Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 26-27

முதல் அறுவடை

26 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் விரைவில் நுழையப் போகிறீர்கள். நீங்கள் அந்த நிலத்தில் குடிகொண்டு சுதந்திரமாய் வாழப் போகிறீர்கள். கர்த்தர் உங்களுக்கு வழங்கிய நிலத்தில் விளைந்தவற்றை நீங்கள் அறுவடை செய்யும்போது, உங்களின் விளைச்சலின் முதல் பலனை கூடைகளில் எடுத்து வைத்துவிட வேண்டும். பின் நீங்கள் அறுவடை செய்ததின் முதல் பங்கை எடுத்துக்கொண்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த அவரது ஆலயத்திற்கு கொண்டுசென்று, அங்கே ஆலய சேவையில் இருக்கின்ற ஆசாரியரிடம்: ‘கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு ஒரு தேசத்தைக் கொடுப்பேன் என்று ஆணையிட்டார். இன்று தேவனாகிய கர்த்தரிடத்தில், நான் அந்தத் தேசத்திற்கு வந்து விட்டேன் என்று அறிக்கையிடுகிறேன்’ என்று கூறு.

“பின் அந்த ஆசாரியன் உன்னிடமிருந்து அந்தக் கூடையை எடுத்து கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பு வைப்பான். பின் அவ்விடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு நீங்கள்: ‘அலைந்து திரிந்த அரேமியரான எனது முற்பிதாக்கள் எகிப்துக்குச் சென்று அங்கு தங்கினார்கள். செல்லும்போது கொஞ்சம் ஜனங்களே அவன் குடும்பத்தினராய் இருந்தனர். ஆனால் எகிப்தில் அவர்கள் பெரிய ஜனமாக பெருகினார்கள். வலிமை வாய்ந்த ஜனமாக அதிக ஜனங்களை கொண்டவர்களாக இருந்தனர். எகிப்தியர்கள் எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்களை அடிமைகளாக்கினார்கள். எங்களை வேதனைப்படுத்தி மிகவும் கடினமான வேலைகளைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். பின் நாங்கள் எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தோம். அவர்களைப்பற்றி முறையீடு செய்தோம். கர்த்தர் நாங்கள் கூறியவற்றைக் கேட்டார். எங்களது இன்னல்களையும், கடின உழைப்பையும், நாங்கள் அடைந்த வருத்தங்களையும் கர்த்தர் பார்த்தார். பின் கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைத் தனது மிகுந்த ஆற்றலாலும், பலத்தினாலும் மீட்டுக்கொண்டு வந்தார். அவர் மிகுந்த அற்புதங்களையும், அதிசயங்களையும் பயன்படுத்தினார். வியக்கத்தக்க நிகழ்ச்சிகளைச் செய்தார். அதனால் எங்களை இந்த தேசத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தார். பாலும், தேனும் ஓடக் கூடிய இந்த வளமான தேசத்தை எங்களுக்குத் தந்தார். 10 இப்போதும் இதோ கர்த்தாவே நீர் எங்களுக்குத் தந்த தேசத்திலிருந்து நாங்கள் பெற்ற முதல் அறுவடையின் பலனைக் கொண்டு வந்துள்ளோம்’ என்று சொல்ல வேண்டும்.

“பின் நீங்கள் அந்த அறுவடையின் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு வைத்து தாழ்ந்து பணிந்து அவரை ஆராதிக்க வேண்டும். 11 பின் நீங்கள் சேர்ந்து உண்டு மகிழ்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கொடுத்த எல்லா நன்மைகளினிமித்தமும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நீங்கள் அந்த நன்மைகளில் எல்லாம் லேவியர்களுக்கும் மற்றும் உங்களைச் சார்ந்து வாழ்கின்ற அந்நியர்களுக்கும் பங்களிக்க வேண்டும்.

