Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the GNT. Switch to the GNT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 34 - யோசுவா 2

மோசே மரணமடைதல்

34 மோசே நேபோ மலைமீது ஏறினான். மோசே மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியிலிருந்து பிஸ்காவின் உச்சிக்குச் சென்றான். இது எரிகோவிலிருந்து யோர்தான் ஆற்றுக்கு எதிர்புறத்தில் உள்ளது. கர்த்தர் மோசேக்கு கீலேயாத் முதல் தாண்வரையுள்ள அனைத்து நாடுகளையும் காட்டினார். கர்த்தர் அவனுக்கு நப்தலி, எப்பிராயீம், மற்றும் மனாசேயின் நாடுகள் எல்லாவற்றையும் காட்டினார். அவர் அவனுக்கு மத்தியதரைக் கடல் வரையுள்ள யூதா நாடு முழுவதையும் காட்டினார். கர்த்தர் மோசேக்கு பாலைவனத்தையும், பேரீச்ச மரங்களின் நகரம் என்னும் சோவார் முதல் எரிகோவரையுள்ள பள்ளத்தாக்கையும் காட்டினார். கர்த்தர் மோசேயிடம், “நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்த நாடு இதுதான். நான் அவர்களிடம் சொன்னேன் ‘நான் இந்த நாட்டை உங்கள் சந்ததிகளுக்குத் தருவேன். அந்த நாட்டை நீ பார்க்கும்படி செய்வேன். ஆனால் அங்கே உன்னால் போகமுடியாது’” என்று கூறினார்.

பின்னர் கர்த்தருடைய தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் மரித்தான். கர்த்தர் மோசேயிடம் இவை நிகழும் என்று சொல்லியிருந்தார். கர்த்தர் மோசேயை மோவாபில் அடக்கம் செய்தார். இது பெத்பேயோருக்கு எதிர்புறத்தில் உள்ள பள்ளத்தாக்கிலே உள்ளது. ஆனால் இன்றுவரை மோசேயின் கல்லறை எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. மோசே மரணமடையும்போது 120 வயதுடையவனாக இருந்தான். அவன் எப்பொழுதும்போல் பலமுள்ளவனாக இருந்தான். அவனது கண்கள் அப்பொழுதும் நன்றாக இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்காக 30 நாட்கள் அழுதனர். அவர்கள் துக்ககாலம் முடியும்வரை மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியில் தங்கினார்கள்.

யோசுவா புதிய தலைவனாகுதல்

யோசுவாவின்மேல் மோசே தனது கைகளை வைத்து அவனைப் புதிய தலைவனாக நியமித்திருந்தான். பிறகு நூனின் மகனான யோசுவா ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவிற்குக் கீழ்ப்படியத் தொடங்கினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தவற்றை எல்லாம் அவர்கள் செய்தனர்.

10 இஸ்ரவேல் மோசேயைப் போன்று இன்னொரு தீர்க்கதரிசியைப் பெறவில்லை. கர்த்தர் மோசேயை நேருக்கு நேர் தெரிந்து வைத்திருந்தார். 11 எகிப்து நாட்டில் அற்புதங்களைச் செய்வதற்கு கர்த்தர் மோசேயை அனுப்பினார். பார்வோன், அவனது அதிகாரிகள் மற்றும் எகிப்திலுள்ள அனைத்து ஜனங்களும் அந்த அற்புதங்களைப் பார்த்தனர். 12 மோசே செய்ததுபோன்று வேறு எந்த தீர்க்கதரிசியும் சகல வல்லமையும், பயங்கரமும் கொண்ட செயல்களைச் செய்யவில்லை. அவன் செய்ததை இஸ்ரவேலில் உள்ள எல்லா ஜனங்களும் பார்த்தனர்.

