Revised Common Lectionary (Complementary)
தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.
30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
2 என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
நீர் என்னைக் குணமாக்கினீர்.
3 கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
என்னை வாழவிட்டீர்.
குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.
4 தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
5 தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே.”
ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!
6 இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
“நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
7 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
நான் மிகவும் பயந்தேன்.
8 தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
9 நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
என்னிடம் தயவாயிரும்!
கர்த்தாவே, எனக்கு உதவும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
16 “நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன்.
எனது கண்களில் கண்ணீர் ஓடுகிறது.
எனக்கருகில் ஆறுதல் எதுவுமில்லை.
என்னைத் தேற்ற எவருமில்லை.
எனது பிள்ளைகள் பாழான நிலத்தைப் போன்றிருக்கிறார்கள்.
அவர்கள் அவ்வாறு இருக்கின்றனர்.
ஏனென்றால் பகைவர்கள் வென்றிருக்கின்றனர்.”
17 சீயோன் தனது கைகளை விரித்தாள்.
அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை.
கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.
கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு நகரத்தைச் சுற்றி வளைக்கும்படி கட்டளையிட்டார்.
எருசலேம் அசுத்தமாகியிருக்கிறது.
அந்தப் பகைவர்களுக்கு மத்தியில் எருசலேம் அசுத்தமாயிற்று.
18 இப்போது எருசலேம் கூறுகிறாள்: “நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன்.
எனவே, கர்த்தர் இவற்றையெல்லாம் செய்யும் உரிமையைப் பெற்றார்.
எனவே ஜனங்களே, கவனியுங்கள்! எனது வேதனையைப் பாருங்கள்!
எனது இளம் பெண்களும் ஆண்களும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
19 நான் எனது நேசர்களை கூப்பிட்டேன்.
ஆனால் அவர்கள் என்னை மோசம் பண்ணினார்கள்.
எனது ஆசாரியர்களும், முதியவர்களும்
இந்நகரத்தில் மரித்திருக்கின்றனர்.
அவர்கள் உணவுக்காக அலைந்திருக்கிறார்கள்.
அவர்கள் உயிரோடு வாழ விரும்பியிருக்கிறார்கள்.
20 “என்னைப் பாரும் கர்த்தாவே, நான் மிக்க துன்பத்தில் இருக்கிறேன்!
எனது உள்மனம் கலங்குகிறது!
எனது இதயம் மேலிருந்து கீழ்ப்பக்கம் திரும்பினதுபோல் உள்ளது!
என்னுடைய கசப்பான அனுபவங்களின்
காரணமாக என் இதயம் இப்படி உணர்கிறது!
வீதிகளில் வாள் எனது பிள்ளைகளைக் கொன்றது.
வீடுகளுக்குள் மரணம் இருந்தது.
21 “என்னைக் கவனியுங்கள்! ஏனென்றால், நான் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
எனக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லை!
எனது பகைவர்கள் எல்லாரும் என் துன்பத்தைக் கேள்விப்பட்டு,
அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.
நீர் இவற்றை எனக்குச் செய்ததால்,
அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
தண்டனைக்குரிய காலம் வரும் என்று நீர் சொன்னீர்.
எனது பகைவர்களைத் தண்டிப்பதாகச் சொன்னீர்.
நீர் என்ன சொன்னீரோ அதை இப்பொழுது செய்யும்.
நான் இப்பொழுது இருப்பதுபோன்று என் பகைவரும் இருக்கட்டும்.
22 “எனது பகைவர்கள் எவ்வளவு கொடியவர்கள் எனப்பாரும்.
எனது பாவங்களுக்கெல்லாம் எனக்கு எவ்வாறு செய்தீரோ அதே வழியில் அவர்களுக்கும் செய்யும்.
இதனைச் செய்யும்.
ஏனென்றால், நான் மேலும், மேலும் வேதனையடைகிறேன்.
ஏனென்றால், எனது இதயம் நோயுற்றிருக்கிறது.”