12 “ஒவ்வொரு மூன்றாவது ஆண்டும் பத்தில் ஒரு பங்கைச் செலுத்தும் ஆண்டாக இருக்கவேண்டும். இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் அறுவடைப் பலனில் பத்திலொரு பங்கை லேவியருக்கும், உங்கள் நாட்டில் வாழும் அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் கொடுக்க வேண்டும். பின் ஒவ்வொரு நகரத்திலும் அந்த ஜனங்கள் தாராளமாக, திருப்தியாக உண்டு மகிழ்வார்கள். 13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம், ‘கர்த்தாவே, நான் எனது வீட்டிலிருந்து எனது அறுவடைப் பலனின் பரிசுத்த பங்கு ஒன்றை வெளியே எடுத்துவந்து லேவியருக்கும், அயல் நாட்டு குடிகளுக்கும், அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் கொடுத்துள்ளேன். நீர் எனக்குத் தந்த எல்லா கட்டளைகளையும் நான் பின்பற்றியுள்ளேன். நான் உமது எந்த கட்டளைக்கும் கீழ்ப்படிய மறுத்ததில்லை. அவற்றை மறந்ததுமில்லை. 14 நான் துக்கமாயிருந்தபோது அதில் எதையும் உண்ணவில்லை. நான் சுத்தமில்லாதவனாக இருந்தபோது அவற்றை சேகரிக்கவில்லை. நான் மரித்தவர்களுக்காக அதிலிருந்து எந்த உணவையும் செலுத்தவில்லை. நான் உமக்குக் கீழ்ப்படிந்து இருந்தேன். என் தேவனாகிய கர்த்தாவே நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் எல்லா செயல்களையும் செய்துள்ளேன். 15 தேவனே பரலோகத்தில் உமது பரிசுத்த ஆலயத்திலிருந்து என்னைப் பாரும். உமது இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதியும். நீர் எங்களுக்குக் கொடுத்த தேசத்தை ஆசீர்வதிப்பீராக. எங்கள் முற்பிதாக்களிடம் ஆணையிட்டபடி எல்லா வளங்களும் கொண்ட பாலும், தேனும் ஓடக் கூடிய நீர் தந்த இந்த தேசத்தை ஆசீர்வதியும்’ என்று கூறுவீர்களாக.

தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்

16 “இந்த எல்லாச் சட்டங்களுக்கும், விதிகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய, உங்கள் தேவனாகிய கர்த்தர் இன்று உங்களுக்குக் கட்டளையிடுகின்றார். நீங்கள் உங்கள் ஆத்ம திருப்தியுடனும், முழு மனதோடும், அவற்றைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாய் இருங்கள்! 17 இன்று நீங்கள் கர்த்தரே உங்கள் தேவன் என்று சொல்லியிருக்கிறீர்கள்! தேவன் விரும்பிய நெறிப்படியே நீங்கள் வாழ்வதாக வாக்களித்துள்ளீர்கள்! அவரது போதனைகளுக்கும், நியாயங்களுக்கும், கட்டளைகளுக்கும், நீங்கள் கீழ்ப்படிவதாக உறுதி செய்துள்ளீர்கள். நீங்கள் செய்யும்படி கர்த்தர் உங்களுக்குச் சொல்லிய ஒவ்வொன்றையும் செய்வதாகச் சொன்னீர்கள். 18 இன்று உங்களெல்லோரையும் கர்த்தருடைய சிறப்புக்குரிய சொந்த ஜனங்களாக கர்த்தர் ஏற்றுக்கொண்டார்! அவர் இப்படிச் செய்ய உங்களிடம் வாக்களித்துள்ளார். அவரது கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்றும் கர்த்தர் சொன்னார். 19 கர்த்தர் தாம் படைத்த மற்றெல்லா ஜனங்களையும்விட, புகழும், பெருமையும், மதிப்பும் கொண்ட சிறந்தவர்களாக உங்களை ஆக்கியுள்ளார். கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடியே, நீங்களும் அவருக்குச் சொந்தமான விசேஷ ஜனங்களாக இருக்க வேண்டும்.”

ஜனங்களுக்கான கல் நினைவுச் சின்னங்கள்

27 மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும்

(தலைவர்கள்) இஸ்ரவேல் ஜனங்களுடன் பேசினார்கள். மோசே, “இன்று நான் கொடுக்கிற அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக கொடுத்திருக்கிற நாட்டிற்குள் போகும்படி நீங்கள் விரைவில் யோர்தான் ஆற்றைக் கடப்பீர்கள். அந்த நாளில் நீங்கள் பெரிய கற்களை நாட்டவேண்டும். அக்கற்களைச் சாந்து பூசி மூடி பிறகு அக்கற்களின் மேல் இந்த கட்டளைகளையும், போதனைகளையும் எழுத வேண்டும். நீங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்தவுடன் இதனைச் செய்யவேண்டும். பிறகு நீங்கள் அந்த நாட்டிற்குள் போகலாம். அதை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகக் கொடுத்திருக்கிறார். அந்நாடு பல நன்மைகளால் நிறைந்தது. உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் இந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தார்.

“யோர்தான் ஆற்றைக் கடந்து நீங்கள் போனதும், நான் இன்று கட்டளையிடுகின்றவற்றை நீங்கள் செய்யவேண்டும். அக்கற்களை நீங்கள் ஏபால் மலையின் மேல் நாட்ட வேண்டும். நீங்கள் இக்கற்களைச் சாந்து பூசி மூடவேண்டும். அதோடு சில கற்களைப் பயன்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்ட வேண்டும். கற்களை வெட்டுவதற்கு இரும்புக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலிபீடம் கட்டும்போது செதுக்கின கற்களைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு இப்பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துங்கள். நீங்கள் சமாதான பலிகளையும் அங்கே செலுத்தி அதனை உண்ணவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அவற்றைச் சேர்ந்து உண்டு உங்களுக்குள் மகிழுங்கள். நீங்கள் நாட்டிய கற்களில் இந்தப் போதனைகளையெல்லாம் தெளிவாக எழுதவேண்டும். அதனால் அவற்றை வாசிக்க சுலபமாக இருக்கும்” என்றான்.

