Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the ESV. Switch to the ESV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 18:5-19:24

தாவீதின் வெற்றிகளை சவுல் கவனிக்கிறான்

பல யுத்தங்களுக்கு தாவீதை சவுல் அனுப்பினான். தாவீதும் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்தான். பின்பு அவனை படைவீரருக்கு தலைவன் ஆக்கினான். சவுலின் தளபதிகள் உட்பட அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர்! தாவீது பெலிஸ்தியர்களோடு சண்டையிட வெளியேறினான். போரிலிருந்து வெற்றிபெற்று திரும்பியபோது, இஸ்ரவேலின் ஒவ்வொரு நகரப் பெண்மணிகளும் தாவீதைப் பாராட்ட வந்தனர். சிரித்து நடனமாடி மேளமும் யாழும் வாசித்தனர். சவுல் எதிரில் இதனைச் செய்தனர். பெண்கள்,

“சவுல் ஆயிரம் பகைவர்களை கொன்றிருக்கிறான்.
    ஆனால் தாவீதோ பதினாயிரம் பகைவர்களை கொன்றான்!”

என்று பாடினார்கள்.

இதனால் சவுல் கோபம் அடைந்தான். பெண்கள் சொன்னதை நினைத்து விசனப்பட்டான். அன்று முதல் தாவீதை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தான்.

தாவீதைக் கண்டு சவுல் பயப்படுகிறான்

10 மறுநாள், தேவனிடமிருந்து ஒரு கெட்ட ஆவி சவுலை ஆட்கொண்டது. தாவீது வழக்கம்போல் சுரமண்டலத்தை எடுத்து மீட்டிக்கொண்டிருக்கும்போது, சவுல் தன் வீட்டில் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தான். 11 சவுலிடம் ஈட்டி இருந்தது. சவுல், “சுவரோடு சேர்த்து தாவீதைக் குத்திக் கொன்றுவிடலாம்” என எண்ணினான். அதன்படியே இரண்டு முறை ஈட்டியை வீசினான். ஆனால் இரண்டு முறையும் தாவீது தப்பிவிட்டான்.

12 தாவீதோடு கர்த்தர் இருந்தார். சவுலிடமிருந்து கர்த்தர் விலகிவிட்டார். எனவே சவுல் தாவீதைக் கண்டு பயந்தான். 13 தன்னிடமிருந்து வெகுதொலைவான இடத்துக்குத் தாவீதை சவுல் அனுப்பினான். 1,000 வீரர்களுக்கு அதிகாரியாக தாவீதை ஆக்கினான். வீரர்களை போருக்கு வழி நடத்துகிறவனாயிருந்தான். 14 கர்த்தர் தாவீதோடு இருந்ததால் எல்லா யுத்தங்களிலும் வென்றான். 15 சவுல் தாவீதின் வெற்றிகளைக் கண்டபோது அவனுக்கு மேலும் மேலும் பயம் வந்தது. 16 ஆனால் யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ளவர்கள் தாவீதை நேசித்தனர். போரில் தங்களுக்காகப் போராடுவதால் அனைவரும் தாவீதை நேசித்தனர்.

தாவீதுக்கு தன் மகளை திருமணம் செய்துவைக்க சவுல் விரும்புகிறான்

17 ஆனால், சவுல் தாவீதைக் கொல்ல விரும்பி தந்திரமான ஒரு வழியை யோசித்தான். அவன், “என் மூத்த மகள் மேராப்பை உனக்கு மணமுடித்துத் தருவேன், பின் நீ வலிமை மிக்க வீரனாகலாம். என் மகன் போல இருக்கலாம்! பிறகு நீ போய் கர்த்தருடைய யுத்தங்களை நடத்தலாம்!” என்றான். மேலும் சவுல், “இவனை நான் கொல்லாமல், எனக்காக பெலிஸ்தியர்களால் கொல்லச்செய்வேன்” என்று எண்ணினான்.

