Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 92:1-4

ஓய்வு நாளின் துதிப்பாடல்.

92 மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது.
    உமது நாமத்தைத் துதிப்பது நல்லது.
காலையில் உமது அன்பைப்பற்றியும்
    இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது.
தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும்,
    இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.

கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர்.
    அக்காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம்.

சங்கீதம் 92:12-15

12-13 செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான்.
    லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான்.
கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள்.
    தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.
14 வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள்.
    அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள்.
15 கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள்.
    அவர் என் பாறை, அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.

2 இராஜாக்கள் 14:1-14

யூதாவில் அமத்சியா ஆட்சி செய்தல்

14 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜா ஆனான். அவன் தனது 25வது வயதில் ராஜா ஆனான். எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் எருசலேம் நகரத்தைச் சேர்ந்த யொவதானாள். அவன் கர்த்தரால் சரியானவை என்று சொல்லப்பட்ட காரியங்களைச் செய்தான். ஆனால் தனது முற்பிதா தாவீதைப் போன்று முழுமையாக தேவனைப் பின்பற்றவில்லை. தந்தை யோவாஸ் செய்த பல செயல்களை இவனும் செய்தான். இவனும் பொய் தெய்வங்களின் கோவில்களை அழிக்கவில்லை. ஜனங்கள் அங்கு தொழுதுக் கொள்ள பலிகள் இடுவதும் நறுமணப் பொருட்களை எரிப்பதுமாக இருந்தனர்.

அமத்சியா கையில் ஆட்சி உறுதியான போது, தனது தந்தையைக் கொன்ற வேலைக்காரர்களை (அதிகாரிகளைக்) கொன்றான். ஆனால் அவன் மோசேயின் சட்டங்களின் புத்தகத்தில் எழுதியுள்ளபடி, கொலையாளிகளின் குழந்தைகளைக் கொல்லவில்லை. கர்த்தர் தன் ஆணைகளையே அந்த புத்தகத்தில் மோசே மூலம் எழுதியுள்ளார். மோசே, “குழந்தைகள் செய்த தவறுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த தவறுக்காகப் பிள்ளைகள் கொல்லப்படக் கூடாது. ஒருவன் தான் செய்த தவறுகளுக்கு மாத்திரமே மரணத்தை அடையவேண்டும்” என்று எழுதியுள்ளான்.

அவன் 10,000 ஏதோமியர்களை உப்புப் பள்ளத்தாக்கில் கொன்றுபோட்டான். சேலாவைப் போர் மூலம் பிடித்து அவனை “யொக்தியேல்” என்று அழைத்தான். அந்த இடம் இன்றும் “யொக்தியேல்” என்று அழைக்கப்படுகிறது.

அமத்சியா யோவாசுக்கு எதிராகப் போர்செய்ய விரும்பியது

அமத்சியா தூதுவர்களை யெகூவின் குமாரனும் யோவாகாசின் குமாரனும், இஸ்ரவேலின் அரசனுமான யோவாசிடம் அனுப்பினான். அவன், “வா, நேரில் ஒருவரையொருவர் சந்தித்து போரிட்டுப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டான்.

இஸ்ரவேலரின் ராஜாவாகிய யோவாஸ் அதற்குப் பதிலாக யூத ராஜா அமத்சியாவிற்கு, “லீபனோனிலுள்ள முட்செடியானது கேதுரு மரத்தை நோக்கி, ‘நீ உன் குமாரத்தியை என் குமாரனுக்கு மணமுடித்துக் கொடு’ என்று சொல்லச்சொன்னது. ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. 10 நீ ஏதோமியரைத் தோற்கடித்ததால் உன் மனம் உன்னைக் கர்வம் கொள்ளச்செய்தது. நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலேயே இரு! நீ இதனைச் செய்தால், நீ விழுவாய், யூதாவும் உன்னோடு விழும்” என்றான்.

11 ஆனாலும் அமத்சியா காதுகொடுத்து கேட்கவில்லை. ஆகையால் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான். யூதாவிலுள்ள பெத்ஷிமேஸ் என்னும் இடத்தில் அவனும் யூதாவின் அரசனுமான அமத்சியாவும் மோதிக்கொண்டனர். 12 இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதவீரர்கள் வீட்டிற்கு ஓடிப்போனார்கள். 13 பெத்ஷிமேஸ், என்னும் இடத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், அகசியாவின் குமாரன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவைச் சிறை பிடித்தான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோய், எருசலேமிலுள்ள சுவரை, 600 அடி நீளத்திற்கு எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலை வாசல்மட்டும் இடித்துப்போட்டான். 14 பிறகு யோவாஸ் அங்கு பொன்னையும் வெள்ளியையும் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள சகல பணிமூட்டுகளையும், அரண்மனையின் காசாளர்களையும் கைப்பற்றினான். ஜனங்களையும் சிறை பிடித்து சமாரியாவிற்குப் போனான்.

