Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the ESV. Switch to the ESV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 9:22-10:18

அபிமெலேக்கு சீகேமை எதிர்த்துப் போரிடுதல்

22 அபிமெலேக்கு இஸ்ரவேலரை மூன்று ஆண்டுகள் ஆண்டு வந்தான். 23-24 யெருபாகாலின் 70 மகன்களையும் அபிமெலேக்கு கொன்றிருந்தான். அவர்கள் அபிமெலேக்கின் சொந்த சகோதரர்கள்! இத்தவறான காரியத்தைச் செய்வதற்கு சீகேமின் தலைவர்கள் அவனுக்கு உதவினர். எனவே தேவன் அபிமெலேக்கிற்கும் சீகேம் மனிதர்களுக்குமிடையே ஒரு தீய ஆவியை அனுப்பினார். அபிமெலேக்கை தாக்குவதற்கு சீகேமின் தலைவர்கள் திட்டமிட்டனர். 25 சீகேம் நகரின் தலைவர்களுக்கு அபிமெலேக்கின் மேல் இருந்த விருப்பம் குறைந்தது. மலையில் கடந்து சென்றவர்களையெல்லாம் தாக்கி அவர்களது பெருட்களைப் பறிக்கும்பொருட்டு அவர்கள் மலையின்மேல் ஆட்களை அமர்த்தினார்கள். இந்தத் தாக்குதலைக் குறித்து அபிமெலேக்கு அறிந்தான்.

26 ஏபேதின் மகனாகிய காகால் என்னும் பெயருடையவனும் அவனது சகோதரர்களும் சீகேம் நகருக்கு வந்தனர். சீகேமின் தலைவர்கள் காகாலை நம்பி, அவனைப் பின்பற்றுவதற்கு முடிவு செய்தனர்.

27 ஒரு நாள் சீகேம் ஜனங்கள் திராட்சைகளைச் சேகரிப்பதற்குத் தோட்டங்களுக்குச் சென்று திராட்சைகளைப் பிழிந்து ரசம் தயாரித்தனர். பின் அவர்கள் தெய்வங்களின் கோவிலில் ஒரு விருந்து நடத்தினார்கள். ஜனங்கள் உண்டு குடித்து, அபிமெலேக்கைத் தூஷித்தனர்.

28 ஏபேதின் மகனாகிய காகால், “நாம் சீகேமின் மனிதர்கள். நாம் ஏன் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படிய வேண்டும்? அவன் தன்னை யாரென்று நினைத்திருக்கிறான்? அபிமெலேக்கு, யெருபாகாலின் மகன்களில் ஒருவன் மாத்திரமே. மேலும் அவன் சேபூலைத் தனது அதிகாரியாக நியமித்தானே நாம் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படியக்கூடாது. ஏமோரின் ஜனங்களே, நாம் நமது ஜனங்களையே பின்பற்ற வேண்டும். (ஏமோர் சீகேமின் தந்தை.) 29 நீங்கள் என்னை இந்த ஜனங்களுக்கு சேனைத் தலைவனாக ஆக்கினால் நான் அபிமெலேக்கை அழிப்பேன். நான் அவனிடம் ‘உன் சேனையைத் தயார் செய்து போருக்கு வா’ என்று கூறுவேன்” என்றான்.

30 சீகேம் நகரத்தின் ஆளுநராக சேபூல் இருந்தான். ஏபேதின் மகனாகிய காகால் சொன்னதைக் கேட்டுச் சேபூல் கோபமடைந்தான். 31 அருமா நகரில் உள்ள அபிமெலேக்கிடம் சேபூல் தூதுவர்களை அனுப்பி:

“ஏபேதின் மகனாகிய காகாலும், காகலின் சகோதரர்களும் சீகேம் நகரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் உமக்குத் தொல்லை தருகின்றனர். நகரம் முழுவதையும் உமக்கு எதிராக காகால் திருப்புகின்றான். 32 எனவே நீரும், உமது ஆட்களும் இன்றிரவு வந்து நகரத்திற்கு வெளியேயுள்ள வயல்களில் மறைந்திருக்க வேண்டும். 33 காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் நகரத்தைத் தாக்குங்கள். காகாலும் அவனது ஆட்களும் உங்களோடு போரிடுவதற்கு நகரத்திலிருந்து வெளியே வருவார்கள். அவர்கள் போரிடுவதற்கு வெளியே வரும்போது, உம்மால் முடிந்ததை அவர்களுக்குச் செய்யும்” என்று சொல்லச் சொன்னான்.

