Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the EHV. Switch to the EHV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 9-11

சவுலின் குடும்பத்தாருக்கு தாவீது இரக்கம் காட்டுகிறான்

தாவீது, “சவுலின் வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான் அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். யோனத்தான் நிமித்தம் நான் இதைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.

சவுலின் குடும்பத்தை சேர்ந்த சீபா என்னும் வேலைக்காரன் இருந்தான். தாவீதின் பணியாட்கள் சீபாவை தாவீதிடம் அழைத்து வந்தனர். தாவீது அரசன், சீபாவிடம், “நீ சீபாவா?” என்று கேட்டான்.

சீபா, “ஆம் நான் உங்கள் பணியாளாகிய சீபா” என்றான்.

அரசன், “சவுலின் குடும்பத்தில் யாராவது உயிரோடிருக்கிறார்களா? தேவனுடைய இரக்கத்தை நான் அவனுக்குக் காட்ட வேண்டும்” என்றான்.

தாவீதிடம், “யோனத்தானுக்கு இரு கால்களும் முடமான ஒரு மகன் இருக்கிறான்” என்று சீபா சொன்னான்.

அரசன் சீபாவை நோக்கி, “அந்த மகன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.

சீபா, அரசனிடம், “லோதேபாரில் அம்மியேலின் மகனாகிய மாகீரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்றான்.

தாவீது அரசன் பணியாட்களை லோதேபாரிலுள்ள அம்மியேலின் மகனாகிய மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை அங்கிருந்து அழைத்து வருவதற்காக அனுப்பினான். யோனத்தானின் மகன் மேவிபோசேத் என்பவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணங்கினான்.

தாவீது, “மேவிபோசேத்?” என்றான்.

மேவிபோசேத், “நான் உங்கள் பணியாளாகிய மேவிபோசேத்” என்றான்.

தாவீது மேவிபோசேத்தை நோக்கி, “பயப்படாதே நான் உனக்கு இரக்கம் காட்டுவேன். உன் தந்தை யோனத்தானிமித்தம் இதைச் செய்வேன். உன் பாட்டனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் தருவேன். நீ எப்பொழுதும் எனது பந்தியில் உண்பாய்” என்றான்.

மேவிபோசேத் மீண்டும் தாவீதை வணங்கினான். மேவிபோசேத், “உங்கள் பணியாளாகிய என்னிடம் நீங்கள் இரக்கம் காட்டுகிறீர்கள். நான் செத்த நாயைக் காட்டிலும் மேலானவன் அல்ல” என்றான்.

அப்போது தாவீது அரசன் சவுலின் வேலைக்காரன் சீபாவை அழைத்தான். தாவீது சீபாவை நோக்கி, “உன் எஜமானரின் பேரனாகிய மேவிபோசேத்திற்கு சவுல் குடும்பம் மற்றும் சவுலுக்கும் சொந்தமான எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். 10 நீ அந்த நிலத்தைப் பயிர் செய்வாய். உன் மகன்களும் வேலையாட்களும் மேவிபோசேத்திற்காக இதைச் செய்ய வேண்டும். நீ பயிர்களை அறுவடைச் செய்து விளைச்சலைச் சேர்ப்பாய். அப்போது உன் எஜமானனின் பேரனான, மேவிபோசேத் உண்பதற்குத் தேவையான உணவைப் பெறுவான். உனது எஜமானின் பேரன், எப்பொழுதும் என் பந்தியில் ஆகாரம் உண்பான்” என்றான்.

சீபாவிற்கு 15 மகன்களும் 20 வேலைக்காரரும் இருந்தனர். 11 சீபா தாவீது அரசனை நோக்கி “நான் உங்கள் பணியாள், ஆண்டவனாகிய எனது அரசன் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் நான் செய்வேன்” என்றான்.

