Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the EHV. Switch to the EHV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 14:1-15:22

யோவாப் புத்திசாலியான ஒரு பெண்ணை தாவீதிடம் அனுப்புகிறான்

14 தாவீது அரசன் அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் மகனாகிய யோவாப் அறிந்தான். எனவே, யோவாப் சிலரைத் தெக்கோவாவிற்கு அனுப்பி, அங்கிருந்து புத்திசாலியான ஒரு பெண்ணை அழைத்து வருமாறு கூறினான். யோவாப் அந்தப் பெண்ணிடம், “மிகவும் துக்கமாயிருக்கிறவளைப்போல் காண்பித்துக்கொள். துக்கத்திற்கு அறிகுறியான ஆடைகளை அணிந்துக்கொள். நல்ல ஆடைகளை அணியாதே. மரித்த ஒருவருக்காக பல நாட்கள் வருந்துகிற ஒருவளைப் போல் நடி. அரசனிடம் போய் நான் உனக்குச் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்திப் பேசு” என்றான். பின்பு யோவாப் அப்பெண்ணுக்கு அவள் கூற வேண்டியவற்றைச் சொல்லிக்கொடுத்தான்.

பின்பு தெக்கோவாவைச் சேர்ந்த அப்பெண் அரசனிடம் பேசினாள். அவள் தரையில் விழுந்து முகம் நிலத்தைத் தொடும்படி வணங்கினாள். அவள் குனிந்து, “அரசே, எனக்கு உதவுங்கள்!” என்றாள்.

தாவீது அரசன் அவளிடம், “உனக்கு நேர்ந்த பிரச்சனை என்ன?” என்று கேட்டான்.

அப்பெண், “நான் ஒரு விதவை எனது கணவன் மரித்துப்போனான். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் களத்தில் போரிட்டனர். ஒருவரும் அவர்கள் சண்டையைச் சென்று நிறுத்தவில்லை. ஒருவன் மற்றவனைக் கொன்றுவிட்டான். இப்போது எனது குடும்பத்தார் எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி, ‘சகோதரனைக் கொன்ற உனது மகனை அழைத்து வா, நாங்கள் அவனைக் கொல்லவேண்டும். ஏனெனில் அவன் தனது சகோதரனைக் கொன்றிருக்கிறான்’ என்றனர். எனது மகன் நெருப்பில் மீந்திருக்கும் கடைசி கரிநெருப்பைப் போன்றவன். அவன் மரித்தால் எங்கள் குடும்ப விளக்கு அணைந்துவிடும். தந்தையின் சொத்தை சுதந்தரிக்கும்படி பிழைத்திருக்கும் ஒரே மகன் அவனே. அவன் மரித்தால் மரித்துப்போன எனது கணவனின் சொத்துக்கள் வேறொருவருக்குச் சொந்தமாகும். அவனது பெயரும் தேசத்தில் இல்லாதபடி அழிந்துப்போகும்” என்றாள்.

அப்போது அரசன் அப்பெண்ணை நோக்கி, “வீட்டிற்குப் போ. நான் உன் காரியங்களைக் கவனிப்பேன்” என்றான்.

தெக்கோவாவின் பெண் அரசனை நோக்கி, “பழி என் மீது இருக்கட்டும். எனது ஆண்டவனாகிய அரசனே! நீர் குற்றமற்றவர் உமது சிங்காசனமும் குற்றமற்றது” என்றாள்.

10 தாவீது அரசன், “யாரேனும் உன் மீது தீயவற்றைக் கூறினால் அவனை என்னிடம் அழைத்து வா. அவன் உன்னை மீண்டும் தொல்லைப்படுத்தமாட்டான்” என்றான்.

11 அந்தப் பெண், “தயவு செய்து, உமது தேவனாகிய கர்த்தருடைய பெயரால் ஆணையிட்டு நீங்கள் அந்த ஜனங்களைத் தடுப்பதாக எனக்கு வாக்களியுங்கள். தனது சகோதரனைக் கொலைச் செய்ததற்காக அவர்கள் எனது மகனைத் தண்டிக்க விரும்புகிறார்கள். அவர்கள் என் மகனை அழிக்காதபடி நீர் பாதுகாப்பீராக எனக்கு வாக்கு கொடும்” என்றாள்.

