Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NIV. Switch to the NIV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 1:1-2:21

எல்க்கானாவும் அவனது குடும்பமும் சீலோவில் ஆராதித்தனர்

எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் உள்ள ராமா என்னும் நகரில் எல்க்கானா என்னும் பெயருள்ள மனிதன் இருந்தான். அவன் சூப் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவன். எல்க்கானா எரோகாமின் மகன், எரோகாம் எலிகூவின் மகன், எலிகூ தோகுவின் மகன், தோகு சூப்பின் மகன், எப்பிராயீம் என்னும் கோத்திரத்திலிருந்து வந்தவன்.

எல்க்கானாவிற்கு இரண்டு மனைவிமார்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தியின் பெயர் அன்னாள், மற்றொருவள் பெயர் பெனின்னாள், பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் எல்க்கானா தனது நகரமான ராமாவை விட்டு சீலோவுக்குப் போவான். அங்கு அவன் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொண்டான், அங்கு கர்த்தருக்குப் பலிகளும் செலுத்தினான். சீலோவில் ஓப்னியும் பினெகாசும் கர்த்தருடைய ஆசாரியர்களாக சேவை செய்து வந்தனர். இவர்கள் ஏலியின் மகன்கள். ஒவ்வொரு முறையும் எல்க்கானா பலிகளை செலுத்தும் போது அதில் ஒரு பங்கினை பெனின்னாளுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் கொடுத்து வந்தான். எல்க்கானா அன்னாளுக்கும் இரட்டிப்பான பங்கினை எப்போதும் கொடுத்து வந்தான். ஏனென்றால் அவளில் அவன் அன்பு செலுத்தினான். கர்த்தர் அவளது கர்ப்பத்தை அடைத்திருந்தார்.

பெனின்னாள் அன்னாளை துன்புறுத்தல்

பெனின்னாள் எப்பொழுதும் அன்னாளைத் துக்கப்படுத்தி அவள் துயருறுமாறு செய்வாள், ஏனென்றால் அன்னாள் குழந்தைப்பேறு இல்லாதவளாக இருந்தாள். இது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வந்தது. ஒவ்வொரு முறையும் அவர்களின் குடும்பம் சீலோவிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு போகும் போதும், பெனின்னாள் அன்னாளை வேதனைப்படுத்துவாள். ஒரு நாள் எல்க்கானா பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தான். அன்னாள் துக்கம் மீறி அழ ஆரம்பித்தாள். அவள் அன்று எதையும் உண்ணவில்லை. அவளது கணவனான எல்க்கானா அவளிடம், “அன்னாள்! ஏன் நீ அழுகிறாய்? ஏன் உண்ணாமல் இருக்கிறாய்? ஏன் துக்கமாய் இருக்கிறாய்? நீ எனக்குரியவள், நான் உனது கணவன். நான் பத்து மகன்களை விட உனக்கு மேலானவன் என்பதை சிந்திக்க கூடாதா” என்றான்.

அன்னாளின் ஜெபம்

உணவை உண்டு குடித்த பின் அன்னாள் அமைதியாக எழுந்து கர்த்தரிடம் ஜெபம் செய்யச் சென்றாள். கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தின் கதவருகில் ஏலி எனும் ஆசாரியன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். 10 அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள், 11 அவள் தேவனிடம் ஒரு விசேஷ வாக்குறுதியைக் கொடுத்தாள். அவள், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நான் எவ்வளவு துக்கத்தில் இருக்கிறேன் என்பதைப் பாரும். என்னை நினைவு கூறும்! என்னை மறவாதேயும். நீர் எனக்கு ஒரு மகனைத் தந்தால், நான் அவனை உமக்கே தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் திராட்சை ரசமோ அல்லது வெறிகொள்ளத்தக்கவைகளை அருந்தாமலும் இருப்பான். எவரும் அவனது தலை மயிரை வெட்டாமல் இருப்பார்கள்” [a] என்று வேண்டிக்கொண்டாள்.

