Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NIV. Switch to the NIV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 21:1-22:20

ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் உரிய பட்டணங்கள்

21 லேவி கோத்திரத்தின் குடும்பத் தலைவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாரையும், நூனின் மகனாகிய யோசுவாவையும், இஸ்ரவேலின் பிற கோத்திரங்களின் தலைவர்களையும் கண்டு பேசுவதற்குச் சென்றார்கள். கானான் தேசத்திலுள்ள சீலோ என்னும் நகரில் இது நிகழ்ந்தது. லேவியின் தலைவர்கள் அவர்களை நோக்கி, “கர்த்தர் மோசேக்கு ஓர் கட்டளையிட்டார். நாங்கள் வாழ்வதற்கு நகரங்களையும், எங்கள் மிருகங்கள் மேய்வதற்குத் தேவையான வயல்நிலங்களையும் தருமாறு கட்டளையிட்டார்” என்றார்கள். எனவே இஸ்ரவேலர் கர்த்தருடைய இக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். லேவிய ஜனங்களுக்கு இந்த நகரங்களையும், அவர்களின் மிருகங்களுக்காக அவற்றைச் சார்ந்த நிலங்களையும் வழங்கினார்கள்.

கோகாத்தியரின் குடும்பத்தினர் வேவியின் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியனான ஆரோனின் சந்ததியார். யூதா, சிமியோன் மற்றும் பென்யமீன் ஆகியோருக்குரிய பகுதிகளிலிருந்து 13 ஊர்கள் கோகாத் குடும்பத்தின் ஒரு பகுதியினருக்குக் கொடுக்கப்பட்டன.

எப்பிராயீம், தாண், ஆகிய கோத்திரத்தினருக்கும் மனாசே கோத்திரத்தின் பாதி பேர்க்கும் சொந்தமான ஊர்களிலிருந்து பத்து நகரங்கள் கோகாத்தியரின் பிற குடும்பங்களுக்குத் தரப்பட்டன.

கெர்சோனின் குடும்பத்தினருக்கு 13 நகரங்கள் அளிக்கப்பட்டன. இசக்கார், ஆசேர், நப்தலி, மற்றும் பாசானிலிருந்த மனாசேயின் பாதிக்குடும்பத்தினர் ஆகியோருக்குச் சொந்தமான பகுதிகளில் இந்த நகரங்கள் இருந்தன.

மெராரி குடும்பத்தாருக்குப் பன்னிரண்டு ஊர்கள் வழங்கப்பட்டன. ரூபன், காத், செபுலோன் ஆகியோருக்குச் சொந்தமான தேசத்தில் இவை இருந்தன.

இவ்வாறு இஸ்ரவேலர் லேவியருக்கு இந்த நகரங்களையும், அவற்றைச் சுற்றியிருந்த வயல் நிலங்களையும் கொடுத்தனர். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டதற்குக் கீழ்ப்படும்படியாக அவர்கள் இதைச் செய்தனர்.

யூதாவிற்கும் சிமியோனுக்கும் சொந்தமான பகுதிகளிலிருந்த நகரங்களின் பெயர்கள் இவை: 10 லேவியரில் கோகாத் குடும்பத்தாருக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் கொடுக்கப்பட்டன. 11 கீரியாத்அர்பாவை அவர்களுக்குக் கொடுத்தனர் (இது எபிரோன். அர்பா என்னும் மனிதனின் பெயரால் அழைக்கப்பட்டது. அர்பா ஆனாக்கின் தந்தை.) அவர்களின் மிருகங்களுக்காக நகரங்களின் அருகே சில நிலங்களையும் கொடுத்தார்கள். 12 ஆனால் கீரியாத்அர்பா நகரைச் சுற்றிலுமிருந்த நகரங்களும் நிலங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குச் சொந்தமாயிருந்தது. 13 எனவே எபிரோன் நகரை ஆரோனின் சந்ததிக்குக் கொடுத்தார்கள். (எபிரோன் பாதுகாப்பான நகரமாயிருந்தது.) லிப்னா, 14 யத்தீர், எஸ்தெமொவா, 15 ஓலோன், தெபீர், 16 ஆயின், யுத்தா, பெத்ஷிமேஸ் ஆகிய நகரங்களையும் ஆரோனின் சந்ததிக்கு அளித்தனர். இந்த நகரங்களின் அருகேயிருந்த நிலத்தையும் அவர்களின் கால்நடைகளுக்காக அளித்தனர். இந்த இரண்டு கூட்டத்தாருக்கும் ஒன்பது நகரங்களைக் கொடுத்தார்கள்.

