Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NLT. Switch to the NLT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 7:16-9:2

16 மறுநாள் அதிகாலையில், யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தரின் முன்னால் நிற்கும்படி செய்தான். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன் நின்றனர். கர்த்தர் யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார் 17 எனவே அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த எல்லாக் குழுக்களும் கர்த்தருக்கு முன்னே நின்றனர். கர்த்தர் சேரா குழுவினரைத் தேர்ந்தெடுத்தார். பின் சேரா குழுவினரின் எல்லாக் குடும்பத்தாரும் கர்த்தருக்கு முன்னே நின்றார்கள். சிம்ரியின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

18 யோசுவா அக்குடும்பத்தின் ஆண்களையெல்லாம் கர்த்தருக்கு முன் வருமாறு கூறினான். கர்த்தர் கர்மீயின் மகன் ஆகானைத் தேர்ந்தெடுத்தார். (கர்மீ சிம்ரியின் மகன், சிம்ரி சேராவின் மகன்.)

19 யோசுவா ஆகானை நோக்கி, “மகனே, உனது விண்ணப்பங்களைச் சொல். நீ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தி, உனது பாவங்களை அவரிடம் கூறு. நீ செய்ததை எனக்குக் கூறு. என்னிடமிருந்து எதையும் மறைக்காதே!” என்றான்.

20 ஆகான், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தது உண்மை. நான் செய்தது இதுவே: 21 நாம் எரிகோவையும் அந்நகரத்தின் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டபோது பாபிலோனிலிருந்து கொண்டுவந்த அழகிய மேலாடையையும், சுமார் ஐந்து பவுண்டு வெள்ளியையும், ஒரு பவுண்டு பொன்னையும் கண்டேன். அவற்றை எடுத்துக் கொண்டேன். அப்பொருள்கள் எனது கூடாரத்திற்கடியிலுள்ள நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். மேலாடையின் கீழே வெள்ளி இருக்கிறது” என்றான்.

22 எனவே யோசுவா சிலரைக் கூடாரத்திற்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்திற்கு ஓடிச் சென்று, அப்பொருட்கள் கூடாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். மேலாடையின் கீழே வெள்ளி இருந்தது. 23 அவர்கள் அப்பொருட்களைக் கூடாரத்திற்கு வெளியே எடுத்து வந்து, அவற்றை யோசுவாவிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கொண்டு சென்று, கர்த்தருக்கு முன் அவற்றைத் தரையில் போட்டனர்.

24 சேராவின் மகனாகிய ஆகானை யோசுவாவும், ஜனங்களும் ஆகோர் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றனர். அந்த வெள்ளி, மேலாடை, பொன், ஆகானின் மகன்கள், மகள்கள், அவனது ஆடு மாடுகள், கழுதைகள் கூடாரம், பிற பொருட்களையும் ஆகோர் பள்ளத்தாக்கில் சேர்ப்பித்தனர். 25 அப்போது யோசுவா, “எங்களுக்கு நேர்ந்த தொந்தரவுகளுக்கு நீ காரணமாக இருந்தாய்! இப்போது கர்த்தர் உனக்குத் தொல்லையளிப்பார்!” என்றான். அப்போது ஜனங்கள் ஆகானின் மீதும் அவன் குடும்பத்தினர் மீதும் அவர்கள் மரிக்கும்படி கற்களை வீசினார்கள். பிறகு ஜனங்கள் அவர்களின் உடல்களையும் அவர்களின் பொருட்களையும் எரித்தனர். 26 ஆகானை எரித்த பின், அவன் உடம்பின் மீது கற்களைக் குவித்தனர். அவை இன்னும் அங்கு உள்ளன. தேவன் ஆகானின் குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்தார். அதனால் அவ்விடம் ஆகோர் (தொல்லை) பள்ளத்தாக்கு எனப்படுகிறது. அதன் பின் கர்த்தர் ஜனங்களிடம் கோபமாயிருக்கவில்லை.

