Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.
65 சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன்.
நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன்.
2 நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம்.
நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர்.
உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர்.
3 எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில்
அப்பாவங்களை நீர் மன்னித்தருளும்.
4 தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!
உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம்.
5 தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும்.
நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர்.
அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர்.
உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள்.
6 தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார்.
அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம்.
7 சீறும் கடலை தேவன் அமைதியாக்கினார்.
“சமுத்திரம்” போல ஜனங்களை தேவன் பூமியில் உண்டாக்கினார்.
8 நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள்.
சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும்.
9 நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர்.
நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர்.
தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர்.
இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்:
10 உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர்.
வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர்.
நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர்.
இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர்.
11 நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர்.
பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர்.
12 பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின.
13 புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின.
பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின.
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.
சூரியன் அசையாது நின்ற நாள்
10 அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் ராஜாவாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த ராஜா அறிந்தான். எரிகோவிற்கும் அதன் ராஜாவுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். 2 எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். 3 எருசலேமின் ராஜாவாகிய, அதோனிசேதேக், எபிரோனின் ராஜாவாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுடனும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுடனும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் ராஜா இவர்களிடம், 4 “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
5 இந்த ஐந்து எமோரிய ராஜாக்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன.
6 கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய ராஜாக்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது.
7 எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர். 8 கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார்.
9 யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர். 11 அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம்.
12 கர்த்தர் அன்று இஸ்ரவேலர் எமோரியரை வெற்றிக்கொள்ளச் செய்தார். அந்த நாளில் யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்று, கர்த்தரை நோக்கி:
“சூரியன், கிபியோனின் மேல் நிற்கட்டும்.
ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல், சந்திரன் அசையாது நிற்கட்டும்” என்றான்.
13 எனவே சூரியனும், சந்திரனும் இஸ்ரவேலர் தங்கள் பகைவர்களை முறியடிக்கும் வரைக்கும் அசையாமல் நின்றன. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வானத்தின் நடுவில் சூரியன் அசையாமல் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது அசையவேயில்லை. 14 அவ்வாறு முன்னர் நிகழ்ந்ததேயில்லை! அதன் பின் நிகழவுமில்லை. அந்நாளில் கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். உண்மையில் கர்த்தரே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்!
இயேசு கடலின் மேல் நடத்தல்
(மத்தேயு 14:22-33; யோவான் 6:16-21)
45 பிறகு இயேசு சீஷர்களிடம் படகில் ஏறுமாறு சொன்னார். கடலின் அக்கரையில் உள்ள பெத்சாயிதாவுக்குப் போகும்படிக் கூறினார். தான் பிறகு வருவதாக இயேசு கூறியனுப்பினார். இயேசு அங்கே இருந்து அந்த மக்களைத் தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொன்னார். 46 அந்த மக்களை இயேசு வழியனுப்பிய பின்பு பிரார்த்தனை செய்வதற்காக மலைக்குச் சென்றார்.
47 அன்று இரவு, அந்தப் படகு கடலின் நடுவிலேயே இருந்தது. இயேசுவோ தனியே கரையிலேயே இருந்தார். 48 கடலில் வெகு தூ ரம் படகு போய்விட்டதைக் கவனித்தார். அவரது சீஷர்கள் மிகவும் கஷ்டப்பட்டு துடுப்பு போடுவதையும் அறிந்தார். காற்றானது அவர்களுக்கு எதிராக அடித்துக் கொண்டிருந்தது. அதிகாலையில், மூன்று மணிக்கும் ஆறு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் தண்ணீரின் மேல் நடந்து நெருங்கினார். அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். 49 இயேசுவின் சீஷர்கள் அவர் தண்ணீரின் மேல் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் அவரை ஒரு ஆவி என்று நினைத்தனர். அவர்கள் அச்சத்தோடு கூச்சலிட்டனர். 50 எல்லாரும் இயேசுவைப் பார்த்து பயந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், “கவலைப்படாதீர்கள், நான் தான் பயப்படாதிருங்கள்” என்று தேற்றினார். 51 பிறகு அவர் சீஷர்கள் இருந்த படகினுள் ஏறிக்கொண்டார். காற்று அமைதியாயிற்று சீஷர்கள் பெரிதும் பிரமித்தார்கள். 52 அவர்கள் இயேசு ஐந்து அப்பங்களில் இருந்து மிகுதியான அப்பங்களை உருவாக்கியதைப் பார்த்தார்கள். ஆனால் அதனுடைய பொருளை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதை அறிந்துகொள்ளும் சக்தியும் அவர்களுக்கு இல்லை.
2008 by World Bible Translation Center