17 பென்யமீன் கோத்திரத்திற்கு சொந்தமான நகரங்களையும் ஆரோனின் சந்ததிக்கு அவர்கள் கொடுத்தார்கள். அந்நகரங்கள் கிபியோன், கேபா, 18 ஆனாதோத், அல்மோன் ஆகியனவாகும். அவர்களுக்கு இந்த நான்கு நகரங்களையும், மிருகங்களுக்கென அவற்றினருகேயுள்ள நிலங்களையும் கொடுத்தார்கள். 19 மொத்தத்தில், ஆசாரியர்களுக்கு 13 ஊர்களைக் கொடுத்தார்கள். (எல்லா ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார்.) ஒவ்வொரு நகருக்கருகேயும் நிலங்களை மிருகங்களுக்காக ஒதுக்கினர்.

20 கோகாத்திய குடும்பங்களில் மீதியானவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த பகுதியிலுள்ள நகரங்கள் தரப்பட்டன. அவர்கள் இந்த நகரங்களைப் பெற்றனர்: 21 எப்பிராயீம் மலை நாட்டின் சீகேம் நகரம். (சீகேம் அடைக்கல நகரம்.) கேசேர், 22 கிப்சாயீம், பெத்தொரோன் ஆகியவற்றையும் பெற்றார்கள். மொத்தத்தில், எப்பிராயீம் ஜனங்கள் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவ்வூர்களைச் சுற்றியிருந்த நிலங்களையும் வழங்கினர்.

23 தாண் கோத்திரத்தினர்களுக்கு எல்தெக்கே, கிபெத்தோன், 24 ஆயலோன், காத் ரிம்மோன் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தம், நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்த நகரங்களைச் சுற்றியிருந்த நிலங்களையும் கொடுத்தனர்.

25 மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் தானாகையும், காத் ரிம்மோனையும் கொடுத்தனர். அவர்கள் இரண்டு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்நகரங்களை சுற்றியிருந்த நிலங்களையும் கொடுத்தார்கள்.

26 கோகாத்திய குடும்பத்தின் மீதியான ஜனங்கள் பத்து நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் பெற்றார்கள்.

27 கெர்சோன் குடும்பமும் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தது. அவர்கள் இந்த நகரங்களைப் பெற்றனர்:

மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் பாசானிலுள்ள கோலானைக் கொடுத்தனர். (கோலான் அடைக்கல நகரம்.) மனாசே ஜனங்கள் பெயேஸ்திராவையும் கொடுத்தார்கள். மொத்தத்தில், மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் இரண்டு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்த நிலங்களையும் கொடுத்தனர்.

28 இசக்கார் கோத்திரத்தினர் கீசோன், தாபராத், 29 யர்மூத், என்கன்னீம் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தம் நான்கு நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சார்ந்த நிலங்களையும் இசக்கார் ஜனங்கள் கொடுத்தார்கள்.

30 ஆசேர் கோத்திரத்தினர் மிஷயால், அப்தோன், 31 எல்காத், ரேகோப் ஆகியவற்றைக் கொடுத்தார்கள். ஆசேர் ஜனங்கள் மொத்தம் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்த நகரங்களையும் கொடுத்தனர்.

32 நப்தலி கோத்திரத்தினர் கலிலேயாவிலுள்ள கேதேசைக் கொடுத்தார்கள். (கேதேஸ் அடைக்கல நகரம்.) நப்தலி ஜனங்கள் அம்மோத்தோரையும் கர்தானையும் கொடுத்தனர். நப்தலி ஜனங்கள் மூன்று நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமிருந்த நிலங்களையும் கொடுத்தனர்.

33 மொத்தத்தில், கெர்சோன் குடும்பத்தார் 13 நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமிருந்த நிலங்களையும் பெற்றனர்.