34 எனவே அபிமெலேக்கும் அவனுடைய எல்லா வீரர்களும் இரவில் எழுந்து நான்கு குழுக்களாகப் பிரிந்து நகரத்திற்குச் சென்றார்கள். அவர்கள் சீகேம் நகரத்திற்கு அருகே ஒளிந்திருந்தார்கள். 35 ஏபேதின் மகனாகிய காகால் வெளியே சென்று சீகேம் நகரத்திற்கு நுழையும் வாயிலின் அருகே நின்றுகொண்டிருந்தான். காகால் அங்கு நின்றுகொண்டிருந்தபோது அபிமெலேக்கும் அவனது வீரர்களும் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்தனர்.

36 காகால் அந்த வீரர்களைக் கண்டான். காகால் சேபூலிடம், “பார், மலைகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள்” என்றான்.

ஆனால் சேபூல், “நீ மலைகளிலுள்ள நிழலையே காண்கிறாய். நிழல்கள் ஜனங்களைப் போலத் தோற்றமளிக்கின்றன” என்றான்.

37 காகால் மீண்டும், “பார், சில ஜனங்கள் தேசத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து இறங்கி வருகின்றனர். அங்கே பார், மந்திரவாதியின் மரமருகே யாரோ ஒருவனின் தலையை நான் காணமுடிந்தது” என்றான். 38 சேபூல் காகாலை நோக்கி, “நீ ஏன் வாய் மூடி இருக்கிறாய்? ‘அபிமெலேக்கு யார்? ஏன் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?’ என்றாய். நீ அவர்களைக் கிண்டல் செய்தாய். இப்போது அவர்களை எதிர்த்துப் போரிடு” என்றான்.

39 எனவே சீகேமின் தலைவர்களை அபிமெலேக்கோடு போரிடுவதற்கு வழி நடத்தி காகால் அழைத்து வந்தான். 40 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் காகாலையும் அவனது ஆட்களையும் துரத்தினர். காகாலின் ஆட்கள் சீகேம் நகரத்தில் வாயிலை நோக்கி ஓடினார்கள். காகாலின் வீரர்களில் பலர் அவர்கள் வாசலுக்குள் நுழைவதற்கு முன்னரே கொல்லப்பட்டனர்.

41 பின் அபிமெலேக்கு அருமா நகரத்திற்குத் திரும்பினான். சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேம் நகரைவிட்டுக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினான்.

42 மறுநாள் சீகேமின் ஜனங்கள் வயல்களுக்கு வேலை செய்யப்போனார்கள். அபிமெலேக்கிற்கு அவ்விஷயம் தெரிந்துவிட்டது. 43 எனவே அபிமெலேக்கு அவனது ஆட்களை மூன்று குழுக்களாகப் பிரித்தான். அவன் சீகேமின் ஜனங்களைத் திடீரென தாக்குவதற்கு விரும்பினான். எனவே தன்னுடைய ஆட்களை வயலில் மறைந்திருக்கும்படி செய்தான். நகரத்திலிருந்து ஜனங்கள் வெளியே வந்ததும் அவர்கள்மேல் பாய்ந்து அவர்களைத் தாக்கினார்கள். 44 அபிமெலேக்கும் அவனது குழுவினரும் சீகேமின் வாசலுக்கு அருகில் இருந்த ஓர் இடத்திற்கு ஓடினார்கள். மற்ற இரண்டு குழுவினரும் வயல்களிலிருந்த ஜனங்களிடம் ஓடி அவர்களைக் கொன்றார்கள். 45 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் அந்த நாள் முழுவதும் சீகேம் நகரத்தை எதிர்த்துப் போரிட்டனர். அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சீகேம் நகரைக் கைப்பற்றி, அந்த நகரத்தின் ஜனங்களைக் கொன்றனர். பின் அபிமெலேக்கு நகரத்தை இடித்துப் பாழாக்கி, அதன் மீது உப்பைத் தூவினான்.

