Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the VOICE. Switch to the VOICE to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 5-7

பரிசுத்தப் பெட்டியினால் பெலிஸ்தர்களுக்குத் தொல்லை

பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுப் போனார்கள். பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்த பெட்டியை தாகோனின் கோவிலுக்குள் கொண்டுப் போய் தாகோனின் சிலைக்கு அருகில் வைத்தனர். மறுநாள் காலை, அஸ்தோத் ஜனங்கள் எழுந்ததும் தாகோனின் சிலை முகம்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டனர். தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்னால் விழுந்துகிடந்தது.

அஸ்தோத் ஜனங்கள் தாகோனின் சிலையைப் பழைய இடத்தில் வைத்தனர். ஆனால் மறுநாள் காலையில், மீண்டும் தாகோனின் சிலை முகம்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டனர்! கர்த்தருடைய பரிசுத்த பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை விழுந்துகிடந்தது. இந்தமுறை தாகோனின் தலையும், கைகளும் உடைந்து கோவில் வாசற்படியிலேகிடந்தன. தாகோனின் உடல் மாத்திரம் அப்படியே கிடந்தது. அதனால்தான் இன்றும் கூட, தாகோனின் பூசாரிகளும், அஸ்தோத்தில் உள்ள தாகோனின் கோவிலுக்குள் நுழைகிற ஒருவனும் கோவில் வாசற்படியை மிதிப்பதில்லை.

அஸ்தோத்து ஜனங்களுக்கும், அவர்களது அக்கம் பக்கத்தினருக்கும் வாழ்க்கைச் சிரமமாகும்படி கர்த்தர் செய்தார். கர்த்தர் அவர்களுக்கு பல துன்பங்களைத் தந்தார். அவர்களை தோல் கட்டிகளினால் வாதித்தார். அவர்களுக்கு சுண்டெலிகளையும் அனுப்பினார். அவை அவர்களின் கப்பல்களுக்கும், நிலப்பகுதிகளுக்கும் பரவியது. நகர ஜனங்கள் அஞ்சினார்கள். அஸ்தோத் ஜனங்கள் நடப்பதை எல்லாம் கண்டனர். அவர்கள், “இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியானது இங்கே இருக்கக் கூடாது! அவர் நம்மையும் நமது தெய்வமான தாகோனையும் தண்டித்திருக்கிறார்” என்றனர்.

அஸ்தோத் ஜனங்கள் பெலிஸ்தியரின் 5 ஆளுனர்களையும் வரவழைத்தனர். அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை நாம் என்னச் செய்யவேண்டும்?” என்று கேட்டனர்.

ஆளுனர்களோ, “இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை இங்கிருந்து காத் பட்டணத்திற்கு எடுத்துப்போக வேண்டும்” என்றனர். ஆகவே பெலிஸ்தர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர்.

ஆனால் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை காத் நகரம் வரைக்கும் பெலிஸ்தர்கள் எடுத்துச் சென்றதும், காத் நகரை கர்த்தர் தண்டித்தார். ஜனங்கள் மிகவும் கலக்கமுற்றனர். இளைஞர் முதியவர் என அனைவருக்கும் தேவன் தொல்லைகளை ஏற்படுத்தினார். தேவன் அங்குள்ளவர்களுக்கும் தோல் கட்டிகளை தந்தார். 10 எனவே, பெலிஸ்தியர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினர்.

ஆனால் அங்குள்ள ஜனங்கள் தேனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கண்டதும், முறையிட்டார்கள். “எங்களது எக்ரோன் நகரத்திற்கு இஸ்ரவேலருடைய தேவனின் பரிசுத்தப் பெட்டியை ஏன் கொண்டு வந்தீர்கள்? நீங்கள் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொல்ல விரும்புகிறீர்களா?” எனக் கேட்டனர். 11 எக்ரோன் ஜனங்கள் பெலிஸ்திய ஆளுனர்களைக் கூட்டி, “இஸ்ரவேலருடைய தேவனின் பெட்டி நம்மை கொன்றுப் போடுவதற்கு முன் இதனை அதன் பழைய இடத்திற்கே அனுப்பிவிடுவோம்!” என்றனர்.

எக்ரோன் ஜனங்கள் மிகவும் பயமடைந்தனர்! அங்குள்ள ஜனங்களை தேவன் மிகவும் கஷ்டப்படுத்தினார். 12 பலர் மரித்தனர். மரிக்காதவர்களுக்கு தோல் கட்டி இருந்தது. எக்ரோன் ஜனங்களின் கூக்குரல் பரலோகம்வரை எட்டியது.

