Revised Common Lectionary (Complementary)
22 எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைக் கூறினார்:
“நான் உயர்ந்த கேதுரு மரத்திலிருந்து ஒரு கிளையை எடுப்பேன்.
நான் மர உச்சியிலிருந்து ஒரு சிறு கிளையை எடுப்பேன்.
நானே அதனை உயரமான மலையில் நடுவேன்.
23 நானே அதனை இஸ்ரவேலின் மலையில் நடுவேன்.
அக்கிளை மரமாக வளரும்.
அது கிளைகளாக வளர்ந்து கனிதரும்.
அது அழகான கேதுரு மரமாகும்.
பல பறவைகள் அதன் கிளைகளில் அமரும்.
பல பறவைகள் அதன் கிளைகளின் அடியிலுள்ள நிழலில் தங்கும்.
24 “பிறகு மற்ற மரங்கள்,
நான் உயரமான மரங்களைத் தரையில் வீழ்த்துவேன்,
குட்டையான மரங்களை உயரமாக வளர்ப்பேன் என்பதை அறியும்.
நான் பச்சைமரங்களை உலரச் செய்வேன்.
உலர்ந்த மரங்களைத் தளிர்க்கச் செய்வேன்.
நானே கர்த்தர்.
நான் சிலவற்றைச் செய்வதாகச் சொன்னால் செய்வேன்!”
ஓய்வு நாளின் துதிப்பாடல்.
92 மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது.
உமது நாமத்தைத் துதிப்பது நல்லது.
2 காலையில் உமது அன்பைப்பற்றியும்
இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது.
3 தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும்,
இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.
4 கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர்.
அக்காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம்.
12-13 செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான்.
லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான்.
கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள்.
தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.
14 வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள்.
அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள்.
15 கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள்.
அவர் என் பாறை, அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.
6 எனவே நாம் எப்பொழுதும் தைரியத்தோடு இருக்கிறோம். நாம் இந்த சரீரத்தில் இருக்கும் வரை கர்த்தரை விட்டு விலகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 7 நாம் எதை நம்புகிறோமோ அதன்படி வாழ்கிறோம். நாம் எதைப் பார்க்கிறோமோ அதன்படி வாழவில்லை. 8 எனவேதான் நமக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்கிறேன். நாம் உண்மையாகவே இந்த சரீரத்தைவிட்டு விலகி பரலோகத்தில் கர்த்தரோடு இருக்கவே விரும்புகிறோம். 9 தேவனைத் திருப்திப்படுத்துவதே வாழ்க்கையில் நமது ஒரே குறிக்கோள். இங்கே இந்த சரீரத்தில் வாழ்ந்தாலும் அங்கே கர்த்தரோடு இருந்தாலும் தேவனைத் திருப்திப்படுத்தவே விரும்புகிறோம். 10 நியாயந்தீர்க்கப்படுவதற்காக நாம் அனைவரும் கிறிஸ்துவின் முன்பு நிற்க வேண்டும். ஒவ்வொருவனும் அவனவனுக்குரியதைப் பெறுவான். உலகில் சரீரத்துடன் பூமியில் வசிக்கும்போது அவனவன் செய்த நன்மை அல்லது தீமைகளுக்குத் தகுந்தபடியே தீர்ப்பளிக்கப்படுவான்.
தூண்டிவிடும் தேவ அன்பு
11 கர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன பொருள் என நாம் அறிவோம். எனவே மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். உண்மையில் நாங்கள் யார் என்பது தேவனுக்குத் தெரியும். எங்களைப் பற்றி உங்கள் இதயங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன். 12 நாங்கள் மீண்டும் உங்களுக்கு எங்களை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். இப்போது வெளிப்படையாய்த் தெரியும் சில காரணங்களுக்காகத் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் சிலருக்குத் தெரிவிக்க உங்களிடம் ஒரு பதில் உள்ளது. ஒரு மனிதனின் இதயத்துக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள் அவர்கள். 13 நாங்கள் பைத்தியம் என்றால் அதுவும் தேவனுக்காகத்தான். நாங்கள் தெளிந்த, சரியான புத்தி உள்ளவர்கள் என்றால் அதுவும் உங்களுக்காகத்தான்.
14 கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும். 15 கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும்.
16 எனவே, இந்த நேரத்திலிருந்து, நாங்கள் ஒருவரையும் மற்ற உலக மக்களைப் போன்று சரீரத்தில் அறியமாட்டோம். முன்பு நாங்களும் மற்றவர்களைப் போன்றே கிறிஸ்துவை சரீரத்தில் அறிந்திருந்தோம். இனிமேல் அவ்வாறு எண்ணவில்லை. 17 எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின.
விதை பற்றிய உவமை
26 பிறகு இயேசு, “தேவனுடைய இராஜ்யமானது ஒரு மனிதன் நிலத்தில் விதைக்கும் ஒரு விதையைப் போன்றது. 27 விதையானது வளரத்தொடங்கும். அது இரவும் பகலும் வளரும். அந்த மனிதன் விழித்திருக்கிறானா அல்லது தூங்குகிறானா என்பது முக்கியமல்ல. விதை வளர்ந்து கொண்டே இருக்கும். விதை எவ்வாறு வளர்கிறது என்பதும், அந்த மனிதனுக்குத் தெரியாது. 28 எவ்வித உதவியும் இல்லாமல் அந்த நிலம் விதையை வளர்க்கிறது. முதலில் விதையில் இருந்து செடி முளைக்கிறது. பிறகு கதிர், அதன் பிறகு கதிர் முழுதும் தானியங்கள். 29 தானியம் விளைந்ததும் மனிதன் அவற்றை அறுவடை செய்கிறான். இது அறுவடைக் காலம்” என்றார்.
கடுகு விதையின் உவமை
(மத்தேயு 13:31-32,34-35; லூக்கா 13:18-19)
30 மேலும் இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எத்தகையது என்று உங்களுக்குப் புரிய வைக்க நான் எந்த உவமையைப் பயன்படுத்துவேன்? 31 தேவனுடைய இராஜ்யம் ஒரு கடுகு விதையைப் போன்றது. கடுகு மிகச் சிறிய விதைதான். அதை நிலத்தில் விதைக்கிறீர்கள். 32 ஆனால் இதை நீங்கள் விதைத்த பிறகு அது வளர்ந்து, உங்கள் தோட்டத்தில் உள்ள அனைத்துச் செடிகளையும் விட பெரியதாகும். அதன் கிளைகள் மிகப் பெரிதாக விரியும். காட்டுப் பறவைகள் அதன் கிளைகளில் கூடுகட்டித் தங்கமுடியும். அத்தோடு அவைகளை வெயிலில் இருந்தும் பாதுகாக்கும்” என்றார்.
33 மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார். அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர் கற்றுத்தந்தார். 34 இயேசு எப்பொழுதும் உவமைகளை உபயோகித்து மக்களுக்குப் போதித்தார். தன் சீஷர்களோடு தனியாக இருக்கும்போது, எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னார்.
2008 by World Bible Translation Center