46 சீகேம் நகரத்துக் கோபுரத்தில் சில மக்கள் வாழ்ந்தனர். அந்த இடத்திலுள்ள ஜனங்கள் சீகேம் நகரத்திற்கு நடந்ததைக் கேள்விப்பட்டபோது அவர்கள் ஏல்பேரீத் என்னும் தெய்வத்தின் கோவிலிலுள்ள பாதுகாப்பான அறையில் வந்து பதுங்கினார்கள்.

47 அபிமெலேக்கு சீகேமின் ஜனங்கள் ஒருமித்து பதுங்கியிருப்பதைக் கேள்விப்பட்டான். 48 எனவே அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சல்மோன் மலை உச்சிக்குச் சென்றனர். அபிமெலேக்கு ஒரு கோடாரியை எடுத்து மரக்கிளைகள் சிலவற்றை வெட்டி, அவற்றைத் தோளில் சுமந்து வந்தான். அபிமெலேக்கு தன்னோடிருந்தவர்களிடம், “விரைந்து நான் செய்வதைப் போலவே செய்யுங்கள்” என்றான். 49 எனவே அவர்களும் அபிமெலேக்கைப் போலவே கிளைகளை வெட்டினார்கள். அவர்கள் மரக்கிளைளைப் ஏல்பேரீத் கோவிலின் பாதுகாப்பான அறைக்கு வெளியே குவித்து அதற்கு நெருப்பூட்டி, உள்ளே பதுங்கியிருந்த ஆட்களை எரித்துப்போட்டனர். சுமார் 1,000 ஆண்களும், பெண்களும் சீகேம் கோபுரத்திற்கருகில் மரித்தனர்.

அபிமெலேக்கின் மரணம்

50 பின் அபிமெலேக்கும் அவனது ஆட்களும் தேபேசு நகரத்திற்குச் சென்று, அதைக் கைப்பற்றினர். 51 நகரத்தின் உள்ளே பலமான ஒரு கோபுரம் இருந்தது. அந்நகரத்தின் தலைவர்களும் ஆண்களும் பெண்களும் அக்கோபுரத்திற்கு ஓடினார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து உட்புறமாகக் கதவைத் தாழிட்டு கோபுரத்தின் உச்சியின்மீது ஏறினார்கள். 52 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் கோபுரத்தைத் தாக்குவதற்காக அங்கு வந்தனர். அபிமெலேக்கு கோபுர வாசலினருகே வந்தான். அவன் கோபுரத்திற்கு நெருப்பூட்ட எண்ணினான். 53 ஆனால் கோபுர வாசலின் முன் அபிமெலேக்கு நின்றுகொண்டிருந்தபோது கோபுர உச்சியில் இருந்த ஒரு பெண் ஏந்திர கல்லை அவன் தலைமீது போட்டாள். அக்கல் அபிமெலேக்கின் மண்டையைப் பிளந்தது. 54 உடனே அபிமெலேக்கு ஆயுதங்களைத் தாங்கி நின்ற தன் பணியாளை நோக்கி, “உன் வாளை எடுத்து என்னைக் கொன்றுவிடு. ‘ஒரு பெண் அபிமெலேக்கை கொன்றாள்’ என்று ஜனங்கள் கூறாதபடிக்கு நீ என்னைக் கொல்ல வேண்டுமென விரும்புகிறேன்” என்றான். எனவே பணியாள் அவனது வாளால் அபிமெலேக்கை வெட்ட, அவன் மரித்தான். 55 அபிமெலேக்கு மரித்ததைக் கண்டு இஸ்ரவேலர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.

