Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NIV. Switch to the NIV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 9:3-10:43

எரிகோவையும் ஆயீயையும் யோசுவா தோற்கடித்த வகையை கிபியோனின் ஜனங்கள் கேள்விப்பட்டிருந்தனர். அவர்கள் இஸ்ரவேலரை ஏமாற்ற முடிவெடுத்தனர். இதுவே அவர்கள் திட்டம்: அவர்கள் நைந்துபோன பழைய திராட்சைரசத் தோல் பைகளைச் சேகரித்தனர். அவர்கள் கழுதைகளின் முதுகில் அவற்றை ஏற்றினார்கள். பழைய சாக்குகளை அந்தக் கழுதைகளின் மேல் ஏற்றி, வெகுதுரத்திலிருந்து பயணம் செய்து வருவோரைப் போல் தோற்றம் அளித்தனர். அவர்கள் பழைய செருப்புகளை அணிந்து, பழைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, உலர்ந்து, பூசணம் பூத்திருந்த பழைய அப்பங்களையும் எடுத்துக்கொண்டனர். தொலைவான இடத்திலிருந்து பயணம் செய்து வந்தவர்களைப் போன்றே அவர்கள் தோன்றினர். பின்னர் அம்மனிதர்கள் கில்காலுக்கு அருகே இருந்த இஸ்ரவேலரின் முகாமிற்குச் சென்றனர்.

அம்மனிதர்கள் யோசுவா மற்றும் இஸ்ரவேலின் மூப்பர்களிடமும் சென்று, “நாங்கள் மிகவும் தூரத்திலுள்ள ஒரு தேசத்தில் இருந்து கிளம்பி வந்துள்ளோம். உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறோம்” என்றனர்.

இஸ்ரவேலர் அந்த ஏவியரிடம், “நீங்கள் எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், அருகே எங்கேயேனும் நீங்கள் வசித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வரைக்கும் உங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்யமாட்டோம்” என்றனர்.

ஏவியர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உமது பணியாட்கள்” என்றனர்.

ஆனால் யோசுவா, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.

அந்த ஆட்கள் அதற்குப் பதிலாக, “நாங்கள் உங்கள் பணியாட்கள். நாங்கள் தூரத்திலுள்ள நாட்டிலிருந்து வந்துள்ளோம். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய மிகுந்த வல்லமையை அறிந்ததால் இங்கு வந்தோம். அவர் செய்த காரியங்களை அறிந்துள்ளோம். அவர் எகிப்தில் செய்தவற்றையும் அறிந்தோம். 10 யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள எமோரியரின் அரசர்களான அஸ்தரோத் தேசத்திலுள்ள எஸ்போனின் அரசனாகிய சீகோனையும், பாசானின் அரசனாகிய ஓகையும் அவர் தோற்கடித்ததைக் கேள்விப்பட்டோம். 11 எனவே எங்கள் மூப்பர்களும், ஜனங்களும் எங்களை நோக்கி, ‘உங்கள் பயணத்திற்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள். இஸ்ரவேலரின் ஜனங்களைப் போய்ச் சந்தித்து, அவர்களிடம், ‘நாங்கள் உங்கள் பணியாட்கள். எங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள்.

12 “எங்கள் அப்பத்தைப் பாருங்கள்! நாங்கள் எங்கள் வீடுகளைவிட்டு உங்களிடம் வரும்படி பயணம் செய்யத் துவங்கியபோது அது சூடாகவும், புதியதாகவும் இருந்தது. ஆனால் இப்போது உலர்ந்து பழையதாகப் போய்விட்டது. 13 எங்கள் திராட்சைரசப் பைகளைப் பாருங்கள்! நாங்கள் வீட்டிலிருந்து வந்தபோது அவை புதிதாகவும் திராட்சைரசம் நிரப்பப்பட்டவையாகவும் இருந்தன. இப்போது அவை கிழிந்து, பழையனவாகிவிட்டன. எங்கள் உடைகளையும், பாதரட்சைகளையும் பாருங்கள்! நாங்கள் அணிந்து கொண்டிருப்பவை பயணத்தால் கிழிந்துபோயிருப்பதைக் காண்பீர்கள்” என்றனர்.