தேவனுடைய பரிசுத்தப் பெட்டி திருப்பி அனுப்பப்படுகிறது

பெலிஸ்தர் தம் நாட்டில் பரிசுத்தப் பெட்டியை ஏழு மாதங்கள் வைத்திருந்தனர். பெலிஸ்தர் தங்கள் பூசாரிகளையும், மந்திரவாதிகளையும் அழைத்து, “கர்த்தருடைய பெட்டியை என்னச் செய்யலாம்? பெட்டியை எவ்வாறு திருப்பி அனுப்பலாம்” என்று கேட்டனர்.

அதற்கு அவர்கள், “நீங்கள் இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைத் திருப்பி அனுப்புவதானால் வெறுமையாக அனுப்பவேண்டாம். அன்பளிப்போடு அனுப்புங்கள். அப்போது உங்கள் பாவங்களையும் இஸ்ரவேலின் தேவன் எடுத்துப் போடுவார். பின் நீங்களும் குணம் பெறுவீர்கள். நீங்களும் பரிசுத்தம் அடைவீர்கள். இதனைச் செய்தால் தேவன் உங்களைத் தண்டிப்பதையும் நிறுத்துவார்” என்றனர்.

பெலிஸ்தர்கள், “நம்மை மன்னிப்பதற்காக நாம் எத்தகைய காணிக்கைகளை இஸ்ரவேலரின் தேவனுக்குக் கொடுக்கவேண்டும்?” எனக்கேட்டனர்.

அதற்கு பூசாரிகளும், மந்திரவாதிகளும் பதில் சொன்னார்கள். “ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ஆளுநராக, 5 பெலிஸ்திய ஆளுநர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரேவிதமானப் பிரச்சனைதான். எனவே தங்கத்தால் 5 உருவங்களை தோல் கட்டியின் சாயலிலும், 5 சுண்டெலி சாயலிலும் செய்து அனுப்பவேண்டும். எனவே, உங்களை அழித்துக்கொண்டிருக்கும் தோல்கட்டி மற்றும் எலியின் உருவங்களை செய்யுங்கள். அத்தங்க உருவங்களை இஸ்ரவேல் தேவனுக்குக் காணிக்கையாக்குங்கள். பின் இஸ்ரவேலின் தேவன், உங்களையும் உங்கள் தெய்வங்களையும், உங்கள் நாட்டையும் தண்டிப்பதை நிறுத்துவார். எகிப்தியர்களையும் பார்வோனையும் போன்று கடினமனம் உடையவர்களாக இராதீர்கள். தேவன் எகிப்தியர்களைத் தண்டித்தார். எனவேதான் எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களை எகிப்தை விட்டுப் போகும்படி அனுமதித்தனர்.

“இப்போது நீங்கள் ஒரு புது வண்டியைச் செய்யவேண்டும். நுகம்பூட்டாத இரண்டு இளைய பசுக்களைப் பிடித்து வண்டியில் கட்டவேண்டும். அவற்றின் கன்றுக்குட்டிகளை அவற்றின் பின் போகவிடாமல் வீட்டில் கட்டவேண்டும். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அவ்வண்டியில் வைக்கவும். தங்க உருவங்களையும் சிலைகளையும் பெட்டியின் அருகில் பக்கத்தில் பையில் வைக்கவும். இவை உங்கள் பாவங்களை மன்னிக்கும் தேவனுக்கான அன்பளிப்புகளாகும். வண்டியை நேரான வழியில் போகவிடுங்கள். வண்டியைக் கவனியுங்கள். அது நேராக இஸ்ரவேலரின் சொந்த இடமான பெத்ஷிமேசுக்குப் போனால், நமக்கு இந்த நோய்களைத் தந்தவர் கர்த்தர் தான் என அறியலாம். ஒருவேளை பெத்ஷிமேசுக்கு அப்பசுக்கள் நேராகச் செல்லவில்லை என்றால், இஸ்ரவேலரின் தேவன் நம்மைத் தண்டிக்கவில்லை, இந்த நோய் தற்செயலாக வந்தது என்று அறிந்துகொள்ளலாம்” என்றனர்.

