Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 17

தாவீதைக் குறித்த அகித்தோப்பேலின் அறிவுரை

17 அகிதோப்பேல் மேலும் அப்சலோமிடம், “நான் இப்போது 12,000 ஆட்களைத் தேர்ந்தெடுப்பேன். இன்றிரவு தாவீதை நான் துரத்துவேன். அவன் தளர்ந்து சோர்வுற்றிருக்கும்போது அவனைப் பிடிப்பேன். நான் அவனைக் கலக்கமடையச் செய்வேன். அவனது ஆட்கள் ஓடிவிடுவார்கள். ஆனால் தாவீது அரசனை மட்டும் கொல்வேன். பின்பு ஜனங்களையெல்லாம் உங்களிடம் அழைத்து வருவேன். தாவீது மரித்துவிட்டால், எல்லா ஜனங்களும் சமாதானத்தோடு திரும்புவார்கள்” என்றான்.

இத்திட்டம் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் தலைவர்களுக்கும் நல்லதெனப்பட்டது. ஆனால் அப்சலோம், “அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிடுங்கள். அவன் கூறுவதைக் கேட்கவேண்டும்” என்றான்.

அகித்தோப்பேலின் அறிவுரையை ஊசாய் பாழாக்குகிறான்

ஊசாய் அப்சலோமிடம் வந்தான். அப்சலோம் ஊசாயிடம், “இதுதான் அகித்தோப்பேல் வகுத்தளித்த திட்டம். நாம் இதைப் பின்பற்ற வேண்டுமா? இல்லையெனில் சொல்லும்” என்றான்.

ஊசாய் அப்சலோமிடம், “இம்முறை அகிப்தோப்பேலின் அறிவுரை சரியாக இல்லை” என்றான். மேலும் ஊசாய், “உன் தந்தையும் அவரது ஆட்களும் வலியவர்கள் என்பது உனக்குத் தெரியும், தன் குட்டிகளைக் களவு கொடுத்த கரடிகள் போல் அவர்கள் கோபங்கொண்டிருக்கிறார்கள். உன் தந்தை பயிற்சிப் பெற்ற வீரர். அவர் ஜனங்களோடு இரவில் தங்கமாட்டார். அவர் ஒருவேளை குகையிலோ, வேறெங்கோ ஒளிந்திருக்க வேண்டும். அவர் முதலில் உன் ஆட்களைத் தாக்கினால், ஜனங்கள் அச்செய்தியை அறிவார்கள். அவர்கள், ‘அப்சலோமின் ஆட்கள் தோற்கிறார்கள்’ என்று நினைப்பார்கள். 10 பின்பு சிங்கம் போல் தைரியம்கொண்ட ஆட்களும் பயப்படுவார்கள். ஏனென்றால் எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை சிறந்த வீரர் என்றும், அவரது ஆட்கள் தைரியமானவர்கள் என்றும் அறிவார்கள்.

11 “இதுவே நான் சொல்ல விரும்புவதாகும்: நீ தாண் முதல் பெயெர்செபா மட்டும் உள்ள இஸ்ரவேலரை ஒன்று திரட்ட வேண்டும். அப்போது கடலின் மணலைப் போல் பலர் இருப்பார்கள். பின்பு நீ போருக்குச் செல்லவேண்டும். 12 நாம் தாவீதை அவர் ஒளிந்திருக்குமிடத்திலிருந்து பிடிக்கலாம். பனித்துளி நிலத்தில் விழுவதுபோல், நாம் தாவீதின் மீது விழுந்து பிடிக்கலாம். தாவீதையும் அவரது ஆட்களையும் கொல்லலாம். யாரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். 13 ஒருவேளை நகரத்திற்குள் தாவீது தப்பிச் சென்றால் எல்லா இஸ்ரவேலரும் அங்குக் கயிறுகளைக் கொண்டுவருவர். நகரத்தின் மதில்களை தகர்ப்போம். நகரம் பள்ளத்தாக்காக மாறும்படி செய்வர். ஒரு கல்கூட முன்பு போல் நகரத்தில் இராது” என்றான்.

14 அப்சலோமும் இஸ்ரவேலர் எல்லோரும், “அற்கியனாகிய ஊசாயின் அறிவுரை அகித்தோப்பேலுடையதைக் காட்டிலும் சிறந்தது” என்றனர். இது கர்த்தருடைய திட்டமானதால் அவர்கள் அவ்வாறு கூறினார்கள். அகித்தோப்பேலின் நல்ல அறிவுரை பயனற்றுப்போகும்படி கர்த்தர் திட்டமிட்டார். அப்சலோமை கர்த்தர் இவ்வாறு தண்டிப்பார்.

