Revised Common Lectionary (Complementary)
கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று.
81 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.
இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.
2 இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள்.
வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.
3 மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள்.
முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள்.
அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது.
4 அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது.
தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
5 தேவன் யோசேப்பை[a] எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்.
எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம்.
6 தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன்.
உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன்.
7 நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள்.
நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன்.
புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன்.
மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.”
8 “எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன்.
இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!
9 வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை
நீ தொழுதுகொள்ளாதே.
10 கர்த்தராகிய நானே உன் தேவன்.
நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன்.
இஸ்ரவேலே, உன் வாயைத் திற,
நான் உன்னைப் போஷிப்பேன்.
5 “அரைத்த மாவை எடுத்து அதில் பன்னிரெண்டு அப்பங்களைச் செய்யுங்கள். ஒவ்வொரு அப்பமும் பதினாறு கிண்ணங்கள் அளவு மாவால் செய்யப்பட வேண்டும். 6 கர்த்தருக்கு முன்பாக தங்கத்தாலான மேஜையின்மேல் இரண்டு வரிசையாக அப்பங்களை அடுக்க வேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் ஆறு அப்பங்கள் இருக்கட்டும். 7 ஒவ்வொரு வரிசைக்கும் சாம்பிராணிப் புகை காட்டு. அது அப்பத்தோடு இருந்து, கர்த்தருக்கு நினைவு அடையாளமாக, தகன பலியாக கர்த்தருக்கு ஏற்றதாக இருக்கும். 8 அப்பத்தை இவ்வரிசையிலேயே ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஆரோன் கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். இது எல்லாக் காலங்களுக்குமுரியது. இஸ்ரவேல் ஜனங்களோடு உள்ள இந்த உடன்படிக்கை என்னென்றும் தொடரும். 9 இந்த அப்பங்கள் ஆரோனுக்கும் அவனது குமாரர்களுக்கும் உரியதாகும். அவர்கள் பரிசுத்தமான இடங்களில் அவற்றை உண்ண வேண்டும்; ஏனென்றால் அவை கர்த்தருக்குத் தகன பலியாகக் கொடுக்கப்பட்டவை. அது என்றென்றும் ஆரோனின் பங்காக இருக்கும்” என்று கூறினார்.
19 மோசே உங்களுக்குச் சில சட்டங்களைக் கொடுத்திருக்கிறார் இல்லையா? ஆனால் உங்களில் எவரும் அதற்குக் கீழ்ப்படிவதில்லை. என்னை ஏன் கொலை செய்ய முயற்சி செய்கிறீர்கள்?” என்று இயேசு கேட்டார்.
20 “நீ பிசாசு பிடித்தவன். அதனால்தான் இப்படி உளறுகிறாய். நாங்கள் உன்னைக் கொலை செய்ய முயற்சி செய்யவில்லை” என்று மக்கள் பதில் சொன்னார்கள்.
21 “நான் ஓர் அற்புதம் செய்தேன். நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். 22 மோசே விருத்தசேதனம்பற்றிய சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். (ஆனால் உண்மையில் மோசே உங்களுக்கு விருத்தசேதனத்தைத் தரவில்லை. அது மோசேக்கு முற்காலத்திலேயே நமது மக்களிடமிருந்து வந்துவிட்டது) ஆகையால் சில வேளைகளில் ஓய்வு நாட்களிலும் நீங்கள் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள். 23 மோசேயின் கட்டளைக்குக் கீழ்ப்படிய ஓய்வு நாளிலும் ஒரு குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யலாம் என்பதை இது காட்டுகிறது. எனவே, நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனின் முழு சரீரத்தையும் குணமாக்கினேன் என்பதற்காக என்மேல் ஏன் கோபமாக இருக்கிறீர்கள்? 24 வெளித் தோற்றத்தை வைத்து முடிவுக்கு வருவதை நிறுத்துங்கள். சரி எது என்பதைக்கொண்டு அதன் மூலம் நியாயமாக முடிவு செய்யுங்கள்” என்றார் இயேசு.
2008 by World Bible Translation Center