Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 2:10-3:31

10 அந்தத் தலைமுறையினர் மரித்தபின், அடுத்த தலைமுறையினர் வளர்ந்து வந்தனர். புதிய தலைமுறையினர் கர்த்தரைக் குறித்தும் அவர் இஸ்ரவேலருக்குச் செய்தவற்றைக் குறித்தும் அறிந்திருக்கவில்லை. 11 எனவே இஸ்ரவேலர் தீயவற்றைச் செய்து பொய் தேவனான பாகாலை சேவிக்கத் தொடங்கினார்கள். ஜனங்கள் இந்த தீயகாரியத்தைச் செய்வதை கர்த்தர் கண்டார். 12 கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்திருந்தார். இந்த ஜனங்களின் முற்பிதாக்கள் கர்த்தரை ஆராதித்தனர். ஆனால் இஸ்ரவேலரோ கர்த்தரைப் பின்பற்றுவதை விட்டு விலகி, தங்களைச் சுற்றிலும் வாழ்ந்த ஜனங்களின் பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அது கர்த்தரை கோபத்திற்குள்ளாக்கிற்று. 13 இஸ்ரவேலர் கர்த்தரை ஆராதிப்பதை விட்டு விட்டுப் பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுது கொள்ளத் தொடங்கினார்கள்.

14 கர்த்தர் இஸ்ரவேலரிடம் கோபங்கொண்டார். பகைவர்கள் இஸ்ரவேலரை எதிர்த்து அவர்களுடைய உடமைகளைக் கைப்பற்றிக்கொள்ள கர்த்தர் அனுமதித்தார். பகைவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இஸ்ரவேலரால் முடியவில்லை. 15 இஸ்ரவேலர் போருக்குச் சென்ற போதெல்லாம், தோல்வியே கண்டனர். கர்த்தர் அவர்களோடு இல்லாதபடியால் அவர்கள் தோற்றனர். தங்களைச் சுற்றிலும் வாழ்கின்ற ஜனங்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதால் அவர்கள் தோற்று விடுவார்கள் என்று கர்த்தர் அவர்களை ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இஸ்ரவேலர் மிகவும் துன்புற்றார்கள்.

16 பிறகு கர்த்தர் நியாயாதிபதிகள் என்று அழைக்கப்பட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேலரின் உடமைகளைக் கைப்பற்றிக் கொண்ட பகைவர்களிடமிருந்து அவர்களை இந்தத் தலைவர்கள் மீட்டார்கள். 17 ஆனால் நியாயாதிபதிகளின் வார்த்தைக்கு இஸ்ரவேலர்கள் கட்டுப்படவில்லை. அவர்கள் தேவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. அவர்கள் பிற தெய்வங்களைப் பின்பற்றினார்கள். கடந்த காலத்தில் இஸ்ரவேலரின் முற்பிதாக்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். இப்போதோ இஸ்ரவேலர் மனம் மாறியவர்களாய், கர்த்தருக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தினார்கள்.

18 பலமுறை இஸ்ரவேலருக்குத் தம் பகைவர்களால் தீங்கு நேர்ந்தது. எனவே இஸ்ரவேலர் உதவி வேண்டினார்கள். ஒவ்வொரு முறையும், கர்த்தர் அவர்களுக்காக மனமிரங்கினார். ஒவ்வொரு முறையும், பகைவரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒரு நியாயதிபதியை அனுப்பினார். கர்த்தர் எப்பொழுதும் அந்த நியாயதிபதிகளோடு இருந்தார். எனவே ஒவ்வொரு முறையும் இஸ்ரவேலர் பகைவர்களிடமிருந்த காப்பாற்றப்பட்டனர். 19 ஆனால் ஒவ்வொரு நியாயாதிபதியும் மரித்தபோது இஸ்ரவேலர் மீண்டும் பாவம் செய்து, பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். இஸ்ரவேலர் பிடிவாதம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் தீய வழிகளை மாற்றிக் கொள்ளமறுத்தனர்.

