Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NLT. Switch to the NLT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 22:21-23:16

21 ரூபன், காத் மனாசே கோத்திரத்தினர், அந்தப் பதினொரு ஆட்களுக்கும் பதிலளித்தனர். அவர்கள், 22 “கர்த்தர் எங்கள் தேவன்! கர்த்தரே எங்கள் தேவன் என்று மீண்டும் சொல்கிறோம்! நாங்கள் இதைச் செய்த காரணத்தையும் தேவன் அறிவார். நீங்களும் அதை அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் செய்ததை நீங்கள் நியாயந்தீர்க்கலாம். நாங்கள் தவறேனும் செய்ததாக நீங்கள் நம்பினால், நீங்கள் எங்களைக் கொல்லலாம். 23 நாங்கள் தேவனின் சட்டங்களை மீறினால், கர்த்தரே எங்களைத் தண்டிக்கட்டும். 24 தகன பலி, தானிய காணிக்கை, சமாதான பலி ஆகியவற்றைக் கொடுப்பதற்காக நாங்கள் இந்தப் பலிபீடத்தைக் கட்டியதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை! அதற்காக நாங்கள் இதைக் கட்டவில்லை. நாங்கள் ஏன் இந்தப் பலிபீடத்தைக் கட்டினோம்? உங்கள் தேசத்தின் ஜனங்கள் எதிர்காலத்தில் எங்களை இஸ்ரவேலின் ஒரே பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்களோ என்று எண்ணி பயந்தோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாங்கள் ஆராதிக்கக் கூடாது என்று உங்கள் ஜனங்கள் கூறுவார்கள் என நினைத்து பயந்தோம். 25 யோர்தான் நதிக்கு மறு பக்கத்தில் தேவன் எங்களுக்கு நிலத்தைக் கொடுத்தார். யோர்தான் நதி நம்மைப் பிரிக்கிறது. உங்கள் பிள்ளைகள் வளர்ந்து தேசத்தை ஆளும்போது, நாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அவர்கள் எங்களை நோக்கி, ‘ரூபன், காத் ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அல்ல!’ என்று சொல்லக்கூடும். அப்போது எங்கள் பிள்ளைகள் கர்த்தரை ஆராதிக்க உங்கள் பிள்ளைகள் தடை செய்யக்கூடும்.

26 “எனவே இப்பலிபீடத்தைக் கட்டமுடிவெடுத்தோம். தகன பலிகளுக்கோ, மற்ற பலிகளுக்கோ இதைப் பயன்படுத்த நினைக்கவில்லை. 27 நீங்கள் ஆராதிக்கும் தேவனையே நாங்களும் ஆராதிக்கிறோம் என்பதை எங்கள் ஜனங்களுக்கு உணர்த்துவதே இப்பலிபீடத்தைக் கட்டியதன் உண்மையான காரணமாகும். கர்த்தரை நாம் ஆராதிக்கிறோம் என்பதற்குச் சான்றாக உங்களுக்கும் எங்களுக்கும், எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும், இப்பலிபீடம் அமையும். நமது பலிகள், தானிய காணிக்கைகள், சமாதான பலிகள் ஆகியவற்றை கர்த்தருக்கே கொடுப்போம். உங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நாங்களும் உங்களைப் போலவே இஸ்ரவேல் ஜனங்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். 28 வருங்காலத்தில், உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளைப் பார்த்து. அவர்கள் இஸ்ரவேலரல்ல என்று கூறினால், அப்போது எங்கள் பிள்ளைகள், ‘பாருங்கள்! எங்கள் பிதாக்கள் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக்கிறார்கள். பரிசுத்த கூடாரத்தின் அருகேயுள்ள கர்த்தருடைய பலிபீடத்தைப் போலவே இப்பலிபீடமும் அமைந்துள்ளது. நாங்கள் இப்பலிபீடத்தைப் பலி செலுத்துவதற்குப் பயன்படுத்துவதில்லை. நாங்களும் இஸ்ரவேலரில் ஒரு பங்குடையவர்கள் என்பதற்கு இது சான்றாகும்!’ என்று சொல்லமுடியும்.

29 “உண்மையாகவே, கர்த்தருக்கு எதிராக இருப்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. அவரைப் பின்பற்றுவதை நிறுத்தும் விருப்பமும் இப்போது எங்களுக்குக் கிடையாது. பரிசுத்த கூடாரத்தின் முன்னே இருப்பது மட்டுமே உண்மையான பலிபீடம் என்பதை நாங்கள் அறிவோம். அப்பலிபீடம் நமது தேவனாகிய கர்த்தருக்கு உரியது” என்றார்கள்.