ஆயீ அழிக்கப்படுதல்

கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அஞ்சாதே, முயற்சியைக் கைவிடாதே. போர் செய்யும் ஆண்களை ஆயீக்கு வழிநடத்து. ஆயீயின் அரசனை அழிக்க நான் உதவுவேன். அவன் ஜனங்கள், நகரம், தேசம் ஆகியவற்றை உனக்குத் தருகிறேன். எரிகோவுக்கும் அதன் அரசனுக்கும் செய்தவற்றை நீ ஆயீக்கும், அதன் அரசனுக்கும் செய்வாய். இம்முறை எல்லா செல்வத்தையும், கால் நடைகளையும் உங்களுக்காக வைத்துக் கொண்டு உனது ஜனங்களோடு செல்வத்தைப் பங்கிட்டுக்கொள்வாய். இப்போது, நகரத்தின் பின்னே உன் வீரர்களில் சிலரை மறைந்துகொள்ளச் சொல்” என்றார்.

யோசுவா தனது சேனையை ஆயீக்கு நேராக வழி நடத்தினான். பின் 30,000 சிறந்த போர்வீரரைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினான். யோசுவா அவர்களுக்குப் பின் வருமாறு கட்டளையிட்டு: “நான் உங்களுக்கு சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நகரத்திற்குப் பின்னாலுள்ள பகுதியில் நீங்கள் ஒளிந்திருக்க வேண்டும். தாக்குவதற்கேற்ற நேரத்துக்காக காத்திருங்கள். நகரத்திலிருந்து வெகு தூரம் செல்லாதீர்கள். தொடர்ந்து கவனித்தபடி தயாராக இருங்கள். நகரத்திற்கு நேராக அணிவகுத்துச் செல்வதற்கு நான் என்னுடன் உள்ளவர்களை வழி நடத்துவேன். நகரத்தின் ஜனங்கள் எங்களை எதிர்த்து சண்டையிட வெளியில் வருவார்கள். நாம் முன்னர் செய்தபடியே, திரும்பி ஓடுவோம். அம்மனிதர்கள் எங்களை நகரத்திற்கு வெளியே துரத்துவார்கள். முன்பைப் போல் நாம் நகரத்திற்கு வெளியே ஓடுகிறோம் என்று அவர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நாங்கள் ஓடிவிடுவோர்களைப் போலக் காண்பிப்போம். அப்போது நீங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறும் வல்லமையைத் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருவார்.

“கர்த்தர் கூறுகிறபடியே நீங்கள் செய்ய வேண்டும். என்னைக் கவனியுங்கள். நகரத்தைத் தாக்குவதற்கான கட்டளையை நான் இட்டதும் நகரத்தைக் கைப்பற்றி, அதற்குத் தீ மூட்டுங்கள்” என்றான்.

யோசுவா அம்மனிதர்களை மறைவிடங்களுக்கு அனுப்பியபின் காத்திருந்தான். அவர்கள் பெத்தேலுக்கும் ஆயீக்கும் மத்தியிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றனர். அது ஆயீக்கு மேற்கிலிருந்தது. அன்றிரவு யோசுவா தனது ஜனங்களோடு தங்கியிருந்தான்.

10 மறுநாள் அதிகாலையில் யோசுவா ஆண்களைக் கூடிவரும்படி அழைத்தான். பின் யோசுவாவும், இஸ்ரவேல் தலைவர்களும் அவர்களை ஆயீக்கு வழிநடத்தினர். 11 யோசுவாவோடிருந்த எல்லா வீரர்களும் ஆயீக்கு நேராக அணிவகுத்துச் சென்று நகரத்திற்கு முன்னே சென்று நின்றனர். நகரத்திற்கு வடக்கே படை முகாமிட்டது. பாளையத்திற்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.

12 அப்போது யோசுவா சுமார் 5,000 ஆண்களைத் தெரிந்துகொண்டு, பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவில், நகரத்திற்கு மேற்கேயுள்ள பகுதியில் மறைந்திருக்குமாறு கூறி, அவர்களை அனுப்பினான். 13 யோசுவா அவனது ஆட்களைப் போருக்குத் தயாராக்கினான். நகரத்திற்கு வடக்கே பெரிய முகாம் இருந்தது. மற்ற ஆட்கள் மேற்கே மறைந்திருந்தனர். இரவில் யோசுவா பள்ளத்தாக்கினுள் இறங்கிச் சென்றான்.