34 மற்றொரு லேவியர் குழு மெராரி குடும்பம் ஆகும். மெராரி குடும்பம் இந்த நகரங்களைப் பெற்றது: செபுலோன் கோத்திரத்தினர் யோக்னியாம், கர்தா, 35 திம்னா, நகலால் ஆகியவற்றைக் கொடுத்தனர். செபுலோன் ஜனங்கள் மொத்தம் நான்கு நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் கொடுத்தனர். 36 ரூபன் கோத்திரத்தினர் அவர்களுக்குப் பேசேர், யாகசா, 37 கேதெமோத், மெபகாத் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தத்தில், ரூபன் ஜனங்கள் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் கொடுத்தனர். 38 காத் கோத்திரத்தினர் அவர்களுக்குக் கீலேயாத்திலுள்ள ராமோத்தைக் கொடுத்தனர். (ராமோத் அடைக்கல நகரம்.) மக்னாயீம், எஸ்போன், யாசேர் ஆகியவற்றையும் கொடுத்தனர். 39 மொத்தம் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்நகரங்களைச் சார்ந்த நிலங்களையும் காத் ஜனங்கள் கொடுத்தனர்.

40 மொத்தத்தில், லேவியரின் கடைசி குடும்பத்தினர் ஆகிய, மெராரி குடும்பத்தினர், பன்னிரண்டு நகரங்களைப் பெற்றனர்.

41 எனவே லேவியர்கள் மொத்தம் 48 நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமுள்ள நிலங்களையும் பெற்றனர். இந்த நகரங்கள் அனைத்தும் பிற கோத்திரத்தினருக்குச் சொந்தமான பகுதிகளில் இருந்தன. 42 ஒவ்வொரு பகுதியிலும் மிருகங்களுக்கான நிலமும் இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் அவ்வாறே இருந்தது.

43 அவ்வாறு கர்த்தர் இஸ்ரவேலருக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்றினார். அவர் வாக்களித்த எல்லா நிலத்தையும் ஜனங்களுக்குக் கொடுத்தார். ஜனங்கள் நிலத்தைப் பெற்று அங்கு வாழ்ந்தனர். 44 கர்த்தர் அந்த ஜனங்களின் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே அவர்களின் தேசத்தைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் அமைதி நிலவும்படி செய்தார். அவர்கள் பகைவர்கள் யாரும் அவர்களை வெல்லவில்லை. இஸ்ரவேலர் தமது பகைவர்களை எல்லாம் முறியடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். 45 கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த எல்லா அருமையான வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். அவர் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் இருக்கவில்லை. ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றினார்.

மூன்று கோத்திரங்கள் சொந்த இடத்திற்குச் செல்லுதல்

22 ரூபன், காத், மனாசே கோத்திரங்களிலிருந்த ஜனங்கள் அனைவரையும் யோசுவா ஒரு கூட்டத்திற்கு அழைத்தான். யோசுவா அவர்களை நோக்கி, “மோசே கர்த்தருடைய ஊழியன். மோசே செய்யும்படி கூறியவற்றிற்கு நீங்கள் கீழ்ப்படிந்தீர்கள். எனது எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தீர்கள். இஸ்ரவேலரின் எல்லா ஜனங்களுக்கும் நீங்கள் உதவியாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் இட்ட கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்தீர்கள். இஸ்ரவேலருக்கு அமைதி வழங்குவதாக உங்கள் தேவனாகிய கர்த்தர் வாக்களித்தார். இப்போது, கர்த்தர் தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். இப்போது உங்கள் வீடுகளுக்கு திரும்பிப் போகலாம். யோர்தான் நதியின் கிழக்குப் புறத்திலுள்ள நிலத்தை கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்குக் கொடுத்தார். அந்நிலத்தை உங்கள் இருப்பிடமாகக் கொண்டு நீங்கள் போகலாம். ஆனால் மோசே கொடுத்த சட்டத்தைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நேசித்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். அவரைப் பின்பற்றி முழு இதயத்துடனும் முழு ஆத்துமாவுடனும் சிறப்பாக அவருக்கு சேவை செய்வதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்” என்றான்.

பின் யோசுவா அவர்களை ஆசீர்வதித்தான். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். பாசான் தேசத்தை, மோசே மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்திருந்தான். யோர்தான் நதியின் மேற்குப் பகுதியிலுள்ள தேசத்தை யோசுவா மனாசே கோத்திரத்தின் மற்ற பாதிக் குடும்பங்களுக்கு கொடுத்தான். யோசுவா அவர்களை ஆசீர்வதித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பினான். அவன், “நீங்கள் செல்வந்தர்கள் ஆனீர்கள். உங்களுக்கு மிருக ஜீவன்கள் பல உள்ளன. உங்களிடம் பொன்னும், வெள்ளியும், விலையுயர்ந்த நகைகளும் உள்ளன. உங்களிடம் அழகிய ஆடைகள் இருக்கின்றன. உங்கள் எதிரிகளிடமிருந்து பல பொருட்களைக் கொள்ளையடித்திருக்கிறீர்கள். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று அவற்றை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக் கொள்ளுங்கள்” என்றான்.

