Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the GNT. Switch to the GNT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 13-14

சிம்சோனின் பிறப்பு

13 மீண்டும் இஸ்ரவேலர்கள் தீயசெல்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். எனவே பெலிஸ்தியர் இஸ்ரவேலரை 40 ஆண்டுகள் ஆள்வதற்கு அனுமதித்தார்.

சோரா என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் மனோவா. அவன் தாண் கோத்திரத்தைச் சார்ந்தவன். மனோவாவின் மனைவி குழந்தைகளின்றி மலடியாக இருந்தாள். கர்த்தருடைய தூதன் மனோவாவின் மனைவியின் முன் தோன்றி, “நீ பிள்ளை இல்லாதவளாயிருக்கிறாய், ஆனால் நீ கருவுற்று ஒரு மகனைப் பெறுவாய். திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே. அசுத்தமான உணவு எதையும் உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெறுவாய். அவன் விசேஷமாக தேவனுக்கென்று அர்பணிக்கப்படுவான். அவன் நசரேயனாக இருப்பான். எனவே அவன் முடியை சவரம் செய்யவோ, வெட்டவோ கூடாது. அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே தேவனுக்கென்று விசேஷமானவனாக இருப்பான். அவன் பெலிஸ்தியரின் ஆட்சியிலிருந்து இஸ்ரவேலரை மீட்பான்” என்றான்.

அப்போது அப்பெண் தன் கணவனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினாள். அவள், “தேவனிடமிருந்து ஒரு மனிதன் என்னிடம் வந்தார். அவர் தேவன் அனுப்பிய தூதனைப் போன்றிருந்தார். அவர் என்னை பயமடையச் செய்தார். அவர் எங்கிருந்து வந்தாரென்று நான் விசாரிக்கவில்லை. அவர் தன் பெயரையும் எனக்குச் சொல்லவில்லை. ஆனால் அவர் என்னை நோக்கி, ‘நீ கருவுற்று ஒரு மகனைப் பெறுவாய். திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே, அசுத்தமான எதையும் உண்ணாதே. ஏனெனில் ஒரு விசேஷமான வகையில் அச்சிறுவான் தேவனுக்காக அர்ப்பணிக்கப்படுவான். அவன் தேவனுக்குரிய விசேஷமானவனாக, பிறக்கும் முன்னரே அமைந்து, மரணம் அடையும் மட்டும் அவ்வாறே விளங்குவான்’ என்றார்” என்றாள்.

பின்பு மனோவா கர்த்தரிடம் ஜெபம் செய்தான். அவன், “கர்த்தாவே, நீர் உமது தேவ மனிதனை எங்களிடம் மீண்டும் அனுப்ப வேண்டும். விரைவில் பிறக்கப் போகிற மகனுக்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை அவர் எங்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்” என்றான்.

தேவன் மனோவாவின் ஜெபத்தைக் கேட்டார். தேவதூதன் அப்பெண்ணிடம் மீண்டும் வந்தான். அவள் மனோவா இல்லாதபோது வயலில் தனித்திருந்தாள். 10 எனவே அவள் தன் கணவனிடம் ஓடி, “அந்த மனிதன் வந்திருக்கிறார்! அன்று என்னிடம் வந்த அதே மனிதன்!” என்றாள்.

11 மனோவா எழுந்து மனைவியைப் பின் தொடர்ந்து சென்றான். அம்மனிதனிடம் வந்து, “நீர் எனது மனைவியிடம் முன்பு பேசிய அதே மனிதரா?” என்று கேட்டான். தூதன், “நானே” என்றான்.

12 மனோவா, “நீர் சொன்னபடியே நடக்குமென நம்புகிறேன். சிறுவன் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்துச் சொல்லுங்கள். அவன் என்ன செய்வான்?” என்றான்.

13 கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “உன் மனைவி நான் கூறிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும். 14 திராட்சைச் செடியில் விளையும் எதையும் அவள் உண்ணக்கூடாது. அவள் திராட்சை ரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ பருகக் கூடாது. அசுத்தமான உணவு எதையும் அவள் உண்ணக் கூடாது. நான் அவளைச் செய்யுமாறு கட்டளையிட்ட அனைத்தையும் அவள் செய்யவேண்டும்” என்றான்.

15 அப்போது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி, “நீர் சற்றுத் தங்கிச் செல்வதை விரும்புகிறோம். ஒரு வெள்ளாட்டுக் குட்டியை நீர் உண்பதற்காகச் சமைத்து வர விரும்புகிறோம்” என்றான்.

