Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NIV. Switch to the NIV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 19-20

சிமியோனின் நிலம்

19 பின்பு யோசுவா, சிமியோன் கோத்திரத்தை சார்ந்த எல்லா குடும்பங்களுக்கும் அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுத்தான். யூதாவிற்குரிய இடத்திற்குள் சிமியோனின் நிலம் இருந்தது. இதுவே அவர்கள் பெற்ற பகுதியாகும்: பெயர் செபா (சேபா எனவும் அழைக்கப்பட்டது.) மொலாதா, ஆசார் சூகால், பாலா, ஆத்சேம். எல்தோலாத், பெத்தூல், ஒர்மா, சிக்லாக், பெத்மார் காபோத், ஆத்சார்சூசா, பெத்லெபாவோத், சருகேன் ஆகியவை ஆகும். மொத்தம் 13 ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் அமைந்தன.

அவர்கள் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் ஆகிய ஊர்களையும் பெற்றனர். நான்கு ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் கிடைத்தன. பாலாத் பெயேர் (நெகேவின் ராமா) வரைக்குமுள்ள நகரங்களைச் சுற்றிலுமிருந்த வயல்கள் கிடைத்தன. அதுவே சிமியோன் கோத்திரத்தினருக்குக் கிடைத்த நிலமாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேசத்தில் பாகம் கிடைத்தது. யூதாவிற்குக் கிடைத்த இடத்திற்குள் சிமியோனின் நிலம் இருந்தது. யூதா ஜனங்களுக்கு அவர்களின் தேவைக்கதிகமான நிலம் இருந்தது. எனவே அவர்கள் நிலத்தில் ஒரு பகுதி சிமியோன் ஜனங்களுக்குக் கிடைத்தது.

செபுலோனின் நிலம்

10 தங்கள் நிலத்தைப் பெற்ற அடுத்த கோத்திரம், செபுலோன் ஆகும். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலங்களைச் செபுலோனின் குடும்பங்கள் பெற்றன. செபுலோனின் எல்லை சாரீத்வரை நீண்டது. 11 அது மாராலாவின் மேற்கே சென்று தாபசேத்தைத் தொட்டது. யெக்கினேயாமின் கரையோரமாக எல்லை நீண்டது. 12 பின் எல்லை கிழக்கே திரும்பியது. சாரீதிலிருந்து கிஸ்லோத்தாபோர் வரை சென்றது. பிறகு எல்லை தாபாராத்திற்கும் யப்பியாவிற்கும் சென்றது. 13 கித்தாஏபேர், இத்தா காத்சீன் ஆகியவற்றின் கிழக்கு வரைக்கும் எல்லை நீண்டு பின் ரிம்மோனில் முடிவுற்றது. பிறகு எல்லை திரும்பி நியாவிற்குச் சென்றது. 14 நியாவில் எல்லை திரும்பி அன்னத்தோனின் வடக்கே சென்று இப்தா ஏல் பள்ளத்தாக்கு வரை தொடர்ந்தது. 15 இவ்வெல்லையின் உள்ளே கத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் நகரங்கள் இவ்வெல்லைக்குள் இருந்தன. மொத்தம் 12 ஊர்களும், அவற்றைச் சூழ்ந்த வயல்களுமிருந்தன.

16 செபுலோனுக்குக் கொடுக்கப்பட்ட ஊர்களும் வயல்களும் இவையே. செபுலோனின் குடும்பங்கள் நிலத்தில் பங்கைப் பெற்றன.

இசக்காரின் நிலம்

17 இசக்காரின் கோத்திரத்திற்கு நிலத்தின் நான்காவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் பங்கைப் பெற்றன. 18 அந்தக் கோத்திரத்தினருக்குக் கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம், 19 அப்பிராயீம், சீகோன், அனாகராத், 20 ராப்பித், கிஷியோன், அபெத்ஸ், 21 ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் ஆகியவை அடங்கிய பகுதி ஆகும்.

22 அவர்கள் நிலத்தின் எல்லை தாபோர், சகசீமா, பெத்ஷிமேசு ஆகியவற்றைத் தொட்டது. யோர்தான் நதியில் எல்லை நின்றது. மொத்தம் 16 ஊர்களும் அவற்றைச் சுற்றியிருந்த வயல்களும் இருந்தன. 23 இந்த நகரங்களும் ஊர்களும் இசக்கார் கோத்திரம் பெற்ற நிலத்தில் இருந்தன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது.

