Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NIV. Switch to the NIV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 2:22-4

ஏலி தனது தீய மகன்களைக் கட்டுப்படுத்த தவறுதல்

22 ஏலிக்கு மிகவும் வயது ஆயிற்று, சீலோவிற்கு வரும் இஸ்ரவேலரிடம் தம் பிள்ளைகள் நடந்து கொள்வதைப்பற்றி, அவன் மீண்டும் மீண்டும் கேள்விப்பட்டான். அதோடு அவன் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் வேலை செய்த பெண்களோடுப் படுத்துக்கொள்வதாகவும் கேள்விப்பட்டான்.

23 ஏலி தன் பிள்ளைகளிடம், “நீங்கள் செய்த கெட்டக் காரியங்களைப் பற்றியெல்லாம், இங்குள்ளவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏன் இது போல் செய்கிறீர்கள்? 24 இவ்வாறு செய்யாதீர்கள். கர்த்தருடைய பிள்ளைகள் உங்களைப் பற்றி தவறாகச் சொல்லுகிறார்கள். 25 ஒருவன் இன்னொருவனுக்கு எதிராகப் பாவம் செய்தால் தேவன் அவனுக்கு உதவலாம். ஆனால் ஒருவன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தால், யார் அவனுக்கு உதவமுடியும்?” என்று கேட்டான்.

ஆனால் ஏலியின் மகன்கள் அவன் கூறியதைக் கேட்க மறுத்துவிட்டனர். எனவே ஏலியின் பிள்ளைகளைக் கொல்ல கர்த்தர் தீர்மானித்தார்.

26 சாமுவேல் வளர்ந்து வந்தான். அவன் தேவனுக்கும், ஜனங்களுக்கும் பிரியமாயிருந்தான்.

ஏலியின் குடும்பத்தைப் பற்றிய பயங்கரமான தீர்க்கதரிசனம்

27 தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியிடம் வந்தான். அவன், “கர்த்தர் இவற்றைச் சொன்னார், ‘உன் முற்பிதாக்கள் எகிப்தில் பார்வோனின் அடிமைகளாய் இருந்தார்கள். அந்த காலத்தில் நான் உன் முற்பிதாக்களுக்குத் தோன்றினேன். 28 நான் உன் கோத்திரத்தை மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்தேன். உனது சந்ததியை எனது ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை என் பலிபீடத்திற்குப் பலி செலுத்துகிறவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை நான் ஏபோத் அணியவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரவேலர், எனக்குத் தரும் பலிகளிலிருந்து இறைச்சியை உங்கள் கோத்திரம் உண்ணும்படியும் செய்தேன். 29 இவ்வாறு இருக்க நீங்கள் ஏன் எனது அன்பளிப்புகளையும் பலி பொருட்களையும் மதிப்பதில்லை? நீ என்னைவிட உன் மகன்களையே அதிகம் உயர்த்துகிறாய். இஸ்ரவேலர், இறைச்சியை எனக்காக கொண்டு வரும்போது, அதன் நல்ல பாகங்களையெல்லாம் தின்று நீங்கள் கொழுத்துப்போய் இருக்கிறீர்கள்.’