10 பெலிஸ்தியர் பூசாரிகளும் மந்திரவாதிகளும் சொன்னபடிச் செய்தனர். அப்போது தான் கன்றுகளை ஈன்ற இரண்டு பசுக்களைக் கண்டார்கள். அந்த இரண்டு பசுக்களை வண்டியில் பூட்டி அதன் கன்று குட்டிகளை வீட்டுத் தொழுவில் கட்டினார்கள். 11 பின் பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை வண்டியில் வைத்தனர். தங்க உருவங்களால் செய்யப்பட்ட தோல்கட்டியையும், சுண்டெலிகளையும் அதன் பக்கத்தில் வைத்தனர். 12 பசுக்கள் நேராக பெத்ஷிமேசுக்குச் சென்றன. அவை நேராகச் சாலையில் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் சென்றன. பெலிஸ்தர்கள் தொடர்ந்து நகர எல்லைவரை பின் சென்றனர்.

13 பெத்ஷிமேசின் ஜனங்கள் தங்கள் கோதுமையை பள்ளத்தாக்கிலே அறுவடை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்தப் பெட்டியைக் கண்டனர். அவர்கள் பெட்டியை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ந்தனர். அதைப் பெற்றுக்கொள்ள ஓடினார்கள். 14-15 பெத்ஷிமேசில் யோசுவாவின் வயலுக்கு வண்டி வந்து பாறைக்கருகில் நின்றது. ஜனங்கள் வண்டி மரங்களைப் பிளந்தனர், பசுக்களைக் கொன்று கர்த்தருக்கு பலியாக செலுத்தினார்கள்.

லேவியர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். தங்க உருவங்கள் இருந்தப் பையையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அவற்றைப் பெரியப் பாறைமீது வைத்தனர். அந்த நாளில் பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருக்கு தகன பலிகளை அளித்தனர்.

16 ஐந்து பெலிஸ்திய அரசர்களும் பெத்ஷிமேசின் ஜனங்கள் செய்வதை எல்லாம் கவனித்தனர். அன்றே அவர்கள் எக்ரோனுக்குத் திரும்பினார்கள்.

17 இவ்வாறு பெலிஸ்தர் தோல் கட்டிகளின் தங்க உருவங்களை தம் பாவங்களுக்கு பரிகாரமாக கர்த்தருக்குக் கொடுத்தனர். ஒவ்வொரு பெலிஸ்திய நகரத்திற்கும் ஒரு உருவம் வீதம் கொடுத்தனர். அவை அஸ்தோத்து, அஸ்கலோன், காத், காசா, எக்ரோன் ஆகியவையாகும். 18 பெலிஸ்தர் சுண்டெலியின் தங்க உருவங்களையும் அனுப்பினார்கள். அவையும் நகர எண்ணிக்கையைப் போலவே இருந்தன. இந்நகரங்களைச் சுற்றிலும் சுவர்களும், நகரங்களைச் சுற்றிலும் கிராமங்களும் இருந்தன.

பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பாறையின் மேல் வைத்தனர். அப்பாறை இன்றும் யோசுவாவின் வயலில் உள்ளது.

19 ஆனால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பார்த்தபோது அங்கே ஆசாரியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே தேவன் பெத்ஷிமேசில் 70 பேரை கொன்றார். பெத்ஷிமேசில் உள்ள ஜனங்கள் இக்கொடுமையான தண்டனைக்காகக் கதறி அழுதனர். 20 அவர்கள் “பரிசுத்தப் பெட்டியைப் பராமரிக்கும் ஆசாரியன் எங்கே இருக்கிறான்? இங்கிருந்து அந்த பெட்டி எங்கே செல்லவேண்டும்?” என்றனர்.

21 கீரியாத்யாரீம் என்ற இடத்தில் ஒரு ஆசாரியன் இருந்தான். அங்குள்ள ஜனங்களுக்கு பெத்ஷிமேசின் ஜனங்கள் தூது அனுப்பினார்கள். தூதுவர்கள், “பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டனர். இதனை உங்கள் நகரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்றனர்.

கீரியாத்யாரீம் ஜனங்கள் வந்து கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். அவர்கள் அதனை பாறைமேல் இருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். கர்த்தருடைய பெட்டியைக் காக்க அபினதாபின் மகன் எலெயாசாருக்கு அவர்கள் சிறப்பான சடங்குகளைச் செய்தார்கள். பெட்டி கீரியாத்யாரீமிலேயே 20 ஆண்டுகள் இருந்தது.