56 இவ்வாறு, அவன் செய்த எல்லா தீமைகளுக்காக தேவன் அபிமெலேக்கைத் தண்டித்தார். அபிமெலேக்கு தன் 70 சகோதரர்களையும் கொன்று தன் தந்தைக்கெதிராய் தீமைசெய்தான். 57 சீகேமின் ஜனங்களை அவர்களின் தீய செயல்களுக்காக தேவன் தண்டித்தார். எனவே யோதாம் கூறியவை அனைத்தும் நிகழ்ந்தன. (யெருபாகாலின் கடைசி மகன் யோதாம், யெருபாகாலின் மறுபெயர் கிதியோன்.)

நியாயாதிபதியாகிய தோலா

10 அபிமெலேக்கு மரித்தபின், தேவன் மற்றொரு நியாயாதிபதியை இஸ்ரவேலரை காப்பாற்றும்படி எழுப்பினார். அந்த மனிதனின் பெயர் தோலா. தோலா, பூவா என்பவனின் மகன். பூவா தோதோவின் மகன். தோலா இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவன். தோலா சாமீர் நகரத்தில் வசித்து வந்தான். சாமீர் நகரம் எப்பிராயீம் மலைநாட்டில் இருந்தது. தோலா இஸ்ரவேலருக்கு 23 ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். பின்பு அவன் மரித்தபோது சாமீர் நகரத்தில் புதைக்கப்பட்டான்.

நியாயாதிபதியாகிய யாவீர்

தோலா மரித்தபின், தேவனால் மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டான். அவன் பெயர் யாவீர். யாவீர் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்து வந்தான். யாவீர் இஸ்ரவேலருக்கு 22 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தான். யாவீருக்கு 30 மகன்கள் இருந்தனர். அந்த 30 மகன்களும் 30 கழுதைகளின் மீது சவாரி செய்தனர். அவர்கள் கீலேயாத் தேசத்தில் உள்ள 30 நகரங்களைத் தம் அதிகாரத்துக்குட்படுத்திக் கொண்டனர். அவை இன்றும் யாவீரின் நகரங்கள் எனப்படுகின்றன. யாவீர் மரித்தபோது காமோன் நகரில் அடக்கம் பண்ணப்பட்டான்.

அம்மோனியர் இஸ்ரவேலரைஎதிர்த்துப் போரிடுதல்

தீமையானவைகள் என கர்த்தரால் குறிக்கப்பட்ட அனைத்தையும் இஸ்ரவேலர் மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அஸ்தரோத்தையும் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் ஆராமின் தெய்வங்களையும், சீரியாவின் தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும் அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தரின் தெய்வங்களையும் தொழுதுகொண்டனர். இஸ்ரவேலர் கர்த்தரை மறந்து அவரை ஆராதிப்பதை நிறுத்தினர்.

எனவே கர்த்தர் இஸ்ரவேலர் மீது கோபமடைந்தார். பெலிஸ்தரையும் அம்மோனியரையும் இஸ்ரவேலரைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். அதே ஆண்டில் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள பகுதியில் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த இஸ்ரவேலரையும் அழித்தனர். எமோரியர் வாழ்ந்த தேசம் அதுவே. இஸ்ரவேலர் அங்கு 18 ஆண்டுகள் தொல்லையடைந்தனர். அம்மோனியர் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன், எப்பிராயீம் ஜனங்களோடு போரிடச் சென்றனர். அம்மோனியர் இஸ்ரவேலருக்கு மிகுந்த தொல்லைகள் அளித்தனர்.

10 இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிவேண்டி அழுதார்கள். அவர்கள், “தேவனே, உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தேவனை விட்டுப் பொய்த் தெய்வமாகிய பாகாலை நாங்கள் தொழுதுகொண்டோம்” என்றனர்.