30 ரூபன், காத், மனாசே கோத்திரத்தினர் கூறியவற்றை ஆசாரியனாகிய பினெகாசும் அவனோடு வந்த தலைவர்களும் கேட்டார்கள். அந்த ஜனங்கள் உண்மையே கூறுகிறார்கள் என்று அவர்கள் திருப்தி அடைந்தார்கள். 31 எனவே ஆசாரியனாகிய பினெகாஸ், “கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருக்கு எதிராக நீங்கள் திரும்பவில்லை என்பதையும் நாங்கள் அறிகிறோம். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் தண்டிக்கமாட்டார், என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்கள்.

32 பிறகு பினெகாசும், தலைவர்களும் அங்கிருந்துԔ தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர். ரூபன், காத் ஜனங்களைக் கீலேயாத் தேசத்தில் விட்டு கானானுக்குப் போனார்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் அவர்கள் திரும்பிப் போய் நடந்தவற்றைக் கூறினார்கள். 33 இஸ்ரவேல் ஜனங்களும் திருப்தி கொண்டனர். அவர்கள் சந்தோஷமடைந்து தேவனுக்கு நன்றி தெரிவித்தனர். ரூபன், காத், மனாசே ஆகிய ஜனங்களுக்கெதிராகப் போர் செய்ய வேண்டாமென முடிவெடுத்தனர். அந்த ஜனங்கள் வாழும் இடத்தை அழிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்தனர்.

34 ரூபன், காத், ஜனங்கள் பலிபீடத்திற்கு ஒரு பெயரிட்டனர். அவர்கள் அதை, “கர்த்தரே தேவன் என்ற எங்கள் நம்பிக்கைக்கு இது சான்று” என்று அழைத்தார்கள்.

யோசுவா ஜனங்களை உற்சாகப்படுத்துதல்

23 சுற்றிலுமிருந்த எதிரிகளிடமிருந்து கர்த்தர் இஸ்ரவேலருக்கு அமைதியைக் கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேலரைப் பாதுகாத்தார். வருடங்கள் கழிந்தன, யோசுவா வயது முதிர்ந்தவனானான். அப்போது, எல்லா மூத்த தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், இஸ்ரவேலரின் அதிகாரிகளையும் யோசுவா ஒருங்கே அழைத்தான். அவர்களிடம், “நான் மிகவும் வயது முதிர்ந்தவனானேன். நமது பகைவர்களுக்கு கர்த்தர் செய்தவற்றைப் பார்த்திருக்கிறீர்கள். நமக்கு உதவும் பொருட்டு கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக போர் செய்தார். ‘யோர்தான் நதிக்கும், மேற்கில் மத்தியத்தரைக் கடலுக்கும் இடையில் உள்ள இடத்தை உங்கள் ஜனங்கள் பெறமுடியும்’ என்று நான் உங்களுக்குச் சொன்னதை இப்போது நினைவுகூருங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன், ஆனால் இதுவரைக்கும் நீங்கள் அதைப் பெறவில்லை. ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது வாக்குப்படியே அங்கு வசிக்கும் ஜனங்களை அங்கிருந்து வெளியேற்றுவார்! நீங்கள் அவர்கள் தேசத்தை எடுத்துக்கொள்வீர்கள். அங்கு வசிக்கும் ஜனங்களை கர்த்தர் வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவார். கர்த்தர் இதைச் செய்வதாக உங்களுக்குக் வாக்களித்துள்ளார்.

“கர்த்தர் நமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவதற்குக் கவனமாக இருங்கள். மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியுங்கள். அச்சட்டத்தை மீறாதீர்கள். இஸ்ரவேலரல்லாத ஜனங்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஜனங்கள் தமக்குச் சொந்தமான தெய்வங்களையே வழிபடுகின்றனர். அந்த ஜனங்களோடு நட்பு கொள்ளாதீர்கள். அத்தெய்வங்களுக்கு சேவை செய்யவோ, அவற்றை வழிபடவோ வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். இதையே முன்பும் செய்தீர்கள், இனிமேலும் செய்ய வேண்டும்.

