Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the ESV. Switch to the ESV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 1:1-2:11

சவுல் மரணத்தை தாவீது அறிதல்

அமலேக்கியரை முறியடித்தபின் தாவீது சிக்லாகிற்குத் திரும்பிச் சென்றான். சவுல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்தது. அங்கே தாவீது இரண்டு நாட்கள் தங்கினான். பின்பு, மூன்றாம் நாளில், ஒரு இளம் வீரன் சிக்லாகிற்கு வந்தான். அவன் சவுலின் முகாமிலிருந்து வந்திருந்தான். அம்மனிதனின் ஆடைகள் கிழிந்திருந்தன. அவனுடைய தலையில் புழுதி படிந்திருந்தது [a] அவன் தாவீதிடம் வந்து நிலத்தில் முகங்குப்புற விழுந்து வணங்கினான்.

தாவீது அம்மனிதனைப் பார்த்து, “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான்.

அம்மனிதன் தாவீதிடம், “நான் இஸ்ரவேலரின் முகாமிலிருந்து வருகிறேன்” என்று பதிலுரைத்தான்.

தாவீது அம்மனிதனை நோக்கி, “யார் போரில் வெற்றியடைந்தார் என்பதை தயவு செய்து கூறு” என்றான்.

அம்மனிதன், “நம் வீரர்கள் போரிலிருந்து தப்பி ஓடினார்கள். பலர் யுத்தத்தில் அகப்பட்டு மடிந்தனர். சவுலும் அவனது மகன் யோனத்தானுங்கூட மரித்துவிட்டனர்” என்று பதில் கூறினான்.

தாவீது இளைஞனாகிய அந்த வீரனிடம், “சவுலும் யோனத்தானும் மரித்ததைப் பற்றி உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.

அந்த இளம் வீரன், “நான் கில்போவா மலைக்குப் போயிருந்தேன். சவுல் தனது ஈட்டியில் சொருகிச் சாய்ந்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பெலிஸ்தியரின் தேர்களும் குதிரை வீரர்களும் சவுலுக்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தனர். சவுல் திரும்பி என்னைப் பார்த்து அழைத்து என்னை யாரென்று கேட்டார். நான் ஒரு அமலேக்கியன் என்பதை அவருக்குக் கூறினேன். அப்போது சவுல், ‘தயவு செய்து என்னைக் கொன்றுவிடு. நான் மிகவும் காயப்பட்டு மரிக்கும் தருவாயில் உள்ளேன்’ என்றார். 10 அவர் அதிகமாகக் காயப்பட்டிருந்ததால், இனி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை நான் மிக நன்கு அறிந்தேன். எனவே நான் அவரைக் கொன்றேன். பின்பு அவரது தலையிலிருந்த கிரீடத்தையும் புயங்களில் இருந்த கடகத்தையும் கழற்றினேன். அவற்றை என் ஆண்டவனாகிய உங்களிடம் கொண்டுவந்துள்ளேன்” என்றான்.

11 அப்போது தாவீது தன் துக்கமிகுதியால் ஆடைகளை கிழித்தான். தாவீதோடிருந்த மனிதர்களும் அவ்வாறே செய்தார்கள். 12 அவர்கள் வருத்தமுற்று அழுது மாலை வரைக்கும் ஏதும் உண்ணவில்லை. சவுலும் அவனது மகன் யோனத்தானும் மரித்துப் போனதால் அவர்கள் அழுதார்கள். தாவீதும் அவனது மனிதர்களும் கொல்லப்பட்டிருந்த கர்த்தருடைய ஜனங்களுக்காகவும் இஸ்ரவேலருக்காகவும் அழுதனர். சவுலும், யோனத்தானும் பல இஸ்ரவேலரும் யுத்தத்தில் கொல்லப்பட்டதற்காக அவர்கள் அழுதனர்.

அமலேக்கியனைக் கொல்ல தாவீது கட்டளை

13 சவுலின் மரணத்தைப்பற்றிக் கூறிய இளம் வீரனிடம் தாவீது பேசினான். தாவீது, “நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?” என்று கேட்டான்.

அந்த இளம் வீரன், “நான் ஒரு அந்நியனின் மகன், நான் ஒரு அமலேக்கியன்” என்றான்.