30 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்கள் தந்தையின் குடும்பமே, எல்லா காலத்திலும் சேவை செய்யும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இப்போது கர்த்தர் சொல்கிறார், ‘அது அவ்வாறு நடக்காது! என்னை கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம்பண்ணுவேன். என்னை அசட்டை செய்பவர்களுக்கு தீமை ஏற்படும். 31 உனது சந்ததிகளையெல்லாம் அழிக்கின்ற காலம் வந்துவிட்டது. உன் குடும்பத்தில் உள்ள யாரும் முதிய வயதுவரை வாழமாட்டார்கள். 32 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நன்மைகள் ஏற்படும், ஆனால் உன் வீட்டில் மட்டும் தீமை ஏற்படுவதைக் காண்பாய். உன் குடும்பத்தில் யாரும் முதுமைவரை வாழமாட்டார்கள். 33 நான் ஒருவனை மாத்திரம் ஆசாரியனாக என் பலிபீடத்தில் சேவை செய்யப் பாதுகாப்பேன். அவன் முதுமைவரை வாழ்வான். அவன் கண்பார்வை போகு மட்டும், சக்தியெல்லாம் ஓயுமட்டும் வாழ்வான். உன் சந்ததிகள் எல்லோரும் வாளால் மரித்துப் போவார்கள். 34 இவைகள் உண்மையில் நிறைவேறும் என்பதற்கும் ஒரு அடையாளம் காட்டுவேன். உனது மகன்களான ஓப்னியும் பினெகாசம் ஒரே நாளில் மரித்து போவார்கள். 35 நான் எனக்காக ஒரு உண்மையுள்ள ஆசாரியனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வேன். அவன் எனக்குச் செவிகொடுத்து நான் சொல்லுகிறபடி செய்வான். நான் அந்த ஆசாரியனின் குடும்பத்தைப் பலமுள்ளதாகச் செய்வேன். அவன் அபிஷேகம் செய்யப்பட்ட எனது அரசரின் முன்னிலையில் எப்போதும் சேவை செய்வான். 36 பிறகு உன் குடும்பத்தில் மீதியான எல்லோரும் வந்து அந்த ஆசாரியன் முன்பு பணிந்து, வணங்கி நிற்பார்கள். அவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காகவும், சில்லறை காசுகளுக்காகவும் பிச்சை எடுப்பார்கள். அப்போது அவர்கள், ‘தயவு செய்து எனக்கு ஆசாரியன் வேலை தாரும். அதனால் நான் உண்ண உணவை பெறுவேன்’ என்று வேண்டுவார்கள்’” என்று கூறினான்.

தேவன் சாமுவேலை அழைக்கிறார்

சிறுவனான சாமுவேல், ஏலியின் கீழே கர்த்தருக்கு சேவை செய்து வந்தான். அந்த நாட்களில் கர்த்தர் ஜனங்களோடு நேரடியாக அடிக்கடி பேசுவதில்லை. அங்கே மிகக் குறைந்த தரிசனங்களே இருந்தன.

ஏலியின் கண்கள் பலவீனமாகி ஏறக்குறைய அவன் குருடாகிவிட்டான். ஒரு நாள் அவன் படுக்கையில் கிடந்தான். சாமுவேல் தேவனுடைய பரிசுத்தப் பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் படுத்திருந்தான். கர்த்தருடைய விளக்கானது இன்னும் எரிந்துக்கொண்டிருந்தது. கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான். ஏலி தன்னை அழைப்பதாக சாமுவேல் நினைத்துக்கொண்டான். எனவே சாமுவேல் ஏலியின் அருகில் ஓடிச் சென்றான். “நான் இங்கே இருக்கிறேன். ஏன் என்னை அழைத்தீர்கள்” என்று கேட்டான்.

ஆனால் ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான்.

சாமுவேல் படுக்கைக்குத் திரும்பி போனான். மீண்டும் கர்த்தர், “சாமுவேலே!” என்று கூப்பிட்டார். மீண்டும் சாமுவேல் ஏலியிடம் ஓடிப் போனான். அவனிடம், “நான் இங்கே இருக்கிறேன். என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டான்.

ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான்.

சாமுவேல் அதுவரை கர்த்தரைப்பற்றி அறியாமல் இருந்தான். கர்த்தர் அதுவரை அவனிடம் நேரடியாகப் பேசினதில்லை.

கர்த்தர் சாமுவேலை மூன்றாவது முறையாக அழைத்தார். மீண்டும் சாமுவேல் எழுந்து ஏலியிடம் ஓடிப்போனான். “நான் இங்கே இருக்கிறேன், என்னை ஏன் அழைத்தீர்கள்” என்றான்.

பின்னர் ஏலி, சாமுவேலை அழைத்தது கர்த்தர் என்பதை அறிந்துக் கொண்டான். ஏலி சாமுவேலிடம், “படுக்கைக்குப் போ, அவர் உன்னை மீண்டும் அழைத்தால், ‘கர்த்தாவே, பேசும். நான் உமது தாசன். நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான்.

எனவே சாமுவேல் மீண்டும் படுக்கைக்குத் திரும்பிப்போனான். 10 கர்த்தர் வந்து அங்கே நின்றார். அவர் முன்பு போலவே செய்தார். அவர், “சாமுவேலே, சாமுவேலே!” என்று அழைத்தார்.

