Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NLT. Switch to the NLT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 31:1-32:27

யோசுவா புதிய தலைவனாக இருப்பான்

31 பிறகு மோசே போய் இஸ்ரவேலின் அனைத்து

ஜனங்களிடம் இவற்றைப் பேசினான். மோசே அவர்களிடம், “நான் இன்று 120 வயதுள்ளவன். இனிமேல் என்னால் உங்களை வழிநடத்த முடியாது. கர்த்தர் என்னிடம்: ‘நீ யோர்தானைக் கடந்து போகமாட்டாய்’ என்று சொன்னார். ஆனால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அந்த நாட்டிற்குள் வழிநடத்திச் செல்வார். உனக்காக கர்த்தர் இந்த ஜாதிகளை அழிப்பார். நீ அவர்களது நாட்டை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வாய், ஆனால், யோசுவா உங்களை வழி நடத்த வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்.

“கர்த்தர் சீகோனையும், ஓகையும் அழித்தார். கர்த்தர் அந்த எமோரிய அரசர்களையும் அழித்தார். கர்த்தர் உனக்காக மீண்டும் அதனைச் செய்வார். அந்த ஜாதிகளைத் தோற்கடிக்க கர்த்தர் உதவி செய்வார். ஆனால் நான் உங்களுக்குச் சொன்னபடி எல்லாவற்றையும் நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டும். பலமுள்ளவர்களாகவும் தைரியம் உள்ளவர்களாகவும் இருங்கள். அந்த ஜனங்களுக்குப் பயப்பட வேண்டாம். ஏனென்றால், உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்றான்.

பின்பு மோசே யோசுவாவை அழைத்தான். மோசே யோசுவாவிடம் சொல்வதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். அவன் “பலமாகவும் தைரியமாகவும் இரு. அவர்களது முற்பிதாக்களுக்கு தருவதாக கர்த்தர் வாக்களித்த நாட்டிற்கு நீதான் இவர்களை வழி நடத்தவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ உதவ வேண்டும். கர்த்தர் உன்னை வழிநடத்துவார். அவர் தாமே உன்னுடன் இருக்கிறார். அவர் உன்னைக் கைவிடமாட்டார். உன்னை விட்டு விலகமாட்டார். கவலைப்படாதே. பயப்படாதே” என்றான்.

மோசே போதனைகளை எழுதுகிறான்

பிறகு மோசே போதனைகளை எழுதி ஆசாரியர்களிடம் கொடுத்தான். அந்த ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் கோத்திரத்தினர். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் வேலையை உடையவர்கள். மோசே போதனைகளை இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அனைவருக்கும் கொடுத்தான். 10 பிறகு, மோசே தலைவர்களிடம் பேசினான். அவன், “ஒவ்வொரு ஏழு ஆண்டின் முடிவிலும் விடுதலைக்கான ஆண்டில் அடைக்கல கூடாரப் பண்டிகையில், இந்தப் போதனைகளை ஜனங்களுக்கு வாசியுங்கள். 11 அப்பொழுது, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் கூடி வருவார்கள். அவர்கள் உன் தேவனாகிய கர்த்தர் குறிப்பிடும் சிறப்பான இடத்தில் அவரைச் சந்திக்க வருவார்கள். பிறகு நீ ஜனங்களுக்கு போதனைகளை வாசிக்க வேண்டும். அப்பொழுது அவற்றை அவர்கள் கேட்க முடியும். 12 அனைத்து ஜனங்களையும் ஒன்று கூட்டு. ஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள், உங்கள் நகரங்களில் வாழும் அயல்நாட்டுக்குடிகள் என அனைவரையும் கூட்டு. போதனைகளை அவர்கள் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். போதனைகளில் உள்ளவற்றுக்குக் கீழ்ப்படிவார்கள். 13 அவர்களது சந்ததிகள் போதனைகளை அறிந்திராவிட்டால், பிறகு அவர்கள் அவற்றைக் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நீ உனது நாட்டில் வாழும் காலம்வரை அவர்கள் அவரை மதிப்பார்கள். நீ விரைவில் யோர்தானை கடந்துபோய் அந்த நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வாய்” என்றான்.

கர்த்தர் மோசேயையும் யோசுவாவையும் அழைக்கிறார்

14 கர்த்தர் மோசேயிடம், “இப்பொழுது நீ மரணமடைவதற்குரிய நேரம் நெருங்கியுள்ளது. பரிசுத்தக் கூடாரத்திற்குள் வரும்படி யோசுவாவிடம் சொல். அவன் செய்ய வேண்டியவற்றை நான் யோசுவாவிடம் கூறுவேன்” என்றார். எனவே மோசேயும் யோசுவாவும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சென்றார்கள்.