தாவீது, “கர்த்தர் உயிரோடிருப்பது போலவே, யாரும் உன் மகனைத் தாக்கமாட்டார்கள். உன் மகனின் தலையிலிருந்து ஒரு முடிகூட நிலத்தில் விழாது” என்றான்.

12 அப்பெண், “எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து நான் வேறு சிலவற்றை உம்மிடம் பேச அனுமதியும்” என்றாள்.

அரசன், “சொல்” என்றான்.

13 அப்போது அப்பெண், “தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் இவ்வாறு திட்டமிடுகிறீர்? இவ்வாறு சொல்லும்போது நீரே குற்றவாளியென்பதைக் காட்டிவிடுகிறீர். ஏனெனில் உமது வீட்டிலிருந்து போகும்படி செய்த உமது மகனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துவரவில்லை. 14 நாம் எல்லோரும் ஒரு நாள் மரிப்போம். நாம் நிலத்தில் சிந்திய தண்ணீரைப் போன்றவர்கள். யாரும் அத்தண்ணீரை நிலத்திலிருந்து மீண்டும் சேகரிக்க முடியாது. தேவன் மக்களை மன்னிப்பாரென்று உமக்குத் தெரியும். பாதுகாப்பான இடத்திற்கு விரட்டப்பட்ட ஜனங்களுக்காக தேவன் திட்டம் வகுத்திருக்கிறார். தேவன் தம்மிடமிருந்து ஓடிப் போகும்படி அவர்களை வற்புறுத்தமாட்டார். 15 எனது ஆண்டவராகிய அரசனே, நான் இவ்வார்த்தைகளை உம்மிடம் கூற வந்தேன். ஏனெனில் ஜனங்கள் என்னைப் பயமுறுத்தினர். நான் எனக்குள் சொல்லியதாவது, ‘நான் அரசனிடம் பேசுவேன். அரசன் ஒருவேளை எனக்கு உதவலாம். 16 அரசன் நான் சொல்வதைக் கேட்டு, என்னையும் எனது மகனையும் கொல்ல விரும்பும் மனிதனிடமிருந்து காப்பாற்றுவார். அம்மனிதன் தேவன் எங்களுக்குக் கொடுத்த பொருட்களைப் பெறாதபடி செய்கிறான்.’ 17 எனது அரசனாகிய ஆண்டவனின் வார்த்தைகள் எனக்கு ஆறுதலளிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நீங்கள் தேவனிடமிருந்து வந்த தூதனைப் போன்றவர். நல்லது எது, கெட்டது எது என்பது உமக்குத் தெரியும். தேவனாகிய கர்த்தர் உம்மோடு இருக்கிறார்” என்றாள்.

18 தாவீது அரசன் அந்த பெண்ணிற்கு உத்தரவாக, “நான் கேட்கவிருக்கும் கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டும்” என்றான். அப்பெண், “எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து உங்கள் வினாவை சொல்லுங்கள்” என்றாள்.

19 அரசன், “இவற்றையெல்லாம் சொல்வதற்கு யோவாப் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டான்.

அப்பெண் பதிலாக, “எனது அரசனாகிய ஆண்டவனே, நீங்கள் உயிரோடிருக்குமளவிற்கு நீங்கள் சரியானவர்! உங்கள் அதிகாரியாகிய யோவாப் என்னிடம் இவற்றையெல்லாம் கூறும்படிச் சொன்னார். 20 நடந்த காரியங்களை நீர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்காக யோவாப் இவற்றைச் செய்தார். என் ஆண்டவனே, நீர் தேவதூதனைப் போன்ற ஞானம் உள்ளவர்! உமக்கு இப்பூமியில் நடப்பவையெல்லாம் தெரியும்” என்றாள்.

அப்சலோம் எருசலேம் திரும்புதல்

21 அரசன் யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.

22 யோவாப் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் தாவீது அரசனை வாழ்த்தியபடியே, “நீங்கள் என்னிடம் கருணைக் காட்டுகிறீர்கள் என்பதை இன்று அறிகிறேன். நான் கேட்டதை நீர் நிறைவேற்றுகிறபடியால் அதை நான் அறிகிறேன்” என்றான்.

23 பின்பு யோவாப் எழுந்து கேசூருக்குப் போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான். 24 ஆனால் தாவீது அரசன், “அப்சலோம் தனது வீட்டிற்குப் போகலாம். ஆனால் அவன் என்னைப் பார்க்க வரமுடியாது” என்றான். எனவே அப்சலோம் தனது வீட்டிற்குப் போனான். அப்சலோம் அரசனைப் பார்க்கபோக முடியவில்லை.