தாவீதுக்கு ஊசாய் ஒரு எச்சரிக்கை அனுப்புகிறான்

15 இவ்விஷயங்களையெல்லாம் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஊசாய் கூறினான். அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேல் தலைவர்களுக்கும் கூறிய காரியங்களை அவன் அவர்களுக்குத் தெரிவித்தான். சாதோக்குக்கும், அபியத்தாருக்கும் ஊசாய் தான் கூறிய ஆலோசனை பற்றிய செய்தியையும் தெரிவித்தான். ஊசாய், 16 “விரையுங்கள்! தாவீதுக்குச் செய்தி அனுப்புங்கள். இன்றிரவில் ஜனங்கள் பாலைவனத்திற்குக் கடந்து செல்லுமிடங்களில் தங்கவேண்டாமெனக் கூறுங்கள். ஆனால் உடனே யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நதியைக் கடந்துவிட்டால் அரசனும் அவனுடைய ஜனங்களும் பிடிபடமாட்டார்கள்” என்று கூறினான்.

17 ஆசாரியர்களின் மகன்களாகிய யோனத்தானும் அகிமாசும், இன்றோகேல் என்னுமிடத்தில் காத்திருந்தார்கள். ஊருக்குள் போவதைப் பிறர் காணவேண்டாமென விரும்பினார்கள், எனவே ஒரு வேலைக்காரப் பெண்மணி அவர்களிடம் வந்தாள். அவள் அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்தாள். பின்பு யோனத்தானும் அகிமாசும் அரசன் தாவீதிடம் சென்று இவ்விஷயங்களைப்பற்றித் தெரிவித்தனர்.

18 ஆனால் ஒரு சிறுவன் யோனத்தானையும் அகிமாசையும் பார்த்துவிட்டான். அவன் அதைச் சொல்வதற்கு அப்சலோமிடம் ஓடினான். யோனத்தானும் அகிமாசும் விரைவாக ஓடிவிட்டார்கள். அவர்கள் பகூரிமில் உள்ள ஒரு மனிதனின் வீட்டை அடைந்தனர். அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. யோனத்தானும் அகிமாசும் கிணற்றினுள் இறங்கினார்கள். 19 அம்மனிதனின் மனைவி ஒரு விரிப்பை எடுத்துக் கிணற்றின் மீது விரித்தாள். பின்பு அவள் அதன் மீது தானியங்களைப் பரப்பினாள். தானியத்தைக் குவித்து வைத்திருந்தாற்போல் அக்கிணறு காணப்பட்டது. யாரும் யோனத்தனும் அகிமாசும் அங்கு ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. 20 அப்சலோமின் பணியாட்கள் வீட்டிலிருந்த பெண்ணிடம் வந்தார்கள். அவர்கள், “யோனத்தானும் அகிமாசும் எங்கே?” என்று கேட்டார்கள்.

அப்பெண் அப்சலோமின் வேலையாட்களிடம், அவர்கள் ஏற்கெனவே நதியைக் கடந்துவிட்டார்கள் என்று கூறினாள்.

அப்சலோமின் வேலைக்காரர்கள் பின்பு யோனத்தானையும் அகிமாசையும் தேடினர், ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அப்சலோமின் வேலைக்காரர்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

21 அப்சலோமின் வேலைக்காரர்கள் போன பிறகு, யோனத்தானும் அகிமாசும் கிணற்றிற்கு வெளியே வந்தார்கள். அவர்கள் போய் தாவீது அரசனிடம் சொன்னார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “விரைந்து நதியைக் கடந்து போய்விடுங்கள். அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக இந்த காரியங்களைத் திட்டமிட்டுள்ளான்” என்றார்கள்.

22 அப்போது தாவீதும் அவனோடிருந்த எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்தார்கள். சூரியன் தோன்றும் முன்னர் தாவீதின் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்துவிட்டிருந்தனர்.

அகித்தோப்பேல் தற்கொலை செய்துக்கொள்கிறான்

23 இஸ்ரவேலர் தனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அகித்தோப்பேல் கண்டான். அகித்தோப்பேல் கழுதையின் மேல் சுமைகளை ஏற்றிக்கொண்டான். அவன் நகரத்திலிருந்த தன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் குடும்பக் காரியங்களை ஒழுங்குப்படுத்தி, தூக்கு போட்டுக்கொண்டான். அகித்தோப்பேல் மரித்தபிறகு, ஜனங்கள் அவனை அவனது தந்தையின் கல்லறைக்குள் புதைத்தார்கள்.