15 கர்த்தர் கூடாரத்திலே உயரமான மேகத் தூணில் தோன்றினார். உயரமான அந்த மேகத்தூண் கூடாரத்தின் வாசலுக்கு மேல் நின்றது! 16 கர்த்தர் மோசேயிடம், “நீ விரைவில் மரணமடைவாய். நீ உனது முற்பிதாக்களோடு போய்ச் சேர்ந்தபிறகு இந்த ஜனங்கள் என் மீதுள்ள நம்பிக்கையில் தொடரமாட்டார்கள். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை அவர்கள் முறிப்பார்கள். அவர்கள் என்னைவிட்டு விலகி வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் போகிற நாட்டில் உள்ள பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள். 17 அந்த நேரத்தில் நான் அவர்கள் மேல் மிகவும் கோபங்கொள்வேன். நான் அவர்களை விட்டு விலகுவேன். அவர்களுக்கு உதவ நான் மறுப்பேன். அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். பிறகு அவர்கள், ‘இத்தீமைகள் எல்லாம் எங்களுக்கு ஏற்படுகின்றன. ஏனென்றால், தேவன் எங்களோடு இல்லை’ என்பார்கள். 18 நான் அவர்களுக்கு உதவ மறுப்பேன். ஏனென்றால், அவர்கள் தீமை செய்திருக்கின்றனர். மற்ற தெய்வங்களை வணங்கினார்கள்.

19 “எனவே, இப்பாடலை எழுது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதனைக் கற்றுக்கொடு. இப்பாடலைப் பாட அவர்களுக்குக் கற்றுக்கொடு. பிறகு இப்பாடல் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக எனக்குச் சாட்சியாக இருக்கும். 20 நான் அவர்களது முற்பிதாக்களுக்கு கொடுப்பதாக வாக்களித்த பல நன்மைகள் நிறைந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அவர்கள் உண்ண விரும்புகின்றவற்றை எல்லாம் பெறுவார்கள். அவர்கள் வளமான வாழ்வைப் பெறுவார்கள். ஆனால், பின்னர் அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பி அவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலகி எனது உடன்படிக்கையை உடைப்பார்கள். 21 பிறகு பல பயங்கரமானவை அவர்களுக்கு நிகழும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். அப்போது, அவர்களின் ஜனங்கள் இப்பாடலை நினைவு வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவு தவறியுள்ளனர் என்பதை இப்பாடல் காட்டும். நான் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அதுவரை அழைத்துப் போயிருக்கமாட்டேன். ஆனால் ஏற்கெனவே அவர்கள் அங்கே என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன்” என்று கூறினார்.

22 எனவே அதே நாளில் மோசே அப்பாடலை எழுதினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அந்தப் பாட்டைக் கற்றுத்தந்தான்.

23 பின்னர், கர்த்தர் நூனின் மகனான யோசுவாவிடம் பேசி, “பலமுள்ளவனாகவும், தைரியமுள்ளவனாகவும் இரு. நான் வாக்களித்த நாட்டிற்கு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்வாய். நான் உன்னோடு இருப்பேன்” என்று கூறினார்.

மோசே இஸ்ரவேல் ஜனங்களை எச்சரிக்கிறான்

24 மோசே கவனமாக இப்போதனைகள் எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தபோது, 25 அவன் லேவியர்களுக்கு ஒரு ஆணை கொடுத்தான். (இவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லுகிறவர்கள்.) மோசே, 26 “இந்த போதனைகளின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இதனை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு எதிரான சாட்சியாக அங்கே இருக்கும். 27 நீங்கள் கடினமானவர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் உங்கள் சொந்த வழியில் வாழ விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். பாருங்கள், நான் உங்களோடு இருக்கும்போதே நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நான் மரித்தபிறகும் நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுப்பீர்கள். 28 எல்லா அதிகாரிகளையும், கோத்திரங்களின் தலைவர்களையும் ஒன்று கூட்டுங்கள். நான் அவர்களிடம் இவற்றைச் சொல்வேன். நான் பரலோகத்தையும், பூமியையும் அவர்களுக்கு எதிராக சாட்சியாக அழைப்பேன். 29 எனது மரணத்திற்குப் பிறகு நீங்கள் கெட்டவர்களாவீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் பின்பற்றுவதற்காக நான் கட்டளையிட்ட வழிகளை விட்டு விலகுவீர்கள். ஆகையால், எதிர்காலத்தில் உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால், கர்த்தர் தீங்கு என்று சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் செய்த தீமைகளினால் அவரைக் கோபமடையச் செய்கிறீர்கள்” என்று சொன்னான்.