மேவிபோசேத் ராஜகுமாரனைப்போல் தாவீதின் பந்தியில் உணவுண்டான். 12 மேவிபோசேத்திற்கு மீகா என்னும் சிறிய மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தின் ஜனங்கள் அனைவரும் மேவிபோசேத்தின் வேலையாட்களாயினர். மேவிபோசேத் இரு கால்களும் முடமானவன். 13 மேவிபோசேத் எருசலேமில் வாழ்ந்தான். ஒவ்வொரு நாளும் அவன் அரச பந்தியில் உணவுண்டான்.

தாவீதின் ஆட்களுக்கு ஆனூனால் அவமானம்

10 அதற்குப் பிறகு அம்மோன் அரசனாகிய நாகாஸ் மரித்தான். அவனது மகனாகிய ஆனூன் அவனுக்குப் பிறகு அரசனானான். தாவீது, “நாகாஸ் என்னிடம் இரக்கத்தோடு நடந்துக்கொண்டான். எனவே நானும் அவனது மகன் ஆனூனுக்கு இரக்கம் காட்டுவேன்” என்றான். எனவே ஆனூனின் தந்தையின் மறைவிற்குத் துக்கம் விசாரிப்பதற்காக தாவீது தனது அதிகாரிகளை அனுப்பினான்.

தாவீதின் அதிகாரிகள் அம்மோன் தேசத்திற்குச் சென்றார்கள். ஆனால் அம்மோனின் அதிகாரிகள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனை நோக்கி, “உங்களுக்கு ஆறுதல் கூறுவதற்குச் சில அதிகாரிகளை அனுப்புவதால் தாவீது உங்களைப் பெருமைப்படுத்துவதாக நீர் நினைக்கிறீரா? இல்லை! உங்கள் நகரத்தைக் குறித்து உளவறிந்து கொள்வதற்காக தாவீது இந்த ஆட்களை அனுப்பியிருக்கிறான். உங்களுக்கு எதிராக போரிடுவதற்கான திட்டம் இதுவாகும்” என்றார்கள்.

எனவே ஆனூன் தாவீதின் அதிகாரிகளைப் பிடித்து அவர்கள் தாடியின் ஒரு பகுதி மயிரைச் சிரைத்தான். அவர்கள் ஆடைகளை இடுப்புப் பகுதி வரைக்கும் நடுவே கிழித்துவிட்டப் பின் அவர்களை அனுப்பிவிட்டான்.

இச்செய்தியை ஜனங்கள் தாவீதிடம் தெரிவித்தபோது அவன் தனது அதிகாரிகளைச் சந்திக்கும் பொருட்டு அவர்களிடம் தூதுவர்களை அனுப்பினான். தனது அதிகாரிகள் அவமானப்படுத்தப்பட்டதால் தாவீது அரசன் செய்தியனுப்பி, “உங்கள் தாடி மீண்டும் வளரும்மட்டும் எரிகோவில் தங்கியிருங்கள். பின்பு எருசலேமுக்குத் திரும்பி வாருங்கள்” என்றான்.

அம்மோனியருக்கு எதிராகப் போர்

அம்மோனியர் தாவீதிடம் பகை வளர்த்தனர். எனவே அவர்கள் பெத்ரேகோப், ஸோபா ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரை அழைத்தனர். காலாட் படைகளில் 20,000 ஆராமியர் தேறினார்கள். அம்மோனியர் மாக்கா அரசனையும் அவனது 1,000 வீரர்களையும் தோபிலிருந்து 12,000 வீரர்களையும் வரவழைத்தார்கள்.

தாவீது இதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் யோவாபையும், வலிமை மிகுந்த தனது முழு சேனையையும் அனுப்பினான். அம்மோனியர் புறப்பட்டு போருக்குத் தயாராயினர். அவர்கள் நகர வாயிலருகே நின்றுக்கொண்டனர். சோபா, ரேகோப் ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரும் தோப், மாக்கா ஆகிய இடங்களிலுள்ள வீரர்களும் யுத்தக் களத்தில் அம்மோனியரோடு சேர்ந்து நிற்கவில்லை.

