Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 1:1-2:9

யூதா கானானியரோடு போரிடுதல்

யோசுவா மரணமடைந்தான். அப்போது இஸ்ரவேலர் கர்த்தரிடம் ஜெபம் செய்தார்கள். அவர்கள், “கானானியரை எதிர்த்து முதலில் சென்று எங்களுக்காக போரிட வேண்டிய கோத்திரத்தினர் யார்?” என்று கேட்டார்கள்.

கர்த்தர் இஸ்ரவேலரிடம், “யூதா கோத்திரத்தினர் செல்வார்கள். அவர்கள் இந்த தேசத்தைப் பெற அனுமதிப்பேன்” என்றார்.

சிமியோன் கோத்திரத்தைச் சேர்ந்த தங்கள் சகோதரரிடம் யூதா ஜனங்கள் உதவி வேண்டினார்கள். யூதாவின் மனிதர்கள், “சகோதரர்களே, நம் ஒவ்வொருவருக்கும் சில நிலங்களைக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்தார். எங்கள் நிலத்தைப் பெற நீங்கள் வந்து உதவினால், உங்கள் தேசத்தைப் பெறுவதற்கு நீங்கள் போரிடும்போது நாங்கள் வந்து உதவுவோம்” என்றார்கள். சிமியோனின் குடும்பத்தினர் போரில் யூதா மனிதருக்கு உதவ ஒப்புக்கொண்டனர்.

கானானியரையும் பெரிசியரையும் தோற்கடிக்க யூதாவின் ஆட்களுக்கு கர்த்தர் உதவினார். பேசேக் நகரில் யூதா ஜனங்கள் 10,000 ஆட்களைக் கொன்றார்கள். பேசேக்கில் யூதா ஜனங்கள் பேசேக்கின் அரசனைக் கண்டு, அவனோடு போரிட்டார்கள். யூதா ஜனங்கள் கானானியரையும் பெரிசியரையும் வென்றார்கள்.

பேசேக்கின் அரசன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் யூதா ஜனங்கள் அவனைத் துரத்திப் பிடித்தனர். அவனைப் பிடித்தபின் அவனது கை, கால் பெருவிரல்களைத் துண்டித்தனர். அப்போது பெசேக்கின் அரசன், “70 அரசர்களின் கை, கால் பெருவிரல்களை நான் துண்டித்தேன். எனது மேசையிலிருந்து விழுந்த உணவுத் துணிக்கைகளை அந்த அரசர்கள் புசித்தார்கள். நான் அந்த அரசர்களுக்குச் செய்தவற்றிற்கான தண்டனையை தேவன் எனக்குத் தந்தார்” என்றான். யூதா மனிதர்கள் பேசேக்கின் அரசனை எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். அவன் அங்கு மரித்தான்.

யூதா மனிதர்கள் எருசேலேமுக்கு எதிராகப் போரிட்டு அதனைப் பிடித்தார்கள். எருசலேம் ஜனங்களைக் கொல்ல யூதா மனிதர்கள் தங்கள் வாள்களைப் பயன்படுத்தினார்கள். பின்பு நகரை எரித்தார்கள். பின்னர் யூதா மனிதர்கள் கானானியர் சிலரை எதிர்த்துப் போரிடச் சென்றார்கள். அந்தக் கானானியர்கள் பாலைவனப்பகுதியிலும், மலை நாட்டிலும், மேற்கு மலையடிவாரங்களிலும் வசித்தார்கள்.

10 பின்பு யூதா மனிதர்கள் எபிரோன் நகரில் வாழ்ந்த கானானியரோடு போரிடச் சென்றார்கள் (எபிரோன், ”கீரியாத்அர்பா” என்றும் அழைக்கப்பட்டது.) சேசாய், அகிமான், தல்மாய் ஆகிய மனிதர்களையும் யூதாவின் ஜனங்கள் தோற்கடித்தனர்.