18 தாவீதோ, “நான் பெரிய குடும்பத்தவனும் அல்ல! முக்கியமானவனும் அல்ல! என்னால் அரசனின் மகளை மணந்துகொள்ள முடியாது!” என்றான்.

19 எனவே மேராப் தாவீதை மணக்கவேண்டிய காலம் வந்தபோது, அவளை மேகோலத்தியனாகிய ஆதரியேலுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.

20 சவுலின் அடுத்த மகள் மீகாள் தாவீதை நேசித்தாள். இவ்விஷயத்தைப் பற்றி சவுலிடம் ஜனங்கள் சொன்னார்கள். இது சவுலுக்கு மகிழ்ச்சி தந்தது. 21 எனவே, “மீகாளைப் பயன்படுத்தி தாவீதை சூழ்ச்சிக்குட்படுத்த வேண்டும். அவள் அவனை மணக்கட்டும். பிறகு அவன் பெலிஸ்தியர்களால் கொல்லப்படுவான்” என்று நினைத்த சவுல் இரண்டாம் தடவையாக, “இன்று என் மகளை மணமுடிக்கலாம்” என்றான்.

22 சவுல் தன் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டு, “தனியாக தாவீதிடம் கூறுங்கள், பார், அரசனும் உன்னை விரும்புகிறான். அவரது அதிகாரிகளும் உன்னை விரும்புகின்றனர். நீ அவனுடைய மகளை மணக்க வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.

23 அதிகாரிகள் இதை அவனிடம் கூற, அவனோ, “அரசனுக்கு மருகமகனாவது அவ்வளவு எளிதா? அரசனின் மகளுக்குத் தருகிற அளவிற்கு என்னிடம் செல்வமில்லை! நான் சாதாரண ஏழை” என்றான்.

24 தாவீது சொன்னதை சவுலிடம் அதிகாரிகள் சொன்னார்கள். 25 சவுல் அவர்களிடம், “அரசன் உன்னிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்திற்கு பதிலாக 100 பெலிஸ்தியர்களின் நுனித்தோல் போதும் என தாவீதிடம் கூறுங்கள்” என்றான். இதுதான் சவுலின் சூழ்ச்சி. பெலிஸ்தியர்கள் தாவீதை நிச்சம் கொல்வார்கள் என சவுல் நம்பியிருந்தான்.

26 அதிகாரிகள் தாவீதிடம் இதனைக் கூறினார்கள். அரசனின் மருமகனாக வாய்ப்புக் கிடைத்ததற்காய் மகிழ்ச்சியடைந்தான். 27 எனவே, தாவீதும் அவனது வீரர்களும் உடனே பெலிஸ்தரியர்களோடு சண்டைக்குப் போய் 200 பெலிஸ்தியரைக் கொன்று, அவர்களின் நுனித்தோலை வெட்டி கொண்டு வந்து சமர்ப்பித்தான். அரசனின் மருமகனாக விரும்பினபடியால் தாவீது இதைச் செய்தான்.

தன் மகள் மீகாளை தாவீது மணந்துக்கொள்ள சவுல் அனுமதித்தான். 28 தாவீதோடு கர்த்தர் இருப்பதைச் சவுல் அறிந்துக் கொண்டான். அதோடு அவனது மகள் மீகாள் தாவீதை நேசித்தாள் என்பதையும் அறிந்துக்கொண்டான். 29 எனவே, சவுலுக்கு தாவீது மீது மேலும் பயம் வந்தது. அவனைத் தனது எதிரியாக எப்போதும் எண்ணி வந்தான்.

30 பெலிஸ்திய தளபதிகள் தொடர்ந்து இஸ்ரவேலருக்கு எதிராக சண்டையிட்டனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது மிகச் சிறந்த அதிகாரி என்று புகழ் பெற்றான்.