எனவே ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் பிற இஸ்ரவேலரைப் பிரிந்து சென்றனர். அவர்கள் கானானிலுள்ள சீலோவில் இருந்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டு கீலேயாத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். மோசே அவர்களுக்குக் கொடுத்த அவர்கள் சொந்த இடத்திற்குப் போனார்கள். இந்நிலத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார்.

10 ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் கீலேயாத் என்னும் இடத்திற்குச் சென்றார்கள். இந்த இடம் கானான் தேசத்தில் யோர்தான் நதிக்கு அருகே இருந்தது. அவ்விடத்தில் ஜனங்கள் ஓர் அழகிய பலிபீடத்தைக் கட்டினார்கள். 11 இந்த மூன்று கோத்திரங்களும் கட்டிய பலிபீடத்தைக் குறித்து சீலோவிலுள்ள பிற இஸ்ரவேலர் கேள்விப்பட்டனர். கானானின் எல்லையில் கீலேயாத் என்னுமிடத்தில் அப்பலிபீடம் இருந்தது என்பதை அறிந்தனர். அப்பலிபீடம் இஸ்ரவேலரின் நாட்டில் யோர்தான் நதிக்கருகே இருந்தது. 12 இம்மூன்று கோத்திரத்தினரிடமும் இஸ்ரவேல் ஜனங்கள் மிகுந்த கோபம் கொண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, அவர்களுக்குகெதிராகப் போர் செய்ய முடிவெடுத்தனர்.

13 ரூபன், காத் மனாசே கோத்திரத்தினரிடமும் பேசுவதற்கு இஸ்ரவேலர் சில ஆட்களை அனுப்பினார்கள். ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அவர்களுக்குத் தலைவனாகச் சென்றான். 14 அவர்கள் கோத்திரத்தின் தலைவர்கள் பத்து பேரை அவனோடே கூட அனுப்பினார்கள். சீலோவிலிருந்த இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து ஒவ்வொன்றிற்கும் ஒரு மனிதன் வீதம் சென்றான்.

15 எனவே பதினொருவர் கீலேயாத்திற்கு ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரிடம் பேசுவதற்காகச் சென்றனர். பதினொருவரும் அவர்களை நோக்கி: 16 “இஸ்ரவேலரின் தேவனுக்கெதிராக இக்காரியத்தை ஏன் செய்தீர்கள்? கர்த்தருக்கு எதிராக ஏன் திரும்பினீர்கள்? உங்களுக்காக ஏன் ஒரு பலிபீடத்தைக் கட்டினீர்கள்? இது தேவனின் போதனைக்கு எதிரானது என்பதை நீங்கள் அறிவீர்கள்! 17 பேயோரில் என்ன நேர்ந்தது என்பதை நினைத்துப்பாருங்கள். அப்பாவத்தால் நாம் இன்றும் துன்புறுகிறோம். அப்பெரும் பாவத்தால் இஸ்ரவேலரில் பலர் நோயுறுமாறு தேவன் செய்தார். அந்நோயால் இன்றும் நாம் துன்புறுகிறோம், 18 இப்போது நீங்களும் அதையே செய்கிறீர்கள்! கர்த்தருக்கு எதிராகத் திரும்புகிறீர்கள்! கர்த்தரை பின்பற்ற மறுப்பீர்களா? நீங்கள் செய்வதை நிறுத்தாவிட்டால், கர்த்தர் இஸ்ரவேல் ஜனம் முழுவதின் மேலும் கோபம்கொள்வார்.

19 “உங்கள் நிலம் ஆராதனைக்குச் சிறந்ததல்ல வென்றால், எங்கள் நிலத்திற்குள் வாருங்கள். கர்த்தருடைய கூடாரம் எங்கள் நிலத்தில் உள்ளது. எங்கள் நிலத்தில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இங்கு வாழலாம். ஆனால் கர்த்தருக்கு எதிராகத் திரும்பாதீர்கள். இன்னொரு பலிபீடம் கட்டாதீர்கள். ஆசரிப்புக் கூடாரத்தினருகே கர்த்தருடைய பலிபீடம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது.