அம்மோனியர் முன்னணியிலும் பின் பகுதியிலும் தனக்கு எதிரே நிற்பதை யோவாப் கண்டான். எனவே அவன் இஸ்ரவேலரில் திறமை மிகுந்த வீரர்களைத் தெரிந்துக்கொண்டான். ஆராமியருக்கு எதிராகப் போர் செய்வதற்காக இவர்களை அனுப்பினான். 10 பின் தனது சகோதரனாகிய அபிசாயின் தலைமையில் யோவாப் மற்ற வீரர்களை அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு அனுப்பினான். 11 யோவாப் அபிசாயியை நோக்கி, “ஆராமியர் மிகுந்த பலசாலிகளாக இருந்தால் நீ எனக்கு உதவுவாய். அம்மோனியர்களின் பலம் மிகுந்திருந்தால் நான் உனக்கு உதவுவேன். 12 துணிவாயிரு. நமது ஜனங்களுக்காகவும் நமது தேவனுடைய நகரங்களுக்காகவும் நாம் வீரத்தோடு போரிடுவோம். கர்த்தர் தாம் சரியெனக் கண்டதைச் செய்வார்” என்றான்.

13 பின்பு யோவாபும் அவனது வீரர்களும் ஆராமியரைத் தாக்கினார்கள். ஆராமியர்கள் யோவாபிடமிருந்தும் அவனது ஆட்களிடமிருந்தும் தப்பி ஓடினார்கள். 14 ஆராமியர் ஓடிப்போவதை அம்மோனியர் பார்த்தனர். எனவே அவர்கள் அபிசாயிடமிருந்து தப்பி ஓடிப்போய் தங்கள் நகரத்தை அடைந்தனர்.

எனவே யோவாப் அம்மோனியரோடு போர் செய்வதை நிறுத்தி திரும்பி வந்து, எருசலேமிற்கு போனான்.

ஆராமியர் மீண்டும் போரிட முடிவெடுக்கின்றனர்

15 இஸ்ரவேலர் தங்களைத் தோற்கடித்ததை ஆராமியர்கள் கண்டார்கள். எனவே அவர்கள் ஒரு பெரும்படையைத் திரட்டினார்கள். 16 ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்த ஆராமியரை அழைத்து வருவதற்கு ஆதாதேசர் ஆட்களை அனுப்பினான். இந்த ஆராமியர் ஏலாமுக்கு வந்தார்கள். அவர்களின் தலைவனாக ஆதாதேசரின் படைத் தலைவனாகிய சோபாக் சென்றான்.

17 தாவீது இதைக் கேள்விப்பட்டான். எல்லா இஸ்ரவேலரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டி ஏலாமுக்குச் சென்றனர்.

ஆராமியர் போருக்குத் தயாராகித் தாக்கினார்கள். 18 ஆனால் தாவீது ஆராமியரை முறியடித்தான். இஸ்ரவேலரிடமிருந்து ஆராமியர் தப்பித்து ஓடினார்கள். தாவீது 700 தேரோட்டிகளையும் 40,000 குதிரை வீரர்களையும் கொன்றான். தாவீது ஆராமியரின் படைத்தலைவனாகிய சோபாக்கைக் கொன்றான்.

19 ஆதாதேசருக்கு உதவ வந்த அரசர்கள் இஸ்ரவேலர் வென்றதைக் கண்டார்கள். எனவே அவர்கள் இஸ்ரவேலரோடு சமாதானம் செய்து அவனுக்குப் பணிவிடைச் செய்தனர். அம்மோனியருக்கு மீண்டும் உதவுவதற்கு ஆராமியர்கள் அஞ்சினார்கள்.

தாவீது பத்சேபாளைச் சந்திக்கிறான்

11 வசந்த காலத்தில் அரசர்கள் போர் புரியப்போகும்போது தாவீது யோவாபையும் அதிகாரிகளையும் அனைத்து இஸ்ரவேலரையும் அம்மோனியரை அழிப்பதற்காக அனுப்பினான். யோவாபின் சேனை பகைவர்களின் தலைநகராகிய ரப்பாவைத் தாக்கிற்று.