14 அந்த ஆட்கள் உண்மை பேசுகிறார்களா என்பதை அறிய இஸ்ரவேலர் விரும்பினர். எனவே அவர்கள் அப்பத்தை ருசி பார்த்தனர். ஆனால் அவர்கள் செய்யவேண்டியது என்னவென்று கர்த்தரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. 15 யோசுவா அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள உடன்பட்டான். அவர்களை வாழவிடுவதாக ஒப்பந்தம் செய்தான். யோசுவாவின் இந்த வாக்குறுதிக்கு இஸ்ரவேலின் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

16 மூன்று நாட்களுக்குப் பிறகு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த ஆட்கள் தங்கள் முகாமிற்கு வெகு அருகாமையில் வாழ்பவர்கள் என்பதை அறிந்துகொண்டனர். 17 எனவே இஸ்ரவேலர் அம்மனிதர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் மூன்றாம் நாள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத் யெயாரீம் என்ற நகரங்களை வந்தடைந்தனர். 18 ஆனால் இஸ்ரவேல் படையினர் அந்நகரங்களை எதிர்த்துப் போர் செய்யவில்லை. அந்த ஜனங்களோடு அவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். ஏனெனில் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு, முன்பு அவர்கள் ஒரு வாக்குறுதியைச் செய்திருந்தனர்.

ஒப்பந்தம் செய்த தலைவர்களை எதிர்த்து ஜனங்கள் குற்றம் சாட்டினார்கள். 19 ஆனால் தலைவர்கள், “நாங்கள் வாக்களித்துவிட்டோம். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் வாக்களித்தோம், அவர்களை எதிர்த்து இப்போது போரிட முடியாது. 20 இப்படித்தான் நாம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை உயிரோடு விடவேண்டும். அவர்களைக் காயப்படுத்தினால் நாம் அவர்களோடு செய்த வாக்குறுதியை மீறியதற்காக தேவன் நம்மிடம் கோபமடைவார். 21 எனவே அவர்கள் வாழட்டும். ஆனால் அவர்கள் நமது பணியாட்களாக இருப்பார்கள். அவர்கள் நமக்காக விறகு வெட்டுவார்கள். நம் ஜனங்களுக்காக தண்ணீர் மொண்டு வருவார்கள்” என்று பதிலளித்தார்கள். இவ்வாறு அந்த ஜனங்களுக்கு அளித்த சமாதானத்திற்கான வாக்குறுதியை தலைவர்கள் மீறவில்லை.

22 யோசுவா கிபியோனிய ஜனங்களை அழைத்து, “ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள்? உங்கள் தேசம் எங்கள் முகாமிற்கு அருகில் இருந்தது. ஆனால் நீங்களோ தூர தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றீர்கள். 23 இப்போது, நீங்கள் ஒரு சாபத்தினால் பிடிக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அனைவரும் அடிமைகள் ஆவர். அவர்கள் தேவனின் ஆலயத்திற்கு விறகு வெட்டவும், தண்ணீர் மொண்டு வரவும் வேண்டும்” என்றான்.

24 கிபியோனிய ஜனங்கள், “நீங்கள் எங்களைக் கொன்றுவிடுவீர்கள் என்ற பயத்தால் நாங்கள் பொய் சொன்னோம். தேவன் தம் ஊழியராகிய மோசேக்கு இந்த தேசத்தையெல்லாம் கொடுப்பதாக வாக்களித்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம். இத்தேசத்தில் வசிப்போரைக் கொல்லும்படியாக தேவன் உங்களுக்குக் கூறினார். எனவே நாங்கள் உங்களிடம் பொய் கூறினோம். 25 இப்போதும் நாங்கள் உங்கள் பணியாட்கள். நீங்கள் சரியென நினைப்பதை எங்களுக்குச் செய்யலாம்” என்றனர்.

26 எனவே கிபியோனிய ஜனங்கள் அடிமைகளாயினர். ஆனால் யோசுவா அவர்களை உயிரோடுவிட்டான். இஸ்ரவேலர் அவர்களைக் கொல்வதற்கு அனுமதிக்கவில்லை. 27 கிபியோனிய ஜனங்களை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடிமைகளாக யோசுவா ஆக்கினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் கர்த்தருடைய பலிபீடத்திற்கும் தேவையான விறகு வெட்டி, தண்ணீர் மொண்டு வந்தனர். தேவன் தெரிந்தெடுத்த இடத்தில் எல்லாம் அவர்கள் அவ்வேலைகளைச் செய்தனர். அந்த ஜனங்கள் இன்றைக்கும் அடிமைகளாக உள்ளனர்.