காலேபும் அவனது மகளும்

11 யூதாவின் மனிதர்கள் அவ்விடத்தை விட்டுக் கிளம்பி தெபீர் நகர ஜனங்களோடு போரிடுவதற்குச் சென்றார்கள். (முன்பு, தெபீர், கீரியாத்செப்பேர் என அழைக்கப்பட்டது.) 12 யூதா மனிதர்கள் போரிடத் துவங்கும் முன்னர், காலேப் அவர்களிடம், “நான் கீரியாத்சேப்பேரைத் தாக்க விரும்புகிறேன். அந்நகரைத் தாக்கிக் கைப்பற்றுகிற மனிதனுக்கு என் மகள் அக்சாளைக் கொடுப்பேன். அம்மனிதன் எனது மகளைத் திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று வாக்குறுதி அளித்தான்.

13 காலேபுக்குக் கேனாஸ் என்னும் பெயருடைய இளைய சகோதரன் ஒருவன் இருந்தான் அவனுக்கு ஒத்னியேல் என்னும் பெயருடைய மகன் இருந்தான். கீரியாத் செப்பேர் என்னும் நகரை ஒத்னியேல் கைப்பற்றினான். எனவே ஒத்னியேலுக்கு மனைவியாகும்படி காலேப் தன் மகள் அக்சாளைக் கொடுத்தான்.

14 அக்சாள் ஒத்னியேலோடு வாழும்படி புறப்பட்டுச் சென்றபோது அவளது தந்தையிடம் கொஞ்சம் நிலம் கேட்கும்படியாக ஒத்னியேல் அக்சாளிடம் சொன்னான். அக்சாள் தன் தந்தையிடம் சென்றாள். அவன் கழுதையிலிருந்து இறங்கியதும், காலேப் அவளை நோக்கி, “என்ன நிகழ்ந்தது?” என்றான்.

15 அக்சாள் காலேபுக்குப் பதிலாக, “என்னை ஆசீர்வதியுங்கள். பாலைவனப் பகுதியிலுள்ள வறட்சியான நிலத்தை எனக்குக் கொடுத்தீர்கள். தண்ணீருள்ள நிலத்தில் கொஞ்சம் எனக்குக் கொடுங்கள்” என்றாள். அவளுக்கு வேண்டியதை காலேப் கொடுத்தான். அந்நிலத்தின் மேலும் கீழும் தண்ணீர் நிலைகள் இருந்த பகுதியைக் கொடுத்தான்.

16 ஈச்சமரங்களின் நகரத்தை (எரிகோவை) விட்டுக் கேனிய ஜனங்கள் யுதாவின் ஜனங்களோடு புறப்பட்டு, யூதாவின் பாலை நிலத்திற்கு அங்குள்ள ஜனங்களோடு வாழ்வதற்காகப் போனார்கள். ஆராத் நகரத்திற்கு அருகேயுள்ள பாலைவனப் பகுதியில் இது இருந்தது. (மோசேயின் மாமனாரின் குடும்பத்தைச் சார்ந்தோர் கேனிய ஜனங்களாவர்.)

17 சேப்பாத் நகரில் சில கானானியர் வாழ்ந்தனர். யூதாவின் மனிதர்களும் சிமியோனின் மனிதர்களும் அந்தக் கானானியரைத் தாக்கி, அவர்கள் நகரத்தை முழுமையாக அழித்து, அந்நகரத்திற்கு ஓர்மா எனப் பெயரிட்டனர்.

18 காசாவையும் அதனைச் சூழ்ந்த ஊர்களையும் யூதாவின் ஜனங்கள் கைப்பற்றினர். அஸ்கலோன், எக்ரோன், நகரங்களையும், அவற்றைச் சுற்றிலுமுள்ள சிறு ஊர்களையும் யூதா ஜனங்கள் கைப்பற்றினார்கள்.