யோனத்தான் தாவீதுக்கு உதவுகிறான்

19 சவுல் தன் அதிகாரிகளிடமும் யோனத்தானிடமும் தாவீதைக் கொல்லுமாறு கூறினான். ஆனால் யோனத்தான் தாவீதை அதிகமாக விரும்பினான். 2-3 எனவே யோனத்தான் தாவீதை எச்சரித்து, “கவனமாக இரு, சவுல் உன்னைக் கொல்லப் பார்க்கிறார். இன்று காலை, வயலில் ஒளிந்துக்கொள், நான் என் தந்தையோடு அங்கு வந்து பேசுவதை கேட்டுக்கொள்” என்றான்.

யோனத்தான் தனது தந்தை சவுலிடம் சம்பாஷித்தான். தாவீதைப் பற்றி நல்லவற்றை அவன் எடுத்துக் கூறினான். அவன், “நீங்கள் ஒரு அரசன், தாவீது ஒரு சேவகன், அவன் உங்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டான். எனவே அவனுக்கு எதிராக எதுவும் செய்யாதீர்கள், அவன் உங்களுக்கு நன்மையே செய்வான். அவன் கோலியாத்தைக் கொல்ல தன் உயிரையே பணயம் வைத்தான். கர்த்தர் இஸ்ரவேலுக்காக பெரிய வெற்றியைத் தந்தார். நீங்கள் பார்த்து மகிழ்ந்தீர்கள். அவன் அப்பாவி! அவனைக் கொல்ல காரணமே இல்லை” என்றான்.

யோனத்தான் சொல்வதை சவுல் கேட்டு, “கர்த்தர் ஜீவிப்பது உண்மை, தாவீது கொல்லப்படமாட்டான்” என்றான்.

எனவே, யோனத்தான் தாவீதை அழைத்து நடந்த எல்லாவற்றையும் சொன்னான். பிறகு தாவீதை சவுலிடம் அழைத்து வந்தான். ஆகையால் முன்பு போலவே தாவீதை சவுலோடேயே இருக்கச் செய்தான்.

சவுல் தாவீதை மீண்டும் கொல்ல முயற்சிக்கிறான்

மறுபடியும் போர் தொடங்கியது. தாவீது புறப்பட்டு சென்று பெலிஸ்தியரோடு போர் செய்தான். பெலிஸ்தியரை தாவீது தோற்கடித்தான். அங்கிருந்து அவர்கள் ஓடிப் போனார்கள். சவுல் வீட்டில் இருக்கும் போது, கர்த்தரிடமிருந்து ஒரு தீய ஆவி அவன் மீது வந்தது. அவன் தனது கையில் ஈட்டி ஒன்றை வைத்திருந்தான். தாவீது சுரமண்டலம் வாசித்துக்கொண்டிருதான். 10 சவுல் ஈட்டியால் அவனைச் சுவரோடு சேர்த்து குத்திக் கொல்லப் பார்த்தான். ஆனால் தாவீது அப்புறம் குதித்துத் தப்பினான். சவுல் தன் ஈட்டியைச் சுவரில் பதிய குத்தினான். தாவீது அன்றிரவு தப்பிவிட்டான்.

11 தாவீதின் வீட்டுக்கு சவுல் ஆட்களை அனுப்பினான். அவர்கள் தாவீதின் வீட்டைக் கண்காணித்தார்கள். அன்றிரவு முழுக்க அவர்கள் அங்கேயே தங்கி இருந்தார்கள். அதிகாலையில் தாவீதைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டார்கள். தாவீதின் மனைவியான மீகாள் அவனை எச்சரித்து, “இந்த இரவே இங்கே இருந்து தப்பி ஓடி, உன் உயிரைக் காப்பாற்றிக்கொள். இல்லையென்றால் நாளை கொல்லப்படுவீர்” என்று சொன்னாள். 12 அவள் அவனை ஜன்னல் வழியாக இறக்கிவிட, அவன் தப்பினான். 13 மீகாள் கட்டில் மேல் ஒரு சிலையை வைத்து, தலை மாட்டில் வெள்ளாட்டுத் தோலைப் போட்டு ஆடையால் மூடி வைத்தாள்.