25 அப்சலோமின் அழகைக்கண்ட ஜனங்கள் வியந்தனர். இஸ்ரவேலில் ஒருவனும் அப்சலோமைப்போல் அழகுடையவனாக இருக்கவில்லை. தலையிலிருந்து பாதம்வரைக்கும், அவனது உடம்பில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது. 26 ஒவ்வோராண்டின் இறுதியிலும் அப்சலோம் தனது தலையைச் சிரைத்துக்கொண்டான். அவன் சிரைத்தப் பின் தலைமயிரை எடுத்து, நிறுத்துப்பார்த்தான். அது 5 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. 27 அப்சலோமுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இம்மகளின் பெயர் தாமார். தாமார் ஒரு அழகிய பெண்மணி.

யோவாபுக்கு அப்சலோம் தன்னை வந்து பார்க்குமாறு வற்புறுத்தல்

28 அப்சலோம் இரண்டு ஆண்டுகள் வரை தாவீது அரசனைப் பார்க்க அனுமதியின்றி எருசலேமில் வாழ்ந்தான். 29 அப்சலோம் யோவாபிடம் ஆட்களை அனுப்பினான். அவர்கள் யோவாபிடம் அப்சலோமை அரசனிடம் அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் யோவாப் அப்சலோமிடம் வரவில்லை. இரண்டாவது முறையும் அப்சலோம் ஒரு செய்தியை அனுப்பினான். ஆனால் யோவாப் இம்முறையும் மறுத்தான்.

30 அப்போது அப்சலோம் தனது வேலையாட்களிடம், “பாருங்கள், யோவாபின் வயல் எனது வயலுக்கு அருகிலுள்ளது. அவனது வயலில் பார்லியைப் பயிரிட்டிருக்கிறான். போய் அந்த பார்லி பயிரை எரித்துவிடுங்கள்” என்றான்.

எனவே அப்சலோமின் வேலையாட்கள் போய் யோவாபின் வயலுக்கு நெருப்புமூட்டினர். 31 யோவாப் புறப்பட்டு அப்சலோமின் வீட்டிற்கு வந்தான். யோவாப் அப்சலோமிடம், “உன் வேலையாட்கள் எதற்காக என் வயலைக் கொளுத்தினர்?” என்று கேட்டான்.

32 அப்சலோம் யோவாபிடம், “நான் உனக்குச் செய்தி சொல்லியனுப்பினேன். நான் உன்னை இங்கு வருமாறு அழைத்தேன். உன்னை அரசனிடம் அனுப்ப விரும்பினேன். கேசூரிலிருந்து என்னை இங்கு ஏன் வரவழைத்தார் என்று எனக்காக நீ அவரைக் கேட்க வேண்டும். நான் அவரை நேரில் பார்க்கமுடியாது, எனவே நான் கேசூரில் தங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போது நான் போய் அரசனைக் காணவிடுங்கள். நான் பாவம் செய்திருந்தால் அவர் என்னைக் கொல்லட்டும்!” என்றான்.

அப்சலோம் தாவீது அரசனை சந்தித்தல்

33 பின்பு யோவாப் அரசனிடம் வந்து அப்சலோமின் வார்த்தைகளைக் கூறினான். அரசன் அப்சலோமை வரவழைத்தான். அப்போது அப்சலோம் அரசனிடம் வந்தான். அப்சலோம் அரசனுக்கு முன்பு தரையில் விழுந்து வணங்கினான். அரசன் அப்சலோமை முத்தமிட்டான்.

அப்சலோம் பல நண்பர்களை கூட்டுதல்

15 இதற்குப் பின்பு அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும் தனக்காக பெற்றுக்கொண்டான். அவன் தேரைச் செலுத்தும்போது அவனுக்கு முன்னே ஓடுவதற்கு 50 ஆட்கள் இருந்தனர். அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாசலருகே [a] நின்று, நியாயத்திற்காக தாவீது அரசனிடம் செல்லும் ஆட்களைக் கவனிப்பான். பின்பு அவர்களோடு பேசி, “எந்த நகரத்திலிருந்து வருகிறாய்?” என்பான். அம்மனிதன், “நான் இஸ்ரவேலின் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுவான். அப்சலோம் அம்மனிதனிடம், “பாரும், நீ சொல்வது சரியே. ஆனால் தாவீது அரசன் நீ சொல்வதைக் கேட்கமாட்டார்” என்பான்.