மோசேயின் பாடல்

30 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூட்டப்பட்டனர். மோசே அவர்களுக்காக இந்தப் பாடலைப் பாடினான். மோசே முழுப்பாடலையும் பாடினான்:

32 “வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன்.
    பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள்.
எனது போதனைகள் மழையைப் போன்று வரும்,
    பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும்,
    மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும்,
    பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும்.
நான் கர்த்தருடைய நாமத்தைப் பேசுவேன். தேவனைப் போற்றுங்கள்!

“அவர் பாறை (கர்த்தர்), அவரது செயல்கள் பரிபூரணமானவை!
    ஏனென்றால் அவரது வழிகள் எல்லாம் சரியானவை!
தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர்.
    அவர் நீதியும் செம்மையுமானவர்.
நீங்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல.
    உங்களது பாவங்கள் அவரை அசுத்தமாக்கியது.
    நீங்கள் கோணலான பொய்யர்கள்.
உங்களுக்காக இவ்வளவு செய்த கர்த்தருக்கு இந்த வழியிலா நீங்கள் திரும்ப கொடுப்பீர்கள்? இல்லை!
    நீங்கள் அறிவில்லாத அஞ்ஞான ஜனங்கள்.
கர்த்தர் உங்களது தந்தையாக இருக்கிறார்.
    அவர் உங்களை உண்டாக்கினார். அவர் உங்களைத் தாங்குகிறார்.

“நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப்பாருங்கள்.
    பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள்.
உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான்.
    உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள்.
உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து
    ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார்.
அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார்.
    இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார்.
கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு,
    யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம்.

10 “கர்த்தர் யாக்கோபை (இஸ்ரவேல்) ஒரு வனாந்திரத்தில் கண்டுபிடித்தார்.
    அது ஒரு காலியான காற்று மிகுந்த நிலம்.
கர்த்தர் அவனைக் காப்பாற்றுவதற்கு யாக்கோபுவைச் சுற்றி வளைத்துக்கொண்டார்.
    அவர் அவனை தன் சொந்த கண்மணியைப் போல் காத்தார்.
11 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார்.
    ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும்.
பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும்.
    அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும்,
அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும்.
    கர்த்தர் இதனைப் போன்றவர்.
12 கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார்.
    அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை.
13 கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார்.
    யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான்.
கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார்.
    கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார்.
14 கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார்.
    அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும்,
சிறந்த கோதுமையையும் கொடுத்தார்.
    இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள்.

15 “ஆனால் யெஷுரன் கொழுத்துப்போய் கொழுத்த காளையைப்போன்று உதைத்தான்
    (ஆமாம், நீங்கள் நன்றாகப் போஷிக்கப்பட்டீர்கள்! நீங்கள் திருப்தியாகி கொழுத்தீர்கள்.)
அவன் தன்னை உண்டாக்கின தேவனை விட்டு விலகினான்.
    தன்னை இரட்சித்த பாறையை (தேவன்) விட்டு ஓடினான்.
16 கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர்.
    கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள்.
17 அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர்.
    அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும்.
    அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும்.
18 நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டு விலகினாய்.
    உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய்.

19 “கர்த்தர் இதனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார்.
    ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்!
20 அதனால் கர்த்தர் கூறினார்,
‘நான் அவர்களிடமிருந்து திரும்புவேன்.
    அப்போது அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கட்டும்!
அவர்கள் மிகவும் கலகக்கார ஜனங்களாய் இருக்கின்றனர்.
அவர்கள் தம் பாடங்களைப் படிக்காத பிள்ளைகளைப் போன்று இருக்கின்றார்கள்.
21 அவர்கள் பிசாசுகளை தொழுதுகொண்டு என்னைப் பொறாமைபடும்படிச் செய்தனர்.
    இவ்விக்கிரகங்கள் உண்மையான தேவன் அல்ல.
அவர்கள் பயனற்ற விக்கிரகங்கள் மூலம், என்னைக் கோபமடையச் செய்தனர்.
    எனவே, நான் இஸ்ரவேலுக்குப் பொறாமையை உண்டாக்குவேன். ஒரு தேசமாக மதிக்கப்படாத மூட ஜனங்களின் மூலம் நானும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குவேன்.
22 எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது.
    அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது.
    அது பூமியையும், பூமி உற்பத்தி செய்யும் பொருட்களையும் எரிக்கிறது.
    அது மலைகளின் அஸ்திவாரங்களையும் எரிக்கிறது!