அப்சலோம் யோர்தான் நதியைக் கடக்கிறான்

24 தாவீது மக்னாயீமை வந்தடைந்தார்.

அப்சலோமும் இஸ்ரவேலரும் யோர்தான் நதியைக் கடந்தனர். 25 அப்சலோம் அமாசாவைப் படைக்குத் தலைவனாக்கினான். அமாசா யோவாபின் பதவியை வகித்தான். அமாசா இஸ்மவேலனாகிய எத்திராவின் மகன். செருயாவின் சகோதரியாகிய நாகாசின் மகளாகிய அபிகாயில் அமாசாவின் தாய். (செருயா யோவாபின் தாய்)

26 கீலேயாத் தேசத்தில் அப்சலோமும் இஸ்ரவேலரும் பாளயமிறங்கினார்கள்.

சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர்

27 தாவீது மக்னாயீமை வந்தடைந்தார். அந்த இடத்தில் சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர் இருந்தனர். (அம்மோனியரின் ஊராகிய ரப்பாவைச் சார்ந்தவன் சோபி நாகாசின் மகன் லோதேபாரிலிருந்து அம்மியேலின் மகனாகிய மாகீர் வந்தான். கீலேயாத்திலுள்ள ரோகிலிமிலிருந்து வந்தவன் பர்சிலா) 28-29 அவர்கள், “பாலைவனத்தில் ஜனங்கள் சோர்வோடும், பசியோடும், தாகத்தோடும் இருக்கிறார்கள்” என்றார்கள். தாவீதும் அவரின் ஜனங்களும் உண்பதற்காகவும் குடிப்பதற்காகவும் அவர்கள் பல பொருட்களைக் கொண்டு வந்தார்கள். படுக்கைகள், குவளைகள், மண்பாண்டங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் கோதுமை, பார்லி, மாவு, வறுத்த தானியங்கள், பெரும்பயிறு, சிறும் பயிறு, உலர்ந்த கொட்டைகள், தேன், வெண்ணெய், ஆடுகள், பால்கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார்கள்.

யோவான் 19:23-42

23 ஆணிகளால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பிற்பாடு, சேவகர்கள் அவரது ஆடையை எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதனை நான்கு பாகங்களாகப் பங்கு வைத்தனர். ஒவ்வொரு சேவகனும் ஒரு பாகத்தைப் பெற்றான். அவர்கள் அவரது அங்கியையும் எடுத்தனர். அது தையலில்லாமல் ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. 24 எனவே சேவகர்கள் தங்களுக்குள், “இதனை நாம் கிழித்து பங்கு போட வேண்டாம். அதைவிட இது யாருக்கு என்று சீட்டுப் போட்டு எடுத்துக்கொள்வோம்” என சொல்லிக் கொண்டனர்.

“அவர்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டனர்.
    என் அங்கியின் மேல் சீட்டுப்போட்டார்கள்” (A)

என்று வேதவாக்கியம் கூறியது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.

25 இயேசுவின் தாயார் சிலுவையின் அருகில் நின்றிருந்தார். அவரது தாயின் சகோதரியும், கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26 இயேசு அவருடைய தாயைப் பார்த்தார். அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீஷனையும் அங்கே பார்த்தார். அவர் தன் தாயிடம், “அன்பான பெண்ணே, அதோ உன் மகன்” என்றார். 27 பிறகு இயேசு தன் சீஷனிடம், “இதோ உன்னுடைய தாய்” என்றார். அதற்குப்பின் அந்த சீஷன் இயேசுவின் தாயைத் தன் வீட்டிற்குத் தன்னோடு அழைத்துச் சென்றான்.

இயேசுவின் மரணம்(B)

28 பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்” [a] என்றார். 29 காடி நிறைந்த பாத்திரம் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. அங்கே நின்ற சேவகர்கள் கடற்பஞ்சைக் காடியிலே தோய்த்தார்கள். அதனை ஈசோப்புத் தண்டில் மாட்டினார்கள். பிறகு அதனை இயேசுவின் வாயருகே நீட்டினார்கள். 30 இயேசு காடியைச் சுவைத்தார். பிறகு அவர், “எல்லாம் முடிந்தது” என்றார். இயேசு தன் தலையைச் சாய்த்து இறந்துபோனார்.