14 தாவீது அந்த இளம் வீரனிடம், “கர்த்தர் தேர்ந்தெடுத்த, அரசனைக் கொல்வதற்கு நீ ஏன் அச்சம் கொள்ளவில்லை?” என்றான்.

15-16 பின்பு தாவீது அமலேக்கியனை நோக்கி, “உனது மரணத்திற்கு நீயே காரணம். கர்த்தர் தேர்ந்தெடுத்த அரசனைக் கொன்றாய் என்று நீயே கூறினாய். உனது வார்த்தைகளே நீ குற்றவாளி என்று தீர்க்கின்றன” என்று கூறினான். பின்பு தாவீது ஒரு இளம் வேலையாளை அழைத்து அமலேக்கியனைக் கொல்லுமாறு கூறினான். எனவே அந்த இஸ்ரவேல் இளைஞன் அமலேக்கியனைக் கொன்றான்.

சவுல், யோனத்தான் பற்றிய தாவீதின் சோககீதம்

17 சவுலையும் அவனது மகன் யோனத்தானையும் குறித்து துயரம் மிகுந்த பாடலொன்றைத் தாவீது பாடினான். 18 அப்பாடலை யூதா ஜனங்களுக்குக் கற்பிக்குமாறு தாவீது தனது ஆட்களிடம் கூறினான். அப்பாடல் “வில்” எனப்பட்டது. அது யாசேரின் புத்தகத்தில் உள்ளது.

19 “இஸ்ரவேலே, உன் அழகு உன் மேடுகளில் அழிக்கப்பட்டது.
    ஓ, அந்த வீரர்கள் எப்படி வீழ்ந்தனர்!.
20 அச்செய்தியைக் காத் [b] நகரில் கூறாதே,
    அஸ்கலோனின் தெருக்களில் அதை அறிவிக்காதே.
அதனால் பெலிஸ்திய நகரங்கள் களிப்படையும்!
    அந்த அந்நியர்கள் மகிழக்கூடும்.
21 மழையோ பனியோ கில்போவா மலைகளில் பெய்யாதென நம்புகிறேன்.
    அவ்வயல்களினின்று பயிர்களின் காணிக்கை இனி வராதென நான் நம்புகிறேன்.
வீரர்களின் கேடயங்கள் அங்குத் துருப்பிடித்தன.
    சவுலின் கேடகத்தில் எண்ணெய் பூசப்படவில்லை.
22 வில்லால் பல பகைவரைக் கொன்றான் யோனத்தான்.
    வாளால் அவ்வாறே வெற்றி கண்டான், சவுல்.
இவர்கள் மடிந்த பல வீரரின் இரத்தத்தைச் சிந்த வைத்தனர்!
    வலியோரில் வலிய வீரரையும் துண்டுத் துண்டாக வெட்டினர்.

23 “சவுலும் யோனத்தானும் தம் வாழ்வில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி மகிழ்ந்தனர்.
    மரணமும் அவர்களைப் பிரிக்கவில்லை!
அவர்கள் கழுகுகளிலும் வேகமானவர்கள்.
    அவர்கள் சிங்கங்களிலும் பலசாலிகள்.
24 இஸ்ரவேலின் குமாரத்திகளே, சவுலுக்காக அழுங்கள்!
    இரத்தாம்பர ஆடைகளை சவுல் உனக்குத் தந்தான். இன்னும் ஆடைகளில் பொன் வேலைப்பாடுகள் செய்வித்தான்!

25 “போரில் பலசாலிகள் வீழ்ந்தனர்.
    கில்போவா மலையில் யோனத்தான் மடிந்தான்.
26 சகோதரன் யோனத்தானே, மறைந்தாய், வெகுவாய் வருந்துகிறேன்.
    உனது அன்பு பெருமகிழ்வைத் தந்தது. மங்கையரின் நேசத்தைக் காட்டிலும் மாமேன்மையானது உனது அன்பு.
27 போரில் பலசாலிகள் வீழ்ந்தனர்.
    போர்க்கருவி அனைத்தும் அழிந்தனவே.”

தாவீது தனது ஆட்களுடன் எப்ரோனுக்குச் செல்வது

பின்பு தாவீது கர்த்தருடைய அறிவுரையைக் கேட்டான். தாவீது, “நான் யூதாவின் நகரங்களுள் ஏதேனும் ஒரு நகரத்திற்குப் போகலாமா?” என்று கேட்டான்.