12 இவ்வாறு அன்னாள் நீண்ட நேரம் கர்த்தரிடம் ஜெபிக்கும்பொழுது அவளது வாயையே ஏலி கவனித்துக்கொண்டிருந்தான். 13 அன்னாள் தன் இருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தாள். அவளது உதடுகள் அசைந்தன, ஆனால் அவள் உரக்க எதையும் சொல்லவில்லை. எனவே ஏலி, அன்னாளைக் குடித்திருப்பவளாக எண்ணினான். 14 ஏலி அன்னாளிடம், “நீ அதிகப்படியாகக் குடித்திருக்கின்றாய்! இது குடியை விடவேண்டிய நேரம்” என்றான்.

15 அதற்கு அன்னாள், “ஐயா, நான் திராட்சை ரசமோ அல்லது மதுவையோ குடிக்கவில்லை. நான் ஆழமான துயரத்தில் இருக்கிறேன். நான் எனது துன்பங்களையெல்லாம் கர்த்தரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். 16 மோசமான பெண் என்று என்னை எண்ணவேண்டாம். நான் நீண்ட நேரமாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அநேக தொல்லைகள் உள்ளன. மற்றும் நான் மிகவும் துக்கத்தில் இருக்கிறேன்” என்றாள்.

17 ஏலி அவளிடம், “சமாதானத்துடனே போ. இஸ்ரவேலரின் தேவன் நீ கேட்டதையெல்லாம் உனக்குத் தருவாராக” என்றான்.

18 அன்னாள், “உம்முடைய அடியாளுக்கு உம் கண்களில் இரக்கத்தைக் காணட்டும்” என்றாள். பிறகு அவள் அங்கிருந்து போய் உணவருந்தினாள். அதற்குப்பின் அவள் துக்கமாயிருக்கவில்லை.

19 மறுநாள் அதிகாலையில் எல்க்கானாவின் குடும்பம் எழுந்து கர்த்தரைத் தொழுதுகொண்ட பிறகு ராமாவிலுள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பிப் போனார்கள்.

சாமுவேலின் பிறப்பு

எல்க்கானா தன் மனைவியான அன்னாளோடு பாலின உறவுகொண்டான், கர்த்தர் அன்னாளை நினைவுக்கூர்ந்தார். 20 அதே காலம் அதற்கடுத்த ஆண்டில் அவள் கர்ப்பமுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவள் தன் மகனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். அவள், “இவன் பெயர் சாமுவேல் ஏனென்றால் நான் கர்த்தரிடம் இவனைக் கேட்டேன்” என்றாள்.

21 அந்த ஆண்டில் எல்க்கானா சீலோவிற்குப் பலிகளைக் கொடுப்பதற்காகவும் மற்றும் தேவனுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் சென்றான். அவன் தனது குடும்பத்தை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றிருந்தான். 22 ஆனால் அன்னாள் செல்லவில்லை, அவள் எல்க்கானாவிடம், “பிள்ளை வளர்ந்து திட உணவு உண்ணும் வயதை அடையும்பொழுது, நான் இவனைச் சீலோவிற்கு அழைத்து வருவேன். பிறகு அவனை கர்த்தருக்குத் தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் சீலோவிலேயே தங்கி இருப்பான்” என்றாள்.

23 அன்னாளின் கணவனான எல்க்கானா அவளிடம், “உனக்கு எது நல்லதென்று தெரிகிறதோ அதைச் செய். பையன் பாலை மறந்து உணவு உண்ணும் காலம்வரை நீ வீட்டிலேயே தங்கியிரு. நீ சொன்னபடியே கர்த்தர் உனக்கு செய்வாராக” என்றான். எனவே அன்னாள் தன் மகனை வளர்ப்பதற்காக வீட்டிலேயே இருந்தாள்.

சீலோவில் ஏலியிடம் சாமுவேலை அன்னாள் கொண்டுபோகிறாள்

24 பிள்ளை வளர்ந்து உணவு உண்ண ஆரம்பித்ததும் அன்னாள் அவனை அழைத்துக்கொண்டு சீலோவிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போனாள். தன்னோடு மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும் ஒரு துருத்தி திராட்சைரசத்தையும் கொண்டு வந்தாள்.

