Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NIV. Switch to the NIV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 13-14

கைப்பற்றப்படாத நாடுகள்

13 யோசுவா வயது முதிர்ந்தவனாக இருக்கும்போது, கர்த்தர் அவனை நோக்கி, “யோசுவா உனக்கு வயது முதிர்ந்துவிட்டது, ஆனால் நீ கைப்பற்றவேண்டிய நாடுகள் இன்னும் பல உள்ளன. கெசூரிம் தேசத்தையோ, பெலிஸ்தியரின் தேசத்தையோ நீ இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை. எகிப்திலுள்ள சீகேபர் நதியின் தேசங்களையும், வடக்கில் எக்ரோனின் கரையிலுள்ள நாடுகளையும் நீ கைப்பற்றவில்லை. அது இன்னமும் கானானியருக்குரியதாக உள்ளது. காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகிய இடங்களின் ஐந்து பெலிஸ்திய தலைவர்களையும் நீ தோற்கடிக்க வேண்டியுள்ளது. கானானியரின் நாட்டிற்குக் கிழக்கேயுள்ள ஏவியரையும் நீ வெல்லவேண்டும். கிப்லியரின் தேசத்தையும் நீ இன்னும் வெற்றி கொள்ளவில்லை. எர்மோன் மலையின் கீழேயுள்ள பாகால்காத்திற்குக் கிழக்கில் லீபனோனின் பகுதியிலிருந்து லெபோ ஆமாத் வரைக்கும் நீ கைப்பற்ற வேண்டும்.

“சீதோனின் ஜனங்கள் லீபனோனிலிருந்து மிஸ்ரெபோத்மாயீம் வரையுள்ள மலைநாட்டில் வசித்து வருகின்றனர். இஸ்ரவேலருக்காக இவர்கள் அனைவரையும் நான் துரத்துவேன். இஸ்ரவேலின் ஜனங்களுக்காக தேசத்தைப் பிரிக்கும்போது இத்தேசத்தையும் ஞாபகப்படுத்திக்கொள். நான் உனக்குச் சொன்னபடியே இதைச் செய். இப்போது, தேசத்தை ஒன்பது கோத்திரத்தினருக்கும், மனாசே என்னும் கோத்திரத்தின் சரிபாதியினருக்கும் பிரித்துக்கொடு” என்றார்.

தேசத்தைப் பங்கிடுதல்

ரூபன், காத், ஆகிய கோத்திரத்தினருக்கும், மனாசே என்னும் கோத்திரத்தின் பாதிப் பகுதியினரும் அவர்களுக்குரிய தேசத்தை ஏற்கெனவே பெற்றிருந்தார்கள். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே, யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தான். ஆரோவேர் நதிக்கருகிலுள்ள அர்னோன் நதியில் அத்தேசம் ஆரம்பித்து நதியின் நடுப்பகுதியிலுள்ள ஊர்வரைக்கும் அவர்களது தேசம் இருந்தது. அது மெதபாவிலிருந்து தீபோன்வரைக்குமுள்ள சமவெளியையும் கொண்டிருந்தது. 10 அத்தேசத்தில் எமோரியரின் அரசனாகிய சீகோன் ஆண்டிருந்த எல்லா ஊர்களும் அடங்கியிருந்தன. அந்த அரசன் எஸ்போன் நகரில் ஆண்டு வந்தான். எமோரியர் வாழ்ந்த பகுதி வரைக்கும் அத்தேசம் தொடர்ந்தது. 11 கீலேயாத் என்னும் ஊரும் அத்தேசத்தில் இருந்தது. கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்கள் வாழ்ந்த பகுதியும் அத்தேசத்தில் இருந்தது. எர்மோன் மலைப்பகுதி முழுவதும் சலேகாவரைக்குமான பாசானின் பகுதியும் அந்த நிலப் பகுதியில் அடங்கி இருந்தன. 12 ஓகின் அரசுக்குட்பட்ட நாடு முழுவதும் அதில் அடங்கியிருந்தது. பாசானில் ஓக் என்ற அரசன் ஆண்டு வந்தான். முன்பு அஸ்தரோத்திலும், எத்ரேயியிலும் அவன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். ஓக் ரெபயத் ஜனங்கள் இனத்தவன், முன்பே மோசே இவர்களை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றியிருந்தான். 13 கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்களை, இஸ்ரவேல் ஜனங்கள் துரத்தவில்லை, இன்றும் இஸ்ரவேல் ஜனங்களோடுகூட அவர்களும் வாழ்கின்றனர்.