சூரியன் அசையாது நின்ற நாள்

10 அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் அரசனாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த அரசன் அறிந்தான். எரிகோவிற்கும் அதன் அரசனுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். எருசலேமின் அரசனாகிய, அதோனிசேதேக், எபிரோனின் அரசனாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் அரசனாகிய பீராமுடனும், லாகீசின் அரசனாகிய யப்பியாவுடனும், எக்லோனின் அரசனாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் அரசன் இவர்களிடம், “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

இந்த ஐந்து எமோரிய அரசர்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன.

கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய அரசர்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது.

எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர். கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார்.

யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர். 11 அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம்.

12 கர்த்தர் அன்று இஸ்ரவேலர் எமோரியரை வெற்றிக்கொள்ளச் செய்தார். அந்த நாளில் யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்று, கர்த்தரை நோக்கி:

“சூரியன், கிபியோனின் மேல் நிற்கட்டும்.
    ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல், சந்திரன் அசையாது நிற்கட்டும்” என்றான்.

13 எனவே சூரியனும், சந்திரனும் இஸ்ரவேலர் தங்கள் பகைவர்களை முறியடிக்கும் வரைக்கும் அசையாமல் நின்றன. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வானத்தின் நடுவில் சூரியன் அசையாமல் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது அசையவேயில்லை. 14 அவ்வாறு முன்னர் நிகழ்ந்ததேயில்லை! அதன் பின் நிகழவுமில்லை. அந்நாளில் கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். உண்மையில் கர்த்தரே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்!

15 அதன்பிறகு, யோசுவாவும் அவனது படையினரும் கில்காலில் முகாமிட்டிருந்த இடத்துக்கு திரும்பிப் போனார்கள். 16 ஆனால் போரின்போது, ஐந்து அரசர்களும் ஓடிப் போய் மக்கெதாவிற்கு அருகிலுள்ள ஒரு குகையில் ஒளித்திருந்தனர். 17 அவர்கள் குகைகளில் ஒளிந்திருந்ததைச் சிலர் பார்த்து யோசுவாவிற்கு தெரிவித்தார்கள். 18 யோசுவா, “குகையின் நுழை வாசலைப் பெரிய கற்களைப் புரட்டி மூடிவிடுங்கள். அக்குகையைக் காவல் செய்வதற்குச் சிலரை நியமியுங்கள். 19 ஆனால் நீங்கள் அங்கு நின்றுகொண்டிருக்க வேண்டாம். பின் தொடர்ந்து உங்கள் பகைவர்களைத் தாக்குங்கள். அவர்கள் தங்கள் நகரத்திற்குச் செல்லவிடாதீர்கள். அவர்கள் மீது வெற்றியை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்துள்ளார்” என்றான்.

20 யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் பகைவர்களை வென்றனர். ஆனால் சில பகைவர்கள் அவர்கள் நகரங்களுக்குப் போய் ஒளிந்துகொண்டனர். அவர்கள் கொல்லப்படவில்லை. 21 போர் முடிந்தபின், மக்கெதாவிற்கு யோசுவாவின் ஆட்கள் திரும்பி வந்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்கெதிராக எதையும் கூறும் துணிவு அந்நாட்டு ஜனங்களுக்கு இருக்கவில்லை.

22 யோசுவா, “குகையின் வாசலை மூடியுள்ள கற்களை அகற்றி, ஐந்து அரசர்களையும் என்முன் கொண்டு வாருங்கள்” என்றான். 23 யோசுவாவின் ஆட்கள் அப்படியே செய்தனர். அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகியவற்றின் அரசர்களாவார்கள். 24 அவர்கள் அந்த ஐந்து அரசர்களையும் யோசுவாவிடம் அழைத்து வந்தனர். அவ்விடத்திற்கு வருமாறு யோசுவா தன் எல்லா ஆட்களையும் அழைத்தான். யோசுவா படையதிகாரிகளை நோக்கி, “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த அரசர்களின் கழுத்தின் மீது வையுங்கள்” என்றான். அவ்வாறே யோசுவாவின் படை அதிகாரிகள் நெருங்கி வந்து அந்த அரசர்களின் கழுத்துக்களின் மீது தங்கள் பாதங்களை வைத்தனர்.

