Revised Common Lectionary (Complementary)
தேவன் யோபுவிடம் பேசுகிறார்
38 அப்போது கர்த்தர் சூறாவளியிலிருந்து யோபுவிடம் பேசினார். தேவன்:
2 “மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும்,
இந்த அறியாமையுள்ள மனிதன் (அஞ்ஞானி) யார்?
3 யோபுவே, நீ இடையைக் கட்டிக்கொள்
நான் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு ஆயத்தமாகு.
4 “யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்?
நீ அத்தனை கெட்டிக்காரனானால், எனக்குப் பதில் கூறு.
5 நீ அத்தனை கெட்டிக்காரனானால், உலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமென யார் முடிவெடுத்தவர்?
அளவு நூலால் யார் உலகை அளந்தார்?
6 பூமியின் அஸ்திபாரம் எங்கு நிலைத்திருக்கிறது?
அதன் முதற்கல்லை (கோடிக் கல்லை) வைத்தவர் யார்?
7 காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின,
அது நிகழ்ந்தபோது தேவதூதர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்!
8 “யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது,
கடலைத் தடை செய்யும்பொருட்டு வாயில்களை அடைத்தது யார்?
9 அப்போது நான் அதனை மேகங்களால் மூடி,
அதனை இருளால் பொதிந்து வைத்தேன்.
10 நான் கடலுக்கு எல்லையை வகுத்து,
அதை அடைத்த வாயிலுக்கு பின்னே நிறுத்தினேன்.
11 நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல,
உனது பெருமையான அலைகள் இங்கே நின்றுவிடும்’ என்றேன்.
புத்தகம் 5
107 கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது!
2 கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும்.
கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
3 கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார்.
அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார்.
23 சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள்.
பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள்.
24 கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள்.
கடலில் அவர் செய்த வியக்கத்தக்க காரியங்களை அவர்கள் கண்டார்கள்.
25 தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது.
அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின.
26 அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது.
மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.
27 அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள்.
மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று.
28 அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள்.
எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார்.
29 தேவன் புயலை நிறுத்தினார்.
அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.
30 கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள்.
அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
31 அவரது அன்பிற்காகவும்,
அவரது ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்ளுக்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறுங்கள்.
32 பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள்.
முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்போது அவரை வாழ்த்துங்கள்.
6 நாங்கள் தேவனோடு சேர்ந்து பணியாற்றுகிறவர்கள். எனவே, தேவனிடமிருந்து நீங்கள் பெற்ற கிருபையை பயனற்ற வகையில் வீணடிக்க வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
2 “நான் சரியான சமயத்தில் உன்னைக் கேட்டேன்.
இரட்சிப்புக்கான நாளில் நான் உதவி செய்தேன்”(A)
என்று தேவன் கூறுகிறார்.
அவர் சொன்ன “சரியான நேரம்” என்பது இதுதான் என்று உங்களுக்குக் கூறுகிறேன். “இரட்சிப்புக்கான நாளும்” இதுதான்.
3 எங்களின் பணியில் எவரும் குற்றம் கண்டு பிடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனாலும் மற்றவர்களுக்குப் பிரச்சனையாய் இருக்கும் எதையுமே நாங்கள் செய்யவில்லை. 4 ஆனால், அனைத்து வழிகளிலும் நாங்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்பதைக் காட்டி வருகிறோம். பல கஷ்டங்களிலும், பிரச்சனைகளிலும், துன்பங்களிலும் இதனை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். 5 நாங்கள் அடிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்படுகிறோம். மக்கள் அதிர்ச்சியடைந்து எங்களுடன் மோதுகிறார்கள். நாங்கள் கடின வேலைகளைச் செய்கிறோம். சில நேரங்களில் உணவும், உறக்கமும் இல்லாமல் இருக்கிறோம். 6 எங்கள் அறிவினாலும், பொறுமையாலும், இரக்கத்தாலும், தூய வாழ்க்கையாலும் நாங்கள் தேவனுடைய ஊழியர்கள் எனக் காட்டிக்கொள்கிறோம். 7 நாங்கள் இதனைப் பரிசுத்த ஆவியாலும், தூய அன்பாலும், உண்மையான பேச்சாலும் தேவனுடைய வல்லமையாலும் வெளிப்படுத்துகிறோம். எங்கள் சரியான வாழ்க்கையைப் பயன்படுத்தி எல்லாவற்றிலும் இருந்தும் எங்களைக் காத்துக்கொள்கிறோம்.