“பெரிய, வல்லமையான தேசங்களை வெல்வதற்கு கர்த்தர் உங்களுக்கு உதவினார். அவர்கள் அங்கிருந்து போகும்படியாக கர்த்தர் துரத்தினார். உங்களைத் தோற்கடிக்க எந்தத் தேசத்தாலும் முடியவில்லை. 10 கர்த்தருடைய உதவியோடு, இஸ்ரவேலரில் ஒருவன் 1,000 பகைவீரர்களை வெல்ல முடிந்தது. ஏனெனில் கர்த்தர் உங்களுக்காகப் போர் செய்கிறார். கர்த்தர் இதைச் செய்வதாக வாக்களித்தார். 11 எனவே உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து நேசியுங்கள்.

12 “கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்ககள். இஸ்ரவேலரல்லாத ஜனங்களோடு நண்பராகாதீர்கள். அவர்களில் யாரையும் மணந்து கொள்ளாதீர்கள். ஒருவேளை அவர்களோடு நீங்கள் நட்பு கொண்டால், 13 பிறகு பகைவர்களை வெல்லும் முயற்சியில் கர்த்தர் உங்களுக்கு உதவமாட்டார். அந்த ஜனங்கள் உங்களுக்கு கண்ணியாக மாறுவார்கள். அவர்கள் உங்கள் கண்களில் புகையைப் போலவும், தூசியைப் போலவும் அமைந்து வேதனை விளைவிப்பார்கள். நீங்கள் இத்தேசத்தை விட்டுச்செல்ல வற்புறுத்தப்படுவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த நல்ல நிலத்தைக் கொடுத்தார். இக்கட்டளைக்குக் கீழ்ப்படியாவிட்டால் நீங்கள் அதை இழக்கக்கூடும்.

14 “இது நான் மரிக்கும் நேரம். கர்த்தர் மிகப் பெரிய காரியங்களைச் செய்தார் என்பதை அறிந்து உண்மையாகவே நம்புகிறீர்கள். தன் வாக்குறுதிகளை அவர் சற்றும்மீறவில்லை. அவர் நமக்கு வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றினார். 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் நமக்கு வாக்களித்த நல்லவை அனைத்தும் நிறைவேறின, நீங்கள் தவறு செய்தால் உங்களுக்குத் தீமை விளையுமென அவர் உறுதியளித்தார். அவர் உங்களுக்குத் தந்த இத்தேசத்தினின்று உங்களைத் துரத்துவார் எனவும் உறுதியாகக் கூறினார். 16 உங்கள் தேவனாகிய கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை நீங்கள் மீறினால் இவ்வாறு நிகழும். நீங்கள் போய், அந்நிய தெய்வங்களை ஆராதித்தால் உங்கள் நிலத்தை இழப்பீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் உங்கள் மீது கோபமைடைவார். அப்போது அவர் உங்களுக்குத் தந்த இந்த நல்ல இடத்தைவிட்டு விரைவில் துரத்தப்படுவீர்கள்” என்றான்.

லூக்கா 20:27-47

சதுசேயர்களின் தந்திரம்(A)

27 சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (மக்கள் மரணத்தினின்று உயிர் பெறுவதில்லை என்று சதுசேயர்கள் நம்புகிறார்கள்) அவர்கள் இயேசுவை நோக்கி, 28 “போதகரே, திருமணமான மனிதன் குழந்தைகளின்றி இறந்துபோனால், அவனது சகோதரன் அவன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று மோசே எழுதி இருந்தார். அப்படியானால் இறந்த சகோதரனுக்காகக் குழந்தைகள் அவர்களுக்குப் பிறக்கும். 29 ஓரிடத்தில் ஏழு சகோதரர்கள் வாழ்ந்தனர். முதல் சகோதரன் ஒருத்தியை மணந்து குழந்தைகள் இல்லாமல் இறந்தான். 30 பிறகு இரண்டாம் சகோதரன் அந்தப் பெண்ணை மணந்து இறந்து போனான். 31 மூன்றாமவனும் அவளை மணந்து பின்னர் இறந்தான். ஏழு சகோதரர்களுக்கும் இதுவே நடந்தது. அவர்கள் எல்லோரும் குழந்தைகளின்றி இறந்தார்கள். 32 அவர்கள் அனைவரும் இறந்த பிறகு அவளும் இறந்தாள். 33 எல்லா ஏழு சகோதரர்களும் அவளை மணந்தனர். மரணத்தினின்று மக்கள் எழும்போது, அந்தப் பெண் யாருக்கு மனைவியாவாள்?” என்று கேட்டார்கள்.