அப்சலோம் மேலும், “யாராகிலும் என்னை இந்நாட்டின் நீதிபதியாக நியமித்தால் சிக்கலோடு வருகிற ஒவ்வொரு மனிதனுக்கும் நான் உதவக் கூடும். அவனுக்குத் தக்க தீர்ப்பு கிடைப்பதற்கு நான் உதவுவேன்” என்பான்.

எவனாகிலும் அப்சலோமிடம் வந்து அவனை வணங்கியதும் அப்சலோம் அவனை நெருங்கிய நண்பனாக எண்ணி நடத்துவான். அப்சலோம் கையை நீட்டி, அவனைத் தொட்டு, முத்தமிடுவான். தாவீது அரசனிடம் நீதி வேண்டி வந்த எல்லா இஸ்ரவேலருக்கும் அவ்வாறே செய்தான். அதனால் இஸ்ரவேலருடைய இருதயங்களைக் கவர்ந்துக்கொண்டான்.

தாவீதின் அரசைப் பெற அப்சலோம் திட்டம்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு [b] அப்சலோம், அரசன் தாவீதிடம், “எப்ரோனில் கர்த்தருக்கு நான் கொடுத்த விசேஷ வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு போகிறேன். ஆராமிலுள்ள கேசூரில் வாழ்ந்து கொண்டிருக்கையில் அந்த வாக்குறுதியை நான் செய்தேன்: ‘என்னை கர்த்தர் எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவந்தால் நான் கர்த்தருக்கு சேவைச் செய்வேன்’ என்றேன்” என்றான்.

தாவீது அரசன், “சமாதானமாகப் போ” என்றான்.

அப்சலோம் எப்ரோனுக்குப் போனான். 10 ஆனால் அப்சலோம் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்கள் மூலமாகவும் உளவாளிகளை அனுப்பினான். இந்த உளவாளிகள் ஜனங்களிடம், “நீங்கள் எக்காளம் முழங்கியதும், ‘அப்சலோம் எப்ரோனின் அரசன் ஆனான்’ என்று கூறுங்கள்!” என்றான்.

11 அப்சலோம் தன்னோடு வர 200 பேரை அழைத்தான். அவர்கள் எருசலேமிலிருந்து அவனோடு புறப்பட்டனர். ஆனால் அப்சலோமின் திட்டத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 12 அகித்தோப்பேல் தாவீதுக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவன். அவன் கீலோ என்னும் ஊரைச் சேர்ந்தவன். அப்சலோம் பலிகளைச் செலுத்தும் போது அகித்தோப்பேலை நகரத்திலிருந்து (கீலோவிலிருந்து) வருமாறு கூறினான். அப்சலோமின் திட்டங்கள் சரிவர நிறைவேறிக்கொண்டிருந்தன. ஜனங்களில் பலர் அவனுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.

அப்சலோமின் திட்டங்களை தாவீது அறிகிறான்

13 ஒரு மனிதன் தாவீதிடம் அச்செய்தியைச் சொல்ல வந்தான். அவன், “இஸ்ரவேல் ஜனங்கள் அப்சலோமைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றான்.

14 அப்போது தாவீது எருசலேமில் தன்னோடிருந்த அதிகாரிகளை நோக்கி, “நாம் தப்பித்து விட வேண்டும். நாம் தப்பிக்காவிட்டால் அப்சலோம் நம்மை விட்டுவிடமாட்டான். அப்சலோம் நம்மைப் பிடிக்கும் முன்னர் விரைவாய் செயல்படுவோம். அவன் நம் எல்லோரையும் அழிப்பான், அவன் எருசலேம் ஜனங்களை அழிப்பான்” என்றான்.

15 அரசனின் அதிகாரிகள் அவனை நோக்கி, “நீங்கள் சொல்கின்றபடியே நாங்கள் செய்வோம்” என்றார்கள்.

தாவீதும் அவன் ஆட்களும் தப்பித்தனர்

16 தாவீது தன் வீட்டிலிருந்த எல்லோரோடும் வெளியேறினான். தன் பத்து மனைவியரையும் வீட்டைக் கவனித்துக்கொள்வதற்கு விட்டுச் சென்றான். 17 எல்லா ஜனங்களும் பின் தொடர்ந்து வர அரசன் வெளியேறினான். கடைசி வீட்டினருகே சற்று நின்றார்கள். 18 தன் அதிகாரிகள் எல்லோரும் அரசன் அருகே நடந்தனர். கிரேத்தியர், பிலேத்தியர், கித்தியர், (காத்திலிருந்து வந்த 600 பேர்) எல்லோரும் அருகே நடந்தார்கள்.