ஆசேரின் நிலம்

24 ஆசேர் கோத்திரத்தினருக்கு நிலத்தின் ஐந்தாவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தின் ஒரு பங்கைப் பெற்றது. 25 அந்தக் கோத்திரத்தினருக்கு கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: எல்காத், ஆலி, பேதேன், அக்சாப், 26 அலம்மேலெக், ஆமாத், மீஷயால் ஆகியவை.

கர்மேல் மலை, சிகோர்லிப்னாத் வரைக்கும் மேற்கெல்லை தொடர்ந்தது. 27 பிறகு எல்லை கிழக்கே திரும்பியது. பெத்தாகோனுக்கு எல்லை சென்றது. செபுலோனையும், இப்தாவேல் பள்ளத்தாக்கையும் அவ்வெல்லை தொட்டது. பின்னர் மேற்கே பெத்தேமோக்கிற்கும், நேகியேலுக்கும் அவ்வெல்லை சென்றது. கபூலின் வடக்குப் பகுதியை எல்லை தாண்டியது. 28 பின் எல்லை எபிரோன் என்ற அப்தோன் ரேகோப், அம்மோன், கானா வரைக்கும் சென்றது பெரிய சீதோன் பகுதி வரைக்கும் எல்லை நீண்டது. 29 அந்த எல்லை ராமாவிற்குத் தெற்கே போய், தீரு என்னும் வலிய நகருக்கு நேராக சென்றது. பின் அது திரும்பி ஓசாவை அடைந்து, 30 உம்மா, ஆஃபெக், ரேகோப், அத்சீப் அருகில் கடலில் முடிவுற்றது.

மொத்தத்தில் 22 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்நிலங்களும் இருந்தன. 31 இந்நகரங்களும் வயல்களும் ஆசேரின் கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்த கோத்திரத்தின் குடும்பங்களில் உள்ள எல்லாருக்கும் அந்த நிலத்தில் பங்கு கிடைத்தது.

நப்தலியின் நிலம்

32 ஆறாவது பகுதியின் நிலம் நப்தலி கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதில் பங்கு கிடைத்தது. 33 சானானீமிற்கு அருகிலுள்ள பெரிய மரத்தினருகே அவர்கள் நிலத்தின் எல்லை ஆரம்பித்தது. இது ஏலேபிற்கு அருகே இருந்தது. ஆதமி நெகேபிற்கும், யாப்னீயேலுக்கும் ஊடாக எல்லை தொடர்ந்து லக்கூம் வழியாக யோர்தான் நதியில் முடிவுற்றது. 34 அஸ்னோத் தாபோர் வழியாக எல்லை மேற்கே சென்றது. உக்கோக்கில் எல்லை நின்றது. தெற்கெல்லை செபுலோனையும், மேற்கெல்லை ஆசேரையும் தொட்டது. எல்லை யோர்தான், நதிக்கு கிழக்கே யூதாவிற்குச் சென்றது. 35 இவ்வெல்லைகளின் உள்ளே பலமுள்ள நகரங்கள் சில இருந்தன. அந்நகரங்கள் சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத், 36 ஆதமா, ராமா, ஆத்சோர், 37 கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர், 38 ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் ஆகியவை ஆகும். மொத்தம் 19 ஊர்களும், அவற்றைச் சூழ்ந்த வயல்களும் இருந்தன.

39 இந்த நகரங்களும் வயல்களும் நப்தலி கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்தக் கோத்திரத்தில் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தில் பங்கைப் பெற்றன.

தாணின் நிலம்

40 பின்பு தேசத்தின் ஏழாவது பகுதி தாண் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது. 41 கீழ்க்கண்ட பகுதிகளே அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலமாகும் சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ், 42 சாலாபீன், ஆயலோன், யெத்லா, 43 ஏலோன், திம்னாதா, எக்ரோன், 44 எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத், 45 யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன், 46 மேயார்கோன், ராக்கோன், யாப்போவிற்கு அருகிலுள்ள பகுதிகள் ஆகியவை ஆகும்.