இஸ்ரவேலரை வழிநடத்துவதற்கு கர்த்தர் யோசுவாவைத் தெரிந்தெடுத்தல்

மோசே கர்த்தருடைய ஊழியனாக இருந்தான். நூனின் மகனாகிய யோசுவா மோசேயின் உதவியாளனாக இருந்தான். மோசே மரித்த பிறகு, கர்த்தர் யோசுவாவிடம் பேசினார். கர்த்தர், எனது ஊழியனாகிய மோசே மரித்துவிட்டான். இப்போது நீயும் இந்த ஜனங்களும் யோர்தான் நதியைத் தாண்டி, நான் இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குள் நீங்கள் செல்லவேண்டும். நான் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக மோசேக்கு வாக்களித்திருந்தேன். எனவே நீங்கள் காலடி எடுத்து வைக்கும் இடத்தையெல்லாம் உங்களுக்கே கொடுப்பேன். பாலைவனத்திலிருந்தும், லீபனோனிலிருந்தும் பெரிய நதியாகிய ஐபிராத்து வரைக்குமான ஏத்திய ஜனங்களுக்குரிய, தேசம் உங்களுக்குரியதாகும். மற்றும் உங்கள் எல்லைக்குள் இங்கிருந்து (சூரியன் மறைகிற இடமாகிய) மேற்கில் மத்தியதரைக் கடல் வரைக்குமுள்ள தேசம் இருக்கும். நான் மோசேயோடு இருந்தது போல் உன்னோடும் இருப்பேன். உன் ஆயுள் உள்ளமட்டும் உன்னை யாரும் எதிர்க்கவோ தடுக்கவோ முடியாது. நான், உன்னைக் கைவிடமாட்டேன். ஒருபோதும் உன்னைவிட்டு விலகமாட்டேன்.

“யோசுவா, நீ வல்லமையும், தைரியமும் உள்ளவனாக இருக்கவேண்டும்! இந்த ஜனங்கள் தமக்குரிய தேசத்தைப் பெறும்படி நீ அவர்களை வழிநடத்த வேண்டும். இந்நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக நான் அவர்கள் முன்னோர்களுக்கு வாக்களித்தேன். ஆனால் நீயும் மற்றொரு காரியத்தில் உறுதியோடும், தைரியத்தோடும் இருக்க வேண்டும். எனது ஊழியனாகிய மோசே உனக்குக் கொடுத்த கட்டளைகளுக்குக் கண்டிப்பாக நீ கீழ்ப்படியவேண்டும். நீ அவற்றைச் சரியாகப் பின்பற்றினால், நீ செய்கிற எல்லாவற்றிலும் வெற்றி அடைவாய். சட்ட புத்தகத்தில் எழுதியிருப்பவற்றை எப்போதும் நினைவுகூர்ந்து, இரவும் பகலும் அதைப்படி. அப்போது அப்புத்தகத்தில் எழுதியிருப்பவைகளுக்கு நீ கீழ்ப்படிய முடியும். இதைச் செய்தால், நீ செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் ஞானமுள்ளவனாய் வெற்றி காண்பாய். நீ உறுதியும், தைரியமும் உடையவனாய் இருக்க வேண்டுமெனக் கட்டளையிட்டதை நினைவில் வைத்துக்கொள். எனவே பயப்படாதே, நீ போகுமிடங்களில் எல்லாம் தேவனாகிய கர்த்தர் உன்னோடிருப்பார்” என்றார்.

யோசுவா பதவி ஏற்குதல்

10 யோசுவா, ஜனங்களின் தலைவர்களுக்கு ஆணைகளைக் கொடுத்தான். 11 அவன், “முகாம்களுக்குச் சென்று ஜனங்களிடம் தயாராகும்படி கூறுங்கள், மேலும் ஜனங்களிடம் ‘கொஞ்சம் உணவைத் தயாரியுங்கள். இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் நாம் யோர்தான் நதியைக் கடக்கப் போகிறோம். தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குப் போய் அதைச் சுதந்தரிப்போம்’ எனச் சொல்லுங்கள்” என்றும் சொன்னான்.

12 பின் ரூபன், காத், ஆகிய கோத்திரத்தாரிடமும், மனாசே கோத்திரத்தின் பாதிப்பேர்களிடமும் யோசுவா பேசினான். 13 அவன், “கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கூறியதை நினைவுகூருங்கள். தேவனாகிய கர்த்தர் நீங்கள் தங்குவதற்காக ஓரிடத்தை உங்களுக்குக் கொடுப்பார் என்று அவன் கூறினான். கர்த்தர் அத்தேசத்தை உங்களுக்குத் தருவார்! 14 உண்மையில், யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தை கர்த்தர் ஏற்கெனவே கொடுத்துவிட்டார். உங்கள் மனைவிகளும், பிள்ளைகளும், உங்கள் மிருகங்களோடு உங்களுக்குச் சொந்தமான இத்தேசத்தில் தங்கியிருக்கலாம். ஆனால் போர் வீரர்கள் உங்கள் சகோதரரோடு யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நீங்கள் போருக்குத் தயாராகி உங்கள் சகோதரர் அத்தேசத்தைக் கைப்பற்ற உதவவேண்டும். 15 கர்த்தர் நீங்கள் தங்கியிருப்பதற்கு ஓர் இடத்தைக் கொடுத்தார். அதையே உங்கள் சகோதரருக்கும் செய்வார். தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குத் தருகின்ற தேசத்தைக் கைப்பற்றுவதற்கு நீங்கள் உதவவேண்டும். பிறகு நீங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள உங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பி வரலாம். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்கு அத்தேசத்தைப் பிரித்துக் கொடுத்தான்” என்றான்.

