Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the ESV. Switch to the ESV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 24-25

தாவீது முன் சவுலின் அவமானம்

24 சவுல் பெலிஸ்தியரை விரட்டின பின்பு, “தாவீது என்கேதி அருகிலுள்ள பாலைவனப்பகுதியில் இருக்கிறான்” என்று ஜனங்கள் அறிவித்தனர்.

எனவே சவுல் இஸ்ரவேலரில் 3,000 பேரைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை கூட்டிக்கொண்டு தாவீதையும் அவனது ஆட்களையும் காட்டு ஆடுகள் உள்ள பாறைப் பகுதிகளில் தேடினான். சவுல் சாலையோரத்தில் இருந்த ஆட்டுத் தொழுவத்திற்கு வந்தான். அதன் அருகில் ஒரு குகை இருந்தது. சவுல் அதனுள்ளே தீட்டுக்கழிக்கச் சென்றான். அதன் பின் பகுதியில் தாவீதும் அவனது ஆட்களும் ஒளிந்திருந்தனர். தாவீதிடம் அவனது ஆட்கள், “கர்த்தர் சொன்ன நாள் இதுவே! கர்த்தர், ‘நான் உனது பகைவனை உன்னிடம் தருவேன். நீ அவனை என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றார்கள்.

தாவீது சவுலின் அருகில் ஊர்ந்து சென்றான். சவுலின் சால்வை நுனியை அறுத்தான். அதனைச் சவுல் கவனிக்கவில்லை. பின்னர் இதற்காக தாவீது வருத்தப்பட்டான். தாவீது தன் ஆட்களிடம், “மீண்டும் நான் என் எஜமானனுக்கு இதுபோல் செய்துவிடாமல் கர்த்தர்தான் தடுக்க வேண்டும், சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன். அவருக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன்!” என்றான். தாவீது தனது ஆட்களையும் சவுலுக்குத் தீமை செய்துவிடாமல் பார்த்துக்கொண்டான்.

சவுலும் அந்தக் குகையை விட்டு வெளியேறிச் சென்றான். தாவீது வெளியே வந்து சவுலைப் பார்த்து, “என் ஆண்டவனாகிய அரசனே” என்று சத்தமிட்டான்.

தாவீது தரையில் முகம் குப்புற வணங்குவதை சவுல் திரும்பிப் பார்த்தான். தாவீது சவுலிடம், “‘உமக்குத் தீங்கிழைக்க தாவீது திட்டமிடுகிறான்’ என்று ஜனங்கள் சொல்வதை ஏன் காது கொடுத்துக் கேட்கிறீர்? 10 “நான் உமக்குத் தீமை செய்ய விரும்பவில்லை! இதனை உமது கண்களாலேயே பார்க்கலாம்! இன்று கர்த்தர் உம்மைக் குகைக்குள் அனுப்பினார். ஆனால் நான் உம்மைக் கொல்ல மறுத்து விட்டேன். உம் மீது இரக்கம் கொண்டேன். நானோ, ‘நான் என் எஜமானனுக்குத் தீமை செய்யமாட்டேன்! சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன்!’ என்று கூறினேன். 11 என் கையிலுள்ள இந்தத் துண்டுத் துணியை பாரும். இதனை உமது சால்வை நுனியில் இருந்து வெட்டி எடுத்தேன். நான் உம்மை கொன்றிருக்கலாம்! நான் அப்படிச் செய்யவில்லை. இதனை நீர் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உமக்கு எதிராக எந்த தீமையும் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்! நான் உமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆனால் நீர் என்னை வேட்டையாடிக் கொல்லப்பார்க்கிறீர். 12 கர்த்தர் தாமே இதில் தீர்ப்பளிக்கட்டும்! நீர் எனக்குச் செய்த தீமைக்குத் தக்கதாக கர்த்தர் உம்மை தண்டிக்கக் கூடும். ஆனால் நான் உமக்கு எதிராகச் சண்டையிடமாட்டேன்.

13 “‘கெட்ட ஜனங்களிடமிருந்தே கெட்டவை வருகின்றன என்பது பழமொழி.’