25 அப்போது யோசுவா தன் ஆட்களை நோக்கி, “வலிமையும் துணிவும் உடையவர்களாயிருங்கள், அஞ்சாதீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகிற பகைவர்கள் எல்லோருக்கும் கர்த்தர் செய்யவிருப்பதை உங்களுக்குக் காட்டுவேன்” என்றான்.

26 யோசுவா அந்த ஐந்து அரசர்களையும் கொன்று, அவர்களின் உடல்களை ஐந்து மரங்களில் தொங்கவிட்டான். மாலைவரை யோசுவா அவர்களை மரத்திலேயே தொங்கவிட்டான். 27 சூரியன் மறையும் வேளையில் யோசுவா அவனது ஆட்களிடம் அந்த உடல்களை மரங்களிலிருந்து கீழே இறக்குமாறு கூறினான். அவர்கள் அந்த உடல்களை இறக்கி முன்பு அந்த அரசர்கள் ஒளித்திருந்த குகைளில் போட்டு மூடி, அவற்றின் வாசல்களைப் பெரிய பாறைகளால் மூடினார்கள். அந்தப் பாறைகள் இன்றைக்கும் உள்ளன.

28 அன்று யோசுவா மக்கெதா என்னும் நகரத்தை வென்றான். அந்நகரின் அரசனையும் ஜனங்களையும் கொன்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை. எரிகோவின் அரசனுக்குச் செய்தபடியே மக்கெதாவின் அரசனுக்கும் செய்தான்.

தெற்குப் பகுதியின் நகரங்களைக் கைப்பற்றுதல்

29 பின் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மக்கெதாவிலிருந்து பயணம் செய்தனர். அவர்கள் லிப்னா என்னும் நகருக்குச் சென்று, அந்நகரத்தைத் தாக்கினார்கள். 30 அந்நகரத்தையும் அதன் அரசனையும் தோற்கடிப்பதற்கு கர்த்தர் இஸ்ரவேலரை அனுமதித்தார். அந்நகரில் இருந்த ஒவ்வொருவரையும் இஸ்ரவேல் ஜனங்கள் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவின் அரசனுக்குச் செய்தபடியே லிப்னாவின் அரசனுக்கும் செய்தனர்.

31 பிறகு யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் லிப்னா நகரிலிருந்து லாகீசை நோக்கிச் சென்றனர். யோசுவாவும் அவனது படையும் லாகீசைச் சுற்றிலும் முகாமிட்டு அந்நகரத்தைத் தாக்கினார்கள். 32 லாகீசு நகரத்தைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அவர்களை அனுமதித்தார். இரண்டாம் நாளில் அந்நகரைத் தோற்கடித்தார்கள். லிப்னாவில் செய்தபடியே, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரிலிருந்த அனைவரையும் கொன்றார்கள். 33 அப்போது கேசேரின் அரசனாகிய ஓராம், லாகீசுக்கு உதவியாக வந்தான். யோசுவா அவனையும் அவனது படையையும் கூட வென்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை.

34 பிறகு, யோசுவாவும் எல்லா இஸ்ரவேல் ஜனங்களும் லாகீஸ் நகரிலிருந்து எக்லோன் நகரை நோக்கிப் பயணம் செய்தார்கள். அவர்கள் எக்லோன் நகரைச் சூழ்ந்து அதைத் தாக்கினார்கள். 35 அவர்கள் அன்றைக்கு அந்நகரைக் கைப்பற்றியதோடு அங்கு வசித்து வந்த ஜனங்களையும் கொன்றனர். லாகீஸ் நகரில் செய்தபடியே இந்த நகரிலும் செய்தனர்.