பவுலின் மகிழ்ச்சி
2 எங்களுக்காக உங்கள் இதயங்களைத் திறந்து வைத்திருங்கள். நாங்கள் யாருக்கும் தீமை செய்ததில்லை. நாங்கள் எவரது நம்பிக்கையையும் அழித்ததில்லை. எவரையும் ஏமாற்றியதில்லை. 3 உங்களைக் குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. எங்கள் வாழ்வும் சாவும் உங்கள் உடனே இருக்கும் அளவுக்கு உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். 4 நான் உங்களைப் பற்றி உறுதியாக உணர்கிறேன். உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்கு மிகுந்த தைரியம் கொடுக்கிறீர்கள். அதனால் அனைத்து துன்பங்களுக்கு இடையிலும் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
5 நாங்கள் மக்கதோனியாவுக்கு வந்தபோது எங்களுக்கு ஓய்வு இல்லாமல் இருந்தது. எங்களைச் சுற்றிலும் நெருக்கடிகள் இருந்தன. நாங்கள் வெளியே போராடிக்கொண்டும் உள்ளுக்குள் பயந்துகொண்டும் இருந்தோம். 6 ஆனால் தேவன் துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிறார். தீத்து வந்தபோது தேவன் ஆறுதல் தந்தார். 7 அவனது வருகையிலும், நீங்கள் அவனுக்குக் கொடுத்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதலடைந்தோம். என்னை நீங்கள் பார்க்க விரும்பியதைப் பற்றி தீத்து கூறினான். உங்களது தவறுகளுக்கு நீங்கள் வருந்தியது பற்றியும் கூறினான். என்மீது நீங்கள் கொண்ட அக்கறையைப் பற்றி அவன் சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன்.
8 நான் உங்களுக்கு எழுதிய நிருபம் ஏதேனும் வருத்தத்தை தந்திருக்குமானால் அதை எழுதியதற்காக நான் இப்பொழுது வருத்தப்படவில்லை. அந்நிருபம் உங்களுக்கு வருத்தத்தை தந்தது என அறிவேன். அதற்காக அப்பொழுது வருந்தினேன். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான் உங்களுக்குத் துயரத்தைத் தந்தது. 9 இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது நீங்கள் துயரப்படும்படி ஆனதால் அன்று. அத்துயரம் உங்கள் இதயங்களை மாற்றியதற்காக நான் மகிழ்கிறேன். தேவனுடைய விருப்பப்படியே நீங்கள் துக்கப்பட்டீர்கள். எனவே நீங்கள் எங்களால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. 10 தேவனுடைய விருப்பப்படி நேரும் வருத்தம் ஒருவனது இதயத்தை மாற்றி, வாழ்வையும் மாற்றுகிறது. அவனுக்கு இரட்சிப்பையும் தருகிறது. அதற்காக வருத்தப்படவேண்டாம். ஆனால் உலகரீதியிலான துயரங்களோ மரணத்தை வரவழைக்கின்றது. 11 தேவனின் விருப்பப்படியே நீங்கள் வருத்தம் அடைந்தீர்கள். இப்பொழுது அவ்வருத்தம் உங்களுக்கு எதைக் கொண்டு வந்தது என்று பாருங்கள். அது உங்களிடம் ஜாக்கிரதையை உருவாக்கியது. குற்றமற்றவர்கள் என உங்களை நிரூபிக்கத் தூண்டியது. அது கோபத்தையும், பயத்தையும் தந்தது. அது என்னைக் காணத் தூண்டியது. அது உங்களை அக்கறை கொள்ளச் செய்தது. அது நல்லவற்றைச் செய்ய ஒரு காரணமாயிற்று. இக்காரியத்தில் எவ்விதத்திலும் நீங்களும் குற்றம் இல்லாதவர்கள் என்று உங்களை நிரூபித்துக்கொண்டீர்கள். 12 நான் உங்களுக்கு நிருபம் எழுதியதின் காரணம் ஒருவன் தவறு இழைத்துவிட்டான் என்பதாலல்ல, அதேபோல ஒருவன் பாதிக்கப்பட்டுவிட்டான் என்பதாலும் உங்களுக்கு நிருபம் எழுதவில்லை. தேவனுக்கு முன்பாக உங்களுக்காக நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் காணும்பொருட்டே அப்படி எழுதினேன். இதனால்தான் நாங்கள் ஆறுதலடைந்தோம். 13 நாங்கள் மிகவும் ஆறுதலடைந்தோம்.
தீத்து மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்து நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம். அவன் நலமடைய நீங்கள் அனைவரும் உதவினீர்கள். 14 உங்களைப் பற்றி தீத்துவிடம் பெருமையாகச் சொன்னவை அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு நாங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகும். 15 நீங்கள் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறீர்கள். இதை நினைத்து தீத்து உங்கள் மீது உறுதியான அன்பைக் கொண்டிருக்கிறான். நீங்கள் அவனைப் பயத்தோடும் மரியாதையோடும் ஏற்றுக்கொண்டீர்கள். 16 நான் உங்களை முழுமையாக நம்பலாம் என்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
2008 by World Bible Translation Center