இஸ்ரவேலர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்

இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் கர்த்தரைப் பின்பற்ற தொடங்கினார்கள். சாமுவேல் அவர்களிடம், “நீங்கள் உண்மையிலேயே கர்த்தரிடம் மனப்பூர்வமாக திரும்புவீர்கள் என்றால் உங்களிடம் உள்ள அந்நிய தெய்வங்களை தூர எறியுங்கள். அஸ்தரோத் விக்கிரகங்களைத் தூக்கி எறியுங்கள். நீங்கள் உங்களை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக் கொடுங்கள். நீங்கள் கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்! பின்னரே கர்த்தர் உங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுவார்” என்றான்.

எனவே இஸ்ரவேலர் தமது பாகால் மற்றும் அஸ்தரோத் சிலைகளைத் தூர எறிந்தனர். கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்தனர்.

சாமுவேல் “இஸ்ரவேலர் அனைவரும் மிஸ்பாவில் கூடுங்கள். நான் உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்” என்றான்.

இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடினார்கள். அவர்கள் தண்ணீரை கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றினார்கள். இவ்விதமாக உபவாசம் இருந்தனர். அன்றைய நாளில் எந்த வகை உணவும் உண்ணாமல், தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அதை அறிக்கையிட்டனர். “நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்” என்றனர், எனவே சாமுவேல் இஸ்ரவேலர்களின் நீதிபதியாக மிஸ்பாவில் இருந்தான்.

பெலிஸ்தர், இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடுகின்றதைப்பற்றி அறிந்துகொண்டனர். பெலிஸ்தியர்களின் அரசர்கள் இஸ்ரவேலருக்கு எதிராகப் போர் செய்யச் சென்றனர். இதையறிந்து இஸ்ரவேலர் பயந்தார்கள். அவர்கள் சாமுவேலிடம், “எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்வதை நிறுத்தவேண்டாம்! எங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுமாறு கர்த்தரிடம் கேளுங்கள்!” என்றனர்.

சாமுவேல் ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதனை முழுமையாக கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியாகச் செலுத்தினான். சாமுவேல் இஸ்ரவேலர்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு பதில் சொன்னார். 10 சாமுவேல் தகனபலியைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுடன் போரிட வந்தனர். ஆனால் கர்த்தர் பெலிஸ்தியர்கள் பக்கம் பெரிய இடிமுழங்குமாறு செய்தார். இது பெலிஸ்தரைக் அச்சப்படுத்தியது, மேலும் குழப்பியது. தலைவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே இஸ்ரவேலர்கள் அவர்களைப் போரில் தோற்கடித்தனர். 11 இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களை பெத்கார் வரை துரத்தினார்கள். வழியெல்லாம் பெலிஸ்தர்களைக் கொன்றனர்.

இஸ்ரவேலுக்கு சமாதானம் திரும்புகிறது

12 இதற்குப்பின், சாமுவேல் ஒரு சிறப்பான கல்லை நிறுவினான். அது தேவனுடைய உதவியை ஜனங்கள் நினைவு கூரும்படி இருந்தது. இந்த கல் மிஸ்பாவிற்கும் சேணுக்கும் இடையில் இருந்தது. அதற்கு “எபெனேசர்” (உதவியின் கல்) என்று பேரிட்டான். “இந்த இடம் வரும்வரை கர்த்தர் நமக்கு உதவிச் செய்தார்” என்றான்.

13 பெலிஸ்தர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் இஸ்ரவேலுக்குள் நுழையவில்லை. சாமுவேலின் மீதியான வாழ்வு முடியுமட்டும் கர்த்தர் பெலிஸ்தியர்களுக்கு எதிராக இருந்தார். 14 பெலிஸ்தர் ஏற்கெனவே இஸ்ரவேலர்களிடம் இருந்து எக்ரோன் முதல் காத் வரை பல நகரங்களைக் கைப்பற்றி இருந்தனர். அவற்றை இஸ்ரவேலர் திரும்பப் பெற்றனர். அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டனர்.

இஸ்ரவேலர்களுக்கும் எமோரியருக்கும் இடையில் சமாதானம் நிலவியது.

