Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.
65 சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன்.
நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன்.
2 நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம்.
நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர்.
உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர்.
3 எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில்
அப்பாவங்களை நீர் மன்னித்தருளும்.
4 தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!
உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம்.
5 தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும்.
நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர்.
அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர்.
உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள்.
6 தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார்.
அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம்.
7 சீறும் கடலை தேவன் அமைதியாக்கினார்.
“சமுத்திரம்” போல ஜனங்களை தேவன் பூமியில் உண்டாக்கினார்.
8 நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள்.
சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும்.
9 நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர்.
நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர்.
தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர்.
இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்:
10 உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர்.
வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர்.
நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர்.
இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர்.
11 நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர்.
பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர்.
12 பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின.
13 புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின.
பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின.
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.
தண்ணீர் இரத்தமாகுதல்
14 கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் பிடிவாதமாக இருக்கிறான். பார்வோன் ஜனங்களை அனுப்ப மறுக்கிறான். 15 காலையில் பார்வோன் நதிக்குப் போவான். நைல் நதியினருகே பாம்பாக மாறின உனது கைத்தடியை எடுத்துக்கொண்டு அவனிடம் போ. 16 அவனிடம் இதைக் கூறு: ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் என்னை உன்னிடம் அனுப்பினார். பாலைவனத்தில் அவரது ஜனங்கள் சென்று தொழுதுகொள்ள அனுப்பு என்று உன்னிடம் கூறுமாறு எனக்கு கர்த்தர் சொன்னார். இதுவரைக்கும் நீ கர்த்தர் கூறியவற்றிற்கு செவிசாய்க்கவில்லை. 17 எனவே, அவரே கர்த்தர் என்பதை உனக்குக் காட்டுவதற்காக சில காரியங்களைச் செய்வதாக கர்த்தர் சொல்கிறார். எனது கையிலிருக்கும் இந்தக் கைத்தடியால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன். நதி இரத்தமாக மாறும். 18 நதியின் மீன்கள் செத்துப்போகும், நதியிலிருந்து துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும். அப்போது நதியின் தண்ணீரை எகிப்தியர்கள் பருகமுடியாது’” என்று கூறினார்.
19 கர்த்தர் மோசேயை நோக்கி, “ஆரோனின் கையிலுள்ள கைத்தடியை நதிகள், கால்வாய்கள், ஏரிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் அனைத்தின் மேலாகவும் நீட்டும்படியாக ஆரோனுக்குக் கூறு, அவன் அவ்வாறு செய்தவுடன் தண்ணீரெல்லாம் இரத்தமாகும். மரத்தாலும் கல்லாலுமாகிய ஜாடிகளில் நிரப்பியிருக்கும் தண்ணீர் உட்பட, எல்லா இடங்களிலுள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்றார்.
20 ஆகையால் மோசேயும் ஆரோனும் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் கைத்தடியை உயர்த்தி நைல் நதியின் தண்ணீரை பார்வோன் முன்பாகவும் அவனது அதிகாரிகள் முன்பாகவும் அடித்தான். நதியின் தண்ணீர் முழுவதும் இரத்தமாயிற்று. 21 நதியின் மீன்கள் இறந்தன. நதி நாற்றமெடுத்தது. நதியின் தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியாமலாயிற்று. எகிப்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டது.
22 எகிப்திய மந்திரவாதிகளும் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தி இதையே செய்தார்கள். எனினும், பார்வோன் மோசேக்கும், ஆரோனுக்கும் செவிசாய்க்க மறுத்தான். இது கர்த்தர் சொன்னபடியே நடந்தது. 23 மோசேயும், ஆரோனும் செய்தவற்றை பார்வோன் பொருட்படுத்தவில்லை. பார்வோன் மறுபுறமாகத் திரும்பி வீட்டிற்குள் சென்றான்.
24 நதியிலிருந்து தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியாமற்போயிற்று. எனவே, அவர்கள் நதியைச் சுற்றிலும் குடிப்பதற்குரிய தண்ணீரைப் பெறுவதற்காக கிணறுகளைத் தோண்டினர்.
புயல்
13 தெற்கிலிருந்து ஒரு நல்ல காற்று வீசியது. கப்பலிலிருந்த மனிதர்கள், “நமக்குத் தேவையான காற்று இது. இப்போது அது வீசுகிறது!” என்று நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை மேலே இழுத்தார்கள். கிரேத்தா தீவுக்கு வெகு அருகில் பயணம் செய்தோம். 14 “வட கிழக்கன்” என்னும் பெயருள்ள மிகப் பலமான காற்று தீவின் குறுக்காக வந்தது. 15 இக்காற்று கப்பலைச் சுமந்து சென்றது. காற்றுக்கு எதிராகக் கப்பலால் செல்ல முடியவில்லை. எனவே, முயற்சி செய்வதைவிட்டு, காற்று எங்களைச் சுமந்து செல்லும்படியாக விட்டோம்.