16 கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “நீங்கள் இருக்குமாறு கூறினாலும் உங்கள் உணவை உண்ணமாட்டேன். நீங்கள் ஏதேனும் தயாரிக்க விரும்பினால் கர்த்தருக்குத் தகனபலி கொடுங்கள்” என்றான். (மனோவா உண்மையிலேயே அவன் கர்த்தருடைய தூதன் என்பதை அறியாதிருந்தான்.) 17 பின் கர்த்தருடைய தூதனிடம் மனோவா, “உமது நாமமென்ன? நீர் சொன்னது உண்மையாகவே நடந்தால் நாங்கள் உம்மை எப்படி கௌரவிக்க முடியும்? இதற்காகவே உமது நாமத்தை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்றான்.

18 கர்த்தருடைய தூதன், “என் நாமத்தை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு அது மிக அதிசயம் ஆகும்” என்றார்.

19 மனோவா ஒரு வெள்ளாட்டுக்குட்டியை ஒரு பாறையின் மேல் பலியிட்டான். அவன் ஆட்டுக் குட்டியையும் தானியக் காணிக்கையையும் அதிசயங்களை செய்கிற கர்த்தருக்கு அன்பளிப்பாகச் செலுத்தினான். 20 மனோவாவும் அவனது மனைவியும் நடந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தனர். பலிபீடத்திலிருந்து நெருப்பு ஜூவாலை எழும்பிய போது கர்த்தருடைய தூதன் நெருப்பிலேயே விண்ணிற்கு எழுந்து சென்றார்.

மனோவாவும் அவனது மனைவியும் அதைக் கண்டு முகங்குப்புற தரையில் விழுந்து வணங்கினார்கள். 21 அவர் கர்த்தருடைய தூதன் என்பதை மனோவா இறுதியில் கண்டுகொண்டான். கர்த்தருடைய தூதன் மீண்டும் மனோவாவிற்கும் அவன் மனைவிக்கும் காட்சியளிக்கவில்லை.

22 மனோவா தன் மனைவியை நோக்கி, “நாம் தேவனைப் பார்த்தோம், அதனால் நாம் கண்டிப்பாக மரித்துவிடுவோம்!” என்றான்.

23 ஆனால் அவள் அவனை நோக்கி, “கர்த்தர் நம்மைக் கொல்ல விரும்பவில்லை. அவர் நம்மைக் கொல்ல விரும்பினால் நமது தகனபலியையும், தானியக் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். இந்த அற்புதங்களையும் காட்டியிருக்கமாட்டார். இக்காரியங்களை அறிவித்திருக்கவும்மாட்டார்” என்றாள்.

24 அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு சிம்சோன் என்று பெயரிட்டனர். சிம்சோன் நன்றாக வளர்ந்தான். அவனை கர்த்தர் ஆசீர்வதித்தார். 25 கர்த்தருடைய ஆவி சிம்சோன் மீது வந்து, அவன் மகானே தாண் என்னும் நகரிலிருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்தார். மகானே நகரம் என்பது சோரா என்னும் நகரத்திற்கும் எஸ்தாவோல் என்னும் நகரத்திற்கும் நடுவில் உள்ளது.

சிம்சோனின் திருமணம்

14 சிம்சோன் திம்னாத் என்னும் நகரத்திற்குச் சென்றான், அங்கு ஒரு பெலிஸ்திய இளம் பெண்ணைக் கண்டான். அவன் வீட்டிற்குத் திரும்பியதும் தன் தந்தையையும், தாயையும் நோக்கி, “ஒரு பெலிஸ்திய பெண்ணைத் திம்னாவில் நான் பார்த்தேன், அவளை நீங்கள் எனக்காக அழைத்து வரவேண்டும். நான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.

அவனது தந்தையும் தாயும், “இஸ்ரவேலில் உனக்கு திருமணம் செய்வதற்கு நிச்சயமாக ஒரு பெண் வாய்ப்பாள். பெலிஸ்தியரிலிருந்து ஒரு பெண்ணை நீ திருமணம்செய்ய வேண்டுமா? அந்த ஜனங்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல” என்றார்கள்.

ஆனால் சிம்சோன், “அப்பெண்ணை எனக்காக அழைத்து வாருங்கள்! அப்பெண்ணே எனக்கு வேண்டும்!” என்றான். (சிம்சோனின் பெற்றோர் கர்த்தர் இவ்வாறு நிகழ வேண்டுமென விரும்பியதை அறியாதிருந்தார்கள். கர்த்தர் பெலிஸ்தியருக்கு எதிராகச் செயல்படும் வகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். பெலிஸ்தியர் அக்காலத்தில் இஸ்ரவேலரை ஆண்டுகொண்டிருந்தனர்.)