31 அது ஆயத்தநாளாக இருந்தது. மறுநாள் சிறப்பான ஓய்வு நாள். ஓய்வு நாளில் சரீரங்கள் உயிரோடு சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களைச் சாகடிக்க கால்களை முறித்துக் கொல்ல வேண்டும் என இதற்கான உத்தரவை யூதர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். அதோடு அவர்களின் பிணங்களைச் சிலுவையில் இருந்து அப்புறப்படுத்தவும் அனுமதி பெற்றனர். 32 எனவே, சேவகர்கள் இயேசுவின் ஒருபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களை முறித்தனர். பிறகு அவர்கள் இயேசுவின் மறுபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களையும் முறித்தனர். 33 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். எனவே அவரது கால்களை அவர்கள் முறிக்கவில்லை.

34 ஆனால் ஒரு சேவகன் தனது ஈட்டியால் இயேசுவின் விலாவில் குத்தினான். அதிலிருந்து இரத்தமும் நீரும் வெளியே வந்தது. 35 (இவ்வாறு நிகழ்வதைப் பார்த்தவன் அதைப்பற்றிக் கூறுகிறான். அவனே அதைக் கூறுவதால் அதனை நீங்களும் நம்ப முடியும். அவன் சொல்கின்றவை எல்லாம் உண்மை. அவன் சொல்வது உண்மையென்று அவன் அறிந்திருக்கிறான்.) 36 “அவரது எலும்புகள் எதுவும் முறிக்கப்படுவதில்லை” [b] என்று வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டவை நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.

37 அத்துடன் “மக்கள் தாங்கள் ஈட்டியால் குத்தினவரைப் பார்ப்பார்கள்” [c] என்றும் வேதவாக்கியத்தில் இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இயேசுவின் அடக்கம்(C)

38 பிறகு அரிமத்தியா ஊரானான யோசேப்பு எனப்படும் மனிதன் பிலாத்துவிடம் வந்து இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். (இவன் இயேசுவைப் பின்பற்றினவர்களில் ஒருவன். ஆனால் அவன் யூதர்களுக்குப் பயந்து இதைப்பற்றி இதுவரை மக்களிடம் சொல்லவில்லை). யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துச்செல்ல, பிலாத்து அனுமதி தந்தான். ஆகையால் யோசேப்பு வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துப் போனான்.

39 நிக்கோதேமு யோசேப்போடு சென்றான். இவன் ஏற்கெனவே ஒரு நாள் இரவு இயேசுவிடம் வந்து அவரோடு பேசியிருக்கிறான். அவன் 100 இராத்தல் [d] வாசனைமிக்க கரியபோளமும் வெள்ளைப் போளமும் கலந்து கொண்டுவந்தான். 40 அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுதான் யூதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை.) 41 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கு ஒரு கல்லறை இருந்தது. அதில் இதுவரை எந்த சரீரமும் வைக்கப்படவில்லை. 42 அந்தக் கல்லறையில் இயேசுவை வைத்தார்கள். அன்று யூதருடைய ஆயத்த நாளாக இருந்தது. அத்துடன் அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.

சங்கீதம் 119:129-152

பே

129 கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது.
    அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.
130 ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது.
    உமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும்.
131 கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன்.
    நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.
132 தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும்.
    உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.
133 கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும்.
    தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.
134 கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
135 கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும்.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
136 ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால்
    என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.

த்சாதே

137 கர்த்தாவே, நீர் நல்லவர்,
    உமது சட்டங்கள் நியாயமானவை.
138 நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர்.
    நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.
139 என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன.
    என் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன்.
140 கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
    நான் அதை நேசிக்கிறேன்.
141 நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை.
    ஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன்.
142 கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும்.
    உமது போதனைகள் நம்பக் கூடியவை.
143 எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன.
    ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.
144 உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது.
    நான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும்.

கோப்

145 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன்.
    எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
146 கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்!
    நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.
147 நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன்.
    நீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன்.
148 உமது வார்த்தைகளைக் கற்பதற்கு
    இரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன்.
149 உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும்.
    கர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும்.
150 ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை.
151 கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர்.
    உமது கட்டளைகள் நம்பக்கூடியவை.
152 பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம்,
    உமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன்.

நீதிமொழிகள் 16:12-13

12 தீமை செய்பவர்களை அரசர்கள் வெறுக்கின்றனர். நன்மை அவனது அரசாங்கத்தை வலுவுள்ளதாக்கும்.

13 அரசர்கள் உண்மையைக் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் பொய் சொல்லாமல் இருப்பதை அரசர்கள் விரும்புகின்றனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center