16 அப்போது ஜனங்கள் யோசுவாவிடம், “நீர் எங்களுக்குக் கட்டளையிடுகின்ற எல்லாக் காரியங்களையும் செய்வோம்! நீர் சொல்கின்ற இடங்களுக்கெல்லாம் போவோம்! 17 நாங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தபடியே, நீர் கூறுகின்றவற்றிற்கும் கீழ்ப்படிவோம். நாங்கள் கர்த்தரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறோம். மோசேயோடு இருந்தபடியே, உங்களோடும் இருக்க வேண்டுமென தேவனாகிய கர்த்தரிடம் கேட்கிறோம். 18 மேலும், உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய யாராவது மறுத்தால், அல்லது உமக்கு எதிராக யாராவது எழும்பினால், அப்போது அவன் கொல்லப்படுவான். உறுதியோடும் தைரியத்தோடும் இரும்!” என்றனர்.

எரிகோவில் ஒற்றர்கள்

அகாசியாவில் நூனின் மகனாகிய யோசுவாவும், ஜனங்கள் அனைவரும் முகாமிட்டிருந்தனர். யோசுவா இரண்டு ஒற்றர்களை அனுப்பினான். அம்மனிதர்களை யோசுவா அனுப்பிய விவரம் யாருக்கும் தெரியாது. யோசுவா அவர்களிடம், “போய் தேசத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள், முக்கியமாக எரிகோ நகரத்தைப் பார்த்து வாருங்கள்” என்றான்.

எனவே அவர்கள் எரிகோ நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் ஒரு வேசியின் வீட்டிற்குச் சென்று, அங்கே இரவில் தங்கினர். அப்பெண்ணின் பெயர் ராகாப்.

சிலர் எரிகோவின் அரசனிடம் சென்று, “நேற்றிரவு இஸ்ரவேலிலிருந்து சில மனிதர்கள் நம் நாட்டின் பெலவீனங்களைக் கண்டறிய வந்திருக்கிறார்கள்” என்றனர்.

எனவே எரிகோவின் அரசன் ராகாபுக்கு, “உனது வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிற மனிதர்களை ஒளித்து வைக்காதே. அவர்களை வெளியே அழைத்து வா. அவர்கள் நம் நாட்டை உளவு பார்க்க வந்துள்ளனர்” என்ற செய்தியைச் சொல்லியனுப்பினான்.

அப்பெண் அவ்விருவரையும் மறைத்து வைத்திருந்தாள். ஆனால் அவள், “அவ்விருவரும் இங்கு வந்திருந்தனர், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்கிற விவரம் எனக்குத் தெரியாது. மாலையில், நகர வாயிலை அடைக்கும் சமயத்தில், அவ்விருவரும் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கே சென்றனர் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் விரைந்து சென்றால், அவர்களைப் பிடிக்கக் கூடும்” என்றாள். (ராகாப், அவள் இப்படி கூறினாலும், உண்மையில் அவ்விருவரையும், கூரையின் மேல்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கே அவள் குவித்து வைத்திருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்திருந்தாள்.)

எனவே அரசனால் அனுப்பப்பட்ட ஆட்கள் நகரத்திற்கு வெளியே சென்ற பின்பு, நகர வாயிலை அடைத்தனர். இஸ்ரவேலிலிருந்து வந்த இருவரையும் தேடி அரசனின் மனிதர்கள் சென்றனர். அவர்கள் யோர்தான் நதிக்குச் சென்று, ஜனங்கள் நதியைக் கடக்கும் எல்லா இடங்களிலும் அவர்களைத் தேடினார்கள்.