19 போர் நடந்தபோது கர்த்தர் யூதாவின் மனிதர்களோடிருந்தார். மலைநாட்டிலுள்ள ஊர்களை அவர்கள் பெற்றனர். பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஜனங்களிடம் இரும்பு இரதங்கள் இருந்ததால், யூதாவின் ஜனங்கள் அவர்கள் சத்துருக்களை வெற்றிகொள்ள முடியவில்லை.

20 எபிரோனுக்கு அருகேயுள்ள நிலத்தை காலேபிற்குக் கொடுப்பதாக மோசே வாக்களித்திருந்தான். எனவே அந்நிலம் காலேபின் குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்டது. காலேபின் மனிதர்கள் ஏனாக்கின் மூன்று மகன்களையும் அவ்விடத்தை விட்டுத் துரத்தினார்கள். பென்யமீன் மனிதர்கள் எருசலேமில் தங்குதல்

21 எபூசியரை எருசலேமைவிட்டு வெளியேற்ற பென்யமீன் கோத்திரத்தினரால் முடியவில்லை. எனவே இன்றும், எபூசியர் பென்யமீன் ஜனங்களோடு கூட எருசலேமில் வாழ்கிறார்கள்.

யோசேப்பின் மனிதர்கள் பெத்தேலைக் கைப்பற்றுதல்

22-23 யோசேப்பின் கோத்திரத்தினர் பெத்தேல் நகரை எதிர்த்துப் போர் செய்தனர். (கடந்த காலத்தில் பெத்தேல் லூஸ் எனப்பட்டது.) யோசேப்பின் கோத்திரத்தினரோடு கர்த்தர் இருந்தார். யோசேப் பின் குடும்பத்தைச் சேந்தவர்கள் பெத்தேல் நகரத்திற்குச் சில ஒற்றர்களை அனுப்பினார்கள். பெத்தேல் நகரைத் தோற்கடிப்பதற்குரிய வகைகளை இவர்கள் ஆராய்ந்தார்கள். 24 பெத்தேல் நகரத்தை ஒற்றர்கள் கவனித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் நகரிலிருந்து வந்த ஒரு மனிதனைக் கண்டார்கள். ஒற்றர்கள் அம்மனிதனிடம், “நகரத்திற்குள் செல்லும் ஒரு இரகசிய வழியைக் காட்டு, நாங்கள் நகரைத் தாக்குவோம். நீ எங்களுக்கு உதவினால், உன்னைத் துன்புறுத்தமாட்டோம்” என்றார்கள்.

25 அம்மனிதன் ஒற்றர்களுக்கு நகரத்திற்குள் செல்லும் இரகசிய வழியைக் காட்டினான். யோசேப்பின் ஜனங்கள் தங்கள் வாள்களால் பெத்தேல் ஜனங்களைக் கொன்றார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு உதவிய மனிதனைத் துன்புறுத்தவில்லை. அம்மனிதனும் அவனது குடும்பமும் விடுதலையாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 26 ஏத்தியர் வாழ்ந்த தேசத்திற்கு அம்மனிதன் சென்று ஒரு நகரைக் கட்டினான். அந்நகரத்திற்கு லூஸ் என்று பேரிட்டான். இன்றைக்கும்கூட அந்நகரம் லூஸ் என்றே அழைக்கப்படுகிறது.

கானானியரோடு மற்ற கோத்திரங்கள் போரிடுதல்

27 பெத்செயான், தானாக், தோர், இப்லெயாம், மெகிதோ ஆகிய நகரங்களிலும் அவற்றைச் சூழ்ந்திருந்த சிறு நகரங்களிலும் கானானியர் வாழ்ந்து வந்தனர். மனாசே கோத்திரத்தினரால் அந்த ஜனங்களை நகரங்களிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. எனவே கானானியர் அங்கே தங்கினார்கள். அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்தனர். 28 பின்னர் இஸ்ரவேலர் பலமடைந்தனர். தங்களுக்கு அடிமைகளாக உழைக்குமாறு கானானியரை வற்புறுத்தினார்கள். ஆனால் எல்லாக் கானானியரையும் தங்கள் நிலத்தை விட்டுப் போகும்படி செய்ய இஸ்ரவேலரால் முடியவில்லை.