ஆனால் தாவீது எருசலேமில் தங்கி விட்டான். சாயங்காலத்தில் அவன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்தபோது குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் மிகுந்த அழகியாயிருந்தாள். உடனே தாவீது தனது அதிகாரிகளை அழைத்து அப்பெண் யாரென விசாரித்தான். ஒரு அதிகாரி, “அப்பெண், எலியாமின் மகளாகிய பத்சேபாள், அவள் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி” என்றான்.

தாவீது பத்சேபாளைத் தன்னிடம் அழைத்து வருவதற்காக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதிடம் வந்தபோது தாவீது அவளோடு பாலின உறவுகொண்டான். அவள் தன் தீட்டுக்கழிய குளித்தப் பின்பு தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள். ஆனால் பத்சேபாள் கருவுற்றாள். அதனை தாவீதுக்குச் சொல்லியனுப்பி, “நான் கருவுற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்தாள்.

தாவீது தன் பாவத்தை மறைக்க முயலுவது

தாவீது யோவாபுக்கு, “ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு” என்று சொல்லியனுப்பினான்.

எனவே யோவாப் உரியாவை தாவீதிடம் அனுப்பினான். உரியா தாவீதிடம் வந்தான். தாவீது உரியாவிடம், “யோவாப் நலமா, வீரர்கள் நலமா, யுத்தம் எப்படி நடக்கிறது?” என்று விசாரித்தான். பின்பு தாவீது உரியாவை நோக்கி, “நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்” என்றான்.

அரசனின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். அரசனும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான். ஆனால் உரியா தன் வீட்டிற்குப் போகவில்லை. வாசலுக்கு வெளியே அரசனின் பிற பணியாட்கள் செய்ததைப் போலவே அவனும் அங்குத் தூங்கினான். 10 காவலர்கள் தாவீதை நோக்கி, “உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்றனர்.

தாவீது உரியாவிடம், “நீ நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறாய் அல்லவா? ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான்.

11 உரியா தாவீதை நோக்கி, “பரிசுத்தப் பெட்டியும், இஸ்ரவேல் யூதாவின் வீரர்களும் கூடாரங்களில் தங்கியுள்ளனர். எனது ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவருடைய (தாவீதின்) அதிகாரிகளும் வெளியே முகாமிட்டுத் தங்கி இருக்கின்றனர். எனவே வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து மனைவியோடு உறவு கொள்வது எனக்கு முறையன்று” என்றான்.

12 தாவீது உரியாவிடம், “நீ இன்று இங்கே தங்கியிரு. நாளை உன்னைப் போருக்கு அனுப்புகிறேன்” என்றான்.

உரியா மறுநாள் காலைவரை எருசலேமில் தங்கியிருந்தான். 13 அப்போது தாவீது தன்னை வந்து பார்க்கும்படி உரியாவுக்குச் சொல்லியனுப்பினான். உரியா தாவீதுடன் உண்டு குடித்தான். தாவீது உரியாவைக் குடிபோதையில் மூழ்கும்படிச் செய்தான். அப்போதும் உரியா வீட்டிற்குப் போகவில்லை. பதிலாக அரசரின் பணியாட்களோடு வீட்டிற்கு வெளியே உரியா தூங்கச் சென்றான்.

தாவீது உரியாவின் மரணத்திற்கு திட்டமிடுகிறான்

14 மறுநாள், காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதை உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். 15 கடிதத்தில் தாவீது, “உரியாவைக் கடும் போர் நடக்கும் யுத்தமுனையில் தனித்து நிறுத்து. போரில் அவன் கொல்லப்படட்டும்” என்றான்.

16 யோவாப் பலசாலிகளான அம்மோனியர் இருக்கும் இடத்தைக் கவனித்தான். உரியாவை அங்கு அனுப்பினான். 17 ரப்பா நகரத்தின் ஆட்கள் யோவாபை எதிர்த்து போரிட வந்தனர். அப்போது தாவீதின் ஆட்களில் சிலர் கொல்லப்பட்டனர். ஏத்தியனாகிய உரியாவும் அவர்களில் ஒருவன்.