14 தாவீதைக் கைது செய்து அழைத்து வரும்படி சவுல் ஆட்களை அனுப்பினான். மீகாள் அவர்களிடம், “தாவீது நோயுற்றிருக்கிறான்” என்று சொன்னாள்.

15 தூதுவர்கள் சவுலிடம் சங்கதியைச் சொன்னார்கள். ஆனால் அவர்களை மீண்டும் சவுல் திருப்பி அனுப்பினான். அவர்களிடம், “தாவீதை என்னிடம் அழைத்து வாருங்கள். முடிந்தால் அவன் படுத்துக்கிடக்கும் கட்டிலோடு அவனைத் தூக்கி வாருங்கள், அவனை நான் கொல்வேன்” என்றான்.

16 தாவீதின் வீட்டுக்குத் தூதுவர்கள் சென்றார்கள். தாவீதைத் தூக்கி வர வீட்டிற்குள் நுழைந்தார்கள். ஆனால் படுக்கையில் வெறும் சிலையைத்தான் பார்த்தார்கள், ஆட்டு மயிர் அதன் போர்வையாக இருக்க கண்டனர்.

17 சவுல், மீகாளிடம், “ஏன் என்னிடம் நீ தந்திரம் செய்கிறாய்? நீ எனது எதிரியை தப்பிக்கவிட்டாய்!” என்று கேட்டான்.

அவள், “தாவீது தப்பிக்க நான் உதவி செய்யாவிட்டால் அவர் என்னை கொன்றுவிடுவதாகச் சொன்னார்!” என்றாள்.

தாவீது ராமாவில் உள்ள முகாமிற்குப் போதல்

18 தாவீது தப்பித்து ராமாவில் தங்கியிருந்த சாமுவேலிடம் போனான். தனக்கு சவுல் செய்தக் காரியங்கள் அனைத்தையும் சாமுவேலிடம் சொன்னான். பிறகு இருவரும் தீர்க்கதரிசிகள் தங்கி இருக்கிற முகாம்களுக்குச் சென்றனர். தாவீது அங்கேயே தங்கினான்.

19 ராமாவில் உள்ள முகாமில் தாவீது இருக்கும் செய்தியைப் பற்றி சவுல் கேள்விப்பட்டான். 20 தாவீதை கைது செய்து அழைத்து வர சேவகர்களை அனுப்பினான். அவர்கள் வந்து தீர்க்கதரிசனம் சொல்கிற தீர்க்கதரிசிகளின் குழு மத்தியில் சாமுவேல் குழுத்தலைவனாக நிற்பதைக் கண்டனர். அப்போது சேவகர் மேல் தேவனுடைய ஆவியானவர் இறங்க அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

21 இதை அறிந்த சவுல், வேறு சேவகர்களை அனுப்பினான். அவர்களும் அங்கு போய் தீர்க்கதரிசனம் சொல்ல, மூன்றாவது குழுவை அனுப்பினான். அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 22 சவுலும் ராமாவுக்குப் போய் சேக்குவிலுள்ள கிணற்றருகில் நின்று, “சாமுவேலும் தாவீதும் எங்கே?” என்று கேட்டான்.

ஜனங்கள், “ராமாவின் முகாமில் உள்ளனர்” என்று சொன்னார்கள்.

23 அவனும் ராமாவுக்கு அருகில் உள்ள முகாம்களுக்குப் போனான். அவன் மேலும் தேவனுடைய ஆவியானவர் இறங்கவே அவனும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தான். முகாமிற்குச் செல்லும் வரை அப்படியேச் சொல்லிக்கொண்டே சென்றான். 24 சவுலும் தன் ஆடைகளை கழற்றிப் போட்டு சாமுவேலுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் சொல்லி இரவும் பகலும் ஆடையில்லாமல் கிடந்தான்.