கர்த்தர் தாவீதிடம், “போகலாம்” என்றார். தாவீது, “எங்கு நான் போகட்டும்?” என்று கேட்டான். கர்த்தர், “எப்ரோனுக்கு” என்று பதிலளித்தார்.

எனவே, தாவீதும் அவனது இரண்டு மனைவியரும் எப்ரோனுக்குச் சென்றனர். (யெஸ்ரயேல் ஊராளான அகினோவாள் ஒரு மனைவி, மற்றொருத்தி கர்மேல் நாபாலின் விதவையாகிய அபிகாயில்) தாவீது தம் ஆட்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தம்மோடு அழைத்துச் சென்றான். அவர்கள் எல்லோரும் எப்ரோனிலும் அருகிலுள்ள ஊர்களிலும் குடியேறினார்கள்.

தாவீது யாபேசின் ஜனங்களுக்கு நன்றி கூறுவது

யூதாவின் மனிதர்கள் எப்ரோனுக்கு வந்து தாவீதை யூதாவின் அரசனாக அபிஷேகம் செய்தார்கள். அவர்கள் தாவீதிடம், “கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்கள் சவுலைப் புதைத்தார்கள்” என்றனர்.

கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களிடம் தாவீது தூதுவர்களை அனுப்பினான். அந்த ஆட்கள் யாபேசின் மனிதர்களை நோக்கி, “சவுலின் சாம்பலைப் [c] புதைத்து உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இரக்கம் காட்டியதால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களிடம் இரக்கமாகவும் உண்மையாகவும் இருப்பாராக, நானும் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். இப்போது பலமும் தைரியமும் உடையவர்களாய் இருங்கள். உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்துவிட்டார். ஆனால் யூதா கோத்திரத்தினர் அவர்களுடைய அரசனாக என்னை அபிஷேகம் செய்திருக்கிறார்கள்” என்று தாவீது செய்தியைக் கூறியனுப்பினான்.

இஸ்போசேத் அரசனாவது

சவுலின் படைக்கு நேர் என்பவனின் மகனாகிய அப்னேர் தளபதியாக இருந்தான். சவுலின் மகனாகிய இஸ்போசேத்தை அப்னேர் மகனாயீமுக்கு அழைத்துச்சென்று அவனை, கீலேயாத், அஷூரியர், யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன், இஸ்ரவேல் எல்லாவற்றிற்கும் அரசனாக்கினான்.

10 இஸ்போசேத் சவுலின் மகன். அவன் இஸ்ரவேலை ஆளத் தொடங்கியபோது அவனுக்கு நாற்பது வயது, அவன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். ஆனால் யூதா கோத்திரத்தார் தாவீதைப் பின் பற்றினர். 11 தாவீதும் எப்ரோனில் அரசனாக இருந்தான். தாவீது 7 ஆண்டுகள் 6 மாதங்கள் யூதா கோத்திரத்தை அரசாண்டான்.

யோவான் 12:20-50

ஜீவன்-மரணம்

20 அங்கே கிரேக்க நாட்டு மக்களில் சிலரும் இருந்தனர். இவர்கள் பஸ்கா பண்டிகையில் வழிபாடு செய்ய எருசலேமுக்கு வந்திருந்தனர். 21 இவர்கள் பிலிப்புவிடம் சென்று (கலிலேயாவிலுள்ள பெத்சாய்தாவில் இருந்து வந்தவன் பிலிப்பு) “ஐயா, நாங்கள் இயேசுவைச் சந்திக்க விரும்புகிறோம்” என்றனர். 22 பிலிப்பு அந்திரேயாவிடம் சொன்னான். பிறகு இருவரும் இயேசுவிடம் சொன்னார்கள்.

23 இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமை பெறுகிற நேரம் வந்துவிட்டது. 24 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும். 25 தனக்குச் சொந்தமான வாழ்வை நேசிக்கிறவன் அதனை இழப்பான். இவ்வுலகில் தன் வாழ்வின்மீது வெறுப்புகொண்டவன் என்றென்றைக்கும் அதைக் காத்துக்கொள்வான். அவன் நிரந்தர வாழ்வைப் பெறுவான். 26 எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார்.”