14 லேவி கோத்திரத்திற்கு எந்த நிலப் பகுதியும் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு, தகன பலியாகக் கொடுக்கப்பட்ட மிருகங்கள் அனைத்தும் லேவி கோத்திரத்தினரைச் சார்ந்தவர்களுக்கு உரியனவாயின. கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தது அதுவே.

15 ரூபனின் கோத்திரத்திலுள்ள ஒவ்வொரு கோத்திரத்திற்கும் மோசே வழங்கியிருந்த சிறிய நிலப்பகுதியை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர்: 16 அது அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேரிலிருந்து மெதெபா என்ற ஊர் வரைக்கும் உள்ள பகுதியாகும். அந்நதியின் மத்தியிலுள்ள ஊரையும், சமவெளிப் பகுதியையும் அது உள்ளடக்கியிருந்தது. 17 எஸ்போன் வரைக்கும் அத்தேசம் இருந்தது. சமவெளியின் எல்லா ஊர்களையும் அது கொண்டிருந்தது. தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால், மெயோன் ஆகியப் பகுதிகளும், 18 யாகாசா, கொதெமோத், மேபாகாத், 19 கீரியாத்தாயீம், சிப்மா, ஆகியவையும், பள்ளத்தாக்கைச் சார்ந்த மலைப் பகுதிகளில் உள்ள செரேத்சகார், 20 பெத்பேயோர், பிஸ்காவின் மலைகள், பெத்யெசிமோத் ஆகிய பகுதிகளும் அந்த ஊர்களில் அடங்கியிருந்தன. 21 அத்தேசம் சமவெளியிலுள்ள எல்லா ஊர்களையும், எமோரியரின் அரசனாகிய சீகோன் அரசாண்ட எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போன் என்னும் ஊரில் அந்த அரசன் அரசாட்சி செய்தான். ஆனால் மோசே அவனையும், மீதியானியரின் தலைவர்களையும் தோற்கடித்தான். ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா ஆகியோர் அத்தலைவர்கள் ஆவார்கள். (இத்தலைவர்கள் எல்லோரும் சீகோனுடன் ஒன்றுசேர்ந்து மோசேயை எதிர்த்துப் போரிட்டனர்.) இத்தலைவர்கள் எல்லோரும் அந்நாட்டில் வசித்தனர். 22 இஸ்ரவேல் ஜனங்கள் பேயோரின் மகனாகிய பாலாமைத் தோற்கடித்தனர். (எதிர்காலம் பற்றி தனது மந்திர சக்தியால் சொல்வதற்குப் பாலாம் முயன்று கொண்டிருந்தான்.) போரின்போது இஸ்ரவேல் ஜனங்கள் பலரைக் கொன்றனர். 23 யோர்தான் நதிக்கரை ரூபனுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லையாக அமைந்தது. மேலே கூறப்பட்ட ஊர்களும் அவற்றின் வயல்களும் ரூபனுக்குச் சொந்தமான தேசத்தில் இருந்தன,

24 காத்தின் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி மோசே இத்தேசத்தைக் கொடுத்திருந்தான்:

25 யாசேரின் தேசமும் கீலேயாத்தின் எல்லா ஊர்களும், ராபாவின் அருகேயுள்ள ஆரோவேர் வரைக்குமான அம்மோனியரின் தேசத்தில் பாதியையும் கொடுத்தான். 26 அத்தேசம் எஸ்போனிலிருந்து ராமாத் மிஸ்பா பெத்தோனீம் வரைக்கும் உள்ள பகுதியைக் கொண்டிருந்தது. அத்தேசம் மக்னாயீமிலிருந்து தெபீர் வரைக்குமுள்ள இடத்தைக் கொண்டது. 27 பெத்ஹராம் பள்ளத்தாக்கு, பெத்நிம்ரா, சுக்கோத், சாப்போன் ஆகியவையும் அத்தேசத்தில் இருந்தன. எஸ்போனின் அரசனாகிய சீகோன் ஆண்ட மீதி நாடும் இந்த நிலத்தில் அடங்கியிருந்தது. யோர்தான் நதியானது அந்த நிலத்தில் கிழக்குப் பகுதியாக அமைந்தது. அந்த நிலம் கலிலேயா ஏரியின் கடைசி வரைக்கும் தொடர்ந்தது. 28 மோசே காத் கோத்திரத்தாருக்குக் கொடுத்த தேசத்தில் இவையெல்லாம் இருந்தன. மேலே தரப்பட்ட எல்லா ஊர்களும் அத்தேசத்தைச் சார்ந்தன. இவற்றை காத் கோத்திரத்தின் வம்சத்தினருக்கு மோசே பிரித்துக் கொடுத்தான்.

29 மனாசேயின் கோத்திரத்துக்கு மோசே கொடுத்த நிலம் பின்வருவதாகும்: மனாசே கோத்திரத்தின் பாதிப் பகுதியினர் இதனைப் பெற்றனர்.

30 மக்னாயீமில் தேசம் ஆரம்பித்தது. பாசான் முழுவதும் பாசானின் அரசனாகிய ஓகினால் ஆளப்பட்ட நாடும், பாசானில் யாவீரின் எல்லா ஊர்களும் அத்தேசத்தில் இருந்தன. (மொத்தம் 60 நகரங்கள் இருந்தன.) 31 கீலேயாத்தின் பாதிபாகம், அஸ்தரோத், எத்ரேயி ஆகிய நகரங்களும் அத்தேசத்தில் இருந்தன. (ஓக் அரசன் வசித்த நகரங்கள் கீலேயாத், அஸ்தரோத், எத்ரேயி ஆகியவை.) மனாசேயின் மகனாகிய மாகீரின் குடும்பத்திற்கு இத்தேசங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டன. மனாசேயின் மகன்களில் பாதிக்குடும்பத்தினர் அவற்றைப் பெற்றனர்.

32 மோசே இத்தேசத்தை இந்தக் கோத்திரத்தினருக்கு கொடுத்தான். மோவாப் சம வெளியில் ஜனங்கள் பாளையமிட்டிருந்தபோது மோசே இதைச் செய்தான். எரிகோவிற்குக் கிழக்கில் யோர்தான் நதிக்குக் குறுக்காக இது இருந்தது.

33 லேவியின் கோத்திரத்தினருக்கு மோசே எந்த நிலத்தையும் கொடுக்கவில்லை. லேவி கோத்திரத்தினருக்கு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே பங்காக அமைவதாக வாக்களித்திருந்தார்.

14 ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களும் ஜனங்களுக்கு எந்தெந்த தேசத்தைக் கொடுப்பதென்று முடிவு செய்தனர். ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு விரும்பிய வகையை அவர் முன்னரே மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார். அவரவருக்கு எந்தெந்த நிலப்பகுதி வேண்டுமென்பதை ஒன்பதரை கோத்திரத்தாரும் சீட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தனர். இரண்டரை கோத்திரத்தாருக்கு மோசே ஏற்கெனவே யோர்தானுக்குக் கீழக்கேயுள்ள நிலத்தைப் பிரித்துக் கொடுத்திருந்தான். ஆனால் லேவியின் கோத்திரத்தார் எந்த நிலத்தையும் பெறவில்லை. பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் அவர்களுக்குரிய நிலம் கொடுக்கப்பட்டது. யோசேப்பின் ஜனங்கள் மனாசே, எப்பிராயீம் என்று இரண்டு கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு கோத்திரமும் நிலத்தைப் பெற்றனர். லேவி கோத்திரத்துக்கு எந்த நிலமும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வசிப்பதற்கு சில ஊர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு கோத்திரத்தின் நடுவிலும் இந்த ஊர்கள் இருந்தன. அவர்களுடைய மிருகங்களுக்காக வயல்வெளி கொடுக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் நிலத்தை எவ்வாறு பிரித்துக் கொடுப்பதென்று கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தார். கர்த்தர் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் நிலத்தைப் பங்கிட்டனர்.