18 யுத்தத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்து யோவாப் ஒரு குறிப்பு எழுதி தாவீதுக்கு அனுப்பினான். 19 போரில் நடந்தவற்றை தாவீது அரசனுக்குச் சொல்லும்படி தூதுவர்களிடம் யோவாப் கூறினான். 20 “அரசன் கோபமடையக்கூடும், ‘யோவாபின் படை போரிடுவதற்கு நகரை மிகவும் நெருங்கியதேன்?’ என்று அரசன் கேட்கக் கூடும். அம்புகளை எய்யக்கூடிய ஆட்கள் நகர மதில்களில் அமர்ந்திருப்பார்கள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். 21 எருப்சேத்தின் மகனாகிய அபிமெலேக்கை ஒரு பெண் கொன்றாள் என்பதை அவன் நிச்சயமாக அறிவான். அது தேபேசில் நடந்தது. அப்பெண் நகர மதிலில் அமர்ந்திருந்து அரைக்கிற கல்லின் மேல்பாகத்தை அபிமெலேக்கின் மேல் எறிந்தாள். எனவே, ‘ஏன் யோவாப் மதிலுக்கு மிக அருகே சென்றான்?’ என்றும் கேட்கக் கூடும். தாவீது அரசன் இவ்வாறு கூறினால் அவனிடம் இச்செய்தியைக் கூறவேண்டும்: ‘உங்கள் அதிகாரிகளில் ஏத்தியனான உரியாவும் மரித்துவிட்டான்’” என்றான்.

22 செய்தியாளன் தாவீதிடம் சென்று யோவாப் கூறியவற்றையெல்லாம் சொன்னான். 23 அவன் தாவீதிடம், “அம்மோனியர் களத்தில் எங்களை எதிர்த்தார்கள். நாங்கள் போரிட்டு அவர்களை நகரவாயில் வரைக்கும் துரத்தினோம். 24 அப்போது நகரமதிலிலிருந்த ஆட்கள் உங்கள் அதிகாரிகள் மேல் அம்புகளை எய்தார்கள். உமது சில அதிகாரிகள் அதில் மரித்தனர். அவர்களில் ஏத்தியனாகிய உரியாவும் மரித்தான்” என்றான்.

25 தாவீது அத்தூதுவனிடம், “யோவாபுக்கு இச்செய்தியைத் தெரிவி: ‘இதைக் குறித்து மிகவும் கலங்காதே, ஒரு வாள் ஒருவனை மட்டுமல்ல, அடுத்தவனையும் கொல்லக் கூடும். ரப்பாவின் மீது தாக்குதலைப் பலப்படுத்து. நீ வெற்றி பெறுவாய்’ இந்த வார்த்தைகளால் யோவாபுக்கு உற்சாகமூட்டு” என்று சொல்லியனுப்பினான்.

தாவீது பத்சேபாளை மணந்துகொள்கிறான்

26 தனது கணவன் உரியா மரித்ததை பத்சேபாள் கேள்விப்பட்டாள். அவளது கணவனுக்காக அழுதாள், 27 அவளது துக்க காலம் முடிந்தபிறகு, தாவீது அவளைத் தனது வீட்டிற்கு அழைத்து வரும்படியாக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதின் மனைவியானாள். அவள் தாவீதுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆனால் தாவீது செய்த இந்த தீமையை கர்த்தர் விரும்பவில்லை.

யோவான் 15

திராட்சைச் செடியின் உவமை

15 “நானே உண்மையான திராட்சைச் செடி, எனது பிதாவே தோட்டக்காரர். அவர், கனிகொடுக்காத எனது கிளைகள் எவையோ அவற்றை வெட்டிப் போடுகிறார். கனிகொடுக்கிற கிளைகளை மேலும் கனி கொடுக்கும்படி அவர் சுத்தம் பண்ணுகிறார். நான் உங்களுக்குச் செய்த உபதேசங்களால் நீங்கள் ஏற்கெனவே சுத்தமாகியிருக்கிறீர்கள். நீங்கள் என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தனியாகக் கனிகொடுக்க இயலாது. அது செடியிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும். இதுபோலத்தான் நீங்களும். நீங்கள் தனியாக இருந்து கனிதர முடியாது. என்னோடு சேர்ந்தே இருக்கவேண்டும்.

