ஒரு மனிதன் தேவனிடம்,
‘நான் குற்றவாளி, இனிமேல் பாவம் செய்யமாட்டேன்.
32 தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும்.
நான் தவறு செய்திருந்தால், மீண்டும் அதைச் செய்யமாட்டேன்’ என்று கூறலாம்.
33 யோபுவே, தேவன் உனக்குப் பரிசளிக்க (பலன்தர) வேண்டுமென நீ விரும்புகிறாய்.
ஆனால் நீயோ உன்னை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்.
யோபுவே, இது உம் முடிவு, என்னுடையதல்ல,
நீ நினைப்பதை எனக்குச் சொல்லு.
34 ஒரு ஞானி நான் சொல்வதைக் கேட்பான்.
ஒரு ஞானி,
35 ‘யோபு அறியாமையுடையவனைப் போலப் பேசுகிறான்.
யோபு சொல்கின்றவை பொருள்தருவன அல்ல,’ என்பான்.
36 யோபு இன்னும் அதிகமாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில் ஒரு தீயவன் பதில் சொல்கிறாற்போல, யோபுவும் எங்களுக்குப் பதில் சொல்கிறான்.
37 யோபு தனது பிற பாவங்களோடு இன்னும் பாவங்களை அதிகமாக்கினான்.
எங்களுக்கு முன்பாக யோபு அமர்ந்திருக்கிறான், அவன் எங்களை அவமானப்படுத்துகிறான், தேவனைக் கேலிச்செய்கிறான்!” என்றான்.
ஆன்மாவுக்குரிய பொக்கிஷம்
4 தேவன் தன் கிருபையால் இந்தப் பணியை எங்களுக்குக்கொடுத்தார். ஆகையால் இதனை விட்டுவிடமாட்டோம். 2 ஆனால் இரகசியமானதும் வெட்கப்படத்தக்கதுமான வழிகளில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் தந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. தேவனுடைய போதனைகளையும் இழிவாக்குவதில்லை. நாங்கள் உண்மையைத் தெளிவாகப் போதிக்கிறோம். நாங்கள் யார் என்பதை இப்படித்தான் மக்களுக்குப் புலப்படுத்துகிறோம். இது, நாம் தேவனுக்கு முன் எத்தகைய மக்கள் என்பதையும் அவர்கள் மனதிற்குக் காட்டுகிறது. 3 நாம் பரப்புகிற நற்செய்தி மறை பொருளாக இருக்கலாம். ஆனால் அது கெட்டுப்போகிறவர்கட்கே மறை பொருளாய் இருக்கும். 4 இந்த உலகத்தை ஆள்பவனாகிய [a] சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள். கிறிஸ்து மட்டுமே தேவன் போன்று இருப்பவர். 5 நாங்கள் எங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர் என்றும் நாங்கள் இயேசுவுக்காக உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறோம். 6 “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார்.
7 இப்பொக்கிஷத்தை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் நாங்களோ பொக்கிஷத்தைத் தாங்கியுள்ள மண் ஜாடிகளைப் போன்றே இருக்கிறோம். இப்பேராற்றலானது எங்களிடமிருந்து அல்ல, தேவனிடம் இருந்தே வருகிறது என்பதை இது காட்டும். 8 எங்களைச் சுற்றிலும் தொல்லைகள் உள்ளன. ஆனால் அவற்றால் நாங்கள் தோல்வி அடையவில்லை. அவ்வப்போது செய்வது தெரியாமல் திகைக்கிறோம். ஆனால் முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடவில்லை. 9 நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் தேவன் எங்களைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நாங்கள் தூக்கியெறியப்படுகிறோம். ஆனால் அழிந்துபோகவில்லை. 10 எங்கள் சொந்த சரீரங்களில் இயேசுவின் மரணத்தைச் சுமந்து திரிகிறோம். அதனால் எங்கள் சரீரங்களில் இயேசுவின் வாழ்வும் புலப்படவேண்டும் என்பதற்காகவே மரணத்தைச் சுமந்து திரிகிறோம். 11 நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றாலும் இயேசுவுக்காக எப்போதும் மரண ஆபத்தில் உள்ளோம். அழியும் நம் சரீரங்களில் இயேசுவின் வாழ்வைக் காணமுடியும் என்பதற்காகவே இது எங்களுக்கு நேர்ந்திருக்கிறது. 12 ஆகையால் மரணம் எங்களுக்குள் பணிபுரிகிறது; வாழ்வு உங்களுக்குள் பணிபுரிகிறது.
13 “நான் விசுவாசித்தேன், அதனால் பேசுகிறேன்” [b] என்று எழுதப்பட்டுள்ளது. எங்கள் விசுவாசமும் அத்தகையது தான். நாங்கள் விசுவாசிக்கிறோம், அதனால் பேசுகிறோம். 14 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். அதோடு இயேசுவுடன் தேவன் எங்களையும் எழுப்புவார் என்று அறிவோம். தேவன் உங்களோடு எங்களையும் ஒன்று சேர்ப்பார். நாம் அவருக்கு முன் நிற்போம். 15 இவை எல்லாம் உங்களுக்காகத்தான். ஆகையால் தேவனுடைய கிருபை, மென்மேலும் மிகுதியான மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது, மேலும் தேவனுடைய மகிமைக்காக அதிக அளவில் நன்றிகளைக் குவிக்கும்.
விசுவாசத்தால் வாழ்தல்
16 அதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனர்களாக ஆவதில்லை. எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது. 17 தற்சமயத்திற்கு சிற்சில தொந்தரவுகள் எங்களுக்கு உண்டு. எனினும் அவை, முடிவற்ற மகிமையைப் பெறவே எங்களுக்கு உதவும். அந்த முடிவற்ற மகிமையானது இந்தத் தொல்லைகளைவிட மிகப் பெரியது. 18 ஆகையால் நம்மால் காணமுடிந்தவற்றைப் பற்றியல்ல, காணமுடியாதவற்றைப் பற்றியே நாங்கள் சிந்திக்கிறோம். காணப்படுகிறவை தற்காலிகமானவை. காணப்படாதவையோ நிரந்தரமானவை.
2008 by World Bible Translation Center