“நான் எவ்வித தீமையும் செய்யவில்லை! நான் கெட்டவன் அல்ல! நான் உமக்குத் தீமை செய்யமாட்டேன்! 14 நீர் யாரைத் தேடுகிறீர்? இஸ்ரவேல் அரசன் யாரோடு சண்டையிட அலைகிறார்? உமக்குத் தீமை செய்யும் உமது எதிரியைத் தேடவில்லை! ஒரு மரித்த நாயை, தெள்ளுப்பூச்சியைத் தேடி அலைகிறீர்கள். 15 கர்த்தர் தாமே தீர்ப்பளிக்கட்டும். நம் இருவரையும் பற்றி அவர் முடிவு செய்யட்டும், நான் சொல்வது சரி என்று கர்த்தருக்குத் தெரியும். அவர் எனக்கு உதவுவார். கர்த்தர் உம்மிடமிருந்து என்னைக் காப்பாற்றுவார்” என்றான்.

16 தாவீது பேசி முடித்ததும் சவுல், “இது உன் குரல்தானா என் மகனாகிய தாவீதே?” என்று சொல்லி கதறி அழுதான். 17 அவன், “நீ சரியானவன். நான் தவறானவன். நீ என்னிடம் நல்லபடியாக இருக்க நான் உன்னிடம் தவறாக நடந்துக்கொண்டேன். 18 நீ எனக்குச் செய்த நன்மைகளைப்பற்றிக் கூறினாய். கர்த்தர் என்னை உன்னிடம் ஒப்படைத்தார். நீ என்னைக் கொல்லவில்லை. 19 இது நான் உன் எதிரி அல்ல என்பதைக் காட்டும். எவனும் தன் எதிரியைப் பிடித்தால் எளிதில் விடமாட்டான். இன்று எனக்கு நீ செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்குப் பதிலளிப்பார்! 20 நீ புதிய அரசனாவாய் என்பது எனக்குத் தெரியும். நீ இஸ்ரவேல் சாம்ராஜ்யத்தை ஆளுவாய் 21 இப்போது எனக்கொரு சத்தியம் செய்துக் கொடு. எனது சந்ததியாரைக் கொல்லமாட்டேன் என்று கர்த்தருடைய பேரில் சத்தியம் செய். என் தந்தையின் குடும்பத்திலிருந்து என் பெயரையும் அழிக்காமல் இருக்கவேண்டும்” எனக்கேட்டுக் கொண்டான்.

22 எனவே தாவீதும் தான் சவுலின் குடும்பத்தாரைக் கொல்லமாட்டேன் என்று சவுலிடம் சத்தியம் செய்தான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதும் அவனது ஆட்களும் கோட்டைக்குப் போனார்கள்.

தாவீதும், நாபால் எனும் முட்டாளும்

25 சாமுவேல் மரித்தான். அவனது மரணத்திற்காக அனைத்து இஸ்ரவேலர்களும் கூடித் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டனர். ராமாவில் உள்ள வீட்டில் அவனை அடக்கம் செய்தனர்.

பின் பாரான் பாலைவனத்துக்கு தாவீது போனான். மாகோனில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனிடம் 3,000 ஆடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் இருந்துக் கொண்டு தன் வியாபாரத்தைக் கவனித்து வந்தான். அவன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க அங்கே போய் வருவான். இவனது பெயர் நாபால். இவன் காலேபின் குடும்பத்தவன். இவனது மனைவி அபிகாயில் புத்திசாலித்தனமும் அழகும் கொண்டவள். ஆனால் நாபால் அற்பனாகவும் கொடூரமானவனாகவும் இருந்தான்.

பாலைவனத்தில் நாபால் தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதாக தாவீது அறிந்து கொண்டான். அவனோடு பேச, தாவீது 10 இளைஞர்களை அனுப்பினான். அவர்களிடம், “கர்மேலுக்குப் போங்கள், நாபாலைக் கண்டு எனக்காக வாழ்த்துச் சொல்லுங்கள்” என்றான். தாவீது நாபாலுக்கு இந்த செய்தியையும் சொல்லி அனுப்பினான், “நீயும் உனது குடும்பத்தாரும் நலமென்று நம்புகிறேன். உனக்குரிய அனைத்தும் நலமென்று நம்புகிறேன். நீ மயிர் கத்தரிப்பதாக அறிந்தேன். கொஞ்ச நேரம் உனது மேய்ப்பர்கள் எங்களோடு இருக்கையில், அவர்களுக்கு நாங்கள் தீங்கு செய்யவில்லை. அவர்கள் கர்மேலில் இருக்கும்வரை அவர்களிடமிருந்து எதையும் எடுக்கவில்லை. உன் வேலைக்காரரிடம் கேட்டுப்பார். அவர்கள் உண்மையைக் கூறுவார்கள். என் இளைஞரிடம் கருணையோடு இரு. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உன்னிடம் வந்திருக்கிறோம். உன்னால் முடிந்ததை இவர்களுக்குக் கொடு. இதை எனக்காகவும் உனது நண்பன் [a] தாவீதிற்காகவும் செய்” என்றான்.