34 இயேசு சதுசேயரை நோக்கி, “பூமியில் மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்கின்றனர். 35 சிலர் மரணத்தினின்று எழும்பி அடுத்த உலகத்தில் பங்கு பெறும் தகுதியைப் பெறுவர். அந்த வாழ்வில் அவர்கள் மணம் செய்துகொள்ளமாட்டார்கள். 36 அந்த வாழ்வில் அவர்கள் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள். அவர்களால் சாகமுடியாது. அவர்கள் மரணத்தினின்று எழுந்ததால் தேவனின் மக்களாவர். 37 மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவர் என்பதை மோசே தெளிவாகக் காட்டினான். எரியும் புதரைப் பற்றி மோசே எழுதியபோது, அவன் கர்த்தராகிய தேவனை ஆபிரகாமின் தேவன் என்றும், ஈசாக்கின் தேவன் என்றும், யாக்கோபின் தேவன் [a] என்றும் கூறினான். 38 அவர்களின் தேவன் தானே என தேவன் கூறியதால் அந்த மனிதர்கள் உண்மையாக இறக்கவில்லை. வாழும் மக்களின் தேவன் அவரே. தேவனுக்கு உரியவர்கள் வாழ்பவர்களே ஆவர்” என்றார்.

39 வேதபாரகரில் சிலர், “போதகரே, உங்கள் பதில் நன்றாக இருந்தது” என்றனர். 40 அடுத்த கேள்வியைக் கேட்க யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

கிறிஸ்து தாவீதின் குமாரனா?(B)

41 பின்பு இயேசு, “தாவீதின் குமாரன் என்று கிறிஸ்துவை மக்கள் எதற்காகச் சொல்கிறார்கள்? 42 சங்கீதம் என்னும் புத்தகத்தில் தாவீதே சொல்கிறார்.

“‘கர்த்தர் (தேவன்) என் ஆண்டவரிடம் (கிறிஸ்து) சொன்னார்,
43     உங்கள் பகைவர்கள் உங்கள் ஆற்றலுக்கு அடங்கும்வரை என் வலப்பக்கத்தில் அமருங்கள்’ (C)

44 தாவீது கிறிஸ்துவை ‘ஆண்டவர்’ என்கிறான். ஆனால் கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். எப்படி இவை இரண்டும் உண்மையாகும்?” என்றார்.

வேதபாரகருக்கு எச்சரிக்கை(D)

45 தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு பேசினார். எல்லா மக்களும் இயேசு கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். 46 “வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தங்களை முக்கியமானவர்களாகக் காட்டுகிற அவர்கள் அங்கிகளை அணிந்துகொண்டு அவர்கள் அங்குமிங்கும் அலைகிறார்கள். மக்கள் அவர்களைச் சந்தையிடங்களில் மதிப்பதையும் விரும்புகிறார்கள். ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கையில் அமர ஆசைப்படுகிறார்கள். 47 ஆனால் விதவைகள் தம் வீட்டில் வைத்திருக்கிற பொருட்களையெல்லாம் கொள்ளையிடுகிறவர்கள் அவர்களே ஆவார்கள். நீண்ட பிரார்த்தனைகளைச் சொல்லித் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். தேவன் இவர்களை மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.

சங்கீதம் 89:14-37

14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.
    அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
    அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
    அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
    இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.
    அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
    விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
    எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
    தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
    நான் தேர்ந்தெடுத்த அரசனைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
    அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த அரசனைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
    அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
    நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27 நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன்.
    அவன் பூமியின் முதன்மையான அரசனாக இருப்பான்.
28 நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.
    அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,
    அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.
30 அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,
    அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31 நான் தேர்ந்தெடுத்த அரசனின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,
    என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.
    நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.
    நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.
    நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
    சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.
    வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று.
    அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.

நீதிமொழிகள் 13:17-19

17 ஒரு தூதுவனை நம்ப முடியாவிட்டால் அவனைச் சுற்றிலும் துன்பங்களே ஏற்படும். ஆனால் ஒருவன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தால் சமாதானம் உண்டாகும்.

18 ஒருவன் தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் ஏழையாகவும் அவமானத்துக்குரியவனாகவும் இருப்பான். ஆனால் தான் விமர்சிக்கப்படும்போதும் தண்டனைக்குட்படும்போதும் கவனிக்கிறவன் பயன் அடைகிறான்.

19 ஒருவன் ஒன்றை விரும்பி, அதனைப் பெற்றுக்கொண்டால் அவன் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால் முட்டாள்களோ தீயதை விரும்பி, மாற மறுக்கிறார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center