காலேப் அவனுக்குரிய நிலத்தைப் பெறுதல்

ஒருநாள் கில்காலில் யோசுவாவிடம் யூதா கோத்திரத்திலிருந்து சிலர் வந்தனர். கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேபும், அவர்களில் ஒருவன். காலேப் யோசுவாவிடம், “காதேஸ் பர்னேயாவில் கர்த்தர் அவரது ஊழியனாகிய, மோசேயிடம், உம்மையும் என்னையும் குறித்துச் சொன்னவற்றை நினைவுகூர்ந்து பாரும். நாம் போகப்போகிற தேசத்தைப் பார்த்து வரும்படியாக கர்த்தருடைய ஊழியனாகிய மோசே என்னை அனுப்பினான். எனக்கு அப்போது நாற்பது வயது. அத்தேசத்தைப் பற்றிய எனது எண்ணங்களை நான் திரும்பி வந்தபோது மோசேக்குக் கூறினேன். என்னோடு வந்த மற்றவர்கள் தாம் பார்த்து அஞ்சியவற்றைக் குறித்துச் சொன்னார்கள். ஆனால் நாம் அத்தேசத்தைப் பெறுவதற்கு கர்த்தர் நிச்சயம் உதவி செய்வார் என நான் உண்மையாகவே நம்பினேன். எனவே அந்நாளில், ‘நீ செல்லும் தேசம் உனக்குரியதாகும். உனது பிள்ளைகளுக்கு எப்போதும் அத்தேசம் சொந்தமாகும். எனது தேவனாகிய கர்த்தரை, நீ உண்மையாகவே நம்பியதால் உனக்கு அத்தேசத்தைக் கொடுப்பேன்’ என்று மோசே எனக்கு வாக்குறுதி அளித்தான்.

10 “கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தர் எனக்குச் கூறியபடியே இன்றும் என்னை உயிரோடு வைத்திருக்கிறார். நாம் பாலைவனங்களில் இதுவரைக்கும் அலைந்தோம். இப்போது எனக்கு, 85 வயது. 11 மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் பெலமுள்ளவனாக இருக்கிறேன். அன்று போலவே இன்றும் என்னால் போரிட முடியும். 12 முன்பு, கர்த்தர் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்த மலைப்பிரதேசத்தை இப்போது எனக்குக் கொடும். வலிமை பொருந்திய ஏனாக்கியர் அந்நாளில் அங்கு வாழ்ந்தனர் என்பதையும், அவர்களுடைய நகரங்கள் பெரியதாகவும் பாதுகாப்புடையதாகவும் இருக்கின்றன என்பதையும் நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். இப்போதும், கர்த்தர் என்னோடிருக்கிறபடியால், அவர்களை வெளியேற்றி விட்டு கர்த்தர் கூறியபடி அந்த நிலப்பகுதியை நான் உரிமையாக்கிக்கொள்வேன்” என்றான்.