மாற்கு 4:1-20

உழவன்-விதை பற்றிய உவமை

(மத்தேயு 13:1-9; லூக்கா 8:4-8)

இயேசு மறுபடியும் கடற்கரையோரத்தில் போதிக்கத் தொடங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆகையால் இயேசு படகில் ஏறி ஏரிக்குள் சென்றார். எல்லா மக்களும் ஏரிக்கரையில் நின்றுகொண்டனர். இயேசு படகில் இருந்த வண்ணம் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு பல உவமைகளைப் பயன்படுத்தினார்.

அவர் சொன்னார், “கேளுங்கள், ஓர் உழவன் தன் விதையை விதைக்கச் சென்றான். உழவன் விதைத்துக் கொண்டு இருக்கும்போது சில விதைகள் பாதையில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டுச் சென்றன. சில விதைகள் பாறை போன்ற நிலத்தில் விழுந்தன. அதில் போதிய ஆழமான மண்ணில்லை. அதனால் அந்த விதைகள் வேகமாக முளைத்தன. ஆனால் சூரியன் ஏற வெப்பத்தால் அவை கருகிவிட்டன. அவற்றுக்கு ஆழமான வேர் இல்லாததால் பிழைக்கவில்லை. சில விதைகள் முட்புதர்களில் விழுந்தன. முட்புதர்கள் வளர்ந்து, விதைகள் முளைத்து வளராதபடி முடக்கிவிட்டன. எனவே, விதைகள் தானியங்களைத் தரவில்லை. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. விதைகள் அவற்றில் நன்றாக வளர ஆரம்பித்தன. அவை வளர்ந்து பலன் தர ஆரம்பித்தது. சில செடிகள் முப்பது தானியங்களையும், சில அறுபது தானியங்களையும், சில நூறு தானியங்களையும் தந்தன,”

பிறகு இயேசு, “நான் சொல்வதைக் கேட்கத்தக்கவர்கள் கவனிக்கட்டும்” என்றார்.

உவமைகள் ஏன்-விளக்கம்

(மத்தேயு 13:10-17; லூக்கா 8:9-10)

10 பிறகு இயேசு மக்களைவிட்டுத் தொலைவாகச் சென்றார். பன்னிரண்டு சீஷர்களும் மற்றும் அவரைச் சுற்றி இருந்தவர்களும் அவர் பயன்படுத்தும் உவமைகளைப் பற்றிக் கேட்டார்கள்.

11 இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். 12 நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்:

“‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது.
    அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும்,
    மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’”(A)

என்றார்.

விதைபற்றிய உவமை-விளக்கம்

(மத்தேயு 13:18-23; லூக்கா 8:11-15)

13 இயேசு தன் சீஷர்களிடம், “உங்களால் இந்த உவமையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? முடியாவிடில் மற்ற உவமைகளை நீங்கள் எப்படி புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? 14 இதில் உழவன் என்பவன் தேவனுடைய போதனைகளை மக்களிடம் நடுபவனே. 15 சில நேரங்களில் அப்போதனை வழிப்பாதையில் விழும். சிலர் தேவனின் போதனைகளைக் கேட்பார்கள். ஆனால் சாத்தான் வந்து அப்போதனை வளராதபடி எடுத்துச் சென்றுவிடுவான்.

16 “பாறைகளில் விழுந்த விதைகளைப்போலச் சிலர் காதில் போதனை விழுகின்றன. அவர்கள் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வர். 17 ஆனால் அவர்கள் அப்போதனைகள் அவர்களது வாழ்வில் ஆழமாகச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் அவற்றைக் கொஞ்ச காலமே வைத்திருப்பர். ஆனால் அந்தப் போதனையை ஏற்றதால் கஷ்டமோ, பிறர் மூலம் துன்பமோ வரும்போது அவர்கள் அவற்றை உடனே கைவிட்டு விடுவர்.

18 “இன்னும் சிலரோ, முட்செடிகளில் விழுந்த விதைகளைப்போன்று போதனையைக் கேட்டுக்கொள்கின்றனர். 19 வாழ்க்கைத் துன்பங்களும், பண ஆசைகளும் பிற எல்லாவிதமான காரியங்களின் மீதுள்ள விருப்பங்களும் இவர்களிடம் போதனைகள் வளராமல் செய்துவிடுகின்றன. எனவே இவர்கள் வாழ்க்கையில் போதனை எந்தவிதமான பலனையும் உண்டாக்குவதில்லை.

20 “மற்றவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போன்று இருக்கின்றனர். அவர்கள் போதனையைக் கேட்டு, ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் முப்பது மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் நூறு மடங்காகவும் பலன் தருகின்றனர்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center