36 பின்பு யோசுவாவும் இஸ்ரவேலரும் எக்லோன் நகரத்திலிருந்து எபிரோன் என்னும் நகருக்குச் சென்று அதைத் தாக்கினார்கள். 37 அவர்கள் அந்த நகரத்தையும் அதைச் சுற்றியிருந்த ஊர்களையும் கைப்பற்றினர். நகரத்தில் வாழ்ந்தவர்களை எல்லாம் இஸ்ரவேலர் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. அவர்கள் எக்லோனிலும் அவ்வாறே செய்திருந்தனர். அவர்கள் நகரத்தை அழித்து, எல்லா ஜனங்களையும் கொன்றனர்.

38 பின்பு யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லோரும் தெபீருக்குத் திரும்பிச்சென்று, அந்நகரைத் தாக்கினார்கள். 39 அவர்கள் நகரத்தையும், அதன் அரசனையும், நகரைச் சுற்றிலுமிருந்த சிறிய ஊர்களையும், கைப்பற்றினார்கள். அந்நகரில் வாழ்ந்த அனைவரையும் கொன்றனர். யாரும் உயிரோடுவிடப்படவில்லை. எபிரோனுக்கும் அதன் அரசனுக்கும் செய்ததையே இஸ்ரவேலர் தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தனர். அவ்வாறே லிப்னாவிற்கும் அதன் அரசனுக்கும் செய்திருந்தனர்.

40 மலை நாடுகளிலும், பாலைவனங்களிலும், மேற்கு மற்றும் கிழக்கு மலையடிவாரங்களிலும், இருக்கிற நகரங்களையெல்லாம் ஆட்சி செய்த எல்லா அரசர்களையும் யோசுவா தோற்கடித்தான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எல்லா ஜனங்களையும் கொல்லும்படியாக யோசுவாவிற்குக் கூறினார். எனவே யோசுவா அந்த இடங்களில் யாரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை.

41 காதேஸ் பர்னேயாவிலிருந்து காத்சா வரைக்கும் இருந்த எல்லா நகரங்களையும் யோசுவா கைப்பற்றினான். எகிப்திலிருந்த கோசேன் நிலப் பகுதியிலிருந்து கிபியோன் வரையிலிருந்த எல்லா நகரங்களையும் கைப்பற்றினான். 42 யோசுவா அந்த நகரங்கள் அனைத்தையும் அவற்றின் அரசர்களையும் ஒரே ராணுவ நடவடிக்கையில் கைப்பற்றினான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காகப் போராடியதால் யோசுவா இதை சாதித்தான். 43 பின்பு யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கில்கால் என்னும் நகரிலிருந்த தங்கள் முகாமிற்குத் திரும்பினார்கள்.

லூக்கா 16:19-17:10

செல்வந்தனும் லாசருவும்

19 “விலையுயர்ந்த ஆடைகளை எப்போதும் அணிந்துகொண்டிருந்த ஒரு செல்வந்தன் இருந்தான். ஒவ்வொரு நாளும் விருந்துண்டு களிக்கும் அளவுக்கு மிகுந்த செல்வந்தனாக இருந்தான். 20 லாசரு என்று அழைக்கப்பட்ட மிகவும் ஏழையான மனிதனும் இருந்தான். லாசருவின் சரீரம் முழுவதும் புண்ணாக இருந்தது. செல்வந்தனின் வீட்டு வாசலருகே லாசரு அடிக்கடி படுத்துக்கிடப்பான். 21 செல்வந்தனின் மேசையில் மீதியாக விடப்பட்ட உணவுத் துணுக்குகளை உண்பதற்கு அவன் விரும்பினான். நாய்கள் வந்து அவனது புண்களை நக்கின.

22 “பின்னர் லாசரு இறந்தான். தேவதூதர்கள் லாசருவை எடுத்துச்சென்று ஆபிரகாமின் மடியில் வைத்தனர். செல்வந்தனும் இறந்து அடக்கம் செய்யப்பட்டான். 23 அவன் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தான். தொலைவிலேயே ஆபிரகாம் தன் மடியில் லாசருவை ஏந்திக்கொண்டிருப்பதைச் செல்வந்தன் பார்த்தான். 24 அவன், ‘தந்தை ஆபிரகாமே! என்னிடம் இரக்கம் காட்டுங்கள். அவனது விரலைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிர்விக்குமாறு லாசருவை என்னிடம் அனுப்புங்கள். இந்த நெருப்பில் நான் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சத்தமிட்டுக் கூறினான்.