ஒற்றர்களாக வந்த இருவரும் இரவில் தூங்குவதற்கு ஆயத்தமாயினர். ஆனால் ராகாப் கூரையின் மேல்பகுதிக்கு ஏறிச் சென்று அவர்களிடம், “உங்கள் ஜனங்களுக்கு கர்த்தர் இத்தேசத்தைக் கொடுத்தார் என்பதை நான் அறிவேன். நீங்கள் எங்களுக்கு அச்சமூட்டுகிறீர்கள். இத்தேசத்தில் வாழும் ஜனங்கள் உங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். 10 கர்த்தர் உங்களுக்கு உதவிய வழிகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடியால் நாங்கள் அஞ்சுகிறோம். நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர் செங்கடலின் தண்ணீரை வற்றிப்போகச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். சீகோன், ஓகு என்னும் இரண்டு எமோரிய அரசர்களுக்கும் நீங்கள் செய்ததை நாங்கள் கேள்விப்பட்டோம். யோர்தான் நதியின் கிழக்கில் வாழ்ந்த அரசர்களை நீங்கள் அழித்ததையும் அறிந்தோம். 11 அந்தக் காரியங்களை நாங்கள் அறிந்து மிகவும் அஞ்சினோம். இப்போது, எங்களில் எந்த மனிதனுக்கும் உங்களை எதிர்க்கும் துணிவு இல்லை. ஏனெனில் உங்கள் தேவனாகிய கர்த்தர் மேலே வானத்தையும், கீழே பூமியையும் ஆளுகிறார்! 12 எனவே நீங்கள், இப்போது எனக்கு ஒரு வாக்குறுதி அளிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். நான் உங்களிடம் இரக்கம் காட்டி, உங்களுக்கு உதவினேன். எனவே என் குடும்பத்திற்கு இரக்கம் காட்டுவதாக கர்த்தருக்கு முன்னால் வாக்களியுங்கள். நீங்கள் இதைச் செய்வீர்களென்று எனக்கு உறுதி கூறுங்கள். 13 நீங்கள் எனது தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகள், அவர்கள் குடும்பத்தினர் ஆகியோர் உட்பட, எனது குடும்பத்தார் அனைவரையும் உயிரோடு வாழ அனுமதிப்பதாக எனக்குக் கூறுங்கள். எங்களை மரணத்தினின்று விடுவிப்பதாக எனக்கு வாக்குறுதி அளியுங்கள்” என்றாள்.

14 அவ்விருவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அவர்கள், “உங்கள் உயிருக்கு எங்கள் உயிரைப் பணயம் வைக்கிறோம். நாங்கள் செய்வதை யாருக்கும் சொல்லாதே. கர்த்தர், எங்களுக்குரிய நாட்டை எங்களுக்குக் கொடுக்கும்போது, உனக்கு இரக்கம் காட்டுவோம். நீ எங்களை நம்பலாம்” என்றனர்.

15 நகரத்தின் மதிலில் அப்பெண்ணின் வீடுகட்டப்பட்டிருந்தது. அது சுவரின் ஒரு பாகமாக அமைந்திருந்தது. எனவே அப்பெண் ஜன்னல் வழியே ஒரு கயிற்றின் மூலமாக அவ்விருவரையும் கீழே இறக்கினாள். 16 அப்போது அப்பெண் அம்மனிதரை நோக்கி: “அரசனின் ஆட்கள் உங்களைக் காணாதபடிக்கு மேற்குத் திசையில் மலைகளின் உள்ளே சென்றுவிடுங்கள். அங்கு மூன்று நாட்கள் ஒளிந்திருங்கள். அரசனின் ஆட்கள் திரும்பி வந்தபின் நீங்கள் திரும்பிப் போகலாம்” என்றாள்.