47 தாணின் ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைப் பெறுவதில் தொல்லை நேர்ந்தது. பலமான பகைவர்கள் அங்கே இருந்தனர். தாண் ஜனங்களால் அவர்களை எளிதில் வெல்ல முடியவில்லை. லேசேமின் ஜனங்களுக்கு எதிராக தாண் ஜனங்கள் போர் செய்தனர். லேசேமைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த ஜனங்களைக் கொன்றனர். லேசேம் என்னும் ஊரில் தாண் ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்கள் கோத்திரத்தின் தந்தையாகிய தாண் என்ற பெயரை அதற்குக் கொடுத்தனர். 48 அந்த எல்லா நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் தாண் கோத்திரத்தினருக்கு உரியனவாயின. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதற்குரிய பங்கு கிடைத்தது.

யோசுவாவின் நிலம்

49 தலைவர்கள் தேசத்தைப் பங்கிட்டு வெவ்வேறு கோத்திரங்களுக்கு கொடுத்து முடித்தனர். அதன் பிறகு, நூனின் குமாரனாகிய யோசுவாவிற்கும் கொஞ்சம் நிலத்தை பங்காகக் கொடுப்பதென இஸ்ரவேல் ஜனங்கள் முடிவெடுத்தனர். அது அவனுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் ஆகும்.

50 கர்த்தர் கட்டளையிட்டபடி எப்பிராயீம் மலை நாட்டிலுள்ள திம்னாத் சேரா நகரத்தை அவர்கள் யோசுவாவிற்குக் கொடுத்தனர். அவ்வூரையே தனக்கு வேண்டுமென யோசுவா கேட்டான். யோசுவா அவ்வூரைப் பலமாகக் கட்டி அங்கு வாழ்ந்தான்.

51 இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களுக்கும் இந்த தேசப் பகுதிகள் முழுவதும் பிரித்து கொடுக்கப்பட்டன. நிலத்தைப் பங்கிட ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா, ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீலோவில் ஒருமித்துக் கூடினார்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் கர்த்தருக்கு முன்னர் அவர்கள் சந்தித்து, தேசத்தைப் பங்கிட்டு முடித்தனர்.

அடைக்கல நகரங்கள்

20 கர்த்தர் யோசுவாவிடம், “நீ இஸ்ரவேலருக்குக் கூறவேண்டியதாவது, உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கும்படி மோசேக்குச் சொன்னேன். பாதுகாப்பிற்கென்று சில குறிப்பிட்ட நகரங்களைத் தேர்ந்தெடுக்குமாறு அவன் உன்னிடம் கூறினான். யாரேனும் ஒருவன் மற்றொருவனைக் கொன்றால், அக்கொலையானது வேண்டுமென்றே செய்த காரியமாக இல்லாமல் தற்செயலாக நிகழ்ந்ததாக இருக்கும் பட்சத்தில் அவன் அடைக்கல நகருக்குள் சென்று ஒளிந்துக்கொள்ளலாம்.

“அவன் செய்யவேண்டிய காரியங்கள் என்ன வெனில்: அவன் ஓடி அந்நகரங்கள் ஒன்றில் ஒளிந்துக்கொள்ளும்போது, அவன் நகரத்தின் நுழைவாயிலருகே நின்று தலைவர்களை நோக்கி நிகழ்ந்ததைச் சொல்ல வேண்டும். பின் தலைவர்கள் நகரத்தினுள்ளே நுழைய அவனுக்கு அனுமதியும், அவர்களோடு சேர்ந்து வாழ அவனுக்கோர் இடமும் தரலாம். அவனைத் துரத்திய மனிதன் அந்நகரை வந்தடையும் பட்சத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவனை அவர்கள் ஒப்படைக்கக் கூடாது. அந்நகரத்தின் தலைவர்கள் அக்கொலை வேண்டுமென்றே நிகழ்ந்த ஒன்றல்ல என்பதால் அவனைக் காப்பாற்ற வேண்டும். அது ஒரு விபத்து. அவன் கோபம் கொண்டு திட்டமிட்டு அக்கொலையைச் செய்யவில்லை. அது தற்செயலாக நிகழ்ந்தது. அந்நகரத்து நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்வரை அவன் அந்நகரில் தங்க வேண்டும். தலைமை ஆசாரியன் இறக்கும்மட்டும் அவன் அந்நகரில் இருக்க வேண்டும். பின்னர் அவன் தனது வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்” என்றார்.

