Revised Common Lectionary (Complementary)
8 பகலின் குளிர்ச்சியான வேளையில் தேவனாகிய கர்த்தர் அத்தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார். மனிதனும், மனுஷியும் அவருடைய சத்தத்தைக் கேட்டுப் பயந்து தோட்டத்திலிருந்த மரங்களுக்கு இடையில் தங்களை மறைத்துக்கொண்டார்கள். 9 ஆனால் தேவனாகிய கர்த்தர் மனிதனை அழைத்து, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார்.
10 அதற்கு அவன், “நீர் தோட்டத்தில் நடந்து போவதைக் கண்டேன். எனக்குப் பயமாக உள்ளது. நான் நிர்வாணமாக இருப்பதால் மறைந்திருக்கிறேன்” என்றான்.
11 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “நீ நிர்வாணமாக இருப்பதாக யார் உனக்குச் சொன்னது? நீ உண்ண வேண்டாம் என்று நான் கூறியிருந்த மரத்தின் கனியை உண்டாயா?” என்று அவனிடம் கேட்டார்.
12 அதற்கு அவன், “எனக்காக உம்மால் படைக்கப்பட்ட இந்தப் பெண் அந்த மரத்தின் கனியைக் கொடுத்தாள். நான் உண்டுவிட்டேன்” என்றான்.
13 பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம், “நீ என்ன காரியத்தைச் செய்தாய்?” என்று கேட்டார்.
அதற்கு அவள், “பாம்பு என்னை வஞ்சித்துவிட்டது. எனவே நான் பழத்தை உண்டுவிட்டேன்” என்றாள்.
14 எனவே தேவனாகிய கர்த்தர் பாம்பிடம்:
“நீ இந்தத் தீய செயலைச் செய்தபடியால்,
மற்ற எந்த மிருகத்தை விடவும்
நீ மிகவும் துன்பப்படுவாய்.
நீ உன் வயிற்றாலேயே ஊர்ந்து திரிவாய்.
வாழ்நாள் முழுவதும் மண்ணைத் தின்று உயிர்வாழ்வாய்.
15 உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன்.
அதோடு உன் பிள்ளைகளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் பகை உண்டாக்குவேன்.
அவள் பிள்ளையின் காலை நீ கடிப்பாய்,
அவர் உன் தலையை நசுக்குவார்” என்று சொன்னார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
130 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன்,
எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும்.
உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும்.
3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும்
நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்.
4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்.
அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.
5 கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஆத்துமா அவருக்காகக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன்.
6 நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
7 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும்.
கர்த்தர் நம்மை மீண்டும், மீண்டும் காப்பாற்றுகிறார்.
8 கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.
13 “நான் விசுவாசித்தேன், அதனால் பேசுகிறேன்”(A) என்று எழுதப்பட்டுள்ளது. எங்கள் விசுவாசமும் அத்தகையது தான். நாங்கள் விசுவாசிக்கிறோம், அதனால் பேசுகிறோம். 14 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். அதோடு இயேசுவுடன் தேவன் எங்களையும் எழுப்புவார் என்று அறிவோம். தேவன் உங்களோடு எங்களையும் ஒன்று சேர்ப்பார். நாம் அவருக்கு முன் நிற்போம். 15 இவை எல்லாம் உங்களுக்காகத்தான். ஆகையால் தேவனுடைய கிருபை, மென்மேலும் மிகுதியான மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது, மேலும் தேவனுடைய மகிமைக்காக அதிக அளவில் நன்றிகளைக் குவிக்கும்.
விசுவாசத்தால் வாழ்தல்
16 அதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனர்களாக ஆவதில்லை. எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது. 17 தற்சமயத்திற்கு சிற்சில தொந்தரவுகள் எங்களுக்கு உண்டு. எனினும் அவை, முடிவற்ற மகிமையைப் பெறவே எங்களுக்கு உதவும். அந்த முடிவற்ற மகிமையானது இந்தத் தொல்லைகளைவிட மிகப் பெரியது. 18 ஆகையால் நம்மால் காணமுடிந்தவற்றைப் பற்றியல்ல, காணமுடியாதவற்றைப் பற்றியே நாங்கள் சிந்திக்கிறோம். காணப்படுகிறவை தற்காலிகமானவை. காணப்படாதவையோ நிரந்தரமானவை.
5 பூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது.
பிசாசு பிடித்தவர் என பழித்துரைத்தல்
(மத்தேயு 12:22-32; லூக்கா 11:14-23; 12:10)
20 பிறகு, இயேசு வீட்டிற்குச் சென்றார். ஆனால் மறுபடியும் அங்கு மக்கள் கூடினர். இயேசுவும் அவரது சீஷர்களும் உணவு உட்கொள்ள முடியாதபடி மக்கள் கூடினர். 21 இயேசுவின் குடும்பத்தார் இவற்றைப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டனர். அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரது குடும்பத்தார் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினர்.
22 எருசலேமில் இருந்து வந்த வேதபாரகர், “இயேசுவிடம் பெயல்செபூல் (பிசாசு) உள்ளது. பிசாசுகளின் தலைவனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தி பேய்களை விரட்டுகிறார்” என்றனர்.
23 ஆகையால் இயேசு மக்களை அழைத்தார். அவர்களிடம் அவர் உவமைகள் மூலம் விளக்கிச் சொன்னார். “சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி? என்று கேட்டார். 24 ஒரு இராஜ்யம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு தொடர்ந்திருக்க முடியும்? 25 ஒரு குடும்பம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு அழியாமல் இருக்கும்? 26 இது போல் சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டு இருந்தால் அவன் நிலைத்திருக்க முடியாது. அதுவே அவன் முடிவு.
27 “ஒருவன் பலவானுடைய வீட்டிற்குள் புகுந்து பொருட்களைத் திருட விரும்பினால் முதலில் அவன் அப்பலவானைக் கட்டிப்போட வேண்டும். பிறகு, அவனால் பலவானுடைய வீட்டிலிருந்து அவனது பொருட்களைத் திருடமுடியும்.
28 “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், மக்களால் செய்யப்படுகிற அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்படும். அத்துடன் மக்களால் தேவனுக்கு எதிராகச் சொல்லப்படும் பழிகளும் மன்னிக்கப்படும். 29 ஆனால், பரிசுத்தாவியை எவனாவது பழித்து உரைப்பானேயானால் அவனுக்கு என்றென்றைக்கும் மன்னிப்பே இல்லை. அவன் குற்றவாளியாகி என்றென்றைக்கும் குற்ற உணர்வுடையவனாக இருப்பான்” என்றார்.
30 வேதபாரகர் இயேசுவை “அசுத்த ஆவி பிடித்தவர்” என்று சொன்னதால், அவர் இவ்வாறு விளக்கமாகக் கூறினார்.
இயேசுவின் உண்மை உறவினர்கள்
(மத்தேயு 12:46-50; லூக்கா 8:19-21)
31 பிறகு இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர். 32 இயேசுவைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். அப்போது அவன், “உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றான்.
33 இயேசு அவர்களிடம், “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். 34 பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள். 35 தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
2008 by World Bible Translation Center