17 அம்மனிதர்கள் அவளைப் பார்த்து, “நாங்கள் உனக்கு ஒரு வாக்குறுதி அளித்தோம். ஆனால் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். 18 நாங்கள் தப்பிச்செல்ல உதவுவதற்கு நீ இந்தச் சிவப்புக் கயிற்றைப் பயன்படுத்துகிறாய். நாங்கள் இத்தேசத்திற்குத் திரும்பவும் வருவோம். அப்போது உன் வீட்டு ஜன்னலில் இந்தக் கயிற்றை நீ கட்ட வேண்டும். உன் தந்தை, தாய், குடும்பத்தினர் எல்லோரையும் உன்னோடு வீட்டிற்குள் அழைத்துக் கொள்ளவேண்டும். 19 இவ்வீட்டில் இருக்கிற எல்லோரையும் நாங்கள் காப்போம். உன் வீட்லுள்ள யாரேனும் காயமுற்றால், நாங்கள் அதற்குப் பொறுப்பாளிகளாவோம். ஆனால் உன் வீட்டிலிருந்து ஒருவன் வெளியே போனால் அவன் கொல்லப்படக்கூடும். அவனுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். அது அவனுடைய குற்றமாகும். 20 நாங்கள் இந்த ஒப்பந்தத்தை உன்னோடு செய்கிறோம். ஆனால் நாங்கள் செய்கிறதை நீ யாருக்காவது கூறினால், இந்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் நீங்கலாயிருப்போம்” என்றனர்.

21 அதற்கு அப்பெண், “நீங்கள் கூறியபடியே எல்லாவற்றையும் செய்வேன்” என்று கூறி அவர்களை வழியனுப்பினாள். அம்மனிதர்கள் அவள் வீட்டைவிட்டுச் சென்றனர். அப்பெண் ஜன்னலில் அச்சிவப்பு கயிற்றைக் கட்டினாள்.

22 அவ்விருவரும் அவள் வீட்டிலிருந்து மலைகளுக்குச் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். அரசனின் ஆட்கள் பாதைகளில் எல்லாம் தேடினார்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நகருக்குத் திரும்பினார்கள். 23 ஒற்றர்கள் இருவரும் மலைகளைவிட்டு நீங்கி, நதியைக் கடந்து நூனின் மகனாகிய யோசுவாவிடம் சென்றார்கள். தாங்கள் அறிந்து வந்த எல்லாவற்றையும் அவர்கள் யோசுவாவுக்குக் கூறினார்கள். 24 அவர்கள் யோசுவாவை நோக்கி, “கர்த்தர் நமக்கு உண்மையாகவே அத்தேசம் முழுவதையும் கொடுத்திருக்கிறார். அந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் நமக்கு அஞ்சுகிறார்கள்” என்றார்கள்.

லூக்கா 13:22-14:6

குறுகிய வாசல்(A)

22 ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் இயேசு போதித்துக்கொண்டிருந்தார். அவர் எருசலேம் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார். 23 ஒருவன் இயேசுவிடம், “ஆண்டவரே, சிலர் மட்டுமே மீட்கப்படுவார்களா?” என்று கேட்டான்.

24 இயேசு, “பரலோகத்திற்கு நேராகத் திறக்கிற குறுகிய வாசலின் வழியாக நுழைய முயலுங்கள். பலர் அதனுள் நுழைய முயல்வார்கள். ஆனால் அவர்களால் நுழைய இயலாது. 25 ஒரு மனிதன் தன் வீட்டின் கதவை மூடிக்கொண்டால் நீங்கள் வெளியே நின்று தட்டமுடியும். ஆனால் அவன் திறக்கமாட்டான். நீங்கள், ‘ஐயா, எங்களுக்காகக் கதவைத் திறக்கவும்’ என்று கேட்க முடியும். அம்மனிதன், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது’ என்பான். 26 பிறகு நீங்கள் அவனிடம் ‘நாங்கள் உங்களோடு உண்டு, குடித்தோமே. நீங்கள் எங்களது நகரங்களில் போதித்தீர்களே’ என்று சொல்லுவீர்கள். 27 அப்போது அவன், ‘உங்களை நான் அறியேன். எங்கிருந்து வருகிறீர்கள். என்னிடமிருந்து போய்விடுங்கள். நீங்கள் பிழைகளைச் செய்கிற மனிதர்கள்’ என்பான்.

28 “நீங்கள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் தீர்க்கதரிசிகளையும் தேவனின் இராஜ்யத்தில் காண்பீர்கள். ஆனால் நீங்களோ வெளியே விடப்படுவீர்கள். பயத்தாலும் கோபத்தாலும் உரக்கச் சத்தமிடுவீர்கள். 29 கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து மக்கள் வருவார்கள். தேவனுடைய இராஜ்யத்தில் மேசையருகே அவர்கள் அமர்வார்கள். 30 வாழ்க்கையில் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்த மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்படும். இப்போது உயர்ந்த இடத்தில் இருக்கும் மக்கள் தேவனுடைய இராஜ்யத்தில் தாழ்ந்த இடத்தில் இருப்பார்கள்” என்று கூறினார்.