13 எப்புன்னேயின் மகனாகிய காலேபை யோசுவா ஆசீர்வதித்தான். அவனுக்குச் சொந்தமாக எபிரோன் நகரை யோசுவா கொடுத்தான். 14 கேனாசியனான, எப்புன்னேயின் மகனாகிய காலேபின் குடும்பத்தாருக்கு இன்றும் அந்நகரம் உரியதாக இருக்கிறது. ஏனென்றால் அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம் நம்பிக்கை கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தான். 15 முன்பு அந்நகரம் கீரியாத்அர்பா எனப்பட்டது. அர்பா என்னும் ஏனாக்கியரின் புகழ்பெற்ற மனிதனின் பெயரை அந்நகரம் முன்பு பெற்றிருந்தது. இதற்குப் பின், அந்த நிலப்பகுதியில் அமைதி நிலவியது.

லூக்கா 18:1-17

பலன் தரும் தேவன்

18 சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும்பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்: “ஓர் ஊரில் ஒரு நியாயாதிபதி இருந்தான். அவன் தேவனைக் குறித்துக் கவலைப்படவில்லை. மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவன் அக்கறையற்றவனாக இருந்தான். அதே ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் இறந்து போனான். அந்தப் பெண் பல முறை நியாயாதிபதியிடம் வந்து, ‘எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்’ என்றாள். அப்பெண்ணுக்கு உதவுவதற்கு நியாயாதிபதி விரும்பவில்லை. பல நாள்களுக்குப் பிறகு நியாயாதிபதி தனக்குள், ‘நான் தேவனைப்பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்கள் எண்ணுவதைக் குறித்தும் நான் அக்கறையில்லாதவனாக இருக்கிறேன். ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான்.

“தீய நியாயாதிபதி கூறியதைக் கவனமுடன் கேளுங்கள். தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார். தம் மக்களுக்குப் பதில் கூறுவதில் அவர் தயங்கமாட்டார். நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார்.

தேவனுக்கு ஏற்றவன் யார்?

தங்களை மிக நல்லவர்களாக எண்ணிக்கொண்ட சில மனிதர்கள் இருந்தார்கள். பிறரைக் காட்டிலும் அவர்கள் மிக நல்லவர்கள் என்பதைப்போன்று அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதிப்பதற்கு இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தினார். 10 “ஒரு பரிசேயனும் வரி வசூலிப்பவனும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இருவரும் தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யச் சென்றார்கள். 11 வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 12 நான் நல்லவன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான்.

13 “வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. தன்னை உயர்ந்தவனாகக் கருதிக்கொள்கிற எவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான்.”

குழந்தைகளும்-இயேசுவும்(A)

15 இயேசு தொடுமாறு சிலர் தங்கள் சிறு குழந்தைகளை இயேசுவின் அருகில் கொண்டு வந்தார்கள். ஆனால் சீஷர்கள் இதைப் பார்த்ததும் மக்களை அதட்டித் தடுத்தார்கள். 16 ஆனால் இயேசு அந்தச் சிறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து, அதன் பின் சீஷர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இச்சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது. 17 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும் தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது” என்றார்.

சங்கீதம் 85

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல்

85 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும்.
யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள்.
    அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும்.
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்!
    அவர்கள் பாவங்களை போக்கிவிடும்!

கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும்.
    கடுங்கோபமாக இராதேயும்.
எங்கள் தேவனும் இரட்சகருமானவரே,
    எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?
தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும்.
    உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும்.
    நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.

தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன்.
    அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார்.
    எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார்.
    நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
10 தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும்.
    நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.
11 பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள்.
    பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
12 கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார்.
    நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.
13 நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும்.
    அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.

நீதிமொழிகள் 13:7-8

சிலர் செல்வந்தர்களைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் எதுவுமில்லை. மற்றும் சிலரோ ஏழையைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் செல்வந்தர்களாக இருப்பார்கள்.

செல்வமுள்ளவன் சில சமயங்களில் தன் உயிரைக் காப்பாற்ற ஒரு தொகையைச் செலுத்த வேண்டியதாயிருக்கும். ஆனால் ஏழைக்கு இதுபோன்ற மிரட்டல்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center