11 கர்த்தர் இஸ்ரவேலரை நோக்கி, “எகிப்தியரும், எமோரியரும், அம்மோனியரும், பெலிஸ்தியரும் உங்களைத் துன்புறுத்தும்போது என்னிடம் முறையிட்டீர்கள். நான் அவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றினேன். 12 சீதோனியரும், அமலேக்கியரும், மீதியானியரும் உங்களைத் துன்புறுத்திய போது என்னிடம் முறையிட்டீர்கள். நான் உங்களை அவர்களிடமிருந்தும் காத்தேன். 13 ஆனால் நீங்கள் என்னை விட்டு விட்டு பிற தெய்வங்களை தொழுதுகொள்ளத் தொடங்கினீர்கள். எனவே உங்களைக் காப்பாற்ற மறுக்கிறேன். 14 நீங்கள் அந்த தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். எனவே அவர்களிடம் போய் உதவி வேண்டுங்கள். அந்தத் தெய்வங்கள் உங்கள் தொல்லைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றட்டும்” என்று பதில் கூறினார்.

15 ஆனால் இஸ்ரவேலர் கர்த்தரிடம், “நாங்கள் பாவம் செய்தோம். உமது விருப்பம்போல எங்களுக்குச் செய்யும். ஆனால் இன்று எங்களைக் காப்பாற்றும்” என்றார்கள். 16 பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை வீசியெறிந்து விட்டு, கர்த்தரை மீண்டும் ஆராதிக்க ஆரம்பித்தனர். எனவே கர்த்தர் அவர்கள் துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.

யெப்தா தலைவனாக தேர்ந்தெடுக்கப்படுதல்

17 அம்மோன் மக்கள் போருக்காக ஒன்றாகக் கூடினார்கள். அவர்களின் முகாம் கீலேயாத் தேசத்தில் இருந்தது. இஸ்ரவேலர் ஒன்றாகக் கூடினார்கள். மிஸ்பாவில் அவர்களின் முகாம் இருந்தது. 18 கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த ஜனங்களின் தலைவர்கள், “அம்மோன் ஜனங்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தலைமை தாங்கும் மனிதன் கீலேயாத்தில் வாழும் ஜனங்களுக்குத் தலைவன் ஆவான்” என்றனர்.

லூக்கா 24:13-53

எம்மாவூர் சென்ற சீஷர்கள்(A)

13 எம்மா என்னும் ஊருக்கு அதே நாள் இயேசுவின் இரண்டு சீஷர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். எருசலேமில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அந்த ஊர் இருந்தது. 14 நடந்தவை அனைத்தையும் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். 15 அவர்கள் இவற்றை விவாதித்துக்கொண்டிருக்கும்போது இயேசு அருகே வந்து அவர்களோடு நடந்தார். 16 (இயேசுவை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து ஏதோ ஒன்றால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள்) 17 “நீங்கள், நடக்கும்போது பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் என்ன?” என்று இயேசு கேட்டார்.

இருவரும் நின்றார்கள். அவர்கள் முகங்கள் சோகத்தால் நிரம்பி இருந்தன. 18 கிலேயோபாஸ் என்பவன், “கடந்த சில நாட்களாக அங்கே நிகழ்ந்தவற்றை அறியாத மனிதர் எருசலேமில் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்” என்றான்.

19 அவர்களை நோக்கி, இயேசு, “நீங்கள் எதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்.