சாமுவேலோ, “கர்த்தாவே பேசும், நான் உமது தாசன், நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

11 கர்த்தர் சாமுவேலிடம், “நான் இஸ்ரவேலில் சில காரியங்களை விரைவில் செய்வேன். அதைப்பற்றி கேள்விப்படுகிற ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். 12 நான் ஏலிக்கும் அவன் குடும்பத்திற்கும் எதிராகச் செய்வேன் என்று சொன்னப்படியே ஒவ்வொன்றையும் தொடக்கம் முதல் இறுதிவரை செய்வேன். 13 நான் ஏலியிடம் அவனது குடும்பத்தை என்றென்றைக்கும் தண்டிக்கப் போவதாகக் கூறியிருக்கிறேன். அவன் மகன்கள் அவர்களாகவே சாபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் தேவனுக்கு விரோதமாகக் கெட்டவற்றைப் பேசியும் செய்தும் வந்தனர் என்பதை ஏலி அறிந்திருந்தும், ஏலி அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டான். 14 அதனால் தான் ஏலியின் குடும்பத்தார் செய்த பாவங்கள் ஒருபோதும், பலிகளாலோ, தானியக் காணிக்கையாலோ தீர்வதில்லை என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்” என்றார்.

15 விடியும்வரை சாமுவேல் படுக்கையிலேயே படுத்திருந்தான். அதிகாலையிலேயே எழுந்து கர்த்தருடைய ஆலய கதவைத் திறந்தான். ஏலியிடம் கர்த்தருடைய தரிசனத்தைப் பற்றிக் கூற சாமுவேல் பயந்தான்.

16 ஆனால் ஏலியோ சாமுவேலிடம், “என் மகனே சாமுவேல்!” என்று அழைத்தான். அதற்கு சாமுவேல், “ஐயா” என்றான்.

17 ஏலி அவனிடம், “கர்த்தர் உன்னிடம் என்ன சொன்னார்? அதனை என்னிடம் மறைக்கவேண்டாம். தேவன் உன்னிடம் சொன்னச் செய்தியை மறைத்தால் தேவன் உன்னைத் தண்டிப்பார்” என்றான்.

18 அதனால் சாமுவேல் ஏலியிடம் எல்லாவற்றையும் கூறினான். அவன் ஏலியிடம் எதையும் மறைத்து வைக்கவில்லை.

ஏலி, “அவர் கர்த்தர். அவருக்குச் சரியெனத் தோன்றுவதை அவர் செய்யட்டும்” என்றான்.

19 சாமுவேல் வளரும்போது கர்த்தர் அவனோடேயே இருந்தார். சாமுவேலின் எந்தச் செய்தியும் பொய்யாக நிரூபிக்க கர்த்தர் அனுமதிக்கவில்லை. 20 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் தாண் முதல் பெயெர்செபா வரைக்கும் சாமுவேல் உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரிசி என்றறிந்தார்கள். 21 சீலோவில் தொடர்ந்து கர்த்தர் சாமுவேலுக்கு தம்மை காண்பித்து வந்தார், மற்றும் அங்கே தம்முடைய வார்த்தையினாலேயே கர்த்தர் சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தி வந்தார்.

சாமுவேலைப் பற்றியச் செய்தி அனைத்து இஸ்ரவேலருக்கும் பரவியது. ஏலி முதியவனானான். அவனது மகன்கள் தொடர்ந்து கர்த்தருக்கு எதிராக தீய செயல்களைச் செய்து வந்தனர்.

பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை வெல்லுகின்றனர்

அந்த காலத்தில், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு எதிராகப் போர் செய்யப் போனார்கள். இஸ்ரவேலர் எபெனேசர் என்ற இடத்தில் முகாமிட்டனர். பெலிஸ்தர் தங்கள் முகாம்களை ஆப்பெக்கில் அமைத்தனர். பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தாக்கும் பொருட்டுத் தயாரானார்கள். போர்த் துவங்கியது.

பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தனர். இஸ்ரவேல் சேனையில் உள்ள 4,000 வீரர்களைப் பெலிஸ்தர் கொன்றனர். இஸ்ரவேல் வீரர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்பி வந்தனர். மூப்பர்கள், “கர்த்தர் ஏன் பெலிஸ்தர் நம்மைத் தோற்கடிக்கும்படிச் செய்தார்? சீலோவில் உள்ள நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம். அதன்படி தேவன் நம்மோடு கூட போர்க்களத்துக்கு வருவார். அவர் நம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார்” என்றனர்.