சிம்சோன் திம்னாத் நகரத்திற்கு தன் தந்தையோடும் தாயோடும் சென்றான். அவர்கள் அந்த நகரத்திற்கு அருகேயுள்ள திராட்சைத் தோட்டத்தை நெருங்குகையில் ஒரு இளம் சிங்கம் திடீரென கெர்ச்சித்தபடி சிம்சோனை நோக்கி வந்தது. கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோனின் மீது இறங்கினார். அவன் தனது வெறுங்கைகளாலேயே சிங்கத்தைக் கொன்றான். இதை அவனால் எளிதாகச் செய்ய முடிந்தது. ஒரு வெள்ளாட்டைக் கொல்வதுபோல் எளிதாக அதனைக் கொன்றான். ஆனால் அவன் அதை தன் தந்தைக்கோ, தாய்க்கோ தெரிவிக்கவில்லை.

பின்பு சிம்சோன் நகரத்திற்குச் சென்று அந்த பெலிஸ்தியப் பெண்ணைச் சந்தித்துப் பேசினான். அவனுக்குப் அவளை பிடித்திருந்தது. பல நாட்களுக்குப் பின்பு அந்த பெலிஸ்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சிம்சோன் திரும்பி வந்தான். வழியில் சிங்கத்தைப் பார்க்க சென்றான். மரித்த சிங்கத்தின் உடலில் தேனீக் கூட்டத்தைக் கண்டான். அவை தேனைச் சேகரித்திருந்தன. சிம்சோன் தனது கைகளால் அதில் கொஞ்சம் தேனை எடுத்தான். அவன் தேனைச் சுவைத்துக் கொண்டே வழியில் நடத்தான். அவன் தன் பெற்றோரிடம் வந்தபோது அவர்களுக்கும் சிறிது தேனைக் கொடுத்தான். அவர்களும் அதை உண்டனர். ஆனால் மரித்த சிங்கத்திடமிருந்து எடுத்த தேன் அது என்று அவர்களிடம் சிம்சோன் கூறவில்லை.

10 சிம்சோனின் தந்தை பெலிஸ்திய பெண்ணைப் பார்ப்பதற்காகச் சென்றார். மணமகனுக்கான முறைமைப்படி சிம்சோன் ஒரு விருந்து கொடுத்தான். 11 பெலிஸ்தியர்கள் 30 பேரை விருந்துக்கு அனுப்பி வைத்தனர்.

12 அந்த 30 பேருக்கும் சிம்சோன், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்ல விரும்புகிறேன். இந்த விருந்து 7 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களுக்குள் அந்த விடுகதைக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும். அந்நாட்களுக்குள் உங்களால் விடுகதையை விடுவிக்கக் கூடுமாயின் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் கொடுப்பேன். 13 ஆனால் நீங்கள் பதில் தராவிட்டால் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் எனக்குத் தரவேண்டும்” என்றான். அந்த 30 பேரும், “உன் விடுகைதையைச் சொல். நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள்.

14 சிம்சோன் அவர்களிடம்,

“சாப்பிடுவோரிடமிருந்து சாப்பிடுவதற்குக் கொஞ்சம் கிடைத்தது.
    பலமானவரிடமிருந்து இனிப்பும் கிடைத்தது.”

என்ற விடுகதையைச் சொன்னான்.

30 பேரும் 3 நாட்கள் இந்த விடுகதையை விடுவிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

15 நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம் வந்தனர். அவர்கள், “எங்களை வறியோராக்கும்படிக்கு அழைத்தீர்களா? விடுகதையின் பதிலை அறியும்படிக்கு நீ உனது கணவனைத் தந்திரமாய் வசப்படுத்த வேண்டும். நீ அதை எங்களுக்கு அறிவிக்காவிட்டால் உண்னையும் உன் தந்தையின் வீட்டார் எல்லோரையும் நெருப்பிட்டுக் கொல்லுவோம்” என்றார்கள். 16 சிம்சோனின் மனைவி அவனிடம் வந்து அழுதாள். அவள் சிம்சோனிடம், “உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை! நீங்கள் உண்மையில் என்மீது அன்பு செலுத்தவில்லை! எங்கள் ஆட்களுக்கு விடுகதை போட்டுள்ளீர்கள். ஆனால் என்னிடம் நீங்கள் பதிலைக் கூறவில்லை” என்றாள்.