15 சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலர்களை வழிநடத்திச் சென்றான். 16 இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்துக் கொண்டு சாமுவேல் இடம்விட்டு இடம் சென்றான். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுப்பயணம் செய்து, அவன் பெத்தேல், கில்கால், மிஸ்பா போன்ற இடங்களில் நியாயம் விசாரித்து வந்தான். 17 அவனது வீடு ராமாவில் இருந்தது. எனவே எப்போதும் அங்கேயே திரும்பி வருவான். இஸ்ரவேலர்களை அங்கிருந்தே ஆண்டு கொண்டும் நியாயம் விசாரித்தும் வந்தான். சாமுவேல் ராமாவில் கர்த்தருக்காக ஒரு பலிபீடம் கட்டினான்.

யோவான் 6:1-21

5,000 க்கு மேற்பட்ட மக்களுக்கு உணவு(A)

பிறகு இயேசு திபேரியாக் கடல் என அழைக்கப்படும் கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். ஏராளமான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். ஏனென்றால் இயேசு வழியில் நோயாளிகளைக் குணப்படுத்தித் தன் வல்லமையை வெளிப்படுத்தியதை அவர்கள் கண்டிருந்தனர். இயேசு மலையின்மேல் ஏறினார். அங்கே தம்மைப் பின்தொடர்ந்தவர்களோடு உட்கார்ந்தார். அப்பொழுது யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது.

ஏராளமான மக்கள் அவரை நோக்கி வருவதை இயேசு கண்களை ஏறெடுத்து நோக்கினார். பிலிப்புவிடம் இயேசு, “இவர்களெல்லாம் உண்பதற்கு நாம் அப்பத்தை எங்கே வாங்குவது?” என்று கேட்டார். (பிலிப்புவை சோதனை செய்வதற்காகவே இயேசு அவனிடம் இவ்வாறு கேட்டார். தனது திட்டத்தை இயேசு ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தார்.)

பிலிப்பு, “இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் அப்பம் உண்பதற்குக்கூட, நாம் அனைவரும் ஒரு மாதத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டியதிருக்குமே” என்றான்.

அந்திரேயா அவரது இன்னொரு சீஷன். அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். அந்திரேயா இயேசுவிடம், “இங்கே ஒரு சிறுவன் வாற்கோதுமையால் ஆன ஐந்து அப்பத் துண்டுகளையும், இரண்டு சிறு மீன்களையும் வைத்திருக்கிறான். ஆனால் அவை இவ்வளவு மிகுதியான மக்களுக்குப் போதுமானதல்ல” என்றான்.

10 “மக்களை உட்காரும்படிக் கூறுங்கள்” என்றார் இயேசு. அந்த இடத்தில் நிறைய புல் இருந்தது. அங்கே ஐயாயிரம் எண்ணிக்கை வரையுள்ள ஆண்கள் உட்கார்ந்தனர். 11 பிறகு இயேசு அப்பத் துண்டுகளை எடுத்தார். அவர் தேவனுக்கு நன்றி சொன்னார். அதை அங்கு அமர்ந்திருந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கச் செய்தார். அவர் மீனையும் அதைப்போலவே பகிர்ந்தளிக்கச் செய்தார். இயேசு அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வேண்டியமட்டும் கொடுத்தார்.

12 அனைத்து மக்களும் வேண்டிய மட்டும் உண்டனர். அவர்கள் உண்டு முடித்ததும் இயேசு தன் சீஷர்களிடம், “உண்ணப்படாத அப்பத்துண்டுகளையும் மீன் துண்டுகளையும் சேகரியுங்கள். எதையும் வீணாக்க வேண்டாம்” என்றார். 13 எனவே சீஷர்கள் அவற்றைச் சேகரித்தனர். மக்கள் ஐந்து அப்பத்துண்டுகளிலிருந்தே உண்ண ஆரம்பித்தனர். ஆனால் உண்டு பிறகு மீதியிருந்த துணுக்குகளோ பன்னிரண்டு கூடைகளில் நிரப்பப்பட்டன. 14 இயேசு செய்த இந்த அற்புதத்தை மக்கள் கண்டனர். “இவர் உண்மையிலேயே உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்” என்றனர் மக்கள்.

15 அவரை மக்கள் அரசராக்கவேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார்.

இயேசு தண்ணீர் மீது நடத்தல்(B)

16 அன்று மாலை இயேசுவின் சீஷர்கள் கலிலேயாக் கடற்கரைக்கு இறங்கிச் சென்றனர். 17 அப்பொழுது இருட்ட ஆரம்பித்தது. எனினும் இயேசு அவர்களிடம் திரும்பி வரவில்லை. இயேசுவின் சீஷர்கள் படகில் ஏறிக் கடலைக் கடந்து கப்பர்நகூமிற்குச் செல்லத்தொடங்கினர். 18 காற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன. 19 அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர். 20 “நான்தான். பயப்பட வேண்டாம்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். 21 இயேசு இவ்வாறு சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து படகில் அவரை ஏற்றிக்கொண்டனர். உடனே அவர்கள் போக விரும்பிய இடத்திற்குப் படகு வந்து சேர்ந்தது.