தாவீதின் ஆட்கள் நாபாலிடம் சென்றனர். தாவீதின் செய்தியைச் சொன்னார்கள். 10 ஆனால் நாபால் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டான். அவன், “தாவீது யார்? இந்த ஈசாயின் மகன் யார்? இந்நாட்களில் பல அடிமைகள் தம் எஜமானர்களைவிட்டு ஓடிப்போகிறார்கள்! 11 என்னிடம் அப்பமும் தண்ணீரும் உள்ளன. மயிர் கத்தரித்தவர்களுக்காக, நான் ஆட்டைக் கொன்று சமையல் செய்திருக்கிறேன். ஆனால், அதை எனக்கு முன்-பின் அறியாதவர்களுக்காக கொடுக்கமாட்டேன்!” என்றான்.

12 தாவீதின் இளைஞர் திரும்பி வந்து நாபால் சொன்னவற்றை சொன்னார்கள். 13 அதற்கு தாவீது, “உங்கள் பட்டயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்றான். தாவீதும் அவனது ஆட்களும் தங்கள் பட்டயங்களை எடுத்தனர். அவனோடு 400 பேர் சென்றனர். மீதி 200 பேர் தங்கள் பொருட்களுக்கருகில் அங்கேயே தங்கினார்கள்.

அபிகாயில் ஆபத்தைத் தவிர்க்கிறாள்

14 நாபாலின் வேலைக்காரரில் ஒருவன் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலிடம் பேசி, “நமது எஜமானர் நாபாலைப் பாராட்டும்படி தாவீது தன் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் நாபால் அவர்களிடம் அற்பமாக நடந்துக்கொண்டான். 15 அவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். நாம் வயல்களில் ஊருக்கு வெளியே இருந்தோம். தாவீதின் ஆட்கள் எப்போதும் நம்மோடு தங்கி இருக்கையில் அவர்கள் நமக்கு தீமை செய்யவில்லை! நமக்குரியவற்றை ஒருபோதும் திருடவில்லை! 16 இரவும் பகலும் தாவீதின் ஆட்கள் நம்மைக் காப்பாற்றினார்கள். நம்மைச் சுற்றிலும் அவர்கள் சுவர்களைப் போன்று காவலாக இருந்தார்கள். நாம் மந்தைகளை நடத்திச் செல்லும்போது உதவுவார்கள். 17 இப்போது சிந்தித்துப் பார்த்து நாம் என்ன செய்யலாம் என்று முடிவு செய்யுங்கள். நாபால் தன் காரியங்களைப் பேசினது அறிவீனமாய் இருக்கிறது! இப்போது நமது எஜமானனுக்கும் அவனது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது” என்றான்.

18 இதைக் கேட்டதும், அபிகாயில் அவசரமாக 200 அப்பத்துண்டுகளையும், 2 திராட்சைரசப்பைகளையும், 5 சமைத்த ஆடுகளையும், 5 படி வறுத்த பயிரையும், வற்றலான 100 திராட்சைக் குலைகளையும், வற்றலான 200 அத்திப்பழ அடைகளையும் எடுத்துக்கொண்டாள். அவற்றைக் கழுதையின் மேல் ஏற்றினாள். 19 பின் அவள் தன் வேலைக்காரனிடம், “நீ போ. நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன்” என்றாள். ஆனால் அவளோ கணவரிடம் அதைச் சொல்லவில்லை.

20 அவள் கழுதையின் மேல் சவாரி செய்து மலையின் அடுத்தப் பகுதிக்கு வந்தாள். எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த தாவீதையும் அவனது ஆட்களையும் சந்தித்தாள்.