14 இஸ்ரவேலரின் படையைக் கண்டதும் ஆயீயின் அரசனும் அவனது ஆட்களும் எழுந்து இஸ்ரவேலரின் படையோடு போர் செய்வதற்கு விரைந்து வந்தனர். ஆயீயின் அரசன் நகரின் கிழக்குப் பகுதிக்குச் சென்றான். அதனால் நகருக்குப் பின்னே மறைந்திருந்த வீரர்களை அவன் பார்க்கவில்லை.

15 யோசுவாவும், இஸ்ரவேலின் மனிதர்களும் ஆயீயின் படையினர் தம்மைத் துரத்திவர இடம் கொடுத்தனர். யோசுவாவும் அவனது ஆட்களும் பாலைவனத்திற்கு நேராக கிழக்கே ஓட ஆரம்பித்தனர். 16 நகரத்து ஜனங்கள் சத்தமிட்டுக் கொண்டே, யோசுவாவையும் அவனது மனிதர்களையும் துரத்த ஆரம்பித்தனர். எல்லா ஜனங்களும் நகரத்திற்கு வெளியே வந்தனர். 17 ஆயீ, பெத்தேல் ஆகியவற்றின் எல்லா ஜனங்களும் இஸ்ரவேல் படையைத் துரத்தினார்கள். நகரம் திறந்திருந்தது. யாரும் நகரத்தைப் பாதுகாப்பதற்காகப் பின் தங்கவில்லை.

18 அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் ஈட்டியை ஆயீ நகரத்திற்கு நேராக நீட்டு, நான் உனக்கு அந்நகரத்தைக் கொடுப்பேன்” என்றார். எனவே யோசுவா ஆயீ நகரத்திற்கெதிராக அவனது ஈட்டியை நீட்டினான். 19 மறைந்திருந்த இஸ்ரவேலர் இதைக் கண்டனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவந்து நகரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். பிறகு வீரர்கள் நகரத்திற்கு நெருப்பூட்டினர்.

20 ஆயீ நகர ஜனங்கள் திரும்பிப் பார்த்து, தங்கள் நகரம் எரிவதையும், வானத்திற்கு நேராகப் புகை எழும்புவதையும் கண்டனர். எனவே அவர்கள் தங்கள் வலிமையையும் துணிவையும் இழந்து, இஸ்ரவேலரைத் துரத்துவதைக் கைவிட்டனர். இஸ்ரவேலர் ஓடுவதை நிறுத்திவிட்டு திரும்பி ஆயீ நகர மக்களோடு போரிட்டனர். ஆயீ நகர ஜனங்கள் ஓடி ஒளிவதற்கு எந்த இடமும் அகப்படவில்லை. 21 யோசுவாவும் அவனது ஆட்களும், நகரம் தங்கள் வசமானதையும், நகரத்திலிருந்து புகையெழுவதையும் கண்டதும் ஓடுவதை நிறுத்தி, திரும்பிவந்து, ஆயீ நகர ஜனங்ககளை எதிர்த்தனர். 22 அப்போது ஒளிந்திருந்த மனிதர்களும் நகரத்திலிருந்து வந்து போரில் உதவினார்கள். ஆயீ நகர ஜனங்களை இஸ்ரவேலர் இருபுறமும் சூழ்ந்து வளைந்துகொண்டனர். இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்தனர். ஆயீ நகர மனிதர்கள் தப்பி, உயிரோடிராதபடி இஸ்ரவேலர் அவர்களோடு போரிட்டு அழித்தனர். 23 ஆனால், ஆயீ நகர அரசனை உயிரோடு பிடித்து யோசுவாவிற்கு முன்னால் வீரர்கள் கொண்டு வந்தனர்.