17 விருந்தின் 7 நாட்களும் முடியும்வரை சிம்சோனின் மனைவி அழுதாள். அதனால் 7வது நாள் சிம்சோன் அவளுக்கு விடுகதையின் பதிலைக் கூறினான். அவள் தொடர்ந்து அவனைத் தொந்தரவு செய்ததினாலும் வற்புறுத்தியதாலும் அவளுக்குக் கூறினான். அவள் அந்தப் பதிலை தனது ஜனங்களுக்குக் கூறினாள்.

18 ஏழாவது நாள் சூரியன் மறையும் முன்னர், பெலிஸ்தியர்கள் பதிலை அறிந்தனர். அவர்கள் சிம்சோனிடம்,

“தேனைவிட சுவையானது எது?
    சிங்கத்தைக் காட்டிலும் வலிமையானது எது?” என்றார்கள்.

அப்போது சிம்சோன் அவர்களிடம்,

“என் பசுவால் நீங்கள் உழாவிட்டால்
    என் விடுகதைக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கமாட்டீர்கள்” என்றான்.

19 சிம்சோன் மிகவும் கோபமாக இருந்தான். கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோன் மீது வல்லமையோடு வந்தார். அதினால் அவன் அஸ்கலோன் நகரத்திற்குச் சென்று அங்கு 30 பெலிஸ்தியரைக் கொன்றான். அவர்களது ஆடைகளையும், சொத்துக்களையும் எடுத்துக் கொண்டான். அந்த ஆடைகளைப் பதில் சொன்ன 30 பேருக்கும் கொடுத்தான். அதன் பின்பு தனது தந்தையின் வீட்டிற்கு வந்தான். 20 சிம்சோன் தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் செல்லவில்லை. மாப்பிள்ளைத் தோழன் அவளை வைத்துக் கொண்டான்.

யோவான் 1:29-51

இயேசு, தேவ ஆட்டுக்குட்டி

29 மறுநாள் தன்னை நோக்கி இயேசு வருவதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர் தான் தேவனுடைய ஆட்டுக்குட்டி. உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கப்போகிறவர். 30 நான் ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்தவர் இவர் தான். ‘எனக்குப் பிறகு ஒரு மனிதர் வருவார். அவர் என்னிலும் மேலானவர். ஏனென்றால் அவர் எனக்கு முன்னமே வாழ்ந்துகொண்டிருக்கிறவர். அவர் எப்போதும் வாழ்கிறவர்.’ 31 இவரை நானும் அறியாதிருந்தேன். ஆனாலும் நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்திருக்கிறேன். ஆகையால் இஸ்ரவேல் மக்கள் இயேசுதான் கிறிஸ்து என அறிந்துகொள்ள முடியும்.

32-33 “கிறிஸ்து யாரென்று நானும் அறியாமல்தான் இருந்தேன். ஆனால் தேவன் என்னைத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார். ‘நீ யார் மீது பரிசுத்த ஆவியானர் இறங்கி அமர்வதைக் காண்பாயோ, அவர்தான் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்’ என்று தேவன் என்னிடம் கூறினார்” என்றான். “நான் அவ்வாறு நிகழ்வதைப் பார்த்தேன். ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். அந்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் இறங்கி இயேசுவின் மீது அமர்ந்தார். 34 நான் இதைத்தான் மக்களிடம் சொல்லி வருகிறேன். ‘இயேசுதான் தேவனின் குமாரன்’” என்று யோவான் சொன்னான்.

இயேசுவின் முதல் சீஷர்கள்

35 மறுநாள் மறுபடியும் யோவான் அங்கே இருந்தான். அவனோடு அவனைப் பின்பற்றுகிற சீஷர்களில் இரண்டு பேர் இருந்தனர். 36 இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான்.

37 அந்த இரு சீஷர்களும் யோவான் கூறுவதைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். 38 “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு திரும்பி அவர்களைப் பார்த்து கேட்டார்.

அந்த இருவரும், “போதகரே, நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

39 “என்னோடு வாருங்கள். நீங்கள் கண்டுகொள்வீர்கள்” என்று இயேசு பதிலுரைத்தார். எனவே அவர்கள் இருவரும் அவர் பின்னால் சென்றனர். இயேசு தங்கியிருக்கும் இடத்தையும் கண்டனர். அன்று அவர்கள் அவரோடு அங்கே தங்கியிருந்தனர். அப்பொழுது நேரம் சுமார் நான்கு மணி.

40 இயேசுவைப்பற்றி யோவான் சொன்னதன் மூலமாகத் தெரிந்துகொண்டதால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த இருவரில் ஒருவன் பெயர் அந்திரேயா. அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். 41 முதல் காரியமாக அவன் தன் சகோதரன் சீமோன் பேதுருவைப் போய்ப் பார்த்தான். “நாங்கள் மேசியாவைக் (அதன் பொருள் கிறிஸ்து) கண்டுகொண்டோம்” என்று கூறினான்.