20 எனவே கர்த்தர் இஸ்ரவேலர் ஜனங்களிடம் மிகவும் கோபமடைந்தார். அவர், “இத்தேசத்தின் முற்பிதாக்களுடன் நான் செய்து கொண்ட உடன்படிக்கையை இவர்கள் மீறினார்கள். இவர்கள் நான் கூறியவற்றைக் கேட்டு நடக்கவில்லை. 21 எனவே இனிமேல் நான் பிறரைத் தோற்கடித்து இஸ்ரவேலருக்கு வழியைச் சரிப்படுத்திக் கொடுக்கமாட்டேன். யோசுவா மரித்த போது அந்நிய ஜனங்கள் இந்த தேசத்திலேயே இருந்தனர். மேலும் அவர்களை இந்த தேசத்திலேயே இருக்கவிடுவேன். 22 இஸ்ரவேலரைப் பரிசோதிப்பதற்கு அந்த ஜனங்களைப் பயன்படுத்துவேன். தங்கள் முற்பிதாக்கள் செய்ததைப்போல இஸ்ரவேலர் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களா என்பதை நான் பார்ப்பேன்” என்றார். 23 கர்த்தர் அந்த ஜனங்கள் அந்தத் தேசத்தில் தங்கி வாழ அனுமதித்தார். தேசத்தை விட்டு அவர்கள் சீக்கிரமாய் வெளியேற கர்த்தர் அவர்களை வற்புறுத்தவில்லை. யோசுவாவின் இராணுவம் அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் உதவவில்லை.

இஸ்ரவேலரின் தேசத்தை விட்டுப் போகும்படி கர்த்தர் பிற நாட்டினரை வற்புறுத்தவில்லை. கர்த்தர் இஸ்ரவேலரைச் சோதிக்க விரும்பினார். கானான் தேசத்தை எடுத்துக்கொள்ள இக்காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் எவரும் போர் செய்யவில்லை. எனவே கர்த்தர் பிறஜனத்தார் அத்தேசத்தில் வாழ அனுமதித்தார். (ஏற்கெனவே போர் அனுபவமற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்குப் போர் முறையைக் கற்பிக்க கர்த்தர் இதைச் செய்தார்.) கர்த்தர் அந்த தேசத்தில் விட்டு வைத்த ஜனங்களின் பெயர்கள்: பெலிஸ்தியரின் ஐந்து அரசர்கள், கானானியர், சீதோனின் ஜனங்கள், பாகால் எர்மோன் மலையிலிருந்து லெபோ ஆமாத் வரைக்குமுள்ள லீபனோனின் மலைகளில் வாழ்ந்த ஏவியர்கள் ஆகியோர். இஸ்ரவேலரைச் சோதிப்பதற்கென்று கர்த்தர் இந்த ஜனங்களை அந்த தேசத்தில் விட்டு வைத்தார். மோசேயின் மூலமாக அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுத்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிகிறார்களா என்று பார்க்க கர்த்தர் விரும்பினார்.

கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஜனங்களோடு இஸ்ரவேலர் வாழ்ந்தனர். அந்த ஜனங்களின் பெண்களை இஸ்ரவேலர் மணந்துகொள்ள ஆரம்பித்தனர். தங்களது மகள்களை மணந்துகொள்ள அவர்களது ஆண்களையும் அனுமதித்தனர். இஸ்ரவேலர் அந்த ஜனங்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவும் ஆரம்பித்தனர்.

முதல் நியாயாதிபதியாகிய ஒத்னியேல்

இஸ்ரவேலர் தீயக்காரியங்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். இஸ்ரவேலர் தமது தேவனாகிய கர்த்தரை மறந்து பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அசேராவையும் தொழத்தொடங்கினர். இஸ்ரவேலர்கள் மீது கர்த்தர் கோபங்கொண்டார். மெசொ பொத்தாமியாவின் அரசனாகிய கூசான்ரிஷதாயீம் என்பவன் இஸ்ரவேலரைத் தோற்கடித்து அவர்களை ஆள்வதற்கு கர்த்தர் அனுமதித்தார். அம்மன்னனின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேலர் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தனர். ஆனால் இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக அழுது வேண்டினார்கள். அவர்களை மீட்பதற்காக கர்த்தர் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஒத்னியேல். அவன் கேனாஸ் என்னும் மனிதனின் மகன். கேனாஸ் காலேபின் இளைய சகோதரன். ஒத்னியேல் இஸ்ரவேலரைக் காப்பாற்றினான். 10 கர்த்தருடைய ஆவி ஒத்னியேல் மீது வந்தது. அவன் இஸ்ரவேலருக்கு நியாயாதிபதி ஆனான். ஒத்னியேல் இஸ்ரவேலரைப் போருக்கு வழிநடத்தினான். மெசொப்பொத்தாமியாவின், அரசனாகிய கூஷான்ரிஷதாயீமை வெல்வதற்கு கர்த்தர் ஒத்னியேலுக்கு உதவினார். 11 எனவே கேனாசின் மகனாகிய ஒத்னியேல் மரிக்கும்வரைக்கும் 40 ஆண்டுகள் தேசம் அமைதியாக இருந்தது.