போரைப்பற்றிய விமர்சனம்

24 போரின்போது, இஸ்ரவேலின் படை வீரர்கள் ஆயீ நகர ஜனங்களை வயல்களுக்கும், பாலைவனத்திற்கும் துரத்தினார்கள். ஆயீயின் மனிதர்களை இஸ்ரவேல் சேனையினர் வயல்களிலும், பாலைவனத்திலும் கொன்று குவித்தனர். பின் இஸ்ரவேல் வீரர்கள் ஆயிக்குச் சென்று அங்கு உயிரோடிருந்த ஜனங்களையும் கொன்றனர். 25 ஆயீயின் எல்லா ஜனங்களும் அன்று மரித்தனர். அவர்கள் ஆண்களும் பெண்களுமாக 12,000 பேர் இருந்தனர். 26 தனது ஆட்கள் நகரை அழிப்பதற்கு அடையாளமாக யோசுவா அவனது ஈட்டியை ஆயீக்கு நேராக நீட்டிக்கொண்டிருந்தான். நகரத்தின் ஜனங்கள் அனைவரும் அழியும்வரைக்கும் அவ்வாறே நின்றிருந்தான். 27 இஸ்ரவேலர் மிருகங்களையும், பிற பொருட்களையும் தங்களுக்காக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் இவ்வாறு செய்யும்படி கர்த்தர் ஏற்கெனவே யோசுவாவிடம் கூறியிருந்தார்.

28 யோசுவா ஆயீ நகரை எரித்தான். அந்நகரம் வெறும் கற்களின் குவியலாக்கப்பட்டது. இன்று வரைக்கும் அது அப்படியே உள்ளது. 29 ஆயீயின் அரசனை யோசுவா ஒரு மரத்தில் தூக்கிலிட்டான். மாலையில், அரசனின் உடலை அப்புறப்படுத்துமாறு தனது ஆட்களுக்குக் கூறினான். அவர்கள் நகர வாசலுக்கு வெளியே அவனது உடலை வீசி, பின் அவ்வுடலைக் கற்களால் மூடினார்கள். கற்களின் குவியலும் இன்றளவும் அங்கேயே உள்ளது.

ஆசீர்வாதமும் சாபமும் பற்றி வாசித்தல்

30 அப்போது யோசுவா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை ஏபால் மலைமீது கட்டினான். 31 இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பலிபீடத்தை எப்படிக் கட்டுவதென்று கர்த்தருடைய தாசனான மோசே கூறியிருந்தான். மோசேயின் சட்ட புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தபடி யோசுவா பலிபீடத்தைக் கட்டினான். வெட்டப்படாத கற்களால் பலிபீடம் கட்டப்பட்டது. அக்கற்களின் மீது எந்த கருவியும் பட்டிருக்கவில்லை. கர்த்தருக்குத் தகன பலிகளை அப்பலிபீடத்தில் செலுத்தினர். சமாதான பலிகளையும் செலுத்தினர்.

32 அவ்விடத்தில் யோசுவா மோசேயின் சட்டங்களைக் கற்களில் எழுதினான். இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லோரும் பார்க்கும்படியாக அவன் இதைச் செய்தான். 33 பரிசுத்தப் பெட்டியைச் சூழ்ந்து தலைவர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேலரும் நின்றனர். கர்த்தருடைய உடன்படிக்கையுள்ள பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த லேவி கோத்திரத்தின் ஆசாரியர்களுக்கு முன்னே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். இஸ்ரவேலின் ஜனங்களும், பிறரும் அங்கே நின்றிருந்தனர். பாதி ஜனங்கள் கூட்டத்தினர் ஏபால் மலைக்கு முன்பும், மற்றொரு பாதியினர் கெரிசீம் மலைக்கு முன்னேயும் நின்றார்கள். கர்த்தருடைய தாசனாகிய மோசே ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இப்படி செய்யும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான்.

34 சட்டங்களில் கூறப்பட்ட எல்லாவற்றையும் அப்போது யோசுவா வாசித்தான். ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் குறித்து வாசித்தான். சட்ட புத்தகத்தில் எழுதியிருந்த முறைப்படியே எல்லாவற்றையும் வாசித்தான். 35 இஸ்ரவேலரோடு வாழ்ந்த அந்நியரும், எல்லாப் பெண்களும், குழந்தைகளும் அங்கிருந்தனர். மோசே கொடுத்த ஒவ்வொரு கட்டளையையும் யோசுவா வாசித்தான்.

யோசுவாவிடம் கிபியோனியரின் தந்திரம்

யோர்தான் நதியின் மேற்கிலுள்ள எல்லா அரசர்களும் இந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டார்கள். அவர்கள் ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரின் அரசர்கள் ஆவார்கள். அவர்கள் மலைகளிலும், சமவெளிகளிலும் வாழ்ந்தனர். லீபனோன் வரைக்குமுள்ள மத்தியதரைக் கடலோரமாக அவர்கள் வாழ்ந்தனர். இந்த அரசர்கள் ஒருமித்துக் கூடி, யோசுவாவோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் போரிடுவதற்குத் திட்டமிட்டனர்.