எனவே ஜனங்கள் சீலோவிற்குச் சிலரை அனுப்பினார்கள். அவர்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தனர். அப்பெட்டியின் மேல் கேருபீன்கள் இருந்தார்கள். அவை கர்த்தர் உட்காரும் சிங்காசனம் போல இருந்தது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் அப்பெட்டியோடு வந்தனர்.

கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியானது முகாமுக்குள்ளே வந்ததும், இஸ்ரவேல் ஜனங்கள் பலமாகச் சத்தமிட்டனர். அச்சத்தம் பூமியையே அதிரச் செய்தது. பெலிஸ்தர் இஸ்ரவேலர்களின் சத்தத்தைக் கேட்டு, “ஏன் இஸ்ரவேல் முகாமில் இவ்வாறு சத்தமிடுகிறார்கள்?” என்று கேட்டனர்.

பின்னர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி முகாமிற்கு கொண்டு வரப்பட்டதை அறிந்துக்கொண்டனர். பெலிஸ்தர் அதனால் அஞ்சினர். அவர்களோ, “தேவன் அவர்களின் முகாமிற்கு வந்திருக்கிறார்கள். நாம் இக்கட்டில் இருக்கிறோம். இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை! நாங்கள் கவலைப்படுகிறோம். வல்லமையான இந்தத் தெய்வங்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள்? இந்தத் தெய்வங்கள் ஏற்கெனவே எகிப்தியர்களுக்கு நோயையும் துன்பங்களையும் கொடுத்தவர்கள். பெலிஸ்தியர்களே, தைரியமாக இருங்கள், ஆண்களைப்போன்றுப் போரிடுங்கள். முற்காலத்தில் இஸ்ரவேலர்கள் நமக்கு அடிமைகளாக இருந்தனர். நீங்கள் ஆண்களைப் போன்று சண்டையிடாவிட்டால் அவர்களுக்கு அடிமையாகிவிடுவீர்கள்!” என்றனர்.

10 எனவே பெலிஸ்தர்கள் கடுமையாகச் சண்டையிட்டு இஸ்ரவேலர்களைத் தோற்கடித்தனர். ஒவ்வொரு இஸ்ரவேல் வீரனும் தங்கள் முகாமிற்கு ஓடினார்கள். இது இஸ்ரவேலுக்குப் படுதோல்வியாயிருந்தது. 30,000 இஸ்ரவேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஓப்னியையும் பினெகாசையும் கொன்றுவிட்டனர். 12 அந்த நாளில் பென்யமீனின் கோத்திரத்திலிருந்து ஒருவன் போர்க்களத்திலிருந்து சீலோவிற்கு ஓடிப்போனான். அவன் தனது ஆடையைக் கிழித்தெறிந்தான். தலையின் மேல் புழுதியை அள்ளிப் போட்டுக்கொண்டான். இவ்வாறு அவன் தன் சோகத்தை வெளிகாட்டினான். 13 இந்த மனிதன் சீலோவிற்கு வந்தபொழுது ஏலி நகர வாசல்களுக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைப் பற்றி ஏலி கவலைப்பட்டு, கவனித்துக் காத்திருந்தான். பிறகு பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் சீலோவுக்கு வந்து அந்தக் கெட்டச் செய்தியைக் கூறினான். நகரிலிருந்த ஜனங்கள் அனைவரும் சத்தமாக அழத் துவங்கினார்கள். 14-15 ஏலி 98 வயதுடையவன். அவன் குருடன். என்ன நடக்கிறது என்பதை அவனால் காணமுடியவில்லை. ஆனால் அவனால் ஜனங்களின் உரத்த அழுகை சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஏலி, “ஏன் இவர்கள் இவ்வாறு சத்தமிடுகிறார்கள்?” என்று கேட்டான்.

பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஏலியிடம் ஓடிவந்து நடந்ததைக் கூறினான். 16 அவன், “நான் இப்போதுதான் போர்க்களத்திலிருந்து ஓடி வந்தேன்” என்றான்.

ஏலி அவனிடம், “மகனே! என்ன நடந்தது?” என்று கேட்டான்.

17 அதற்கு அவன், “பெலிஸ்தர்களிடமிருந்து இஸ்ரவேலர்கள் ஓடிப்போனார்கள். இஸ்ரவேல் படை ஏராளமான வீரர்களை இழந்துவிட்டது. உமது இரு மகன்களும் மரித்துப்போனார்கள். பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துக் கொண்டனர்” என்றான்.