நியாயாதிபதியாகிய ஏகூத்

12 மீண்டும் இஸ்ரவேலர் தீயகாரியங்களைச் செய்வதை கர்த்தர் கவனித்தார். எனவே மோவாபின் அரசனாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலரைத் தோற்கடிக்கும் ஆற்றலை அளித்தார். 13 அம்மோனியரும், அமலேக்கியரும் எக்லோனுக்கு உதவினார்கள். அவர்கள் அவனோடு சேர்ந்து இஸ்ரவேலரைத் தாக்கி ஈச்சமரங்களின் நகரமாகிய எரிகோவை விட்டு அவர்கள் போகுமாறு செய்தனர். 14 மோவாபின் அரசனாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலர்கள் 18 ஆண்டுகள் அடிபணிந்து இருந்தார்கள்.

15 பின் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடம் வந்து அழுதார்கள். இஸ்ரவேலரை மீட்பதற்கு கர்த்தர் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஏகூத். அவன் இடது கைப் பழக்கமுடையவனாயிருந்தான். ஏகூத் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கேரா என்பவனின் மகன். மோவாபின் அரசனாகிய எக்லோனுக்கு கப்பம் செலுத்தி வருமாறு இஸ்ரவேலர் ஏகூதை அனுப்பினார்கள். 16 ஏகூத் தனக்காக ஒரு வாளைச் செய்து கொண்டான். அது இருபுறமும் கருக்குள்ளதாகவும் 12 அங்குல நீளமுடையதாகவும் இருந்தது. ஏகூத் தன் வலது தொடையில் வாளைக் கட்டிக்கொண்டு தனது ஆடைகளினுள் அதை மறைத்துக்கொண்டான்.

17 இவ்வாறு ஏகூத் மோவாபின் அரசன் எக்லோனுக்குக் கப்பம் கொண்டு வந்தான். எக்லோன் பருத்த உடல் உடையவன். 18 ஏகூத் எக்லோனுக்கு கப்பம் கொடுத்தபின், கப்பம் கொண்டுவந்த மனிதர்களை ஊருக்குத் திரும்பிச் செல்லுமாறு கூறினான். 19 கில்காலில் தெய்வங்களின் சிலைகளிலிருந்த இடத்திலிருந்து எக்லோன் திரும்பியபொழுது, ஏகூத் எக்லோனிடம், “அரசே, நான் உமக்காக ஒரு இரகசியச் செய்தி வைத்திருக்கிறேன்” என்றான்.

அரசன், “அமைதியாக இருங்கள்!” என்று சொல்லி அறையிலிருந்த பணியாட்களை வெளியே அனுப்பினான். 20 அரசனான எக்லோனுடன் ஏகூத் சென்றான். கோடைக் கால அரண்மனையிலுள்ள மேல் அறையில் எக்லோன் இப்போது தனித்தவனாய் உட்கார்ந்திருந்தான்.

ஏகூத், “தேவனிடமிருந்து ஒரு செய்தியை உமக்குக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். அரசன் சிங்காசனத்திலிருந்து எழுந்து நின்றான். அவன் ஏகூத்திற்கு மிக அருகில் இருந்தான்.

21 அரசன் சிங்காசனத்திலிருந்து எழுந்த போது, ஏகூத் தனது இடது கையை நீட்டி வலது தொடையில் கட்டப்பட்டிருந்த வாளை எடுத்து அவ்வாளை அரசனின் வயிற்றில் செருகினான்.

22 வாளின் பிடிகூட வெளியே தெரியாதபடி வாள் எக்லோனின் வயிற்றினுள் நுழைந்தது. அரசனின் பருத்த உடல் வாளை மறைத்தது. எனவே ஏகூத் வாளை எக்லோனின் உடம்பிலேயே விட்டுவிட்டான்.

23 ஏகூத் அறையிலிருந்து வெளியே வந்து கதவுகளை மூடிப் பூட்டிவிட்டான். 24 ஏகூத் புறப்பட்ட சற்று நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து, அறையின் கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “அரசன் கழிவறைக்குப் போயிருக்க வேண்டும்” என்று எண்ணினார்கள். 25 எனவே அவர்கள் அதிக நேரம் காத்திருந்தனர். இறுதியில் அவர்கள் கவலை அடைந்து கதவுகளைத் திறந்தனர். பணியாட்கள் உள்ளே நுழைந்தபோது அரசன் மரணமடைந்து, தரையில் கிடப்பதைப் பார்த்தனர்.