அம்மனிதர்கள் அவரை நோக்கி, “நாசரேத்தில் உள்ள இயேசுவைக் குறித்துப் பேசுகிறோம். தேவனுக்கும் மக்களுக்கும் அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசி. அவர் பல ஆற்றல் மிக்க காரியங்களைச் சொல்லியும் செய்தும் வந்திருக்கிறார். 20 ஆனால் தலைமை ஆசாரியரும் நம் தலைவர்களும் அவர் நியாயந்தீர்க்கப்பட்டுக் கொல்லப்படுமாறு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். 21 இஸ்ரவேல் மக்களை விடுவிப்பவர் இயேசு ஒருவரே என நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி நடந்துள்ளது. இயேசு கொல்லப்பட்டு மூன்று நாட்களாகிவிட்டன. 22 இன்று எங்கள் பெண்களில் சிலர் எங்களுக்குச் சில ஆச்சரியமான தகவல்களைச் சொன்னார்கள். இன்று அப்பெண்கள் அதிகாலையில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்றார்கள். 23 ஆனால் அவரது உடலை அங்கே காணவில்லை. அவர்களுக்கு ஒரு காட்சியில் தரிசனமான இரண்டு தேவதூதர்களைப் பார்த்தார்கள். ‘இயேசு உயிரோடு இருக்கிறார்’ என அவர்கள் சொன்னார்கள் என்று அப்பெண்கள் வந்து எங்களிடம் சொன்னார்கள். 24 அதன் பின்பு எங்களில் சிலரும் கல்லறைக்குச் சென்றார்கள். பெண்கள் சொன்னபடியே இருந்தது. கல்லறை வெறுமையாக இருந்ததை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவைப் பார்க்கவில்லை” என்றார்கள்.

25 பின்பு இயேசு இருவரிடமும், “நீங்கள் அறிவற்றவர்கள். உண்மையை மிகவும் தாமதமாக உணர்ந்துகொள்கிறீர்கள். தீர்க்கதரிசிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் நம்பவேண்டும். 26 கிறிஸ்து தன் மகிமையில் நுழையும்முன்பு இவ்வாறு துன்புற வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் கூறி இருந்தார்கள்” என்றார். 27 பிற்பாடு சுவடிகளில் தன்னைப்பற்றி எழுதிய ஒவ்வொன்றைப்பற்றியும் இயேசு விளக்க ஆரம்பித்தார். மோசேயின் புத்தகங்கள் தொடங்கி தீர்க்கதரிசிகள் வரைக்கும் இயேசுவைக் குறித்துக் கூறியவற்றை அவர் சொன்னார்.

28 அவர்கள் எம்மாவூர் என்னும் ஊரை அடைந்தார்கள். தன் பயணத்தைத் தொடர விரும்பியது போல இயேசு நடித்தார். 29 ஆனால் அவர்கள் அவர் அங்கே தங்கவேண்டுமென விரும்பினார்கள். அவர்கள் இயேசுவை “எங்களுடன் தங்குங்கள். மிகவும் தாமதமாகிவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது” என்று கெஞ்சிக் கேட்டார்கள். எனவே அவர் அவர்களோடு தங்கச் சென்றார்.

30 அவர்களோடு சேர்ந்து இயேசு உணவுண்ண உட்கார்ந்திருந்தார். உணவுக்காக நன்றி சொல்லிவிட்டு, உணவைப் பகிர்ந்தார். 31 அப்போது அம்மனிதர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் யார் என அவர்கள் உணர்ந்துகொண்டதும், அவர் மறைந்துவிட்டார். 32 இருவரும் தமக்குள்ளாக, “பாதையில் நம்முடன் இயேசு பேசிக்கொண்டு வந்தபோது ஏதோ எரிவதுப்போல் ஓர் உணர்வு இதயத்தில் எழுந்தது. வேதாகமத்தின் பொருளை அவர் விளக்கியபோது மிகவும் பரவசமாக இருந்தது” என்று பேசிக்கொண்டார்கள்.

33 பின்பு அவர்கள் எழுந்து திரும்பி எருசலேமை நோக்கிச் சென்றார்கள். எருசலேமில் இயேசுவின் சீஷர்கள் ஒன்றாகக் கூடியிருக்கக் கண்டார்கள். பதினொரு சீஷர்களும் அவர்களோடிருந்த மக்களும் 34 “மரணத்தினின்று உண்மையாகவே அவர் மீண்டும் எழுந்தார்” சீமோனுக்கு (பேதுருவுக்கு) அவர் காட்சியளித்தார் என்றார்கள்.