19 அப்போது அரசன் கித்தியனாகிய ஈத்தாயிடம், “நீ ஏன் எங்களோடு வந்துக் கொண்டிருக்கிறாய்? திரும்பிச் சென்று புதிய அரசனோடு (அப்சலோமோடு) தங்கியிரு. நீ ஒரு அந்நியன். இது உன் சொந்த தேசம் அல்ல. 20 நேற்றுதான் நீ என்னோடு சேர்வதற்கு வந்தாய். நான் எங்கே செல்கிறேன் என்று தெரியாதபொழுது, உன்னையும் அலைந்து திரிய என்னோடு அழைத்துச் செல்லவேண்டுமா? வேண்டாம். திரும்பிப் போ. உனது சகோதரர்களையும் உன்னோடு அழைத்துச் செல். உனக்கு இரக்கமும் உண்மையும் காட்டப்படட்டும்” என்றான்.

21 ஆனால் ஈத்தாய் அரசனுக்குப் பதிலாக, “கர்த்தர் உயிரோடிருப்பதைப்போல நீங்கள் வாழும் காலம் வரைக்கும் நான் உங்களோடு இருப்பேன். வாழ்விலும், மரணத்திலும் நான் உங்களோடு இருப்பேன்!” என்றான்.

22 தாவீது ஈத்தாயை பார்த்து, “வா, நாம் கீதரோன் ஆற்றைக் கடக்கலாம்” என்றான்.

எனவே காத் நகரிலிருந்து வந்த ஈத்தாயும் அவனுடைய எல்லா ஜனங்களும் அவர்களுடைய குழந்தைகளும் கீதரோன் ஆற்றைக் கடந்தார்கள்.

யோவான் 18:1-24

இயேசு கைது செய்யப்படுதல்(A)

18 இயேசு தன் பிரார்த்தனையை முடித்துக்கொண்டதும், தன் சீஷர்களுடன் போனார். அவர்கள் கீதரோன் என்னும் பள்ளத்தாக்குக்கு அப்பால் தாண்டிப்போனார்கள். ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. இயேசுவும் சீஷர்களும் அங்கே போனார்கள்.

யூதாஸுக்கு இந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஏனென்றால் இயேசு அடிக்கடி அவ்விடத்தில் தம் சீஷர்களோடு சந்தித்திருக்கிறார். யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒரு சேவகர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை ஆசாரியர், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். அவர்கள் தம்மோடு பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தனர்.

இயேசு அவருக்கு நடக்கவிருக்கும் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவர் வெளியே வந்து, “நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர்.

இயேசுவோ, “நானே இயேசு” என்றார். (அவருக்கு எதிராக மாறின யூதாஸும் அவர்களோடு நின்றிருந்தான்.) இயேசு அவர்களிடம், “நான்தான் இயேசு” என்று சொன்னபொழுது அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள்.

இயேசு மீண்டும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அவர்கள் அதற்கு, “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர்.

இயேசு அதற்கு, “‘நான்தான் இயேசு’ என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஆகையால் நீங்கள் என்னைத் தேடுவதானால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். “நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை” என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.

10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான். (அந்த வேலைக்காரனின் பெயர் மல்கூஸ்) 11 இயேசு பேதுருவிடம் “உனது வாளை அதனுடைய உறையிலே போடு. என் பிதா எனக்குக் கொடுத்திருக்கிற துன்பமாகிய கோப்பையில் நான் குடிக்கவேண்டும்” என்றார்.

அன்னாவின் முன் இயேசு(B)

12 பிறகு போர்ச்சேவகரும் அவர்கள் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். அவர்கள் இயேசுவைக் கட்டி 13 அன்னாவிடம் கொண்டுவந்தனர். இவன் காய்பாவின் மாமனார். காய்பா அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். 14 இந்தக் காய்பாதான் ஏற்கெனவே யூதர்களிடம், “எல்லா மக்களுக்காகவும் ஒரு மனிதன் மரிப்பது நல்லது” என்று சொன்னவன்.