26 பணியாட்கள், அரசனுக்காகக் காத்திருந்தபோது, ஏகூத்திற்குத் தப்பிச்செல்ல போதுமான நேரம் இருந்தது. ஏகூத் விக்கிரகங்கள் இருந்த வழியே கடந்துசென்று சேயிரா என்னும் இடத்திற்குச் சென்றான். 27 சேயிராவை அடைந்ததும், அந்த எப்பிராயீம் மலைநாடுகளில் எக்காளம் ஊதினான். இஸ்ரவேலர் அதனைக் கேட்டு, ஏகூத்தின் பின்செல்ல மலைகளிலிருந்து இறங்கி வந்தனர். 28 ஏகூத் இஸ்ரவேலரிடம், “என்னைப் பின்பற்றுங்கள்! நமது பகைவராகிய மோவாபியரை வெல்வதற்கு கர்த்தர் எனக்கு உதவினார்” என்றான்.

எனவே இஸ்ரவேலர் ஏகூதைப் பின்பற்றினார்கள். யோர்தான் நதியை எளிதாகக் கடக்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் ஏகூதைப் பின்பற்றி அவற்றைக் கைப்பற்றுவதற்காகக் சென்றனர். ஒருவரும் யோர்தான் நதியைக் கடந்து செல்வதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அனுமதிக்கவில்லை. 29 மோவாபில் வலிமையும் துணிவும் உள்ள மனிதர்களில் சுமார் 10,000 பேரை இஸ்ரவேலர் கொன்றனர். மோவாபியரில் ஒருவனும் தப்பிச் செல்லவில்லை. 30 அன்றையதினம் இஸ்ரவேலர் மோவாபியரை ஆளத் தொடங்கினார்கள். அத்தேசத்தில் 80 ஆண்டுகள் அமைதி நிலவிற்று.

நியாயாதிபதியாகிய சம்கார்

31 ஏகூத் இஸ்ரவேலரை மீட்டுக் காத்த பின்பு, மற்றொரு மனிதன் இஸ்ரவேலரைக் காத்தான். அவன் ஆனாத்தின் மகனாகிய சம்கார். 600 பெலிஸ்தியர்களைச் சம்கார் தாற்றுக்கோலால் கொன்றான்.

லூக்கா 22:14-34

இயேசுவின் இரவு உணவு(A)

14 பஸ்கா விருந்தை அவர்கள் சாப்பிடும் நேரம் வந்தது. இயேசுவும், சீஷர்களும் மேசையைச் சூழ்ந்து அமர்ந்தனர். 15 அவர்களிடம் இயேசு, “நான் இறக்கும் முன்பு இந்தப் பஸ்கா விருந்தை உங்களோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். 16 தேவனின் இராஜ்யத்தில் அதற்குரிய உண்மையான பொருள் கொடுக்கப்படும்வரைக்கும் நான் இன்னொரு பஸ்கா விருந்தைப் புசிக்கமாட்டேன்” என்றார்.

17 பின்பு இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்பு அவர், “இக்கோப்பையை எடுத்து இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள். 18 ஏனெனில் தேவனின் இராஜ்யம் வரும்வரைக்கும் நான் மீண்டும் திராட்சை இரசம் குடிக்கப் போவதில்லை” என்றார்.

19 பின்பு இயேசு, அப்பத்தை எடுத்தார். அப்பத்திற்காக தேவனுக்கு நன்றி கூறிவிட்டு அதைப் பிட்டார். சீஷர்களுக்கு அதைக் கொடுத்தார். பின்பு இயேசு, “இதனை நான் உங்களுக்காகக் கொடுக்கிறேன். எனது சரீரமே இந்த அப்பமாகும். எனவே என்னை நினைவுகூருவதற்கு இப்படிச் செய்யுங்கள்” என்றார். 20 அப்பத்தை உண்ட பின்னர், அதே வகையில் இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து “இந்தத் திராட்சை இரசம் தேவனுக்கும் அவரது மக்களுக்கும் உள்ள புதிய உடன்படிக்கையைக் காட்டுகிறது. நான் உங்களுக்காகக் கொடுக்கிற என் இரத்தத்தில் (மரணத்தில்) இப்புது உடன்படிக்கை ஆரம்பமாகிறது” என்றார்.

இயேசுவின் எதிரி யார்?