“நான்தான் திராட்சைச் செடி. நீங்கள் கிளைகள். எவனொருவன் என்னிடம் நிரந்தரமாக இருக்கிறானோ, எவனொருவனிடம் நான் நிரந்தரமாக இருக்கிறேனோ, அவன் கனிதரும் கிளையாக இருப்பான். ஆனால் அவன் நான் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இல்லாத எவனும் செடியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கிளைபோல் ஆகிவிடுகிறான். அது காய்ந்துபோகும். மக்கள் அவற்றைப் பொறுக்கி நெருப்பிலே போட்டு எரித்துவிடுகிறார்கள். என்னில் நிரந்தரமாக இருங்கள், என் உபதேசங்களைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் விரும்புகிற எவற்றையும் என்னிடம் கேட்கலாம். அவை உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் அதிகக் கனிகளைத் தந்து, நீங்களே என் சீஷர்கள் என்பதைக் காட்ட வேண்டும். இது என் பிதாவுக்கும் மகிமையைக் கொண்டுவரும்.

“பிதா என்னை நேசிப்பதுபோன்று நான் உங்களை நேசிக்கிறேன். இப்பொழுது எனது அன்பில் நிலைத்திருங்கள். 10 நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். நான் அவரது அன்பில் நிலைத்திருக்கிறேன். இதைப்போலவே, நீங்களும் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் எனது அன்பில் நிலைத்திருப்பீர்கள். 11 நான் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறேன். எனவே நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெறலாம். உங்கள் மகிழ்ச்சி முழுமையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 12 இதைத்தான் நான் உங்களுக்குக் கட்டளை இடுகிறேன்: நான் உங்களை நேசிப்பது போல் நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். 13 ஒருவன் தன் நண்பனுக்காக இறப்பதைவிடச் சிறந்த அன்பு வேறு எதுவுமில்லை. 14 நான் சொன்னபடி செய்தால் நீங்களும் எனது சிறந்த நண்பர்களாவீர்கள். 15 இனி நான் உங்களை வேலைக்காரன் என்று அழைப்பதில்லை. ஏனெனில் வேலைக்காரன் தன் எஜமானன் செய்வதை அறியமாட்டான். நான் இப்பொழுது உங்களை நண்பர்கள் என்றே அழைக்கிறேன். ஏனென்றால் என் பிதா எனக்குச் சொன்னவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

16 “நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. நானே உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நானே உங்களைக் கனிகொடுக்குமாறு ஏற்படுத்தினேன். உங்கள் வாழ்வில் இந்தக் கனி நிரந்தரமாக இருக்கவேண்டும். பிறகு என் பிதா என்பேரில் நீங்கள் கேட்கிற எதையும் உங்களுக்குத் தருவார். 17 இதுவே எனது கட்டளை. ஒருவரோடு ஒருவர் அன்பாயிருங்கள்.

சீஷர்களை எச்சரித்தல்

18 “இந்த உலகம் உங்களைப் பகைத்தால், அது என்னைத்தான் முதலில் பகைக்கிறது என்பதை நினைவுகொள்ளுங்கள். 19 நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அது தன் மனிதர்களை நேசிப்பதுபோன்று உங்களையும் நேசிக்கும். ஆனால் நான் உங்களை உலகத்திலிருந்து தேர்ந்து எடுத்துவிட்டேன். அதனால்தான் உலகம் உங்களைப் பகைக்கிறது.