23 “‘நான் இஸ்ரவேலர்களுக்குத் துன்பங்களைக் கொண்டுவருவேன்.
    நான் அவர்கள் மீது எனது அம்புகளை எய்வேன்.
24 அவர்கள் பசியால் மெலிந்து பலவீனம் அடைவார்கள்.
    பயங்கரமான நோய்கள் அவர்களை அழிக்கும்.
நான் அவர்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன்.
    விஷப் பாம்புகளும் பல்லிகளும் அவர்களைக் கடிக்கும்.
25 வீரர்கள் அவர்களை வீதிகளில் கொல்லுவார்கள்.
அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே பயப்படுவார்கள்.
    படைவீரர்கள் இளைஞர்களையும்,
இளம் பெண்களையும் கொல்வார்கள்.
    அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கொல்வார்கள்.

26 “‘நான் இஸ்ரவேலர்களை அழிக்க விரும்பினேன்.
    எனவே ஜனங்கள் அவர்களை முழுமையாக மறப்பார்கள்!
27 அவர்களது பகைவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நான் அறிவேன்.
    பகைவருக்கு அது புரியாது,
அவர்கள் பெருமை கொண்டு சொல்வார்கள்:
    “கர்த்தர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் வென்றோம்!”’

லூக்கா 12:8-34

இயேசுவைக் குறித்து வெட்கப்படாதீர்(A)

“நான் உங்களுக்குச் சொல்வதாவது, பிறர் முன்னிலையில் ஒருவன் எழுந்து நின்று என்மீது அவனுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினால், நானும் அவன் எனக்குரியவன் என்பதைக் கூறுவேன். தேவதூதர்கள் முன்பாக இதைச் சொல்வேன். ஆனால் ஒருவன் மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று என்னை நம்பவில்லை என்று கூறுவானேயானால், அம்மனிதன் எனக்குரியவன் அல்லன். தேவ தூதர்களுக்கு முன்னிலையில் நான் இதைக் கூறுவேன்.

10 “மனித குமாரனுக்கு எதிராக ஒருவன் எதையேனும் கூறினால், அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவற்றை ஒருவன் பேசினால் அவன் மன்னிக்கப்படமாட்டான்.

11 “ஜெப ஆலயத்தில் தலைவர்களுக்கும், முக்கியமான மனிதர்களுக்கும் முன்பாக, உங்களைக் கொண்டு வரும்போது நீங்கள் எப்படி தற்காத்துக்கொள்வது அல்லது எதைக் கூறவேண்டும் என்று கலக்கம் அடையவேண்டாம். 12 அந்த வேளையில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கூற வேண்டியதை உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.

தன்னலம் கூடாது

13 கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் இயேசுவை நோக்கி, “போதகரே, எங்கள் தந்தை இறந்து போனார். தந்தையின் உடைமையை என்னோடு பங்கிட என் தம்பிக்குச் சொல்லுங்கள்” என்றான்.

14 ஆனால் இயேசு அவனை நோக்கி, “உங்கள் நடுவில் நியாயாதிபதியாக நான் இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ யார் கூறியது?” என்று கேட்டார். 15 பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார்.

16 பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. 17 அச்செல்வந்தன் தனக்குள், ‘நான் என்ன செய்வேன்? விளைச்சலை எல்லாம் வைப்பதற்கு இடம் இல்லையே’ என்று எண்ணினான்.

18 “பின்பு அச்செல்வந்தன், ‘நான் செய்ய வேண்டியதை அறிவேன். எனது களஞ்சியங்களை இடித்துவிட்டு பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன். அவற்றில் கோதுமையையும், நல்ல பொருட்களையும் நிரப்பி வைப்பேன். 19 அப்போது நான் எனக்குள், என்னிடம் மிகுதியான அளவில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கான பொருட்களைச் சேமித்துள்ளேன். ஓய்வுகொள், உண், குடி, வாழ்க்கையை அனுபவி என்று கூறுவேன்’ என்றான்.