21 தாவீது அபிகாயிலை சந்திக்கும் முன், “நான் இந்தப் பாலைவனத்தில் நாபாலின் சொத்துக்களைக் காப்பாற்றினேன். அவனது ஆடுகள் எதுவும் தவறிப்போகாது என நான் உறுதி செய்தேன். நான் பிரதிபலனை எதிர் பார்த்துச் செய்யவில்லை! அவனுக்கு நன்மைகளைச் செய்தேன். ஆனால் அவன் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டான். 22 நாளைக் காலைக்குள் நாபாலின் குடும்பத்தில் உள்ள ஒருவரையாவது உயிரோடுவிட்டு வைத்தால் தேவன் என்னைத் தண்டிப்பார்” என்று சொல்லியிருந்தான்.

23 அந்த நேரத்தில் தான் அபிகாயில் வந்து சேர்ந்தாள். அவள் தாவீதைப் பார்த்ததும் கழுதையிலிருந்து இறங்கி தரையில் முகம்படும்படி குனிந்து தாவீதின் முன்பு நின்றாள். 24 அபிகாயில் அவன் காலில் விழுந்து, “ஐயா, உங்களோடு பேச தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். நடந்தவற்றிற்கு என்னைப் பழிவாங்குங்கள். 25 நீங்கள் அனுப்பினவர்களை நான் பார்க்கவில்லை. பயனற்றக் கொடிய மனிதனாகிய நாபாலிடம் கவனம் செலுத்தாதிருங்கள். அவன் தன் பெயரைப் போலவே அறிவீனனாக இருக்கிறான். 26 அப்பாவி ஜனங்களைக் கொல்வதினின்றும் கர்த்தர் உங்களை விலக்கட்டும். கர்த்தருடைய ஜீவன் பேரிலும் உங்கள் ஜீவன் பேரிலும், உங்களுடைய பகைவர்களும், நாபாலைப் போன்று உமக்குத் தீமை செய்பவர்களும் அழிந்து போவார்கள் என நம்புகிறேன். 27 இப்போது, உங்களுக்கு இந்த அன்பளிப்புகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை உங்கள் மனிதர்களுக்கு கொடுங்கள். 28 நான் தவறு செய்தால் மன்னித்துவிடும். உங்கள் குடும்பத்தை கர்த்தர் பெலப்படுத்துவார் என்று எனக்குத் தெரியும். உங்கள் குடும்பத்தில் இருந்து பல அரசர்கள் புறப்படுவார்கள். நீங்கள் கர்த்தருக்காகப் போர் செய்து வருவதால் அவர் இதனை உமக்காகச் செய்வார்! நீங்கள் வாழ்கின்ற காலம் வரை ஜனங்கள் உங்களிடம் எந்தக் குறையும் காணமாட்டார்கள். 29 எவராவது உங்களைக் கொல்வதற்குத் தொடர்ந்து வந்தால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார்! ஆனால் உங்கள் பகைவர்களை கர்த்தர் கவணில் உள்ள கல்லைப் போன்று தூர எறிவார்! 30 உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்யப்போவதாக கர்த்தர் வாக்கு செய்துள்ளார். கர்த்தர் தமது வாக்கைக் காப்பாற்றுவார்! தேவன் உம்மை இஸ்ரவேலரின் தலைவராக்குவார். 31 அப்பாவிகளைக் கொன்றப்பழி உங்களுக்கு வரக்கூடாது. நீங்கள் அந்த வலையில் விழக்கூடாது. கர்த்தர் உமக்கு வெற்றிகளைத் தரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

32 தாவீது அபிகாயிலிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்று. என்னிடம் உன்னை அனுப்பியதற்காக தேவனைப் போற்று. 33 உனது நல்ல தீர்ப்புக்காக தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும். இன்று அப்பாவிகளைக் கொன்றுப்போடாமல் என்னைக் காப்பாற்றினாய். 34 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியமாகக் கூறுகிறேன். நீ இவ்வளவு விரைவாக வந்து என்னை சந்திக்காமல் இருந்தால் நாளை விடிவதற்குள் நாபாலின் குடும்பத்தில் ஒருவன் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டார்கள்” என்றான்.