18 பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்தவன் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைப்பற்றிச் சொன்னதும், ஏலி நாற்காலியிலிருந்து வாசல் பக்கமாய் மல்லாக்காய் விழுந்து தன் கழுத்தை முறித்துக்கொண்டான். அவன் வயதானவனாகவும் சரீரம் பருமனாகவும் இருந்ததால், மரித்துப்போனான். ஏலி இஸ்ரவேல் ஜனங்களை 20 ஆண்டுகள் வழிநடத்தினான்.

மகிமை போய்விட்டது

19 ஏலியின் மருமகளான பினெகாசின் மனைவி அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவள் குழந்தைப் பெறுவதற்குரியக் காலம் அது. தேவனுடைய பரிசுத்தப் பெட்டி பறிபோனதுப் பற்றி அவள் கேள்விப்பட்டாள். அதோடு அவள் தன் கணவனும் தன் மாமனாரும் மரித்துப்போனது பற்றியும் கேள்விப்பட்டாள். உடனே அவளுக்கு பிரசவ வலி ஆரம்பமாகிக் குழந்தையைப் பெற்றாள். 20 அவளது பிரசவத்திற்கு உதவிய பெண்ணோ, “கவலைப்படாதே! நீ ஒரு ஆண்மகனைப் பெற்றிருக்கிறாய்” என்றாள்.

ஆனால் ஏலியின் மருமகளோ அதைக் கவனிக்கவில்லை, எவ்வித பதிலும் சொல்லவில்லை. 21 அவள், அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்றுப் பெயரிட்டாள், அதற்கு பொருள் “இஸ்ரவேலரின் மகிமைப் போயிற்று!” என்பதாகும். தேவனுடைய பரிசுத்தப் பெட்டி பறிபோனது, கணவனும் மாமனாரும் மரித்துப் போனார்கள், எனவே அவள் இந்தப் பெயரை வைத்தாள். 22 அவள், “இஸ்ரவேலரின் மகிமைப் போயிற்று” ஏனென்றால் பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை பறித்துக் கொண்டனர் என்றாள்.

யோவான் 5:24-47

24 “நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான். 25 உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முக்கியமான வேளை வரும். அவ்வேளை ஏற்கெனவே இங்கே இருக்கிறது. பாவத்தில் இறந்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். குமாரனிடமிருந்து கேட்பவற்றை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றார்கள். 26 பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். 27 அத்துடன் அவர் குமாரனுக்கு, அனைத்து மக்களுக்கும் தீர்ப்பளிக்கிற அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அந்தக் குமாரனே மனித குமாரனாக இருக்கிறார்.

28 “இதுபற்றி நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் அவரது சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். 29 அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள்.

30 “நான் தனியாக எதுவும் செய்வதில்லை. நான் எனக்குச் சொல்லியிருக்கிறபடியே தீர்ப்பளிக்கிறேன். எனவே எனது தீர்ப்பு நீதியானதே. ஏனென்றால் நான் எனக்குப் பிடித்தமானதைச் செய்வதில்லை; என்னை அனுப்பினவருக்குப் பிடித்தமானதையே செய்கிறேன்.

யூதர்களிடம் இயேசு பேசுதல்

31 “நானே என்னைப்பற்றிச் சொல்லி வந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 32 ஆனால் என்னைக்குறித்து மக்களிடம் சொல்லுகிற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைக் குறித்துச் சொல்வது உண்மையென்று எனக்கும் தெரியும்.

33 “நீங்கள் யோவானிடம் சிலரை அனுப்பியிருந்தீர்கள். அவன் உங்களுக்கு உண்மையைப்பற்றிச் சொன்னான். 34 மக்களுக்கு என்னைப்பற்றி ஒருவன் சாட்சி சொல்லி விளக்க வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும்படியாக இவற்றை நான் உங்களுக்குக் கூறுகிறேன். 35 யோவான் எரிந்து ஒளியைக் கொடுக்கிற ஒரு விளக்கைப்போன்றிருந்தான். நீங்கள் அவனது ஒளியைப் பெற்று சில காலம் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.