20 “ஆனால் தேவன் அவனை நோக்கி, ‘மூடனே! இன்று இரவில் நீ மரிப்பாய். உனக்காக வைத்துள்ள பொருட்கள் என்ன ஆகும்? அப்போது அப்பொருட்களைப் பெறுவது யார்?’ என்றார்.

21 “தனக்காகவே மட்டும் பொருட்களைச் சேர்க்கின்ற மனிதனின் நிலை இத்தகையது. தேவனுடைய பார்வையில் அம்மனிதன் செல்வந்தன் அல்லன்” என்றார் இயேசு.

கவலை வேண்டாம்(B)

22 இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். 23 உணவைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியமானது. உடைகளைக் காட்டிலும் சரீரம் மிகவும் முக்கியமானது. 24 பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. பறவைகள் வீடுகளிலோ, களஞ்சியங்களிலோ உணவைச் சேமிப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். 25 கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது. 26 சிறிய காரியங்களை உங்களால் செய்ய முடியாவிட்டால் பெரிய காரியங்களைக் குறித்துக் கவலைப்படுவானேன்?

27 “காட்டுப் பூக்களைப் பாருங்கள். அவை வளர்வதைக் கவனியுங்கள். அவை தமக்காக உழைப்பதோ, துணிகளை நெய்வதோ கிடையாது. ஆனால் பெரிய செல்வம் மிக்க அரசனான சாலமோன் கூட அப்பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடுத்தியதில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். 28 வயலிலுள்ள புல்லுக்கும் தேவன் அத்தகைய ஆடையை அணிவிக்கிறார். இன்று அந்தப் புல் உயிர் வாழும். நாளையோ எரிப்பதற்காகத் தீயில் வீசப்படும். எனவே தேவன் இன்னும் அதிகமாக உங்களுக்கு உடுத்துவிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். நம்பிக்கையில் குறைவுபடாதீர்கள்.

29 “எதை உண்போம், எதைக் குடிப்போம், என்பதைக் குறித்து எப்போதும் எண்ணாதீர்கள். அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். 30 இவ்வுலக மக்கள் அனைவரும் அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவை உங்களுக்குத் தேவை என உங்கள் தந்தைக்குத் தெரியும். 31 நீங்கள் விரும்பும் காரியம் தேவனுடைய இராஜ்யமாக இருக்க வேண்டும். அப்போது (உங்களுக்குத் தேவையான) மற்ற எல்லாப் பொருட்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.”

பணத்தை நம்பாதீர்கள்

32 “சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார். 33 உங்களிடமிருக்கும் பொருட்களை விற்று, அப்பணத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள். இந்த உலகத்தின் செல்வங்கள் நிலைத்திருப்பதில்லை. பரலோகத்தின் பொக்கிஷத்தைப் பெறுங்கள். அந்தப் பொக்கிஷம் என்றும் நிலைத்து நிற்கும். திருடர்கள் பரலோகத்தில் உள்ள பொக்கிஷத்தைத் திருட முடியாது. பூச்சிகள் அதை அழிக்கமுடியாது. 34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.”