29 எப்பிராயீம் கோத்திரத்தினருக்கும் இவ்விதமாகவே நிகழ்ந்தது. கேசேரில் வாழ்ந்து கொண்டிருந்த கானானியரை அத்தேசத்தைவிட்டு வெளியேற்ற எப்பிராயீம் ஜனங்களால் முடியவில்லை. எப்பிராயீம் ஜனங்களோடு கேசேரில் கானானியரும் சேர்ந்து வாழ்ந்தனர்.

30 அதுவே செபுலோன் கோத்திரத்தினருக்கும் நிகழ்ந்தது. கித்ரோன், நகலோல் நகரங்களிலும் கானானியர் சிலர் வாழ்ந்தனர். செபுலோன் ஜனங்கள் அந்த ஜனங்களைத் தேசத்தை விட்டுச் செல்லுமாறு வற்புறுத்தவில்லை. அக்கானனியர் செபுலோன் ஜனங்களோடு தங்கி வாழ்ந்தனர். ஆனால் செபுலோன் ஜனங்கள் அவர்களைத் தங்களுக்கு அடிமைகளாக உழைக்கும்படி செய்தார்கள்.

31 அவ்வாறே ஆசேர் கோத்திரத்தினருக்கும் நிகழ்ந்தது. அக்கோ, சீதோன், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் ஆகிய நகரங்களிலுள்ள ஜனங்கள் வெளியேறுமாறு ஆசேர் ஜனங்கள் துரத்தவில்லை. 32 ஆசேர் ஜனங்கள் கானானியரை வெளியேற்றவில்லை. எனவே கானானியர் ஆசேர் ஜனங்களோடு சேர்ந்து தொடர்ந்து வாழ்ந்தனர்.

33 நப்தலி கோத்திரத்தினர் மத்தியிலும் அவ்வாறே நிகழ்ந்தது. நப்தலியின் ஜனங்கள் பெத்ஷிமேஸ், பெத்தானாத் நகரங்களைவிட்டு அங்கிருந்த ஜனங்களை வெளியேற்றவில்லை. எனவே அந்த ஜனங்கள் அந்நகரங்களில் நப்தலி ஜனங்களோடு சேர்ந்து வாழ்ந்தனர். அந்தக் கானானியர் நப்தலி ஜனங்களுக்கு அடிமைகளாகப் பணிபுரிந்தனர்.

34 தாண் ஜனங்கள் மலைநாட்டில் வசிக்கும்படியான நிலையை எமோரியர் உண்டு பண்ணினார்கள். பள்ளத்தாக்கில் வாழ்வதற்கு எமோரியர் அனுமதிக்காததால் அவர்கள் மலைகளில் வாழவேண்டியதாயிற்று. 35 ஏரேஸ் மலை, ஆயலோன், சால்பீம் ஆகியவற்றில் எமோரியர் வாழ முடிவெடுத்தனர். பின் யோசேப்பு கோத்திரத்தார் பலத்தில் பெருகினார்கள். அப்போது அவர்கள் எமோரியரை அடிமைகளாகப் பணியாற்றுமாறு செய்தனர். 36 ஸ்கார்பியன் கணவாய் வழியிலிருந்து சேலா வரைக்கும், சேலாவைத் தாண்டியுள்ள மலை நாடுகள் வரைக்கும், எமோரியரின் தேசம் பரவி இருந்தது.

போகீமில் கர்த்தருடைய தூதன்

கில்கால் நகரத்திலிருந்து கர்த்தருடைய தூதன் போகீம் நகரத்திற்குச் சென்றான். தூதன் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை இஸ்ரவேலருக்குக் கூறினான். இதுவே அந்த செய்தி: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் முற் பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த தேசத்திற்கு உங்களை வழிநடத்தினேன். உங்களோடு செய்த உடன்படிக்கையை ஒருபோதும் மீறமாட்டேன் என்று உங்களுக்குக் கூறினேன். ஆனால் அதற்குப் பதிலாக, நீங்கள் அந்த நிலத்தில் வாழும் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது. அவர்களின் பலிபீடங்களை நீங்கள் அழிக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன். நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை!