பேதுருவின் மறுதலிப்பு(C)

15 சீமோன் பேதுருவும் இயேசுவின் இன்னொரு சீஷனும் இயேசுவைப் பின்தொடர்ந்து போனார்கள். அந்தச் சீஷன் தலைமை ஆசாரியனை அறிந்திருந்தான். அதனால் அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து தலைமை ஆசாரியனின் முற்றம் போனான். 16 ஆனால் பேதுரு வாசலுக்கு வெளியே காத்திருந்தான். தலைமை ஆசாரியனைத் தெரிந்த சீஷன் வெளியே வந்தான். அவன் கதவைத் திறந்த பெண்ணோடு பேசினான். பிறகு அவன் பேதுருவையும் உள்ளே அழைத்துக்கொண்டு போனான். 17 வாசலுக்குக் காவலாக இருந்த அந்தப் பெண் பேதுருவிடம் “நீயும் இந்த மனிதனின் சீஷர்களுள் ஒருவன் தானே?” என்று கேட்டாள்.

அதற்குப் பேதுரு “இல்லை. நான் அல்ல” என்றான்.

18 அது குளிர்காலம். எனவே வேலைக்காரர்களும், சேவகர்களும் நெருப்பை உண்டாக்கினர். அவர்கள் அதைச் சுற்றி நின்றுகொண்டு குளிர் காய்ந்தனர். பேதுருவும் அவர்களோடு குளிர்காய நின்றுகொண்டான்.

தலைமை ஆசாரியனின் கேள்வி(D)

19 தலைமை ஆசாரியன் இயேசுவிடம் அவரது சீஷர்களைக் குறித்து விசாரித்தான். அதோடு அவரது போதனைகளைக்குறித்து விசாரித்தான். 20 அதற்கு இயேசு, “நான் மக்களிடம் எப்பொழுதும் வெளிப்படையாகவே பேசிவந்தேன். நான் எப்பொழுதும் யூதர்கள் கூடும் அரங்கங்களிலும், ஆலயங்களிலுமே உபதேசித்து இருக்கிறேன். யூதர்கள் எல்லோரும் அங்கு வந்திருக்கிறார்கள். நான் எதையும் இரகசியமாகப் பேசவில்லை. 21 அப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை விசாரிக்கிறீர்கள்? என் போதனைகளைக் கேட்டவர்களை விசாரித்துப் பாருங்கள். நான் என்ன சொன்னேன் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றார்.

22 இயேசு இவ்வாறு சொன்னபோது, அவர் அருகிலே நின்றிருந்த சேவகரில் ஒருவன் அவரை ஓர் அறை அறைந்தான். அவன், “நீ தலைமை ஆசாரியனிடம் அந்த முறையில் பதில் சொல்லக்கூடாது” என்று எச்சரித்தான்.

23 அதற்கு இயேசு, “நான் ஏதாவது தப்பாகப் பேசியிருந்தால் எது தப்பு என்று இங்கு இருக்கிற எல்லாருக்கும் சொல். ஆனால் நான் சொன்னவை சரி என்றால் பிறகு ஏன் என்னை அடிக்கிறாய்?” என்று கேட்டார். 24 ஆகையால் அன்னா இயேசுவைத் தலைமை ஆசாரியனாகிய காய்பாவிடம் அனுப்பிவைத்தான். இயேசு அப்பொழுது கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார்.

சங்கீதம் 119:97-112

மேம்

97 கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
    எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
98 கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
    உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
99 உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
    ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
100 நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
    முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
101 வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
    எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
102 கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
    ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
103 என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
104 உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
    எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.

நூன்

105 கர்த்தாவே, உமது வார்த்தைகள்
    என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.
106 உமது சட்டங்கள் நல்லவை.
    நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன்.
    நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
107 கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன்.
    தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
108 கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும்.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
109 என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது.
    ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
110 தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.
    ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.
111 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன்.
    அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
112 உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.

நீதிமொழிகள் 16:8-9

ஒருவன் பிறரை ஏமாற்றி அதிகப் பொருள் சம்பாதிப்பதைவிட நல்ல வழியில் கொஞ்சம் பொருள் சம்பாதிப்பது நல்லது.

ஒருவன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்வதற்குத் திட்டமிடலாம். ஆனால் எது நடக்க வேண்டுமென முடிவு செய்பவர் கர்த்தரே.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center