35 பிறகு தாவீது, அபிகாயிலின் அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டான். அவளிடம், “வீட்டிற்குச் சமாதானமாகப் போ. உனது வேண்டுகோளை ஏற்று உன் விருப்பபடியே செய்வேன்” என்றான்.

நாபாலின் மரணம்

36 அபிகாயில் நாபாலிடம் திரும்பிப் போனாள். அவன் தன் வீட்டில் ஒரு அரசனைப் போன்று உணவு உண்டு கொண்டிருந்தான். நன்றாக குடித்து போதையில் சுகபோகமாக இருந்தான். எனவே அபிகாயில் விடியும்வரை அவனிடம் எதுவும் சொல்லவில்லை. 37 மறுநாள் காலையில் நாபால் போதை தெளிந்தபோது, அவனது மனைவி அவனிடம் நடந்ததைக் கூறினாள். அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவனது உடல் பாறையாக இறுகியது! 38 பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்.

39 நாபால் மரித்துப்போனதை தாவீது கேள்விப்பட்டு, “கர்த்தரைப் போற்றுங்கள்! நாபால் என்னைப் பற்றி அவதூறு சொன்னான். கர்த்தர் எனக்கு உதவினார். நான் தீமை செய்யாதபடி கர்த்தர் என்னை விலக்கினார். நாபால் கேடு செய்ததால் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்” என்றான்.

பிறகு தாவீது அபிகாயிலிடம் தனது மனைவியாகுமாறு செய்தி அனுப்பினான். 40 தாவீதின் ஆட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “உங்களை அழைத்துவர தாவீது எங்களை அனுப்பினார். நீங்கள் அவரது மனைவியாக வேண்டுமென்று விரும்புகிறார்” என்றார்கள்.

41 அபிகாயில் தன் முகம் தரையில் படும்படி வணங்கி, “நான் உங்கள் வேலைக்காரி. உங்களுக்கு சேவைசெய்ய தயார். எனது எஜமானனாகிய தாவீதின் வேலைக்காரரின் பாதங்களையும் கழுவ ஆயத்தமாக இருக்கிறேன்” என்றாள்.

42 அவள் உடனே ஒரு கழுதையின் மீது ஏறித் தாவீதின் ஆட்களுடன் புறப்பட்டாள். அவள் தன்னோடு 5 பணிப்பெண்களையும் அழைத்து வந்து, தாவீதின் மனைவி ஆனாள்.

43 யெஸ்ரயேல் ஊரினவளாகிய அகினோவாளையும் தாவீது மணம் செய்துகொண்டான். அகினோவாளும், அபிகாயிலும், தாவீதின் மனைவிகள். 44 தாவீது ஏற்கெனவே சவுலின் மகளான மீகாளையும் மணந்திருந்தான். ஆனால் சவுல் அவளை எடுத்து கல்லீம் ஊரானாகிய லாயீசின் மகனான பல்த்திக்கு மணமுடித்து கொடுத்து விட்டிருந்தான்.

யோவான் 10:22-42

யூதர்கள் இயேசுவுக்கு எதிராகுதல்

22 அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது. 23 இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார். 24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். “இன்னும் எவ்வளவு காலம் உங்களைப்பற்றிப் புதிராக வைத்திருப்பீர்கள். நீங்கள் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்று கேட்டனர்.

25 “நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் நம்பவில்லை. நான் என் பிதாவின் பேரில் அற்புதங்களைச் செய்கிறேன். அந்த அற்புதங்கள் நான் யாரென்று உங்களுக்கு காட்டுகின்றன. 26 ஆனால் நீங்கள் நம்புகிறதில்லை. ஏனென்றால் நீங்கள் எனது ஆடுகள் அல்ல. 27 எனது ஆடுகள் எனது குரலைக் கேட்கும். நான் அவற்றை அறிவேன். அவை என்னைப் பின் தொடரும். 28 நான் என் ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் இறந்துபோவதில்லை. அவைகளை என் கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ளமுடியாது. 29 என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிக்கொள்ளமுடியாது. 30 நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார், இயேசு.

31 மீண்டும் யூதர்கள் அவரைக் கொல்வதற்காகக் கற்களை எடுத்துக்கொண்டனர். 32 ஆனால் இயேசு அவர்களிடம், “நான் என் பிதா மூலமாகப் பல நற்செயல்களைச் செய்தேன். அந்தச் செயல்களை நீங்களும் பார்த்தீர்கள். அவற்றில் எந்த நல்ல செயலுக்காக என்னைக் கல்லெறிய விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.