எருசலேமில் இயேசு மரிப்பார்(B)

31 அப்போது, சில பரிசேயர்கள், “இங்கிருந்து சென்று ஒளிந்துகொள்ளும். ஏரோது மன்னன் உம்மைக் கொல்ல விரும்புகிறான்” என்று இயேசுவிடம் வந்து சொன்னார்கள்.

32 அவர்களை நோக்கி, இயேசு, “அந்த நரியிடம் (ஏரோது) போய் ‘இன்றும், நாளையும் நான் மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளைத் துரத்தி, குணப்படுத்துதலாகிய என் வேலையை முடிக்க வேண்டும். மறுநாள், என் வேலை முடிந்துவிடும்’ 33 அதற்குப் பிறகு, எல்லாத் தீர்க்கதரிசிகளும் எருசலேமில் மரிக்க வேண்டும் என்பதால் நான் என் வழியில் செல்லவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார்.

34 “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொலை செய்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பிய அந்த மனிதர்களைக் கல்லெறிந்து கொல்கிறாய். பற்பல வேளைகளில் உன் மக்களுக்கு உதவ விரும்பினேன். ஒரு கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளின் கீழே சேர்ப்பதுபோல நான் உன் மக்களை ஒருமித்து சேர்க்க விரும்பினேன். ஆனால் நீ என்னை அனுமதிக்கவில்லை. 35 இப்போது உன் வீடு வெறுமையானதாக விடப்பட்டிருக்கும். நீங்கள், ‘தேவனின் பெயரால் வருகிறவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படடவர்’ என்று மீண்டும் சொல்கிறவரைக்கும், என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.

ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?

14 ஓய்வு நாளில் இயேசு பரிசேயர்களின் தலைவனாகிய ஒருவனின் வீட்டுக்கு அவனோடு உணவு உண்ணச் சென்றார். அங்கிருந்த ஜனங்கள் இயேசுவைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கொடிய நோய் [a] உள்ள ஒரு மனிதனை இயேசுவின் முன்னே கொண்டு வந்தார்கள். இயேசு பரிசேயரிடமும், வேதபாரகரிடமும், “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா அல்லது தவறா?” என்று கேட்டார். ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. எனவே இயேசு அந்த மனிதனை அழைத்து அவனைக் குணமாக்கினார். பின்னர் இயேசு அந்த மனிதனை அனுப்பிவிட்டார். பரிசேயரிடமும், வேதபாரகரிடமும் இயேசு, “உங்கள் மகனோ அல்லது வேலை செய்யும் மிருகமோ ஓய்வு நாளில் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டால் விரைந்து வெளியே எடுப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார். இயேசு கூறியதற்கு எதிராகப் பரிசேயர்களும் வேதபாரகர்களும் எதையும் கூற முடியவில்லை.

சங்கீதம் 79

ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று

79 தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள்.
    அந்த ஜனங்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அழித்தார்கள்.
    அவர்கள் எருசலேமைப் பாழக்கிச் சென்றார்கள்.
காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள்.
    உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள்.
தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான்.
    மரித்த உடல்களைப் புதைப்பதற்கென ஒருவனும் விட்டு வைக்கப்படவில்லை.
எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின.
    எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர்.
தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா?
    உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா?
தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும்.
    உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும்.
அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன.
    அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள்.
தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும்.
    விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்!
    நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்!
எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்!
    எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்!
உமது நாமத்துக்கு அது மகிமையை தரும்.
    உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும்.
10 பிறதேசங்கள் எங்களிடம், “உங்கள் தேவன் எங்கே?
    அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்று கேட்கவிடாதேயும்.
தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும்.
    உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும்.
11 சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்!
    தேவனே, உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி மரணத்திற்கென்று தேர்ந்து கொண்ட அந்த ஜனங்களைக் காப்பாற்றும்.
12 தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும்
    ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும்.
    உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும்.
13 நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள்.
    நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம்.
    தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.

நீதிமொழிகள் 12:26

26 தான் தேர்ந்தெடுக்கிற நண்பர்களைப்பற்றி நல்லவன் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பான். ஆனால் தீயவர்களோ கெட்ட நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center