16 கிலவுதா என்னும் ஒரு சிறிய தீவின் கீழே சென்றோம். எங்களால் உயிர் மீட்கும் படகை வெளியே எடுக்கமுடிந்தது. ஆனால் அதை எடுப்பது மிகக் கடினமான செயலாக இருந்தது. 17 உயிர் மீட்கும் படகை மனிதர்கள் எடுத்த பின், அவர்கள் கப்பலைச் சுற்றிலும் கயிறுகளால் கப்பல் சரியாக இருப்பதற்கென்று கட்டினார்கள். சிர்டிஸின் மணற் பாங்கான கரையில் கப்பல் மோதக்கூடுமென்று அவர்கள் நினைத்தார்கள். எனவே துடுப்புகளை எடுத்துவிட்டு, காற்று கப்பலைச் செலுத்தும்படியாக விட்டார்கள்.
18 மறுநாள் புயல் கடுமையாகத் தாக்கியதால் மனிதர்கள் கப்பலிலிருந்து சில பொருட்களை வெளியே வீசினார்கள். 19 ஒரு நாள் கழிந்ததும் கப்பலின் கருவிகளை வெளியே வீசினர். 20 பல நாட்கள் எங்களால் சூரியனையோ, நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. புயல் கொடுமையாக இருந்தது. நாங்கள் உயிர் பிழைக்கும் நம்பிக்கையைக் கைவிட்டோம். நாங்கள் இறந்து விடுவோமென எண்ணினோம்.
21 நீண்ட காலமாக அம்மனிதர்கள் சாப்பிடவில்லை. பின்பு ஒருநாள் பவுல் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, “மனிதரே, கிரேத்தாவை விட்டுப் புறப்படாதீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் நான் சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும். இத்தனை தொல்லைகளும் நஷ்டமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. 22 ஆனால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்படிக்கு உங்களுக்குக் கூறுகிறேன். உங்களில் ஒருவரும் இறக்கமாட்டீர்கள்! ஆனால் கப்பல் அழிந்து போகும். 23 நேற்று இரவு தேவனிடமிருந்து ஒரு தூதன் என்னிடம் வந்தான். நான் வணங்குகிற தேவன் அவரே. நான் அவருடையவன். 24 தேவதூதன், ‘பவுலே, பயப்படாதே! நீ இராயருக்குமுன் நிற்க வேண்டும். தேவன் உனக்கு இவ்வாக்குறுதியைத் தருகிறார். உன்னோடு பயணமாகிற எல்லா மனிதரின் உயிர்களும் காப்பாற்றப்படும்’ என்றான். 25 எனவே மனிதரே மகிழ்ச்சியாயிருங்கள்! நான் தேவனிடம் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது தூதன் கூறியபடி எல்லாம் நடக்கும். 26 ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம்” என்றான்.
27 பதினான்காம் நாள் இரவில் ஆதிரியாக் கடலைச் சுற்றிலும் நாங்கள் கப்பலில் மிதந்துகொண்டிருந்தோம். மாலுமிகள் கரையை நெருங்குகிறோம் என்று எண்ணினர். 28 அவர்கள் ஒரு கனமான பொருளை நுனியில் கட்டி கயிற்றை நீருக்குள் வீசினர். நீர் 120 அடி ஆழமானது என்று அவர்கள் கண்டனர். இன்னும் சற்று தூரம் சென்று கயிற்றை மீண்டும் வீசினர். அங்கு நீர் 90 அடி ஆழமாயிருந்தது. 29 நாங்கள் பாறையில் மோதுவோமென்று மாலுமிகள் பயந்தார்கள். எனவே நான்கு நங்கூரங்களை நீருக்குள் பாய்ச்சினர். மறுநாளின் பகலொளிக்காகப் பிரார்த்தனை செய்தனர். 30 சில மாலுமிகள் கப்பலைக் கைவிட விரும்பினர். அவர்கள் உயிர் மீட்கும் படகை நீரில் இறக்கினர். கப்பலின் முன்பக்கத்திலிருந்து அதிகமான நங்கூரங்களை வீசுவதாக பிறமனிதர்கள் கருதும்படியாக நடந்துகொண்டனர். 31 ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான். 32 எனவே வீரர்கள் கயிறுகளை அறுத்து உயிர் மீட்கும் படகை நீரில் விழச்செய்தனர்.
33 அதிகாலைக்குச் சற்று முன் பவுல் எல்லா மக்களையும் ஏதேனும் உண்பதற்குச் சம்மதிக்க வைத்தான். அவன் “கடந்த இரண்டு வாரங்களாக நீங்கள் காத்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். பதினான்கு நாட்களாக நீங்கள் எதையும் உண்ணவில்லை. 34 நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள்” என்றான். 35 இதைக் கூறிய பிறகு பவுல் ரொட்டியை எடுத்து எல்லோர் முன்பாகவும் அதற்காக தேவனுக்கு நன்றி சொன்னான். அதில் ஒரு பகுதியை எடுத்து, அவன் உண்ண ஆரம்பித்தான். 36 எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். 37 (கப்பலில் 276 பேர் இருந்தனர்.) 38 நாங்கள் திருப்தியாகச் சாப்பிட்டோம். பின் கப்பலிலிருந்த தானியங்களை எல்லாம் கப்பலின் பாரத்தைக் குறைக்கும்பொருட்டு கடலுக்குள் வீசினோம்.
2008 by World Bible Translation Center