சட்டத்தின் சாபங்களை ஜனங்கள் ஒப்புக்கொள்கிறார்கள்

மோசேயும், ஆசாரியர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசினார்கள். மோசே, “அமைதியாக இருந்து கவனியுங்கள். இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள். 10 எனவே நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நீங்கள் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இன்று அவற்றை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.

11 அதே நாளில் மோசே ஜனங்களிடம் இதையும் சொன்னான், 12 “யோர்தான் ஆற்றை நீங்கள் கடந்து போனபிறகு, ஜனங்களுக்குரிய ஆசீர்வாதங்களை வாசிக்க சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகியோரின் கோத்திரங்கள் கெரிசீம் மலையின் மீது நிற்பார்கள். 13 ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோரின் கோத்திரங்கள் ஏபால் மலைமீது நின்று சாபத்தை வாசிப்பார்கள்.

14 “லேவியர் உரத்தக் குரலில்:

15 “‘பொய்த் தெய்வங்களைச் செய்து இரகசியமான இடத்தில் அதனை ஒளித்து வைப்பவன் சபிக்கப்பட்டவன். அந்த பொய்த் தெய்வங்கள் எல்லாம் சித்திரவேலைக்காரர்களால் மரத்தாலும் கல்லாலும் அல்லது உலோகத்தாலும் செய்யப்பட்ட சிலைகள். கர்த்தர் அவற்றை வெறுக்கின்றார்!’ என்று அவர்கள் சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

16 “லேவியர்கள், ‘தன் தகப்பனுக்கும் தாய்க்கும் மரியாதை செய்யாமலிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.

17 “லேவியர், ‘தனது அயலானின் எல்லைக் கல்லை மாற்றிப் போடுகிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.

18 “லேவியர், ‘குருடனை வழிதப்பச் செய்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,

“பிறகு எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.

19 “லேவியர், ‘அயல் நாட்டவர், அநாதைகள், விதவைகளின் நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

20 “லேவியர், ‘தனது மாற்றாந்தாயோடு பாலின உறவு வைத்துக்கொள்பவன் சபிக்கப்பட்டவன். ஏனென்றால், அவன் தன் தந்தைக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறான்!’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

21 “லேவியர், ‘யாதொரு மிருகத்தோடும் புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

22 “லேவியர், ‘தன் சகோதரியோடும், சகோதரி உறவுள்ளவர்களோடும் பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

23 “லேவியர், ‘தன் மாமியாரோடு பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

24 “லேவியர், ‘மற்றொருவனைக் கொல்லுகிறவன், பிடிபடாமல் இருந்தால் கூட, சபிக்கப்பட்டவனாக இருப்பான்’ என்று சொல்லும்போது,

“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.

25 “லேவியர், ‘ஒரு அப்பாவியைக் கொன்று அவனது பொருட்களை அபகரிப்பவன் சபிக்கப்பட்டவன்.’ என்று சொல்லும்போது,

“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.

26 “லேவியர், ‘இந்த சட்டத்தின் வார்த்தைகளையெல்லாம் ஆதரிக்காமலும் அதற்குக் கீழ்ப்படியும்படி அதற்கு ஒப்புக்கொள்ளாமலும் இருப்பவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,

“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.

லூக்கா 10:38-11:13

மரியாளும் மார்த்தாளும்

38 இயேசுவும், அவரது சீஷர்களும் பயணம் செய்கையில் இயேசு ஓர் ஊருக்குள் நுழைந்தார். மார்த்தாள் என்ற பெயருள்ள பெண் இயேசுவைத் தனது வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தாள். 39 மார்த்தாளின் சகோதரியின் பெயர் மரியாள். மரியாள் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவரது போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது சகோதரி மார்த்தாள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். 40 மிகுதியான வேலைகளைத் தானே செய்துகொண்டிருந்ததால் மார்த்தாள் எரிச்சலடைந்தாள். அவள் உள்ளே சென்று, “ஆண்டவரே வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நானே தனிமையாகச் செய்வதற்கு என் சகோதரி என்னை விட்டு வைத்திருப்பதை நீர் கவனிக்கவில்லையா? எனக்கு உதவும்படியாக அவளுக்குக் கூறுங்கள்” என்றாள்.

