Revised Common Lectionary (Complementary)
12 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வு நாட்களைப் பரிசுத்தமாகக் கழிப்பாயாக. 13 வாரத்திற்கு ஆறு நாட்கள் உன் வேலைக்குரிய கிரியைகளைச் செய். 14 ஆனால், ஏழாவது நாளோ உங்கள் தேவனாகிய கர்த்தருக்கான ஓய்வுநாள். எனவே, அந்த நாளில் யாரும் வேலை செய்யக்கூடாது. நீ மட்டுமின்றி, உனது குமாரர்களும், குமாரத்திகளும், வேலைக்காரர்களும், உன் வீட்டிலுள்ள மாடு, கழுதை மற்றும் பிற விலங்குகளும்கூட வேலைச் செய்யக்கூடாது. உன் வீட்டிலிருக்கின்ற அந்நியர்களும் யாதொரு வேலையும் செய்யக்கூடாது. நீ ஓய்வு எடுப்பது போல உன் அடிமைகள் எல்லோருமே ஓய்வு எடுக்க வேண்டும். 15 நீங்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவரது ஆற்றல் மிகுந்த கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தார். உங்களை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரமாக்கினார். இதனாலேயே ஓய்வுநாளை எப்போதும் விசேஷித்த நாளாக செய்யும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டார்.
கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று.
81 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.
இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.
2 இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள்.
வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.
3 மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள்.
முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள்.
அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது.
4 அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது.
தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
5 தேவன் யோசேப்பை[a] எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்.
எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம்.
6 தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன்.
உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன்.
7 நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள்.
நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன்.
புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன்.
மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.”
8 “எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன்.
இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!
9 வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை
நீ தொழுதுகொள்ளாதே.
10 கர்த்தராகிய நானே உன் தேவன்.
நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன்.
இஸ்ரவேலே, உன் வாயைத் திற,
நான் உன்னைப் போஷிப்பேன்.
5 நாங்கள் எங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர் என்றும் நாங்கள் இயேசுவுக்காக உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறோம். 6 “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார்.
7 இப்பொக்கிஷத்தை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் நாங்களோ பொக்கிஷத்தைத் தாங்கியுள்ள மண் ஜாடிகளைப் போன்றே இருக்கிறோம். இப்பேராற்றலானது எங்களிடமிருந்து அல்ல, தேவனிடம் இருந்தே வருகிறது என்பதை இது காட்டும். 8 எங்களைச் சுற்றிலும் தொல்லைகள் உள்ளன. ஆனால் அவற்றால் நாங்கள் தோல்வி அடையவில்லை. அவ்வப்போது செய்வது தெரியாமல் திகைக்கிறோம். ஆனால் முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடவில்லை. 9 நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் தேவன் எங்களைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நாங்கள் தூக்கியெறியப்படுகிறோம். ஆனால் அழிந்துபோகவில்லை. 10 எங்கள் சொந்த சரீரங்களில் இயேசுவின் மரணத்தைச் சுமந்து திரிகிறோம். அதனால் எங்கள் சரீரங்களில் இயேசுவின் வாழ்வும் புலப்படவேண்டும் என்பதற்காகவே மரணத்தைச் சுமந்து திரிகிறோம். 11 நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றாலும் இயேசுவுக்காக எப்போதும் மரண ஆபத்தில் உள்ளோம். அழியும் நம் சரீரங்களில் இயேசுவின் வாழ்வைக் காணமுடியும் என்பதற்காகவே இது எங்களுக்கு நேர்ந்திருக்கிறது. 12 ஆகையால் மரணம் எங்களுக்குள் பணிபுரிகிறது; வாழ்வு உங்களுக்குள் பணிபுரிகிறது.
யூதர்களின் விமர்சனம்
(மத்தேயு 12:1-8; லூக்கா 6:1-5)
23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். 24 பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர்.
25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் 26 தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார்.
27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. 28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.
சூம்பின கை குணமாக்கப்படுதல்
(மத்தேயு 12:9-14; லூக்கா 6:6-11)
3 மறுமுறையும் ஜெப ஆலயத்திற்குள் இயேசு நுழைந்தார். அங்கே சூம்பின கையை உடைய ஒரு மனிதன் இருந்தான். 2 இயேசு தவறாக ஏதேனும் செய்யும் பட்சத்தில் அவரைக் குற்றம் சாட்டலாம் என்று சில யூதர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். ஓய்வு நாளில் அவனைக் குணமாக்குவாரா என்று பார்க்கக் காத்திருந்தனர். 3 இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார்.
4 பிறகு இயேசு மக்களிடம், “ஓய்வு நாளில் எது செய்வது சரியாக இருக்கும்? நன்மை செய்வதா, தீமை செய்வதா? ஒரு உயிரைக் காப்பாற்றுவது சரியா? அழிப்பது சரியா?” என்று கேட்டார். மக்கள் பதிலொன்றும் சொல்லவில்லை.
5 இயேசு மக்களைப் பார்த்தார். அவருக்கோ கோபம் வந்தது. அவர்கள் கடின மனம் உடையவர்களாய் இருந்ததால் இயேசுவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இயேசு அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் இயேசுவிடம் தன் கையை நீட்டினான். அது குணமாகியது. 6 பிறகு பரிசேயர்கள் அந்த இடத்தை விட்டுப் போய் ஏரோதியரோடு கூடக் கலந்து இயேசுவைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர்.
2008 by World Bible Translation Center