இயேசு தன் மரணத்தைப்பற்றிப் பேசியது

27 “நான் இப்போது கலக்கத்தில் இருக்கிறேன். நான் என்ன சொல்வது? ‘பிதாவே, என்னை இந்தத் துன்ப காலத்தில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று சொல்லலாமா? இல்லை, துன்பப்படுவதற்காகவே இத்தருணத்தில் வந்தேன். 28 பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக!” என்றார்.

அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்றது.

29 அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர்.

வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர்.

30 மக்களிடம் இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல. உங்களுக்காக. 31 உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டுகொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான். 32 நான் பூமியில் இருந்து உயர்த்தப்படுவேன். இது நடைபெறும்போது எல்லா மக்களையும் என்னோடு சேர்த்துக்கொள்வேன்” என்றார். 33 தான் எவ்வாறு இறந்துபோவேன் என்பதைக் காட்டவே இவ்வாறு கூறினார்.

34 ஆனால் மக்களோ, “கிறிஸ்து என்றென்றும் வாழ்வார் என்று நமது சட்டங்கள் கூறுகின்றனவே. அப்படியிருக்க ‘மனித குமாரன் உயர்த்தப்படுவார்’ என்று ஏன் கூறுகின்றீர்? யார் இந்த ‘மனித குமாரன்?’” எனக் கேட்டனர்.

35 பிறகு இயேசு, “இன்னும் சிறிது காலம் உங்களோடு ஒளி இருக்கும். எனவே, ஒளி இருக்கும்போதே நடந்துவிடுங்கள். அப்போதுதான் இருட்டாகிய பாவம் உங்களைப் பிடித்துக்கொள்ளாது. இருட்டிலே நடந்துபோகிறவனுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும். 36 ஆகவே, ஒளி இருக்கும்போதே அதன்மீது நம்பிக்கை வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஒளியின் பிள்ளைகள் ஆவீர்கள்” என்றார். இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின் அவ்விடத்தை விட்டுப் போனார். அவர் போய் அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக்கொண்டார்.

இயேசுவை நம்பாத யூதர்கள்

37 இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. 38 தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.

“கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்?
    தேவனின் வல்லமையைக் கண்டுகொண்டவர்கள் யார்?” (A)

39 இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும்,

40 “தேவன் மக்களைக் குருடாக்கினார்.
    தேவன் அவர்களின் மனதை மூடினார்.
அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார்.
அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.” (B)

41 இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார்.

42 ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவை நம்பினார்கள். ஏராளமான யூதத்தலைவர்கள் கூட இயேசுவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை நம்புவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. தாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்கப்படுவோமோ என்று அவர்கள் பயந்தனர். 43 அவர்கள் தேவனால் வரும் பாராட்டைவிட மனிதரால் வரும் பாராட்டை விரும்பினர்.

தீர்ப்பளிக்கும் வசனங்கள்

44 பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான். 45 என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான். 46 நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான்.

47 “நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை. 48 என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும். 49 ஏனென்றால் நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும். 50 என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார்.

சங்கீதம் 118:19-29

19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள்,
    நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
20 அவை கர்த்தருடைய கதவுகள்,
    நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.
21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
    நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.

22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய
    கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
23 கர்த்தரே இதைச் செய்தார்,
    அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
24 இந்நாள் கர்த்தர் செய்த நாள்.
    இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!

25 ஜனங்கள், “கர்த்தரைத் துதிப்போம்!
    கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
    ஆசாரியர்கள், “நாங்கள் உங்களைக்
    கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார்.
    பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள்.

28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன்.
    நான் உம்மைத் துதிக்கிறேன்.
29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.

நீதிமொழிகள் 15:27-28

27 ஏமாற்றிப் பொருட்களைப் பெற்றுக்கொள்பவன், தன் குடும்பத்துக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக்கொண்டவனாவான். நேர்மையாக இருப்பவனுக்கோ துன்பம் இல்லை.

28 நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள். ஆனால் தீயவர்கள் சிந்திக்கும் முன்னரே பேசுகின்றனர். அவை அவர்களுக்குத் துன்பம் தரும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center