25 அவர்கள் கர்த்தருக்கு முன் சென்றார்கள். எல்க்கானா காளையைப் பலியாகக் கொன்றான். அவன் முன்பு கர்த்தருக்கென்று வழக்கமாகச் செய்வதுபோல் செய்தான். பின் அன்னாள் ஏலியிடம் பிள்ளையைக் கொடுத்தாள். 26 அன்னாள் ஏலியிடம், “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா, கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தபடி உங்கள் முன்நின்ற அதே பெண்தான் நான். நான் உண்மையை சொல்கிறேன் என இதன்மூலம் உறுதி கூறுகிறேன். 27 நான் இக்குழந்தைக்காக ஜெபம் செய்து கொண்டேன், கர்த்தர் என் ஜெபத்திற்கு பதில் அளித்தார். கர்த்தர் இந்தக் குழந்தையை எனக்குத் தந்தார். 28 இப்போது நான் இந்தக் குழந்தையை கர்த்தருக்குத் தருகிறேன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு சேவை செய்வான்” என்றாள்.

பிறகு அன்னாள், அந்தப் பிள்ளையை அங்கேயே விட்டு விட்டு கர்த்தரைத் தொழுதுகொண்டாள்.

அன்னாள் நன்றி சொன்னது (அன்னாளின் ஜெபம்)

அன்னாள் ஜெபம் பண்ணி,

“என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது!
    நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்!
என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன்.
    உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்!
கர்த்தரைப்போல பரிசுத்தமான வேறு தேவன் இல்லை.
    உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நமது தேவனைப் போன்ற ஒரு கன்மலை வேறில்லை.
இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்!
    ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.
வலிமையான வீரர்களின் வில்கள் முறிகிறது!
    பலவீனமானவர்கள் பெலன் பெறுகிறார்கள்.
கடந்த காலத்தில் ஏராளமான உணவுப் பொருட்களை வைத்திருந்த ஜனங்கள் இப்போது உணவுக்காகக் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும்.
    ஆனால் கடந்த காலத்தில் பசியோடு இருந்தவர்கள், எல்லாம் இனிமேல் பசியாயிரார்கள்.
முன்பு குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் இப்போது ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள்!
    ஆனால் முன்பு நிறைய குழந்தைகளைப் பெற்ற பெண் அக்குழந்தைகள் தம்மை விட்டு விலகியதால் வருத்தமாயிருக்கிறாள்.
கர்த்தர் மரணத்தைக் கொண்டு வருகிறவராகவும் வாழ வைக்கிறவராகவும் இருக்கின்றார்.
    அவரே பாதாளத்தில் இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
கர்த்தர் சிலரை ஏழையாக்குகிறார், அவரே இன்னும் சிலரைச் செல்வந்தராக்குகிறார்.
    கர்த்தர் சிலரைத் தாழ்த்துகிறார், மற்றவர்களை மேன்மையாக்குகிறார்.
கர்த்தர் ஏழை ஜனங்களை புழுதியிலிருந்து உயிர்ப்பிக்கிறார் மற்றும் அவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
    கர்த்தர் ஏழை ஜனங்களை முக்கியமானவர்களாக்குகிறார்.
அவர்களை அவர் இளவரசர்களோடும் மதிப்புக்குரிய விருந்தினர்களோடும் அமர வைக்கிறார்.
    கர்த்தர் உலகம் முழுவதையும் படைத்தார்!
    இந்த முழு உலகமும் அவருக்குரியது!
கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார்.
    அவர்களை அழிவினின்றும் காப்பார்.
ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள்.
    அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது.
10 கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள்.
    உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார்.
கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார்.
    அவர் தமது அரசனுக்கு வல்லமையை அளிப்பார்.
தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்” என்றாள்.

11 பிறகு எல்க்கானா ராமாவிலுள்ள தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான். ஆனால் அந்தப் பிள்ளை சீலோவில் தங்கி ஆசாரியனாகிய ஏலிக்குக் கீழ் கர்த்தருக்கு முன்பாக பணிவிடைச் செய்தான்.