8 சிலர் எங்களை மதிக்கிறார்கள். மற்றும் சிலர் எங்களை அவமானப்படுத்துகிறார்கள். சிலர் எங்களைப் பற்றி நல்ல செய்திகளையும் வேறு சிலர் கெட்ட செய்திகளையும் பரப்புகிறார்கள். சிலர் எங்களைப் பொய்யர்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நாங்கள் உண்மையையே பேசுகிறோம். 9 இன்னும் சிலருக்கு நாங்கள் முக்கியமற்றவர்கள். ஆனால் நாங்கள் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள். நாங்கள் மடிந்து போவதுபோல் இருக்கிறோம். ஆனால் தொடர்ந்து வாழ்கிறோம். நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் கொல்லப்படவில்லை. 10 எங்களுக்கு நிறைய சோகம் உண்டு. ஆனால் நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நாங்கள் ஏழைகள்தான். ஆனால் பலரைச் செல்வராக்குகிறோம். எங்களுக்கென்று எதுவுமில்லை. ஆனால் உண்மையில் எங்களுக்கு எல்லாம் இருக்கிறது.
11 கொரிந்தியர்களாகிய உங்களிடம் நாங்கள் வெளிப்படையாகப் பேசியிருக்கிறோம். எங்கள் மனதைத் திறந்து காட்டியிருக்கிறோம். 12 உங்களிடம் நாங்கள் கொண்ட அன்பு எப்பொழுதும் குறையவில்லை. அதைத் தடுத்ததும் இல்லை. ஆனால் எங்கள்மீது உங்களிடம் உள்ள அன்பே தடுக்கப்பட்டிருக்கிறது. 13 நீங்கள் எனது பிள்ளைகள் என்ற முறையில் தான் நான் பேசுகிறேன். நாங்கள் செய்வது போலவே நீங்கள் இதயங்களைத் திறந்து காட்டுவீர்களா?
புயலை அமர்த்துதல்
(மத்தேயு 8:23-27; லூக்கா 8:22-25)
35 அன்று மாலையில் இயேசு தன் சீஷர்களிடம், “என்னோடு வாருங்கள். இக்கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்வோம்” என்றார். 36 இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே மக்களை விட்டுவிட்டுச் சென்றனர். இயேசு ஏற்கெனவே இருந்த படகிலேயே அவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களோடு வேறு பல படகுகளும் இருந்தன. 37 மோசமான காற்று வீச ஆரம்பித்தது. அதனால் பெரும் அலைகள் எழும்பி, படகின் வெளியேயும், உள்ளேயும், தாக்க ஆரம்பித்தன. படகில் நீர் நிறையத் தொடங்கியது. 38 இயேசு கப்பலின் பின்பகுதியில் தலையணையில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். சீஷர்கள் அவரிடம் போய் அவரை எழுப்பினார்கள். அவர்கள், “போதகரே, உங்களுக்கு எங்களைப் பற்றிய அக்கறை இல்லையா? நாங்கள் மூழ்கும் நிலையில் உள்ளோம்” என்றனர்.
39 இயேசு எழுந்து புயலுக்கும், அலைகளுக்கும் ஆணையிட்டார். “இரையாதே, அமைதியாய் இரு” என்று இயேசு ஆணையிட்டார். உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது.
40 இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்று கேட்டார்.
41 சீஷர்கள் பெரிதும் அஞ்சினர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இவர் எத்தகைய மனிதர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்றனர்.
2008 by World Bible Translation Center