41 ஆனால் கர்த்தர் அவளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், “மார்த்தாளே மார்த்தாளே நீ பல வகையான காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டு, மனதைக் குழப்பிக்கொள்கிறாய். 42 ஒரே ஒரு காரியம் முக்கியமானது. மரியாள் மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து ஒருபோதும் எடுக்கப்படமாட்டாது” என்றார்.

பிரார்த்தனைபற்றிய போதனை(A)

11 ஒருமுறை இயேசு ஓரிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். இயேசு பிரார்த்தனையை முடித்தபோது இயேசுவின் சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி, “யோவான் தன் சீஷர்களுக்குப் பிரார்த்தனை செய்வது எவ்வாறு என்று கற்பித்தான். ஆண்டவரே எங்களுக்கும் பிரார்த்தனை செய்ய நீர் கற்றுக்கொடும்” என்றான்.

இயேசு சீஷரை நோக்கி, “பிரார்த்தனை செய்யும்போது, இவ்விதமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்:

“‘பிதாவே, உமது பெயர் என்றென்றும் பரிசுத்தமாயிருக்க பிரார்த்திக்கிறோம். உமது இராஜ்யம் ஏற்படவும்,
பரலோகத்தைப் போலவே பூமியிலும் நீர் விரும்பியவை நடைபெறவும் பிரார்த்திக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
மற்றவர் செய்கிற குற்றங்களை நாங்கள் மன்னிக்கிறது போலவே,
    எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உள்ளாக்காமல்,
பிசாசிடமிருந்து காப்பாற்றும்’” என்றார்.

தொடர்ந்து கேட்டல்(B)

5-6 பின்பு இயேசு அவர்களை நோக்கி, “உங்களில் ஒருவன் உங்கள் நண்பனின் வீட்டுக்கு இரவில் வெகு நேரம் கழித்துச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவனை நோக்கி, ‘இந்த ஊருக்குள் என் நண்பன் ஒருவன் என்னைச் சந்திக்க வந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு உண்பதற்காகக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. தயவுசெய்து மூன்று அப்பங்களைக் கொடுங்கள்’ என்கிறீர்கள். வீட்டின் உள்ளிருக்கும் உங்கள் நண்பன் பதிலாக, ‘போய்விடுங்கள்! என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள். கதவு ஏற்கெனவே மூடப்பட்டிருக்கிறது. என் குழந்தைகளும், நானும் படுக்கையில் படுத்திருக்கிறோம். நான் எழுந்து உங்களுக்கு இப்போது அப்பத்தைக் கொடுக்கமுடியாது’ என்கிறான். உங்கள் நட்பு ஒருவேளை அவன் எழுந்து அப்பத்தை எடுத்துக்கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் கண்டிப்பாக எடுத்து உங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பான், என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். எனவே, நான் உங்களுக்குச் சொல்வதாவது, தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டடைவீர்கள். தொடர்ந்து தட்டிக்கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும். 10 ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக்கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும். 11 உங்களில் யாருக்காவது மகன் இருக்கிறானா? உங்கள் மகன் உங்களிடம் மீனைக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எந்தத் தந்தையாவது தன் மகனுக்கு பாம்பைக் கொடுப்பானா? இல்லை. அவனுக்கு மீனைக் கொடுப்பீர்கள். 12 உங்கள் மகன் முட்டையைக் கேட்டால் அவனுக்குத் தேளைக் கொடுப்பீர்களா? இல்லை. 13 நீங்கள் பொல்லாதவர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றைக் கொடுக்கவேண்டுமென்பதை அறிவீர்கள். எனவே தன்னிடம் கேட்கின்ற மக்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்க வேண்டுமென்பதை பரலோகப் பிதா நிச்சயமாக அறிவார்” என்றார்.

சங்கீதம் 76

இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்

76 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
    இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
தேவனுடைய ஆலயம் சாலேமில் [a] இருக்கிறது.
    தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
    மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
    மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
    ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன.
    அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
    இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
தேவனே, நீர் பயங்கரமானவர்!
    நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
8-9 கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார்.
    தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார்.
    பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
    நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும்.
    தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.

11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
    இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள்.
எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள்.
    அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.
    பூமியின் எல்லா அரசர்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.

நீதிமொழிகள் 12:15-17

15 அறிவில்லாதவன் தனது வழியையே சிறந்த வழி என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் ஞானமுள்ளவனோ மற்றவர்கள் சொல்லுவதைக் கவனிக்கிறான்.

16 அறிவில்லாதவன் சுலபமாகக் கவலையடைகிறான். ஆனால் அறிவுள்ளவனோ மற்றவர்கள் தவறாகப் பேசுவதை மன்னித்துவிடுகிறான்.

17 ஒருவன் உண்மையைப் பேசுபவனாக இருந்தால் அவன் சொல்பவற்றில் நேர்மை இருக்கும். ஆனால் ஒருவன் பொய் சொன்னால் அது அவனைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்லும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center