ஏலியின் தீய மகன்கள்

12 ஏலியின் மகன்கள் எல்லாரும் தீயவர்கள். அவர்கள் கர்த்தருக்கு பயப்படாதவர்கள். 13 ஜனங்களிடம் ஆசாரியர்கள் எவ்வாறு நடக்கவேண்டும் என்பது பற்றியும் கவலைப்படாதவர்கள் ஒவ்வொரு முறையும் ஜனங்கள் பலி செலுத்தும்போது, ஆசாரியர்கள் இறைச்சியைக் கொதிக்கும் தண்ணீருள்ள பாத்திரத்தில் போடவேண்டும். பிறகு ஆசாரியனின் வேலைக்காரன் மூன்று முனைகளை உடைய பெரியமுள் கரண்டியைக் கொண்டு வருவான். 14 பாத்திரத்தில் இருக்கிற இறைச்சியை எடுக்க ஆசாரியரின் வேலைக்காரன் இந்த ஆயுதத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில் இருந்து அந்த வேலைக்காரன் எடுத்துத் தரும் இறைச்சியை மட்டுமே ஆசாரியன் எடுத்துக்கொள்ள வேண்டும். சீலோவிற்கு பலிகளை கொடுக்க வந்த இஸ்ரவேலர் அனைவருக்கும் ஆசாரியர்கள் செய்ய வேண்டியமுறை இதுவே ஆகும்.

15 ஆனால் ஏலியின் பிள்ளைகளோ இப்படிச் செய்யவில்லை. பலிபீடத்தில் கொழுப்பு எரிக்கப்படுமுன்னரே அவர்களின் வேலைக்காரர்கள் பலி கொடுக்கும் ஜனங்களிடம் சென்று, “பொறிப்பதற்காக ஆசாரியருக்குக் கொஞ்சம் இறைச்சியைக் கொடுங்கள். அவர், உங்களிடமிருந்து வேகவைத்த இறைச்சியைப் பெறமாட்டார்” என்றுச் சொல்வார்கள்.

16 பலியை கொடுக்கவந்த ஜனங்களோ, “முதலில் கொழுப்பை எரியுங்கள், பிறகு உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வார்கள். இவ்வாறு நடந்தால் உடனே ஆசாரியனின் அந்த வேலைக்காரன், “இல்லை, அந்த இறைச்சியை இப்போதே கொடுங்கள், நீங்கள் அதனைக் கொடுக்காவிட்டால் அதனைப் பலவந்தமாக எடுத்துக்கொள்வேன்!” என்று சொல்வான்.

17 இவ்வாறு ஓப்னியும் பினெகாசும் கர்த்தருக்கு கொடுக்கும் பலிக்கு மரியாதை தராமல் இருந்தார்கள். இது கர்த்தருக்கு விரோதமான மிக மோசமான பாவமாயிற்று!

18 ஆனால் சாமுவேல் கர்த்தருக்கு சேவை செய்தான். அவன் இளம் உதவியாளனாக ஆசாரியர்கள் அணிகின்ற சணல் நூல் ஏபோத்தை அணிந்திருந்தான். 19 ஒவ்வொரு ஆண்டும் சாமுவேலின் தாய் அவனுக்காக ஒரு சின்ன சட்டையைத் தைப்பாள். அவள் தன் கணவனோடு சீலோவிற்கு பலிசெலுத்த வரும்போதெல்லாம் அதனைக் கொண்டு வந்து தருவாள்.

20 ஏலி, எல்க்கானாவையும் அவனது மனைவியையும் ஆசீர்வதித்தான். அவன், “அன்னாள் மூலமாக கர்த்தர் மேலும் பல குழந்தைகளைத் தரட்டும். கர்த்தரிடம் ஜெபித்துக்கொண்டபடி, அவருக்கே அளிக்கப்பட்ட அன்னாளின் மகனுடைய இடத்தை இந்த பிள்ளைகள் பிறந்து நிரப்பட்டும்” என்றான்.

எல்க்கானாவும், அன்னாளும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.