எனவேதான், “சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனா?” என்று ஜனங்கள் கூறுகின்றனர்.

யோவான் 8:31-59

பாவத்திலிருந்து விடுதலை

31 இயேசு தன்மீது நம்பிக்கை வைத்த யூதர்களைப் பார்த்து, “நீங்கள் என் உபதேசத்தைக் கைக்கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் எனது சீஷர்களாக இருப்பீர்கள். 32 பின்னர் நீங்கள் உண்மையை அறிந்துகொள்வீர்கள். அந்த உண்மை உங்களுக்கு விடுதலையைத் தரும்” என்றார்.

33 “நாங்கள் ஆபிரகாமின் மக்கள். நாங்கள் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. ஆகவே நாங்கள் விடுதலை பெறுவோம் என்று ஏன் சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.

34 அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் அடிமைதான். பாவமே அவனது எஜமானன். 35 ஓர் அடிமை எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்கமாட்டான். குமாரன் என்றென்றும் குடும்பத்தில் நிலைத்திருக்கிறார். 36 எனவே குமாரன் உங்களை விடுதலை செய்தால் நீங்கள் உண்மையான விடுதலையைப் பெறுவீர்கள். 37 நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் என் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 38 என் பிதா எனக்குக் காட்டியவற்றையே நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்கள் பிதா உங்களுக்குச் சொன்னபடியே செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

39 “எங்கள் பிதா ஆபிரகாம்தான்” என்றனர் யூதர்கள். இயேசு அவர்களுக்கு விடையாக “நீங்கள் உண்மையிலேயே ஆபிரகாமின் பிள்ளைகள் என்றால் அவர் செய்தவற்றையே நீங்களும் செய்ய வேண்டும். 40 நான் தேவனிடமிருந்து கேட்ட உண்மையை உங்களுக்குச் சொல்லுகிற மனிதன். ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இதுபோல் எதுவும் செய்யவில்லை. 41 ஆகையால் நீங்கள் உங்கள் சொந்தப் பிதா செய்ததையே செய்கிறீர்கள்” என்றார்.

ஆனால் யூதர்கள், “எங்கள் பிதா யாரென்று தெரிந்துகொள்ள இயலாத குழந்தைகள் அல்ல நாங்கள். தேவனே எங்கள் பிதா. எங்களுக்குரிய ஒரே பிதாவும் அவரே” என்றனர்.

42 இயேசு அவர்களிடம், “தேவன்தான் உங்களது உண்மையான பிதா என்றால் நீங்கள் என்மீது அன்பு செலுத்தியிருப்பீர்கள். நான் தேவனிடமிருந்து வந்தேன். இப்பொழுது இங்கே இருக்கிறேன். நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. தேவன் என்னை அனுப்பினார். 43 நான் சொல்லுகிறவற்றையெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் என் உபதேசத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 44 பிசாசே உங்கள் பிதாவாயிருக்கிறான். நீங்கள் அவனுக்கு உரியவர்கள். அவனுக்கு விருப்பமானவற்றையே நீங்கள் செய்யவிரும்புகிறீர்கள். தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா.

45 “நான் உண்மையைப் பேசுகிறேன். அதனால்தான் நீங்கள் என்னை நம்புவதில்லை. 46 உங்களில் எவராவது ஒருவர் நான் பாவம் செய்தவன் என்று நிரூபிக்க இயலுமா? நான் சொல்வது உண்மையாக இருக்கும்போது என்னை ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்? 47 தேவனைச் சேர்ந்த எவனும் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் நீங்கள் தேவனைச் சார்ந்தவர்கள் இல்லை” என்றார்.