“இப்போது நான் உங்களுக்கு இதைக் கூறுகிறேன், ‘இவ்விடத்தை விட்டுப் போகும்படியாக அங்குள்ள ஜனங்களை இனிமேலும் நான் வற்புறுத்தமாட்டேன். இந்த ஜனங்கள் எப்போதும் உங்களுக்குப் பிரச்சனையாய் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியைப் போன்றிருப்பார்கள். உங்களைப் பிடிப்பதற்கு விரிக்கப்படும் வலையைப்போன்று அவர்களின் பொய்த் தெய்வங்கள் அமைவார்கள்’”.

கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைத் தூதன் இஸ்ரவேலருக்குக் கூறியபின், ஜனங்கள் உரத்தக்குரலில் அழுதனர். அவர்கள் அங்கே அழுதபடியால், அதனைப் போகீம் என்று அழைத்தார்கள். போகீமில் இஸ்ரவேலர் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்தினார்கள்.

கீழ்ப்படியாமையும் தோல்வியும்

பின் யோசுவா ஜனங்களை வீட்டிற்குப் போகச் சொன்னான். எனவே ஒவ்வொரு கோத்திரத்தினரும் தேசத்தில் அவரவருக்குரிய பகுதியை வாழ்வதற்காக எடுத்துக்கொள்ளச் சென்றனர். யோசுவா உயிரோடிருக்கும்வரை இஸ்ரவேலர் கர்த்தரை சேவித்தனர். யோசுவா மரித்தபின்னரும் மூத்த தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் கர்த்தரைத் தொடர்ந்து சேவித்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் செய்த எல்லா மகத்தான செயல்களையும் இந்த மூத்த மனிதர்கள் பார்த்திருந்தார்கள். நூனின் மகனும், கர்த்தருடைய தாசனுமாகிய யோசுவா 110 வயதானபோது மரணமடைந்தான். இஸ்ரவேலர் யேசுவாவை அவனுக்குக் கொடுத்திருந்த நிலத்திலேயே அடக்கம் செய்தனர். அது காயாஸ் மலைக்கு வடக்கே, எப்பிராயீம் மலை நாட்டில், திம்னாத் ஏரேஸ் என்ற இடத்தில் இருந்தது.

லூக்கா 21:29-22:13

அழியாத தேவ வார்த்தை(A)

29 பின்பு இயேசு இவ்வுவமையைச் சொன்னார்: “எல்லா மரங்களையும் பாருங்கள், அத்தி மரம் ஒரு நல்ல உதாரணம். 30 அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள். 31 நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள்.

32 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இக்காலத்து மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இக்காரியங்கள் எல்லாம் நடக்கும்.

33 “உலகம் முழுவதும், விண்ணும், பூமியும் அழிக்கப்படும். ஆனால், நான் கூறிய சொற்களோ, ஒரு நாளும் அழிவதில்லை.

ஆயத்தமாயிருங்கள்

34 “எச்சரிக்கையாக இருங்கள். குடித்துக்கொண்டும், குடியில் மூழ்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்காதீர்கள். அல்லது உலகத்துக் காரியங்களில் அதிகப்படியாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்களால் சரியானதைச் சிந்திக்க முடியாது. பிறகு முடிவு திடுமென நீங்கள் தயாராக இல்லாதபோது வரக்கூடும். 35 பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும். 36 எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

37 பகல் வேளையில் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். இரவில் பட்டணத்திற்கு வெளியே சென்று இரவு முழுவதும் ஒலிவ மலையில் தங்கி இருந்தார். 38 ஒவ்வொரு காலையிலும் மக்கள் அதிகாலையில் எழுந்து தேவாலயத்தில் இயேசு கூறுவதைக் கேட்பதற்காகச் சென்றார்கள்.