21 கர்த்தர் அன்னாளிடம் கருணையாக இருந்தார். அவளுக்கு மேலும் மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். சாமுவேல் பரிசுத்த இடத்தில் கர்த்தர் அருகிலேயே வளர்ந்து ஆளானான்.

யோவான் 5:1-23

38 வருட நோயாளி குணமடைதல்

பிறகு, இயேசு எருசலேமுக்கு யூதர்களின் ஒரு பண்டிகையின்போது சென்றார். அங்கே ஐந்து மண்டபங்கள் உள்ள ஒரு குளம் இருந்தது. யூதமொழியில் இதற்கு பெதஸ்தா [a] என்று பெயர். இந்தக் குளம் ஆட்டுவாசல் அருகே இருந்தது. குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் நோயாளிகள் பலர் படுத்துக்கிடந்தனர். [b] அவர்களில் சிலர் குருடர்கள்; சிலர் சப்பாணிகள்; சிலர் சூம்பிப்போன உறுப்புகளை உடையவர்கள். அவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தான். இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.

“ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான்” என்று அந்த நோயாளி பதில் சொன்னான்.

பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள். 10 ஆகையால் யூதர்கள், “இன்று ஓய்வு நாள். நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போவது சரியல்ல” என்று அவனிடம் கூறினர்.

11 ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான்.

12 “உன்னை குணமாக்கிப் படுக்கையை எடுத்துக் கொண்டு போகும்படி சொன்ன அவன் யார்?” என்று யூதர்கள் கேட்டனர்.

13 ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார்.

14 பிறகு இயேசு அவனை ஆலயத்தில் கண்டுபிடித்தார். இயேசு அவனிடம், “பார், இப்பொழுது நீ குணமாகிவிட்டாய். உனக்குக் கேடுவராதபடி மேலும் பாவம் செய்யாமல் இருப்பாயாக” என்று கூறினார்.

15 பிறகு அந்த மனிதன் யூதர்களிடம் திரும்பிப் போனான். அவன் யூதர்களிடம், “இயேசுதான் என்னைக் குணமாக்கியவர்” என்று சொன்னான்.

16 இயேசு இவ்வாறு ஓய்வு நாளில் நோயைக் குணப்படுத்தியதால் யூதர்கள் இயேசுவைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். 17 ஆனால் இயேசுவோ யூதர்களிடம், “எனது பிதா (தேவன்) வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நானும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.

18 இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடக் கடுமையாக முயற்சி செய்தார்கள். அவர்கள், “முதலில் இயேசு ஓய்வு நாளின் சட்டத்தை உடைத்துவிட்டார். பிறகு அவர் தேவனை அவரது பிதா என்று கூறுகிறார். அவர் தன்னை தேவனுக்குச் சமமாகக் கூறி வருகிறார்” என்று விளக்கம் கூறினர்.

தேவ அதிகாரம் பெற்ற இயேசு

19 ஆனால் இயேசுவோ, “உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார். 20 பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். 21 பிதாவானவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப்போலவே அவரது குமாரனும் தமது விருப்பத்தின்படி இறந்துபோனவர்களை உயிரோடு எழச் செய்வார்.

22 “அத்துடன் பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. ஆனால் அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். 23 தேவன் இதைச் செய்தார். எனவே அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார்.

சங்கீதம் 105:37-45

37 பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
    அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர்.
    தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை.
38 தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது.
    ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள்.
39 தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார்.
    தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணை தேவன் பயன்படுத்தினார்.
40 ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார்.
    தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார்.
41 தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று.
    பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.

42 தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
    தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
43 தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார்.
    மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்!
44 பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார்.
    பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.
45 ஏன் தேவன் இதைச் செய்தார்?
    அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும்.
அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.

கர்த்தரைத் துதியுங்கள்!

நீதிமொழிகள் 14:28-29

28 ஒரு அரசன் ஏராளமான ஜனங்களை ஆட்சி செய்தால் அவன் பெரியவன் ஆகிறான். ஆனால் ஆளுவதற்கு ஜனங்கள் இல்லாதவனோ ஒன்றும் இல்லாதவன் ஆகிறான்.

29 பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center