42 பிறகு அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “நீ யோவானுடைய மகனான சீமோன். நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (“கேபா” என்பதற்கு “பேதுரு” என்று அர்த்தம்.)

43 மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்லத் தீர்மானித்தார். இயேசு பிலிப்புவைக் கண்டு, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். 44 பிலிப்பு, அந்திரேயா, பேதுரு ஆகியோரின் ஊரான பெத்சாயிதாவைச் சேர்ந்தவன். 45 பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து, “மோசே எழுதியிருக்கிற சட்டங்களை எண்ணிப்பார். மோசே வரப்போகிற ஒரு மனிதரைப்பற்றி எழுதினார். தீர்க்கதரிசிகளும் அவரைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். நாங்கள் அவரைத் தெரிந்துகொண்டோம். அவர் பெயர் இயேசு. யோசேப்பின் மகன். நாசரேத்திலிருந்து வருகிறார்.”

46 ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், “நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா?” எனக் கேட்டான்.

“வந்து பார்” என்று பதிலுரைத்தான் பிலிப்பு.

47 நாத்தான்வேல் தன்னிடம் வந்துகொண்டிருப்பதை இயேசு பார்த்தார். “இதோ வந்துகொண்டிருக்கிற இவன் உண்மையாகவே தேவனின் மக்களில் ஒருவன். இவனிடம் எந்த தவறும் இல்லை” என்று இயேசு கூறினார்.

48 “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என நாத்தான்வேல் கேட்டான்.

பிலிப்பு என்னைப்பற்றி உனக்குக் கூறும் முன்பே, “நீ அத்தி மரத்தின் கீழே நிற்கும்போதே உன்னைப் பார்த்தேன்” என்று இயேசு சொன்னார்.

49 பிறகு இயேசுவிடம், “ஆண்டவரே! நீங்கள் தான் தேவகுமாரன். இஸ்ரவேலின் அரசன்” என்று நாத்தான்வேல் கூறினான்.

50 “நான் உன்னை அத்தி மரத்தின் அடியில் பார்த்ததாக ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அதனால் என்மீது நீ நம்பிக்கை வைத்தாய். ஆனால் அதைவிட மேலும் சிறந்தவைகளைக் காண்பாய்” என்று இயேசு கூறினார். 51 அவர் மேலும், “நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். பரலோக வாசல் திறந்திருப்பதையும், மனிதகுமாரனிடத்திலிருந்து தேவதூதர்கள் மேலே செல்வதையும் கீழே இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள்” [a] என்றார்.

சங்கீதம் 102

துன்பப்படும் ஒரு மனிதனின் ஜெபம். அவன் சோர்வடையும்போது தனது குறைகளை கர்த்தரிடம் சொல்லிக் கொள்வதாக உள்ளது.

102 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
    உதவிக்காக நான் கதறும்போது கவனியும்.
கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும்.
    உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும்.
என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது.
    எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது.
என் வலிமை போயிற்று.
    நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன்.
    நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன்.
என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன்.
    பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.
என்னால் தூங்க இயலவில்லை.
    கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன்.
என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள்.
    அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள்.
என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது.
    என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.
10 ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர்.
    நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.

11 பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது.
    நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன்.
12 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்!
    உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
13 நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர்.
    நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
14 உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள்.
    அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள்.
15 ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்.
    தேவனே, பூமியின் எல்லா அரசர்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
16 கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார்.
    ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள்.
17 தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார்.
    தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.
18 வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது.
    எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
19 மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார்.
    பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.
20 சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார்.
    மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.
21 அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள்.
    அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.
22 தேசங்கள் ஒருமித்துச் சேரும்.
    அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.

23 என் ஆற்றல் என்னை விட்டகன்றது.
    என் ஆயுள் குறைந்தது.
24 எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும்.
    தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
25 பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர்.
    உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!
26 உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர்.
    அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும்.
ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர்.
    அவையெல்லாம் மாறிப்போகும்.
27 ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை.
    நீர் என்றென்றும் வாழ்வீர்!
28 நாங்கள் இன்று உமது பணியாட்கள்.
    நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள்.
    அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன்.

நீதிமொழிகள் 14:15-16

15 முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான்.

16 அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center