36 “ஆனால் நான் யோவானைவிடப் பெரியவர் என்பதற்கு என்னிடம் சாட்சி உள்ளது. நான் செய்கிற செயல்களே எனக்கு உரிய சாட்சிகளாகும். இவைகளே என் பிதா, நான் செய்யும்படியாகக் கொடுத்தவை என்பதைக் காட்டுகின்றன. 37 என்னை அனுப்பிய என் பிதா, என்னைப் பற்றி அவரே சாட்சி தருகிறார். ஆனால் நீங்கள் அவர் சத்தத்தை ஒருபொழுதும் கேட்டதில்லை. அவர் எப்படி இருப்பார் என்று நீங்கள் பார்த்ததும் இல்லை. 38 பிதாவின் அறிவுரை உங்களில் வாழ்வதுமில்லை. ஏனென்றால் பிதா அனுப்பிய ஒருவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 39 நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன. 40 ஆனால் அந்த நித்திய ஜீவனைப் பெற விரும்பும் நீங்கள், என்னிடம் வர மறுக்கின்றீர்கள்.

41 “நான் மனிதர்களிடமிருந்து பாராட்டைப் பெற விரும்பவில்லை. 42 ஆனால் நான் உங்களை அறிவேன். தேவனுடைய அன்பு உங்களில் இல்லை என்பதையும் அறிவேன். 43 நான் என் பிதாவிடமிருந்து வந்திருக்கிறேன். நான் அவருக்காகப் பேசுகிறேன். ஆனால் என்னை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். வேறொருவன் வந்து அவன் தனக்காகவே பேசினால் அவனை ஏற்றுக்கொள்கிறீர்கள். 44 நீங்கள் உங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டுவதில் விருப்பம்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய பாராட்டைப் பெற முயற்சி செய்வதில்லை. ஆகையால் நீங்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? 45 நான் பிதாவின் முன்னால் நின்று உங்களைக் குற்றம் சொல்வேன் என்று நினைக்கவேண்டாம். மோசேதான் உங்கள் குறைகளைச் சொல்கிறவன். மோசே மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். 46 நீங்கள் உண்மையிலேயே மோசேயை நம்பினீர்களானால் என்னிலும் நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஏனென்றால் மோசே என்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான். 47 ஆனால் நீங்கள் மோசே எழுதினவைகளை நம்பமாட்டீர்கள். ஆகையால் நான் சொல்வதையும் உங்களால் நம்பமுடியாது” என்று கூறினார்.

சங்கீதம் 106:1-12

106 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
    தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!
உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது.
    ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.

தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியானவர்கள்.
    எப்போதும் அந்த ஜனங்கள் நல்ல காரியங்களையே செய்கிறார்கள்.
கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது
    என்னை நினைவுகூர்ந்து இரட்சியும்.
கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு
    நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும்.
என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும்.
    உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.

எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்ததுப்போல் நாங்களும் பாவம் செய்தோம்.
    நாங்கள் தவறு செய்தோம், நாங்கள் தீயவற்றைச் செய்தோம்.
கர்த்தாவே எகிப்திலுள்ள எங்கள் முற்பிதாக்கள் நீர் செய்த அதிசயங்களிலிருந்து எதையும் கற்கவில்லை.
    செங்கடலின் அருகே எங்கள் முற்பிதாக்கள் உமக்கெதிராகத் திரும்பினார்கள்.

ஆனால் தேவன் நம் முற்பிதாக்களை அவரது சொந்த நாமத்தின் காரணமாகக் காப்பாற்றினார்.
    அவரது மிகுந்த வல்லமையைக் காட்டும் பொருட்டு தேவன் அவர்களைக் காப்பாற்றினார்.
தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது.
    ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார்.
10 தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார்.
    அவர்கள் பகைவரிடமிருந்து தேவன் அவர்களைப் பாதுகாத்தார்.
11 தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார்.
    அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை.

12 அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள்.
    அவர்கள் அவருக்குத் துதிகளைப் பாடினார்கள்.

நீதிமொழிகள் 14:30-31

30 மனதில் சமாதானம் உள்ள ஒருவன், உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பொறாமையோ நோய்களுக்குக் காரணமாகிறது.

31 ஏழைகளுக்குத் துன்பம் செய்கிறவன் தேவனுக்கு மரியாதை செய்யாதவன் எனக் காண்பித்துக்கொள்கிறான். ஏனென்றால் இருவரையும் தேவனே படைத்துள்ளார். ஆனால் ஒருவன் ஏழைகளிடம் தயவாக இருந்தால் அவன் தேவனையும் மகிமைப்படுத்துகிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center