சங்கீதம் 78:32-55

32 ஆனால் ஜனங்களோ இன்னும் பாவம் செய்தார்கள்!
    தேவன் செய்ய வல்ல அற்புதமான காரியங்களை அவர்கள் சார்ந்திருக்கவில்லை.
33 எனவே தேவன் அவர்கள் பயனற்ற வாழ்க்கையைச்
    சில அழிவுகளினால் முடிவுறச் செய்தார்.
34 தேவன் சிலரைக் கொன்றபோது மற்றோர் அவரைப் பின்பற்றினார்கள்.
    அவர்கள் தேவனுக்குப் பின்னே விரைந்தோடி வந்தார்கள்.
35 தேவனே அவர்கள் கன்மலையென்று அந்த ஜனங்கள் நினைவுக்கூர்ந்தார்கள்.
    மிக உன்னதமான தேவன் அவர்களைக் காப்பாற்றினார் என்பதை நினைத்து பார்த்தார்கள்.
36 அவர்கள் அவரை நேசித்ததாக கூறினார்கள், ஆனால் பொய் கூறினார்கள்.
    அவர்கள் உறுதியாக இருக்கவில்லை.
37 அவர்கள் இருதயங்கள் உண்மையாகவே தேவனோடு இருக்கவில்லை.
    ஆண்டவர் அவர்களோடு செய்த உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துக்கொள்ளவில்லை.
38 ஆனால் தேவன் இரக்கமுள்ளவராயிருந்தார்.
    அவர்கள் பாவங்களுக்காக அவர் அவர்களை மன்னித்தார்.
அவர் அவர்களை அழிக்கவில்லை. பலமுறை தேவன் அவரது கோபத்தை அடக்கிக் கொண்டார்.
    தேவன் தாம் மிகுந்த கோபமடையாதபடி பார்த்துக்கொண்டார்.
39 அவர்கள் ஜனங்களே என்பதை தேவன் நினைவுக்கூர்ந்தார்.
    ஜனங்கள் வீசும் காற்றைப் போன்றவர்கள், பின்பு அது மறைந்துப்போகும்.
40 ஓ! அந்த ஜனங்கள் பாலைவனத்தில் தேவனுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தினார்கள்!
    அவருக்கு மிகுந்த விசனமடையச் செய்தார்கள்.
41 மீண்டும் மீண்டும் அந்த ஜனங்கள் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள்.
    இஸ்ரவேலின் பரிசுத்தரை அவர்கள் உண்மையாகவே புண்படுத்தினார்கள்.
42 தேவனுடைய வல்லமையை அந்த ஜனங்கள் மறந்துவிட்டார்கள்.
    பகைவரிடமிருந்து பலமுறை தேவன் அவர்களைக் காத்தார் என்பதை அவர்கள் மறந்தார்கள்.
43 எகிப்தில் ஆண்டவர் நடத்திய அற்புதங்களையும்,
    சோவானின் களங்களில் (வயல்களில்) நடந்த அற்புதங்களையும் அவர்கள் மறந்தார்கள்.
44 தேவன் ஆறுகளை இரத்தமாக்கினார்.
    எகிப்தியர்கள் அந்த தண்ணீரைப் பருக முடியவில்லை.
45 தேவன் கூட்டமாக வண்டுகளை அனுப்பினார், அவை எகிப்தியரைக் கடித்தன.
    தேவன் தவளைகளை அனுப்பினார். அவை எகிப்தியரின் வாழ்க்கையைக் கெடுத்தன.
46 தேவன் அவர்கள் பயிர்களைப் புழு பூச்சிகளுக்குக் கொடுத்தார்.
    அவர்களின் பிற தாவரங்களை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார்.
47 தேவன் அவர்களின் திராட்சைக் கொடிகளைக் கல்மழையால் அழித்தார்.
    அவர்களின் மரங்களை அழிக்கப் பெருங்கல்மழையைப் பயன்படுத்தினார்.
48 கல்மழையால் தேவன் அவர்கள் விலங்குகளைக் கொன்றார்.
    அவர்கள் மந்தைகள் (ஆடு, மாடுகள்) மின்னலால் தாக்குண்டு மடிந்தன.
49 தேவன் எகிப்தியருக்கு அவரது கோபத்தைக் காண்பித்தார்.
    அவர்களுக்கு எதிராக அழிக்கும் தேவதூதர்களை அனுப்பினார்.
50 தேவன் தமது கோபத்தைக் காட்ட ஒரு வழியைக் கண்டார்.
    அவர் அந்த ஜனங்கள் வாழ அனுமதிக்கவில்லை.
    கொடிய நோயால் அவர்கள் மடியச் செய்தார்.
51 எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகளை தேவன் கொன்றார்.
    காமின் குடும்பத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் அவர் கொன்றார்.
52 அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார்.
    அவர் தமது ஜனங்களை மந்தைகளைப் போல் பாலைவனத்தினூடே வழிநடத்திச் சென்றார்.
53 அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழிகாட்டி நடத்தினார்.
    தேவனுடைய ஜனங்கள் அஞ்ச வேண்டியது எதுவுமில்லை.
    தேவன் அவர்களது பகைவர்களைச் செங்கடலில் அமிழச் செய்தார்.
54 தேவன் அவரது ஜனங்களை அவரது பரிசுத்த தேசத்திற்கு வழிநடத்தினார்.
    தமது வல்லமையால் எடுத்துக்கொண்ட மலைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
55 பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார்.
    தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார்.
    தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார்.

நீதிமொழிகள் 12:21-23

21 நல்லவர்கள் கர்த்தரால் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள். ஆனால் தீயவர்களுக்கோ நிறைய துன்பங்கள் இருக்கும்.

22 கர்த்தர் பொய் சொல்லுபவர்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் உண்மை சொல்பவர்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

23 அறிவுள்ளவன் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லமாட்டான். ஆனால் அறிவில்லாதவனோ எல்லாவற்றையும் சொல்லி தன்னை முட்டாளாகக் காட்டிக்கொள்வான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center