21 இயேசு, “உங்களில் ஒருவன் என்னை வஞ்சிக்கப் போகிறான். மேசை மீது அவனது கை என் கைக்குப் பக்கத்தில் இருக்கிறது. 22 தேவன் திட்டமிட்டபடியே மனிதகுமாரன் செய்வார். ஆனால் மனிதகுமாரனைக் கொல்லப்படுவதற்காக ஒப்படைக்கிற மனிதனுக்கு மிகவும் தீமை நடக்கும்” என்றார்.

23 அப்போது சீஷர்கள் ஒருவருக்கொருவர், “இயேசுவுக்கு அவ்வாறு செய்பவன் நமக்குள் யார்?” என்று கேட்டார்கள்.

தாழ்மையாக இருங்கள்

24 பின்னர் தங்களில் மிக முக்கியமானவன் யார் என்று அப்போஸ்தலர்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். 25 ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “உலகத்தில் (வேறுவேறு) தேசங்களின் அரசர்கள் மக்களை அரசாளுகிறார்கள். பிற மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் ‘மக்களின் உதவியாளன்’ என தம்மை எல்லாரும் அழைக்கும்படிச் செய்கிறார்கள். 26 ஆனால் நீங்கள் அவ்வாறு இருக்கலாகாது. உங்களுக்குள் மிகச் சிறந்தவன் சிறியவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். தலைவர்கள் வேலைக்காரனைப்போல இருக்கவேண்டும். 27 யார் மிகவும் முக்கியமானவன்? மேசையின் அருகே உட்கார்ந்திருப்பவனா அல்லது அவனுக்குப் பரிமாறுகிறவனா? மேசையருகே உட்கார்ந்திருப்பவன் முக்கியமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்களில் நான் ஒரு வேலைக்காரனைப்போல இருக்கிறேன்.

28 “பெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக்கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள். 29 எனது பிதா எனக்கு ஓர் இராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார். என்னோடு அரசாளுகிற அதிகாரத்தை உங்களுக்கு நானும் கொடுக்கிறேன். 30 என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு குலங்களையும் நியாயம்தீர்ப்பீர்கள்.

நம்பிக்கையை இழக்காதீர்கள்(B)

31 “ஓர் உழவன் கோதுமையைப் புடைப்பது போல சாத்தான் உங்களைச் சோதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளான். சீமோனே, சீமோனே (பேதுரு), 32 நீ உன் நம்பிக்கையை இழக்காதிருக்கும்படியாக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வரும்போது உன் சகோதரர்கள் வலிமையுறும்பொருட்டு உதவி செய்” என்றார்.

33 ஆனால் பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நான் உங்களுடன் சிறைக்கு வரத் தயாராக இருக்கிறேன். நான் உங்களோடு இறக்கவும் செய்வேன்” என்றான்.

34 ஆனால் இயேசு, “பேதுரு, நாளைக் காலையில் சேவல் கூவும் முன்பு என்னைப்பற்றி உனக்குத் தெரியாதென கூறுவாய். இதனை நீ மூன்று முறை சொல்வாய்” என்றார்.

சங்கீதம் 92-93

ஓய்வு நாளின் துதிப்பாடல்

92 மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது.
    உமது நாமத்தைத் துதிப்பது நல்லது.
காலையில் உமது அன்பைப்பற்றியும்
    இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது.
தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும்,
    இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.
கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர்.
    அக்காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம்.
கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர்.
    உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது.
உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள்.
    நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம்.
களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள்.
    அவர்கள் செய்யும் பயனற்ற காரியங்களே என்றென்றும் அழிக்கப்படும்.
ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர்.
கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
    தீயவை செய்யும் எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள்.
10 ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர்.
    பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன்.
விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர்.
    உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர்.
11 என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன்.
    என்னைத் தாக்க வருகிற பெருங்காளைகளைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள்.
    அவர்கள் என்னைக் குறித்துச் சொல்பவற்றை நான் கேட்கிறேன்.

12-13 செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான்.
    லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான்.
கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள்.
    தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.
14 வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள்.
    அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள்.
15 கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள்.
    அவர் என் பாறை, அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.

93 கர்த்தர் அரசர்.
    அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார்.
அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது,
    அது அசைக்கப்படுவதில்லை.
தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது.
    தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!
கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது.
    மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.
கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன.
    ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும்.
    உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.

நீதிமொழிகள் 14:1-2

14 ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்.

சரியான வழியில் வாழ்கிறவர்கள் கர்த்தரை மதிக்கிறார்கள். ஆனால் நேர்மையாக இல்லாதவன் கர்த்தரை வெறுக்கிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center