இயேசுவைக் கொல்லத் திட்டம்(B)

22 பஸ்கா எனப்படும், யூதர்களின் புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்குரிய காலம் நெருங்கி வந்தது. தலைமை ஆசாரியரும், வேதபாரகரும் இயேசுவைக் கொல்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்கு பயந்தனர்.

யூதாஸின் சதித்திட்டம்(C)

இயேசுவின் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் யூதாஸ் காரியோத்து என்பவன் ஆவான். சாத்தான் யூதாஸிற்குள் புகுந்து ஒரு தீய செயலைச் செய்யுமாறு அவனைத் தூண்டினான். யூதாஸ் தலைமை ஆசாரியரிடமும், தேவாலயத்தைப் பாதுகாத்த வீரர்களிடமும் சென்று பேசினான். இயேசுவை அவர்களிடம் ஒப்படைப்பதைக் குறித்து அவன் அவர்களிடம் பேசினான். அவர்கள் இதனால் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தால் அவனுக்குப் பணம் கொடுப்பதாக அவர்கள் கூறினார்கள். யூதாஸ் அதற்கு ஒப்புக்கொண்டான். இயேசுவை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஏற்ற நேரத்தை எதிர்பார்த்திருந்தான் யூதாஸ். தன்னைச் சுற்றிலும் மக்கள் எவரும் பார்க்காத நேரத்தில் அதைச் செய்யவேண்டுமென யூதாஸ் விரும்பினான்.

பஸ்கா உணவு ஆயத்தம்(D)

புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. பஸ்கா ஆட்டுக்குட்டிகளை யூதர்கள் பலியிடுகிற நாள் அது ஆகும். பேதுருவையும் யோவனையும் நோக்கி இயேசு, “நாம் உண்பதற்கு நீங்கள் சென்று பஸ்கா விருந்தைத் தயாரியுங்கள்” என்றார்.

பேதுருவும், யோவானும், இயேசுவிடம், “பஸ்கா விருந்தை நாங்கள் எங்கே தயாரிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, 10 “கவனியுங்கள், நீங்கள் எருசலேமுக்குள் சென்ற பின்பு ஒரு குடத்தில் தண்ணீரைச் சுமந்து செல்லும் ஒரு மனிதனைக் காண்பீர்கள். அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். அவன் ஒரு வீட்டுக்குள் செல்வான். அவனோடு நீங்கள் செல்லுங்கள். 11 அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், ‘போதகரும் அவரது சீஷர்களும் பஸ்கா விருந்து உண்ணக் கூடிய அறையைத் தயவுசெய்து எங்களுக்குக் காட்டும்படியாக போதகர் கேட்கிறார்’ என்று சொல்லுங்கள். 12 உடனே அந்த வீட்டின் சொந்தக்காரனான அம்மனிதன் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவான். இந்த அறை உங்களுக்குத் தயாராக இருக்கும். பஸ்கா விருந்தை அங்கே தயாரியுங்கள்” என்றார்.

13 எனவே பேதுருவும், யோவானும் சென்றார்கள். இயேசு கூறியபடியே எல்லாம் நிகழ்ந்தன. எனவே அவர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தார்கள்.

சங்கீதம் 90-91

புத்தகம் 4

(சங்கீதம் 90-106)

தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்

90 ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன்.
    தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!

நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர்,
    நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர்.
ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும்
    கடந்த இரவைப் போலவும் இருக்கும்.
நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர்.
    எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம்.
நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.
    காலையில் புல் வளரும், மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.
தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம்.
    உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது!
எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர்.
    தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர்.
உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும்.
    காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும்.
10 நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும்.
    பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம்.
எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை.
    திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்!
    நாங்கள் பறந்து மறைவோம்.
11 தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார்.
    ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை.
12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி
    எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.
13 கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும்.
    உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும்.
14 ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும்.
    நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.
15 எங்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தையும் குழப்பங்களையும் தந்தீர்.
    இப்போது எங்களை சந்தோஷப்படுத்தும்.
16 நீர் செய்யும் அற்புதச் செய்லகளை உமது ஊழியர்கள் காணச்செய்யும்
    உம்முடைய மகிமையை அவர்களின் பிள்ளைகள் காணச்செய்யும்.
17 எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும்.
    நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும்.
    தேவனே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நன்மையை வழங்குவீராக.

91 மிக உன்னதமான தேவனிடம் மறைந்துகொள்ள நீ போகமுடியும்.
    சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பாதுகாப்பிற்காக நீ போக முடியும்.
நான் கர்த்தரை நோக்கி, “நீரே என் பாதுகாப்பிடம், என் கோட்டை,
    என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன்” என்று கூறுகிறேன்.
மறைவான ஆபத்துக்களிலிருந்தும்
    ஆபத்தான நோய்களிலிருந்தும் தேவன் உன்னைக் காப்பாற்றுகிறார்.
நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும்.
    அவர் உன்னை ஒரு பறவை சிறகை விரித்துத் தன் குஞ்சுகளைக் காப்பதைப்போன்று காப்பார்.
    தேவன் ஒரு கேடகத்தைப் போன்றும் சுவரைப் போன்றும் உன்னைப் பாதுகாக்கிறார்.
இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை.
    நீ பகலில் பகைவரின் அம்புக்கும் பயப்படமாட்டாய்.
இருளில் வரும் கொடிய நோய்களுக்கும்,
    நடுப் பகலில் வரும் கொடிய நோய்களுக்கும் நீ அஞ்சமாட்டாய்.
நீ ஆயிரம் பகைவர்களைத் தோற்கடிப்பாய்.
    உன் சொந்த வலதுகை பதினாயிரம் பகைவீரர்களைத் தோற்கடிக்கும்.
    உன் பகைவர்கள் உன்னைத் தொடக்கூடமாட்டார்கள்.
சற்றுப்பார்,
    அத்தீயோர் தண்டிக்கப்பட்டதை நீ காண்பாய்!
ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய்.
    மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.
10 தீயவை உனக்கு நிகழாது,
    உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.
11 தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார்.
    நீ போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள்.
12 உன் கால் பாறையில் மோதாதபடிக்கு
    அவர்கள் கைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.
13 சிங்கங்களின் மேலும்
    விஷம் நிரம்பிய பாம்புகளின் மேலும் நடக்கும் வல்லமை உனக்கு வாய்க்கும்.
14 கர்த்தர்: “ஒருவன் என்னை நம்பினால், நான் அவனை மீட்பேன்.
    என் நாமத்தை தொழுது கொண்டு என்னைப் பின்பற்றுவோரை நான் கப்பாற்றுவேன்” என்கிறார்.
15 என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள்.
    நான் அவர்களுக்குப் பதில் கொடுப்பேன்.
அவர்களுக்குத் தொல்லை நேரும்போது நான் அவர்களோடு இருப்பேன்.
    நான் அவர்களைக் காப்பாற்றிப் பெருமைப்படுத்துவேன்.
16 என்னைப் பின்பற்றுவோருக்கு நான் நீண்ட ஆயுளைக் கொடுப்பேன்.
    நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.

நீதிமொழிகள் 13:24-25

24 ஒருவன் உண்மையாகவே தன் பிள்ளைகளை நேசித்தால், அவர்கள் தவறு செய்யும் போது அவற்றைத் திருத்தவேண்டும். நீ உன் மகனை நேசித்தால் அவனுக்குச் சரியான பாதையைப் போதிக்க வேண்டும்.

25 நல்லவர்கள், தமக்கு எது தேவையோ அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் தீயவர்களோ, முக்கியமானவற்றைப் பெறாமலேயே இருப்பார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center