மத்தேயு 13:10-17
Tamil Bible: Easy-to-Read Version
உவமைகள் ஏன்?
(மாற்கு 4:10-12; லூக்கா 8:9-10)
10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டனர்.
11 இயேசு மறுமொழியாக, “பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை மற்றவர்கள் அறிய முடியாது. 12 சிறிது புரிந்தவன் மேலும் விளக்கம் பெறுவான். தேவையானதை விடவும் அவனுக்கு அதிகம் கிடைக்கும். அதிகம் புரியாதவன், தான் அறிந்ததையும் இழப்பான். 13 அதனால் தான் நான் மக்களுக்கு உவமைகளின் மூலம் போதனை செய்கிறேன். மக்கள் பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பார்ப்பதுமில்லை, புரிந்துகொள்வதுமில்லை. 14 எனவே ஏசாயா தீர்க்கதரிசி இவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொன்னது உண்மை என்பதை இம்மக்கள் காட்டுகிறார்கள்:
“‘மக்களே! நீங்கள் கவனித்து கேட்பீர்கள்.
ஆனாலும் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
மக்களே! நீங்கள் நோக்கி பார்ப்பீர்கள்.
ஆனாலும், நீங்கள் பார்ப்பதைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
15 ஆம், இறுகியிருக்கிறது இம்மக்களின் மனம்.
காதுகளிருந்தும் கேட்பதில்லை.
உண்மையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.
தங்கள் காதால் கேளாதிருக்கவும்
தங்கள் கண்ணால் பார்க்காதிருக்கவும்
தங்கள் மனதால் அறியாதிருக்கவும்
இவ்வாறு நடந்துள்ளது.
குணம் பெற என்னிடம் வராதிருக்குமாறும் இவ்வாறு நடந்துள்ளது.’(A)
16 ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கண்களால் பார்ப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். காதால் கேட்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். 17 நான் உண்மையைச் சொல்லுகிறேன், பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் நீங்கள் இப்பொழுது காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் காணவில்லை. நீங்கள் இப்பொழுது கேட்பவற்றைக் கேட்பதற்குப் பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் கேட்கவில்லை.
Read full chapter2008 by Bible League International