Revised Common Lectionary (Complementary)
தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.
30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
2 என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
நீர் என்னைக் குணமாக்கினீர்.
3 கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
என்னை வாழவிட்டீர்.
குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.
4 தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
5 தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே.”
ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!
6 இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
“நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
7 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
நான் மிகவும் பயந்தேன்.
8 தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
9 நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
என்னிடம் தயவாயிரும்!
கர்த்தாவே, எனக்கு உதவும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
18 கர்த்தரிடம் உனது இதயத்தை ஊற்றி கதறு!
சீயோன் குமாரத்தியின் சுவரே, ஒரு நதியைப்போன்று கண்ணீர்விடு!
இரவும் பகலும் உன் கண்ணீரை வடியவிடு! நிறுத்தாதே!
உனது கண்ணின் கறுப்பு விழி
சும்மா இருக்கும்படிச் செய்யாதே!
19 எழுந்திரு! இரவில் கதறு! இரவின் முதற் சாமத்தில் கதறு!
உனது இதயத்தைத் தண்ணீரைப்போன்று ஊற்று!
கர்த்தருக்கு முன்னால் உன் இதயத்தை ஊற்று!
கர்த்தரிடம் ஜெபம் செய்வதற்கு உன் கைகளை மேலே தூக்கு.
உன் குழந்தைகளை வாழவிடும்படி அவரிடம் கேள்.
பசியினால் மயங்கிக்கொண்டிருந்த உனது பிள்ளைகள் வாழும்படி நீ அவரிடம் கேள்.
நகரத்தின் எல்லா தெருக்களிலும் அவர்கள் பசியால் மயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
20 கர்த்தாவே, என்னைப் பாரும்!
இந்த வழியில் யாரை நீர் நடத்தியிருக்கிறீர் என்று பாரும்!
என்னை இக்கேள்வியைக் கேட்கவிடும்; பெண்கள் தாம் பெற்ற பிள்ளைகளையே தின்ன வேண்டுமா?
பெண்கள் தாம் கவனித்துக் கொள்ளவேண்டிய பிள்ளைகளையே தின்னவேண்டுமா?
கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியரும் தீர்க்கதரிசியும் கொல்லப்படவேண்டுமா?
21 நகர வீதிகளின் தரைகளில் இளைய ஆண்களும்
முதிய ஆண்களும் விழுந்து கிடக்கின்றனர்.
கர்த்தாவே, நீர் அவர்களை உமது கோபத்தின் நாளில் கொன்றீர்!
அவர்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!
22 நீர் எல்லா இடங்களிலிருந்தும்
பயங்கரங்களை என்மேல் வரசெய்தீர்.
பண்டிகை நாட்களுக்கு வரவழைப்பதுபோன்று
நீர் பயங்கரங்களை வரவழைத்தீர்.
கர்த்தருடைய கோபநாளில் எவரும் தப்பவில்லை.
நான் வளர்த்து ஆளாக்கியவர்களை என் பகைவன் கொன்றிருக்கிறான்.
அசுத்த ஆவியிலிருந்து விடுதலை
(மாற்கு 1:21-28)
31 கலிலேயாவில் உள்ள பட்டணமாகிய கப்பர்நகூமுக்கு இயேசு சென்றார். ஓய்வு நாளில் இயேசு மக்களுக்குப் போதித்தார். 32 அவரது போதனைகளைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். ஏனெனில் அவர் மிகுந்த அதிகாரத்துடன் பேசினார்.
33 பிசாசினால் அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதன் ஜெப ஆலயத்தில் இருந்தான். அந்த மனிதன் உரத்த குரலில், 34 “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் என்ன விரும்புகிறீர்? நீர் யார் என்பதை நான் அறிவேன். நீர் தேவனுடைய பரிசுத்தமானவர்” என்றான். 35 அசுத்த ஆவியைப் பேசாமல் இருக்கும்படி எச்சரித்தார் இயேசு. “அமைதியாக இருப்பாயாக! இம்மனிதனிலிருந்து வெளியே வா!” என்றார் இயேசு. எல்லாருக்கும் முன்பாக அசுத்த ஆவி அம்மனிதனைத் தரையில் தூக்கி எறிந்தது. பின்பு அசுத்த ஆவி காயப்படுத்தாமல் அம்மனிதனை விட்டு விலகியது.
36 மக்கள் அதைக் கண்டு அதிசயப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “இதன் பொருள் என்ன? அதிகாரத்தோடும் வல்லமையோடும் அவர் அசுத்த ஆவிகளுக்குக் கட்டளை இடுகிறார். அவை வெளியேறுகின்றன” என்று சொல்லிக் கொண்டனர். 37 அந்தப் பகுதியில் உள்ள எல்லா இடங்களிலும் இயேசுவைப்பற்றிய செய்தி பரவியது.
2008 by World Bible Translation Center