35 அப்போது பாதையில் நடந்த விஷயங்களை இரு மனிதர்களும் கூறினார்கள். உணவைப் பங்கிட்டபோது எவ்வாறு இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள் எனச் சொன்னார்கள்.

சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி(B)

36 அவர்கள் இருவரும் இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார்.

37 சீஷர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் பயந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு ஆவியைப் பார்த்துக்கொண்டிருப்பதாக எண்ணினார்கள். 38 ஆனால் இயேசு, “நீங்கள் எதற்காகக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? நீங்கள் காண்பதில் ஏன் ஐயம்கொள்கின்றீர்கள்? 39 என் கைகளையும் என் பாதங்களையும் பாருங்கள். உண்மையாகவே நான்தான். என்னைத் தொடுங்கள். எனக்கு உயிருள்ள உடல் இருப்பதைப் பார்க்க முடியும். ஓர் ஆவி இப்படிப்பட்ட உடல் கொண்டிருக்காது” என்றார்.

40 இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார். 41 சீஷர்கள் ஆச்சரியமுற்றவர்களாக இயேசுவை உயிரோடு பார்த்ததால் மிகவும் மகிழ்ந்தார்கள். எனினும் கூட தாம் பார்த்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்களை நோக்கி இயேசு, “உங்களிடம் இங்கே ஏதாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார். 42 அவர்கள் சமைத்த மீனில் ஒரு துண்டைக் கொடுத்தார்கள். 43 சீஷர்களின் முன்னிலையில் இயேசு அந்த மீனை எடுத்து சாப்பிட்டார்.

44 அவர்களை நோக்கி இயேசு, “நான் உங்களோடு இருந்த காலத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். மோசேயின் சட்டத்திலும், தீர்க்கதரிசிகளின் நூற்களிலும், சங்கீதத்திலும் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற அனைத்தும் நடந்தேயாக வேண்டும் என்று நான் சொன்னேன்” என்றார்.

45 பின்பு இயேசு சீஷர்களுக்கு வேதாகமத்தை விளக்கினார். தன்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவினார். 46 பிறகு அவர்களை நோக்கி, “கிறிஸ்து கொல்லப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து எழுவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. 47-48 நீங்கள் நடந்தவை அனைத்தையும் பார்த்தீர்கள். நீங்களே சாட்சிகள். மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று நீங்கள் போய் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் தம் மனம் மாறி, தாம் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அதைச் செய்தால் அவர்கள் தேவனால் மன்னிக்கப்படுவர். எருசலேமிலிருந்து நீங்கள் புறப்பட்டு என் பெயரில் இவற்றைப் போதிக்க வேண்டும். உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இந்த நற்செய்தி கூறப்பட வேண்டும். 49 கவனியுங்கள், என் பிதா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை உங்களுக்கு அனுப்புவேன். விண்ணில் இருந்து அந்த வல்லமையை நீங்கள் பெறும்வரைக்கும் எருசலேமில் தங்கி இருக்கவேண்டும்” என்றார்.

இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்(C)

50 எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51 இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார். 52 சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர். பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள். 53 தேவனை வாழ்த்தியவாறே எப்போதும் அவர்கள் தேவாலயத்தில் தங்கி இருந்தார்கள்.

சங்கீதம் 100

நன்றி கூறும் பாடல்

100 பூமியே, கர்த்தரைப் பாடு.
கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
    மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
    அவரே நம்மை உண்டாக்கினார்.
    நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
    துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
    அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
கர்த்தர் நல்லவர்.
    அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
    என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.

நீதிமொழிகள் 14:11-12

11 தீயவனின் வீடு அழிக்கப்படும். நல்லவனின் வீடு என்றும் வாழும்.

12 ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center