25 “ஆனால் ஆபிரகாம், ‘எனது மகனே! நீ உலகில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்துகொள். வாழ்வின் நல்ல பொருட்கள் அனைத்தும் உனக்கிருந்தன. லாசருவிற்கு எல்லாத் தீமைகளும் நேர்ந்தன. இப்போது அவனுக்கு இங்கு ஆறுதல் கிடைக்கிறது. நீயோ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய். 26 மேலும் உனக்கும், எங்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிளவு உள்ளது. உனக்கு உதவுவதற்காக யாரும் இங்கிருந்து அங்கு கடந்து வரமுடியாது’ என்றான்.

27 “செல்வந்தன், ‘அப்படியானால் தயவுசெய்து பூமியில் இருக்கும் என் தந்தையின் வீட்டுக்கு லாசருவை அனுப்புங்கள். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். கொடுமை மிகுந்த இந்த இடத்துக்கு அவர்கள் வராதபடிக்கு லாசரு எனது சகோதரர்களை எச்சரிக்கட்டும்’ என்றான்.

29 “ஆனால் ஆபிரகாம், ‘அவர்கள் படிப்பதற்கு மோசேயின் சட்டங்களும் தீர்க்கதரிசிகளின் நூல்களும் உள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளட்டும்’ என்றான்.

30 “ஆனால் செல்வந்தன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே! இறந்தோரிலிருந்து ஒருவன் சென்று கூறினால், அவர்கள் நம்பிக்கை கொண்டு தம் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்வார்கள்’ என்றான்.

31 “ஆனால் ஆபிரகாம் அவனை நோக்கி, ‘இல்லை! உனது சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி சாய்க்கவில்லை என்றால், இறந்தோரில் இருந்து வருகின்ற ஒருவன் கூறுவதையும் கேட்கமாட்டார்கள்’ என்றான்” என இயேசு கூறினார்.

பாவமும் மன்னிப்பும்(A)

17 இயேசு தன் சீஷர்களை நோக்கி, “மக்கள் பாவம் செய்யும்படியான காரியங்கள் நிச்சயமாக நடக்கும். ஆனால் இது நடக்கும்படியாகச் செய்கிறவனுக்குத் தீமை விளையும் பலவீனமான மனிதர்கள் பாவம் செய்யும்படியாகச் செய்கிற ஒருவனுக்குத் தீமை விளையும். அவன் கழுத்தில் அரைக்கிற கல்லைக் கட்டி அவனைக் கடலில் அமிழ்த்துவது அவனுக்கு நல்லதாக இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்!”

“உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள். ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்தும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்” என்றார்.

விசுவாசத்தின் மேன்மை

சீஷர்கள் இயேசுவை நோக்கி, “இன்னும் மிகுந்த விசுவாசத்தை எங்களுக்கு வழங்குங்கள்” என்றார்கள்.

கர்த்தர், “உங்கள் விசுவாசம் ஒரு கடுகளவு பெரியதாக இருந்தால் இந்த முசுக்கட்டை மரத்தைப் பார்த்து, ‘நீ தானாகவே பெயர்ந்து கடலில் விழு’ என்று கூறினால் அந்த மரமானது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

நல்ல ஊழியர்கள்

“வயலில் வேலை செய்கிற ஊழியன் ஒருவன் உங்களில் ஒருவனுக்கு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் நிலத்தை உழுது கொண்டோ, ஆடுகளை மேய்த்துக்கொண்டோ இருக்கிறான். அவன் வயலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் அவனிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வந்து சாப்பிட உட்கார் என்பீர்களா? இல்லை. நீங்கள் அந்த ஊழியனிடம், ‘நான் உண்பதற்கு ஏதேனும் தயார் செய். நான் சாப்பிட்டு முடிக்கும்வரை பரிமாறுவதற்கான ஆடைகளை அணிந்துகொள். பிறகு நீ சாப்பிடவும், பருகவும் செய்யலாம்’ என்பீர்கள். தன் வேலையைச் செய்வதற்காக அவனுக்கு விசேஷமாக நன்றி செலுத்த வேண்டியது இல்லை. அவனது எஜமானன் சொல்வதை மட்டும் அவன் செய்துகொண்டிருக்கிறான். 10 அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் செய்யும்படியாக கூறப்பட்ட காரியங்களை நீங்கள் செய்யும்போது நீங்கள், ‘எந்த விசேஷ நன்றியறிதலுக்கும் நாங்கள் தகுதியுடையவர்கள் அல்ல. நாங்கள் செய்யவேண்டிய வேலையையே செய்து முடித்தோம்’ என்று சொல்ல வேண்டும்” என்றார்.