இயேசுவும்-ஆபிரகாமும்

48 யூதர்கள் இயேசுவிடம், “நாங்கள் உன்னை சமாரியன் என்று சொல்கிறோம். பிசாசு உன்னிடம் புகுந்ததால் நீ உளறுகிறாய் என்றும் சொல்கிறோம். நாங்கள் சொல்வது சரிதானே?” என்று கேட்டனர்.

49 “என்னிடம் எந்தப் பிசாசும் இல்லை. நான் என் பிதாவுக்கு மகிமை உண்டாக்குகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு மகிமையை அளிப்பதில்லை. 50 நான் எனக்கு மகிமையைச் சேர்த்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கவில்லை. இந்த மகிமைக்குரியவர் ஒருவர் இருக்கிறார். அவரே நீதிபதி. 51 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவனொருவன் என் உபதேசத்துக்கு கீழ்ப்படிகிறானோ அவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை” என்றார் இயேசு.

52 யூதர்களோ இயேசுவிடம், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்பது இப்பொழுது உறுதியாயிற்று. ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும்கூட இறந்துபோய்விட்டார்கள். ஆனால் நீயோ, ‘என் உபதேசத்துக்குக் கீழ்ப்படிகிறவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை’ என்று கூறுகிறாய். 53 எங்கள் பிதா ஆபிரகாமைவிடப் பெரியவன் என்று நீ உன்னை நினைத்துக்கொள்கிறாயா? ஆபிரகாம் இறந்துபோனார். தீர்க்கதரிசிகளும் இறந்துபோயினர். உன்னை நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டனர்.

54 இயேசு அவர்களிடம், “எனக்கு நானே மகிமை அளித்துக்கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். 55 ஆனால் அவரை நீங்கள் உண்மையில் அறிந்து கொள்ளவில்லை. நான் அவரை அறிகிறேன். நான் அவரை அறியேன் என்று சொன்னால், நான் உங்களைப் போன்றே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் அவரை நான் அறிவேன். அவர் சொன்னவற்றுக்குக் கீழ்ப்படிகிறேன். 56 உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் நான் வந்த நாளைக் காண்பேன் என்று மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்த நாளைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்” என்றார்.

57 யூதர்கள் இயேசுவிடம், “என்ன சொன்னாய்? நீ ஒருபோதும் ஆபிரகாமைப் பார்த்திருக்க முடியாது. உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லையே!” என்று கேட்டனர்.

58 “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்றார் இயேசு. 59 இயேசு இதைச் சொன்னதும் மக்கள் அவர் மீதுக் கல் எறிவதற்குக் கற்களைப் பொறுக்கினார்கள். ஆனால் இயேசு மறைந்து அந்த தேவாலயத்தை விட்டு விலகிப்போனார்.

சங்கீதம் 112

112 கர்த்தரை துதியுங்கள்!
கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான்.
    அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான்.
அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள்.
    நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும்.
    அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும்.
தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர்.
    தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர்.
தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது.
    தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது.
அவன் விழமாட்டான்,
    ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான்.
அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான்.
    அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான்.
அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான்.
    அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான்.
அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான்.
    அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும்.
10 தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள்.
    அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள்.
பின்பு அவர்கள் மறைந்து போவார்கள்.
    தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை.

நீதிமொழிகள் 15:12-14

12 அறிவற்றவன் தவறு செய்யும்போது தான் சுட்டிக் காட்டப்படுவதை வெறுக்கிறான். அவன் அறிவுள்ளவர்களிடம் அறிவுரைக் கேட்பதை வெறுக்கிறான்.

13 ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனது முகம் அதனைக் காட்டிவிடும். ஆனால் ஒருவன் தன் இருதயத்தில் துக்கம் உடையவனாக இருந்தால் அதை அவனது ஆவி வெளிப்படுத்தும்.

14 அறிவுள்ளவன் மேலும் அறிவைப் பெற விரும்புகிறான். அறிவில்லாதவனோ மேலும் முட்டாள் ஆவதை விரும்புகிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center