எனவே இஸ்ரவேலர், “அடைக்கல நகரங்கள்” என அழைக்கும்பொருட்டு சில நகரங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டனர். அந்நகரங்கள்: நப்தலியின் மலைநாட்டிலுள்ள கலிலேயாவின் கேதேஸ், எப்பிராயீம் மலைநாட்டில் சீகேம், யூதாவின் மலைநாட்டில் கீரியாத்அர்பா (எபிரோன்). ரூபனின் தேசத்தில், வனாந்திரத்தில் எரிகோவிற்கு அருகே யோர்தான் நதியின் கிழக்கிலுள்ள பேசேர், காத்தின் தேசத்தில் கீலேயாத்திலுள்ள ராமோத், மனாசே தேசத்தில் பாசானிலுள்ள கோலான் ஆகியனவாகும்.

யூதனோ, அல்லது அவர்களோடு வாழ்ந்த அந்நியனோ யாரையாவது அசம்பாவிதமாக கொல்ல நேர்ந்தால் இந்நகரங்களில் ஒன்றிற்கு பாதுகாப்பிற்காக ஓடிவிட அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனைத் துரத்தும் எவரும் அவனைக் கொல்லக் கூடாது. அந்நகரின் நீதிமன்றம் அவனுக்கு நீதி வழங்கும்.

லூக்கா 19:28-48

எருசலேமுக்குள் இயேசு(A)

28 இவற்றையெல்லாம் கூறியபின்பு இயேசு, எருசலேமை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். 29 ஒலிவ மலையருகே காணப்பட்ட பெத்பகே, பெத்தானியா ஆகிய ஊர்களருகே இயேசு வந்தபோது, அவர் இரண்டு சீஷர்களை அனுப்பினார். 30 அவர், “நீங்கள் பார்க்கிற அந்த ஊருக்குள் செல்லுங்கள். ஊருக்குள் நுழையும்போதே அங்கு ஒரு கழுதைக் குட்டி கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். எந்த மனிதனும் அதன்மீது ஏறியதில்லை. அக்கழுதையை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். 31 எந்த மனிதனாவது அக்கழுதையை ஏன் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் நீங்கள், ‘எங்கள் எஜமானருக்கு இக்கழுதை வேண்டும்’ என்று சொல்லுங்கள்” என்றார்.

32 இரண்டு சீஷர்களும் ஊருக்குள் சென்றார்கள். இயேசு கூறியபடியே கழுதைக்குட்டியைக் கண்டார்கள். 33 சீஷர்கள் கட்டப்பட்டிருந்த அக்கழுதையை அவிழ்த்தார்கள். கழுதையின் சொந்தக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் சீஷரை நோக்கி, “எதற்காகக் கழுதையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்கள்.

34 சீஷர்கள், “ஆண்டவருக்குத் தேவையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்கள். 35 சீஷர்கள் கழுதைக் குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து தம் மேலங்கியை அதன்மேல் போட்டார்கள். பின்பு இயேசுவைக் கழுதையின் மேல் அமர்த்தினார்கள். 36 இயேசு எருசலேமுக்குச் செல்லும் பாதை வழியாகக் கழுதையின் மேல் ஏறிச் சென்றார். இயேசுவுக்கு முன்பாக சீஷர்கள் தம் அங்கிகளைப் பாதையில் விரித்தார்கள்.

37 எருசலேமுக்கு அருகில் இயேசு வந்துகொண்டிருந்தார். அவர் ஒலிவமலை அடி நகரத்திற்கருகே வந்திருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் மகிழ்வோடு இருந்தார்கள். அவர்கள் உரத்த குரலில் களிப்புடன் தேவனை வாழ்த்தினார்கள். அவர்கள் தாம் பார்த்த எல்லா வல்லமையான செயல்களுக்கும் தேவனுக்கு நன்றி தெரிவித்தார்கள். 38 அவர்கள்,

“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசரை தேவன் ஆசீர்வதிப்பாராக!” [a]

“பரலோகத்தில் அமைதியும் தேவனுக்கு மகிமையும் உண்டாவதாக!”

என்றனர்.

39 கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, இவற்றைக் கூறாதபடிக்கு சீஷருக்குச் சொல்லுங்கள்” என்றார்கள்.

40 ஆனால் இயேசு, “நான் உங்களுக்குச் சொல்கிறேன். இக்காரியங்கள் சொல்லப்பட வேண்டியவை. என் சீஷர்கள் இவற்றைக் கூறாவிட்டால், இக்கற்கள் அவற்றைக் கூறும்” என்று பதிலுரைத்தார்.