33 அதற்கு அவர்கள் “நீ செய்த எந்த நல்ல செயல்களுக்காகவும் நாங்கள் உன்னைக் கொல்லவில்லை. ஆனால் நீ சொல்லுகிறவை எல்லாம் தேவனுக்கு எதிராக இருக்கின்றன. நீ ஒரு மனிதன். ஆனால் நீ தேவன் என்று கூறுகிறாய். அதற்காகத்தான் உன்னைக் கல்லால் எறிந்து கொல்லப் பார்க்கிறோம்” என்றனர்.

34 “‘தேவர்களாயிருக்கிறீர்கள், என்று நான் சொன்னேன்’ [a] என்பதாக உங்கள் சட்டத்தில் எழுதியிருக்கிறது. 35 தேவனின் செய்தியைப் பெற்றுக்கொண்ட மக்களை தேவர்கள் என்று சொல்லலாம் என பரிசுத்த வேதவாக்கியங்கள் கூறுகின்றன. வேதவாக்கியங்கள் எப்போதும் உண்மையானவை. 36 ஆகவே, ‘நான் தேவனின் குமாரன்’ என்று கூறியதை, தேவனுக்கு எதிராகப் பேசுவது என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டவன் நான்தான். 37 என்னுடடைய பிதா செய்தவற்றை நான் செய்யாவிட்டால் நீங்கள் என்னை நம்பவேண்டியதில்லை. 38 ஆனால் எனது பிதா செய்தவற்றை நானும் செய்வேனானால் நீங்கள் என்னை நம்பித்தான் ஆகவேண்டும். நீங்கள் என்னை நம்புவதில்லையானாலும் நான் செய்கின்றவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். நான் பிதாவிடமும் பிதா என்னிடமும் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார், இயேசு.

39 யூதர்கள் இயேசுவைப் பிடிக்க மீண்டும் முயன்றார்கள். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார்.

40 பிறகு இயேசு யோர்தான் நதியைக் கடந்து திரும்பிப் போனார். யோவான் முன்பு ஞானஸ்நானம் கொடுத்த இடத்துக்குப் போனார். அங்கே அவர் தங்கினார். 41 அவரிடம் பலர் வந்தனர். “யோவான் எவ்வித அற்புதமும் செய்யவில்லை. ஆனால் இயேசுவைப்பற்றி அவன் சொன்னவை எல்லாம் உண்மையாக இருக்கின்றன” என்றனர். 42 அங்கே அநேக மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தனர்.

சங்கீதம் 116

116 கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை
    நான் நேசிக்கிறேன்.
நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை
    நான் நேசிக்கிறேன்.
நான் மரித்தவன் போலானேன்!
    மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று.
    நான் அஞ்சிக் கலங்கினேன்.
அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன்.
    நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன்.
கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார்.
    தேவன் தயவுள்ளவர்.
கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
    நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு!
    கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.
தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்.
    நீர் என் கண்ணீரை நிறுத்தினீர்.
    நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.
நான் உயிருள்ளோரின் தேசத்தில்
    தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன்.
10 “நான் அழிந்துபோனேன்!”
    என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன்.
11 நான் பயப்பட்டபோதும்
    “மனிதர்கள் எல்லோரும் பொய்யர்களே!” என்றேன்.
12 நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்?
    என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார்.
13 அவர் என்னைக் காப்பாற்றினார்.
    எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன்.
    நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
14 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
    இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன்.
15 கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது!
    கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
16 நான் உமது பணியாள்.
    உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான்.
    கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர்.
17 நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன்.
    நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
18 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
    நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.
19 நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன்.

கர்த்தரைத் துதிப்போம்!

நீதிமொழிகள் 15:20-21

20 அறிவுள்ள மகன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் அறிவற்றவனோ தாய்க்கு அவமானத்தைத் தருகிறான்.

21 முட்டாள்தனமானவற்றைச் செய்வதில் அறிவற்றவன் மகிழ்கிறான். அறிவுள்ளவனோ சரியானவற்றைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center