20 “ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்லன் என்று நான் சொன்ன கருத்தை நினைத்துப்பாருங்கள். மக்கள் என்னைத் துன்புறுத்தினால் அவர்கள் உங்களையும் துன்புறுத்துவார்கள். மக்கள் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிந்தால் உங்கள் உபதேசத்திற்கும் கீழ்ப்படிவார்கள். 21 மக்கள் இவற்றையெல்லாம் என்பொருட்டே உங்களுக்குச் செய்வார்கள். அவர்கள் என்னை அனுப்பியவரைப்பற்றி அறியமாட்டார்கள். 22 நான் உலகத்துக்கு வந்து மக்களிடம் பேசாமல் இருந்திருந்தால் அவர்களுக்குப் பாவம் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நான் அவர்களிடம் பேசிவிட்டேன். எனவே அவர்கள் தம் பாவங்களுக்குச் சாக்குபோக்கு சொல்ல முடியாது.

23 “என்னை வெறுக்கிற எவனும் என் பிதாவையும் வெறுக்கிறான். 24 நான், இதுவரை எவரும் செய்யாதவற்றை மக்கள் மத்தியில் செய்திருக்கிறேன். நான் அவற்றைச் செய்யாமல் இருந்திருந்தால் மக்களுக்குத் தம் பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் போயிருக்கும். ஆனால் நான் செய்தவற்றையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனினும் அவர்கள் என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். 25 ‘அவர்கள் காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறார்கள்’ என்னும் வாக்கியம் உண்மையாகும்படி இது நடந்தது.

26 “நான் என் பிதாவிடமிருந்து அந்த உதவியாளரை உங்களிடம் அனுப்புவேன். என் பிதாவிடமிருந்து வருகிற அவர் உண்மையின் ஆவியாக இருப்பார். அவர் வரும்போது என்னைப்பற்றிக் கூறுவார். 27 நீங்கள் தொடக்கக்கால முதலே என்னோடு இருப்பதால் நீங்களும் என்னைப்பற்றி மக்களிடம் சாட்சி கூறுவீர்கள்.”

சங்கீதம் 119:49-64

சாயீன்

49 கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும்.
    அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.
50 நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர்.
    உமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன.
51 என்னைவிட உயர்ந்தோராகக் கருதிக்கொள்வோர் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டிருந்தனர்.
    ஆனால் நான் உமது போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
52 உமது ஞானமுள்ள முடிவுகளை நான் எப்போதும் நினைவுக்கூருகிறேன்.
    கர்த்தாவே, உமது ஞானமுள்ள முடிவுகள் எனக்கு ஆறுதல் தருகின்றன.
53 தீயோர் உமது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிடுகின்றனர்.
    அதைப் பார்க்கும்போது நான் கோபமடைகிறேன்.
54 உமது சட்டங்கள் எனது வீட்டின் [a] பாடல்களாகின்றன.
55 கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன்.
    நான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன்.
56 நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதால் இவ்வாறு நிகழ்கிறது.

கேத்

57 கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன்.
58 கர்த்தாவே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன்.
    நீர் வாக்குறுதியாளித்தபடியே என்னிடம் தயவாயிரும்.
59 என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்தித்தேன்.
    உமது உடன்படிக்கைக்கு நேராகத் திரும்பி வந்தேன்.
60 தாமதமின்றி
    உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கென விரைந்துவந்தேன்.
61 தீயோர்களின் கூட்டமொன்று என்னைப் பற்றி தீயவற்றைக் கூறின.
    ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
62 உமது நல்ல முடிவுகளுக்காக நன்றி கூறும்படி நள்ளிரவில் நான் எழுகிறேன்.
63 உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன்.
    உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன்.
64 கர்த்தாவே, உமது உண்மை அன்பு பூமியை நிரப்புகிறது.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.

நீதிமொழிகள் 16:1-3

16 ஜனங்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் காரியங்களை நிறைவேறச் செய்பவரோ கர்த்தர்.

ஒருவன் தான் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் கர்த்தர் செயல்களின் காரணங்களை நியாயம் தீர்க்கின்றார்.

நீ செய்கிற அனைத்து செயல்களுக்கும் கர்த்தரிடம் உதவிக்கு அணுகினால் நீ வெற்றி அடைவாய்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center