20 “சேராவின் மகனாகிய ஆகான் என்ற மனிதனை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அழிக்கப் படவேண்டிய பொருட்களைப் பற்றிய கட்டளைக்குக் கீழ்ப்படிய அவன் மறுத்தான். அந்த ஒரு மனிதன் தேவனின் கட்டளையை மீறினான், ஆனால் இஸ்ரவேலர் எல்லோரும் தண்டிக்கப்பட்டனர். ஆகான் தன் பாவத்திற்காக மரித்தான். ஆனால் மற்றும் பலரும் மரிக்க நேரிட்டது” என்று எல்லா இஸ்ரவேலரும் உங்களிடம் கேட்கிறார்கள் என்றனர்.

லூக்கா 20:1-26

யூத அதிகாரிகளின் கேள்வி(A)

20 ஒரு நாள் இயேசு தேவாலயத்தில் இருந்தார். அவர் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு மக்களுக்குக் கூறினார். தலைமை ஆசாரியரும், வேதபாரகரும், முதிய யூத அதிகாரிகளும் இயேசுவிடம் பேசுவதற்கு வந்தனர். அவர்கள், “இக்காரியங்களைச் செய்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தவர் யார்?” என்றார்கள்.

இயேசு பதிலாக, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்பேன். மக்களுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.

ஆசாரியரும், வேதபாரகரும், யூத அதிகாரிகளும் இதைக் குறித்துப் பேசினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்தது’ என்று நாம் பதில் சொன்னால் அவர், ‘அப்படியானால் நீங்கள் யோவானை ஏன் நம்பவில்லை?’ என்பார். ஆனால் நாம், ‘யோவானின் ஞானஸ்நானம் மனிதரிடம் இருந்து வந்தது’ என்றுக் கூறினால் எல்லா மக்களும் நம்மைக் கல்லெறிந்து கொல்வார்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பதால் நம்மைக் கொல்வார்கள்” என்று பேசிக்கொண்டனர். எனவே அவர்கள், “எங்களுக்கு விடை தெரியவில்லை” என்று பதில் சொன்னார்கள்.

எனவே இயேசு அவர்களை நோக்கி, “இக்காரியங்களை எந்த அதிகாரத்தால் செய்கிறேன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.

திராட்சைத்தோட்ட உவமை(B)

பின்னர் இயேசு மக்களுக்கு இவ்வுவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் தன் வயலில் திராட்சைச் செடிகளை பயிரிட்டான். சில உழவர்களுக்கு அந்த நிலத்தைக் குத்தகையாகக் கொடுத்தான். பின்னர் நீண்டகாலம் அங்கிருந்து சென்றுவிட்டான். 10 திராட்சைப் பழங்களைப் பறிக்கும் காலம் நெருங்கியது. அம்மனிதன் உழவர்களிடம் அவனது வேலைக்காரனைத் தனக்குரிய பாகமான திராட்சை பழங்களைப் பெற்றுவருமாறு அனுப்பினான். ஆனால் உழவர்கள் அந்த வேலைக்காரனை அடித்து ஒன்றுமே தராமல் அனுப்பிவிட்டார்கள். 11 எனவே அம்மனிதன் இன்னொரு வேலைக்காரனை அனுப்பினான். அந்த உழவர்கள் இந்த வேலைக்காரனையும் கூட அடித்தார்கள். அவனைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. அவனுக்கு எதுவும் கொடுக்காமல் அவனை அனுப்பிவிட்டார்கள். 12 எனவே அம்மனிதன் உழவர்களிடம் மூன்றாவது வேலைக்காரனை அனுப்பினான். உழவர்கள் அவனை அடித்துக் காயப்படுத்தித் துரத்திவிட்டார்கள்.

13 “வயலின் சொந்தக்காரன். ‘நான் இப்போது என்ன செய்வேன்? நான் எனது மகனை அனுப்புவேன். நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன். உழவர்கள் என் மகனை மதிக்கக்கூடும்’ என்று எண்ணினான். 14 உழவர்கள் மகனைப் பார்த்ததும் தமக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் மகன். இவ்வயல் இவனுக்கே சேரும். இவனைக் கொன்றுவிட்டால் இவ்வயல் நமக்குச் சொந்தமாகும்’ என்று பேசிக்கொண்டனர். 15 எனவே, மகனை வயலுக்கு வெளியே தூக்கி எறிந்து அவனைக் கொன்றுவிட்டனர்.