எருசலேமுக்காக அழுதல்

41 இயேசு எருசலேமுக்கு அருகே வந்தார். அவர் அப்பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழ ஆரம்பித்தார். 42 இயேசு எருசலேமைப் பார்த்துப் பேசினார். அவர், “உனக்கு சமாதானத்தை எது வரவழைக்கும் என்று இன்றைக்கு நீ தெரிந்துகொண்டிருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் உனக்கு அது மறைக்கப்பட்டிருப்பதால் உன்னால் அதை அறிந்துகொள்ளமுடியாது. 43 உன் பகைவர்கள் உன்னைச் சுற்றிலும் ஒரு மதிலை எழுப்பும் காலம் வந்து கொண்டிருக்கிறது. உன் பகைவர்கள் உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வளைத்துக் கொள்வார்கள். 44 அவர்கள் உன்னையும் உன்னிலுள்ள எல்லா மக்களையும் அழித்து விடுவார்கள். உன் கட்டிடங்களில் உள்ள கற்களில் ஒன்றும் ஒன்றின் மேல் ஒன்று நிலைத்திருப்பதில்லை. தேவன் உன்னை மீட்பதற்காக வந்த காலத்தை நீ அறியாததால் இவையெல்லாம் நடக்கும்” என்றார்.

தேவாலயத்திற்குச் செல்லுதல்(B)

45 இயேசு தேவாலயத்திற்குள் சென்றார். பல பொருட்களை விற்றுக்கொண்டிருந்த மக்களை தேவாலயத்திற்குள் இருந்து துரத்த ஆரம்பித்தார். 46 அவர்களிடம் இயேசு, “‘என் வீடு பிரார்த்தனைக் குரிய வீடாக இருக்கும்’ [b] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதைத் திருடர்கள் ஒளிந்திருக்கிற இடமாக [c] நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள்” என்றார்.

47 ஒவ்வொரு நாளும் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். ஆசாரியரும், வேதபாரகரும் மக்களின் அதிகாரிகளும் இயேசுவைக் கொல்ல விரும்பினார்கள். 48 ஆனால் எல்லா மக்களும் இயேசுவைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இயேசு கூறிய விஷயங்களை மிகவும் உற்சாகமாகக் கவனித்தார்கள். எனவே தலைமை ஆசாரியருக்கும், வேதபாரகருக்கும், அதிகாரிகளுக்கும் இயேசுவை எவ்வாறு கொல்ல முடியும் என்பது தெரியவில்லை.

சங்கீதம் 88

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.

88 தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர்.
    இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும்.
    இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும்.
இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது,
    நான் விரைவில் மரிப்பேன்.
ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும்
    வாழ பெலனற்ற மனிதனைப் போன்றும் கருதி நடத்துகிறார்கள்.
மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள்.
    உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன்.
பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர்.
    ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர்.
தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர்.

என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள்.
    யாரும் தொடவிரும்பாத ஒருவனைப் போன்றும் அவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்.
நான் வீட்டில் அடைக்கப்பட்டேன், நான் வெளியே செல்ல முடியவில்லை.
என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன.
தேவனே, உம்மிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்!
    ஜெபத்தில் என் கரங்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன்.
10 கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா?
    ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை!

11 கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது.
    மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது.
12 இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது.
    மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது.
13 கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!
    ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
14 கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
    ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்?
15 என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன்.
    உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன்.
16 கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர்.
    உமது தண்டனை என்னைக் கொன்று கொண்டிருக்கிறது.
17 வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன.
    என் வலியிலும் நோயிலும் நான் அமிழ்ந்துகொண்டிருப்பதாக உணருகிறேன்.
18 கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர்.
    இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது.

நீதிமொழிகள் 13:12-14

12 நம்பிக்கை எதுவும் இல்லாவிட்டால் மனம் சோர்வடையும். நீ விரும்புவதுபோல எல்லாம் நடந்தால் நீ மகிழ்ச்சியால் நிரப்பப்படுவாய்.

13 மற்றவர்கள் உதவிசெய்ய முயற்சிக்கும்போது ஒருவன் அவர்களது வார்த்தைகளைக் கவனிக்காமல் புறக்கணித்தால், பிறகு அவன் தனக்குத்தானே துன்பத்தை வரவழைத்துக்கொள்கிறான். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிக்கிறவன் அதற்கு தகுந்த வெகுமதியைப் பெறுகிறான்.

14 ஞானம் உள்ளவனின் போதனைகள் வாழ்வைத் தரும். அந்த வார்த்தைகள் துன்ப காலத்தில் உதவும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center