Revised Common Lectionary (Complementary)
ஆசாபின் ஒரு மஸ்கீல்.
74 தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா?
உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா?
2 பல்லாண்டுகளுக்கு முன் நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனங்களை நினைவுகூரும்.
நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள்.
நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும்.
3 தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும்.
பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும்.
4 ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள்.
போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள்.
5 பகைப்படை வீரர்கள்
கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள்.
6 தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி,
உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள்.
7 அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள்.
அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது.
அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள்.
8 பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான்.
தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள்.
9 எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை.
எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை.
யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
10 தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்?
உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா?
11 தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்?
நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர்.
12 தேவனே, நீண்டகாலம் நீரே எங்கள் ராஜாவாக இருந்தீர்.
இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர்.
13 தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி
செங்கடலைப் பிளக்கச் செய்தீர்.
14 கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்!
லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர்.
பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர்.
15 நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர்.
நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர்.
16 தேவனே, நீர் பகலை ஆளுகிறீர்.
நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.
17 பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர்.
நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.
18 தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும்.
அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள்.
19 அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்!
என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும்.
20 நமது உடன்படிக்கையை நினைவுகூரும்!
இத்தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது.
21 தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள்.
இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
22 தேவனே, எழுந்து போரிடும்!
அம்மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும்.
23 உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும்.
மீண்டும், மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள்.
சவுலை ஒரு கெட்ட ஆவி துன்புறுத்துகிறது
14 கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டு விலகினார். கர்த்தர் ஒரு கெட்ட ஆவியை சவுலுக்கு அனுப்பினார். அது மிகத் தொல்லை கொடுத்தது. 15 சவுலின் வேலைக்காரர்களோ, “தேவனிடமிருந்து கெட்ட ஆவி ஒன்று உங்களைத் தொந்தரவு செய்கிறது. 16 ஆணையிடுங்கள், நாங்கள் சுரமண்டலம் வாசிக்கும் ஒருவனைத் தேடிப்பிடிப்போம். ஒருவேளை கர்த்தரிடமிருந்து கெட்ட ஆவி உங்கள் மீது வருமானால், உமக்காக அவன் இசை மீட்டுவான். அப்போது நீங்கள் நலம் பெறுவீர்கள்” என்றனர்.
17 எனவே சவுல், “நன்றாக இசை மீட்டுபவனைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்றான்.
18 ஒரு வேலையாள், “ஈசாய் என்று ஒருவன் பெத்லேகேமில் இருக்கிறான். அவனது குமாரனுக்கு நன்றாக சுரமண்டலம் வாசிக்கத் தெரியும், தைரியமாக நன்றாக சண்டை இடுவான். அழகானவனும் சுறுசுறுப்பானவனும் கூட, மேலும் கர்த்தர் அவனுடன் இருக்கிறார்” என்றான்.
19 எனவே சவுலின் ஆட்கள் ஈசாயிடம் சென்றனர். அவர்கள் ஈசாயிடம், “ஆட்டைக் காக்கிற உன் குமாரன் தாவீதை என்னிடம் அனுப்புங்கள்” என்று சொன்னார்கள்.
20 எனவே ஈசாய் சில அன்பளிப்புகளாக கழுதை, அப்பம், திராட்சைரசம், இளம் வெள்ளாட்டுக்குட்டி ஆகியவற்றை தாவீதுக்கு கொடுத்து சவுலிடம் அனுப்பினான். 21 தாவீது சவுல் முன்பு போய் நின்றான். சவுலுக்கு தாவீதை மிகவும் பிடித்தது. அவன் சவுலின் ஆயுதங்களைச் சுமக்கும் உதவியாளனானான். 22 அவன் ஈசாய்க்கு, “நான் தாவீதை மிகவும் விரும்புகிறேன். அவன் என்னோடு இருந்து எனக்குச் சேவை புரியட்டும்” என்ற செய்தி சொல்லி அனுப்பினான்.
23 எப்பொழுதாவது தேவனிடத்திலிருந்து சவுல் மேல் கெட்ட ஆவி வந்தால், தாவீது தன் சுரமண்டலத்தை மீட்டுவான். அப்போது அந்த கெட்ட ஆவி சவுலை விட்டு போய்விடும், சவுலும் நலம் பெறுவான்.
ஆயிரம் ஆண்டுகள்
20 பரலோகத்தில் இருந்து ஒரு தூதன் கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அவனிடம் பாதாள உலகத்தின் திறவு கோல் இருந்தது. அவன் தன் கையில் ஒரு நீண்ட சங்கிலியையும் வைத்திருந்தான். 2 சாத்தான் எனப்படும் பழைய பாம்பாகிய ராட்சசப் பாம்பை அவன் பிடித்தான். அவன் அப்பாம்பை ஆயிரம் ஆண்டு காலத்துக்குச் சங்கிலியால் கட்டிப்போட்டான். 3 அவன் அப்பாம்பைப் பாதாளத்திற்குள் எறிந்து மூடினான். ஆயிரம் ஆண்டுகள் முடியும் வரை பூமியின் மக்களை அது வஞ்சிக்காதபடிக்குப் பூட்டி முத்திரையிட்டான். அதன் பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பாம்பினை விடுதலை செய்யவேண்டும்.
4 பிறகு நான் சில சிம்மாசனங்களைப் பார்த்தேன். அவற்றின்மேல் சிலர் அமர்ந்திருந்தனர். நியாயந்தீர்க்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த மக்கள் இவர்களே ஆவார்கள். அப்போது இயேசுவைப் பற்றிய சாட்சிக்காகவும் தேவனுடைய செய்திக்காகவும் தலைவெட்டப்பட்டவர்களின் ஆன்மாக்களைக் கண்டேன். அவர்கள் அம்மிருகத்தையோ அல்லது அதனுடைய உருவத்தையோ வழிபடவில்லை. அவர்கள் அம்மிருகத்தின் அடையாளக் குறியை தம் முன் நெற்றியிலோ கைகளிலோ பெற்றிருக்கவில்லை. அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷங்கள் அரசாண்டார்கள். 5 (மற்ற இறந்த மக்கள் 1,000 ஆண்டுகள் முடியும் மட்டும் உயிரடையவில்லை.)
இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் ஆகும். 6 இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமானவர்களும் ஆவார்கள். அவர்கள் மீது இரண்டாம் மரணத்துக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் ஆசாரியராய் இருப்பார்கள். அவர்கள் இயேசுவோடு கூட ஆயிரம் ஆண்டுக் காலம் ஆட்சி செய்வார்கள்.
2008 by World Bible Translation Center