“வயலின் சொந்தக்காரன் என்ன செய்வான்? 16 அவன் வந்து அந்த உழவர்களைக் கொன்றுபோடுவான். பிற்பாடு அந்த வயலை வேறு உழவர்கள் கையில் ஒப்படைப்பான்” என்றார். மக்கள் இவ்வுவமையைக் கேட்டனர்.

அவர்கள், “இல்லை, இவ்வாறு நடக்க அனுமதிக்கலாகாது” என்றனர். 17 ஆனால் இயேசு அவர்கள் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறு “அப்படியானால் இந்த வசனம் எதைக் கூறுகிறது:

“‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாம் எனக் கருதிய கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று’ (C)

18 அந்தக் கல்லின்மீது விழுகிற ஒவ்வொரு மனிதனும் நொறுங்கிப்போவான். அந்தக் கல் உங்கள் மீது விழுந்தால் அது உங்களை நசுக்கிப்போடும்!” என்றார்.

19 யூத அதிகாரிகள் இயேசு கூறிய இவ்வுவமையைக் கேட்டனர். இது அவர்களைப் பற்றியே கூறப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. அதே சமயத்தில் அவர்கள் இயேசுவைச் சிறைப்பிடிக்க விரும்பினார்கள். ஆனால் மக்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்து அவர்கள் அஞ்சினர்.

யூத அதிகாரிகளின் தந்திரம்(D)

20 எனவே வேதபாரகரும், தலைமை ஆசாரியரும் இயேசுவைப் பிடிப்பதற்கு ஏற்ற தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் சில மனிதர்களை இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்களை நல்ல மனிதர்களாக நடிக்கும்படியாகக் கூறியிருந்தார்கள். இயேசு கூறியவற்றில் குற்றம் காணும்படியாக அவர்கள் விரும்பினார்கள். (ஏதேனும் தவறு கண்டுபிடித்தால் அவர்கள் அதிகாரமும் ஆற்றலும் வாய்ந்த ஆளுநரிடம் இயேசுவை ஒப்படைக்க முடியும்.) 21 எனவே, அந்த மனிதர்கள் இயேசுவை நோக்கி, “போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் உண்மை என்று எங்களுக்குத் தெரியும். எல்லா மக்களுக்கும் அவற்றைப் போதிக்கிறீர். தேவனின் வழியைக் குறித்த உண்மையையே எப்போதும் கற்பிக்கிறீர். 22 இராயனுக்கு நாங்கள் வரி கட்டுவது சரியா இல்லையா என்பதை எங்களுக்குக் கூறுங்கள்?” என்றார்கள்.

23 இயேசுவை வஞ்சிக்க அம்மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். இயேசு அவர்களை நோக்கி, 24 “ஒரு காசை எனக்குக் காட்டுங்கள். யாருடைய பெயர் அதில் இருக்கிறது? யாருடைய படம் அதில் உள்ளது?”

என்று கேட்டார். அவர்கள், “இராயனுடையது” என்றார்கள்.

25 இயேசு அவர்களை நோக்கி “இராயனுடையதை இராயனுக்குக் கொடுங்கள். தேவனுடையவற்றை தேவனுக்குக் கொடுங்கள்” என்றார்.

26 அவரது ஞானம்மிக்க பதிலைக் கேட்டு அம்மனிதர்கள் ஆச்சரியமுற்றனர். அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தம் தந்திரங்களில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்களின் முன்பாக அவர்களால் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் இயேசு சொல்லவில்லை.

சங்கீதம் 89:1-13

எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்

89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
    என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
    உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.

தேவன், “நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
    என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.

கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.
    வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும்.
ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும்.
    பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.
    “தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.
    அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள்.
    அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
    உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.
    அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.
    உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.
    உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.
    தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!
    உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!

நீதிமொழிகள் 13:15-16

15 புரிந்துகொள்ளும் நல்ல உணர்வுள்ளவர்களை ஜனங்கள் விரும்புவார்கள். ஆனால் நம்ப முடியாதவர்கள் வாழ்வு கடினமாகிப்போகிறது.

16 ஞானமுள்ளவர்கள் எதையும் செய்வதற்கு முன் சிந்திக்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ, தம் செயல்கள் மூலம் தமது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொள்வார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center