லூக்கா 16:1-18

உண்மையான செல்வம்

16 இயேசு அவரது சீஷரை நோக்கி, “ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும்பொருட்டு அவனிடம் ஓர் அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள் வந்தன. எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ‘உன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது’ என்றான்.

“பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ‘நான் என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத் தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன். நான் என்ன செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம் வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தான்.

“எனவே, அந்த அதிகாரி எஜமானனுக்குக் கடன் தர வேண்டியவர்களை அழைத்தான். முதலாமவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ கொடுக்கவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம் என்று எழுது’ என்றான்.

“பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ‘இதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான்.

“பின்னர் எஜமானன் நம்பிக்கைக்குத் தகுதியற்ற அந்த அதிகாரியை அவன் திறமையாகச் செய்ததாகப் பாராட்டினான். ஆம், உலகத்திற்குரிய மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், ஆவிக்குரிய மனிதர்களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.

“நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனிடம் நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம் அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய். 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். 11 உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள். 12 யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது.

13 “ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம் வேறு முறையில் நடந்து கொள்வான். தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய உங்களால் இயலாது” என்றார்.

தேவ வாக்கியங்கள் மாறாதவை(A)

14 பரிசேயர்கள் இச்செய்திகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பணத்தை நேசித்ததால் இயேசுவை விமர்சித்தார்கள். 15 இயேசு பரிசேயர்களை நோக்கி, “மக்களின் முன்பாக நீங்கள் நல்லவர்களாக நடந்துகொள்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே என்ன இருக்கிறதென தேவன் அறிவார். மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்கள் தேவனின் வெறுப்புக்கு உரியவை ஆகின்றன.

16 “மோசேயின் சட்டத்திற்கிணங்கவும், தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களுக்கேற்பவும் மக்கள் வாழ்வதை தேவன் விரும்பினார். ஆனால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகன் காலம் தொடங்கி, தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. தேவனுடைய இராஜ்யத்தில் செல்வதற்குப் பலர் மிகவும் முயன்று வருகிறார்கள். 17 வேதவாக்கியங்களில் காணப்படுகிற ஒரு எழுத்தின் ஒரு சிறிய பகுதியைக் கூட மாற்ற முடியாது. அதைக் காட்டிலும் வானமும் பூமியும் அழிந்துபோவதே எளிதாக இருக்கும்.”

விவாகரத்தும் மறுமணமும்

18 “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்து, இன்னொரு பெண்ணை மணந்துகொண்டால் அவன் விபசாரம் என்னும் பாவத்தைச் செய்தவன் ஆவான். விவாகரத்துக்கு உட்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொள்பவனும் தீய விபசாரம் என்னும் குற்றத்திற்கு உட்பட்டவன் ஆவான்” என்றார்.

சங்கீதம் 82

ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.

82 தேவன் தேவர்களின் சபையில் [a] நிற்கிறார்.
    தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி.
தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்?
    தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்கள்?”

“ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள்.
    அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள்.
    அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.

“அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள்.
    அவர்கள் புரிந்துகொள்ளார்கள்!
அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள்.
    அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!” என்கிறார்.
நான் (தேவன்),
    “நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய மகன்கள்.
ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள்.
    பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்லுகிறேன்.

தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்!
    தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்!

நீதிமொழிகள் 13:2-3

நல்லவர்கள், தாம் சொல்லுகிற நல்லவற்றுக்காகத் தகுந்த வெகுமதிகளை அடைகிறார்கள். ஆனால் தீயவர்களோ எப்பொழுதும் தவறானவற்றைச் செய்ய விரும்புகின்றனர்.

ஒருவன் தான் சொல்லுகின்றவற்றில் எச்சரிக்கையோடு இருந்தால் அது அவன் வாழ்வைக் காப்பாற்றும். ஆனால் சிந்தித்துப் பார்க்காமல் பேசுகின்றவர்களின் வாழ்க்கை அழிந்துப்போகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center