சங்கீதம் 106:13-31

13 ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள்.
    அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.
14 பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று.
    மனிதர்களில்லாத இடத்தில் அவர்கள் தேவனைப் பரிசோதித்தார்கள்.
15 ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார்.
    கொடிய நோயையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்.
16 ஜனங்கள் மோசேயிடம் பொறாமை கொண்டார்கள்.
    அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆசாரியனாகிய ஆரோனிடம் பொறாமை கொண்டார்கள்.
17 எனவே தேவன் பொறாமையுள்ள அந்த ஜனங்களைத் தண்டித்தார்.
    தரை பிளந்து தாத்தானை விழுங்கியது.
    தரை ஒன்று சேர்ந்தபோது அபிராமின் கூட்டத்தாரை மூடிக்கொண்டது.
18 பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது.
    அத்தீயோரை நெருப்பு எரித்தது.
19 ஓரேப் மலையில் அந்த ஜனங்கள் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்தார்கள்.
    அவர்கள் ஒரு சிலையைத் தொழுதுகொண்டார்கள்.
20 அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக
    மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.
21 தேவன் நமது முற்பிதாக்களைக் காப்பாற்றினார்.
    ஆனால் அவர்கள் அவரை முற்றிலும் மறந்துபோனார்கள்.
    எகிப்தில் அதிசயங்கள் செய்த தேவனை அவர்கள் மறந்துபோனார்கள்.
22 காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார்.
    செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.

23 தேவன் அந்த ஜனங்களை அழிக்க விரும்பினார்.
    ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரைத் தடுத்தான்.
மோசே தேவன் தேர்ந்தெடுத்த பணியாள்.
    தேவன் மிகுந்த கோபங்கொண்டார், ஆனால் மோசே தடுத்து, தேவன் ஜனங்களை அழிக்காதபடி செய்தான்.

24 ஆனால் பின்பு அந்த ஜனங்கள் அற்புதமான கானான் தேசத்திற்குள் நுழைய மறுத்தார்கள்.
    தேவன் அத்தேசத்தில் வாழும் ஜனங்களை முறியடிப்பதில் அவர்களுக்கு உதவுவார் என்பதை அவர்கள் நம்பவில்லை.
25 அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி
    தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.
26 எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள்
    என்று தேவன் சபதமிட்டார்.
27 அவர்கள் சந்ததியினரை அந்நியர் தோற்கடிக்க அனுமதிப்பதாக தேவன் கூறினார்.
    தேசங்களிலெல்லாம் நம் முற்பிதாக்களைச் சிதறடிப்பதாக தேவன் ஆணையிட்டார்.

28 பின்பு பாகால்பேயோரில், தேவனுடைய ஜனங்கள் பாகாலைத் தொழுதுகொள்ள கூடினார்கள்.
    தேவனுடைய ஜனங்கள் தீய விருந்துகளில் கலந்து மரித்தோரைப் பெருமைப்படுத்தும் பலிகளை உண்டார்கள்.
29 தமது ஜனங்களிடம் தேவன் மிகுந்த கோபமடைந்தார்.
    தேவன் அவர்களை மிகவும் நோயுறச் செய்தார்.
30 ஆனால் பினெகாஸ் தேவனிடம் ஜெபம் செய்தான்.
    தேவன் அந்நோயைத் தடுத்தார்.
31 பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார்.
    தேவன் நோயைத் தடுத்தார்.
    தேவன் இதை என்றென்றைக்கும் நினைவுக்கூருவார்.

நீதிமொழிகள் 14:32-33

32 தீய மனிதன் தன்னுடைய துன்மார்க்கத்தினால் தோற்கடிக்கப்படுவான். ஆனால் நல்ல மனிதனோ மரணகாலத்திலும் கூட அடைக்கலம் பெறுவான்.

33 அறிவுள்ளவன் அறிவுள்ளவைகளையே சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவர்களோ அறிவைப்பற்றிக்கொஞ்சமும் அறிந்துகொள்ளமாட்டார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center