சங்கீதம் 83

ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.

83 தேவனே, அமைதியாய் இராதேயும்!
    உமது செவிகளை மூடிக்கொள்ளாதேயும்!
    தேவனே தயவாய் எதையாவது பேசும்.
தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள்.
    உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும்.
உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டஙகளை வகுக்கிறார்கள்.
    நீர் நேசிக்கும் ஜனங்களுக்கு எதிராக உமது பகைவர்கள் திட்டங்களை கலந்து ஆலோசிக்கிறார்கள்.
பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம்.
    பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்.”
தேவனே, அந்த ஜனங்கள் எல்லோரும் உமக்கும்
    நீர் எங்களோடு செய்த உமது உடன்படிக்கைக்கும் எதிராகப் போராட ஒருமித்துக் கூடினார்கள்.
6-7 அப்பகைவர்கள் எங்களை எதிர்க்க ஒருமித்துச் சேர்ந்தார்கள்.
    இஸ்மவேலராகிய ஏதோமியரும், மோவாபியரும், ஆகாரின் சந்ததியினரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், பெலிஸ்தரும், தீருவில் வசிக்கும் ஜனங்களும், ஆகிய எல்லோரும் எங்களை எதிர்க்க ஒருமித்துக் கூடினார்கள்.
அசீரியரும்கூட அந்த ஜனங்களோடு சேர்ந்தார்கள்.
    லோத்தின் சந்ததியினர் மிகுந்த வல்லமை பெறும்படிச் செய்தார்கள்.
தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும்
    கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும்.
10 நீர் அவர்களை எந்தோரில் தோற்கடித்தீர்.
    அவர்கள் சரீரங்கள் நிலத்தில் விழுந்து அழிந்தன.
11 தேவனே, பகைவனின் தலைவர்களைத் தோற்கடியும்.
    ஓரேபுக்கும் சேபுக்கும் செய்தபடியே செய்யும்.
    சேபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்தபடியே செய்யும்.
12 தேவனே, அந்த ஜனங்கள்
    உமது தேசத்தை விட்டுப் போகும்படியாக எங்களை வற்புறுத்த விரும்பினார்கள்!
13 தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும்.
    காற்றுப் பறக்கடிக்கும் புல்லைப்போல் அந்த ஜனங்களைச் சிதறடியும்.
14 நெருப்பு காட்டை அழிப்பதைப்போலவும்
    பெருநெருப்பு மலைகளைச் சுடுவது போலவும் பகைவனை அழித்துப்போடும்.
15 தேவனே, புயலில் அலைக்கழிக்கப்படும் துகளைப்போல அந்த ஜனங்களை துரத்திவிடும்.
    அவர்களை அசையும், அவர்களைப் பெருங்காற்றைப்போல நின்று பறக்கடியும்.
16 தேவனே அவர்கள் உண்மையிலேயே சோர்வுடையவர்கள் என்பதை அந்த ஜனங்கள் அறியும்படி அவர்களுக்குப் போதியும்.
    அப்போது அவர்கள் உமது நாமத்தை தொழுதுகொள்ள விரும்புவார்கள்!
17 தேவனே, அந்த ஜனங்களை அச்சுறுத்தி, அவர்கள் என்றென்றும் வெட்கமடையச் செய்யும்.
    அவர்களை இழிவுப்படுத்தி, அழித்துப்போடும்.
18 அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள்.
    உமது நாமம் யேகோவா என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
மிக உன்னதமான தேனாகிய நீர்
    உலகம் முழுவதற்கும் தேவன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

நீதிமொழிகள் 13:4

சோம்பேறி பலவற்றை விரும்புவான், ஆனால் அவனால் அவற்றை அடைய முடிவதில்லை. ஆனால் கடினமாக உழைக்கிறவர்கள் தாம் விரும்புவதைப் பெற் றுக்கொள்வார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center