Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு ஜெபம்.
17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
2 என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
உம்மால் உண்மையைக் காணமுடியும்.
3 நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
4 உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
5 உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
6 தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
7 தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
9 கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.
என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
13 அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?” என்று கேட்டான்.
14 அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார். 15 மோசேயிடம் தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.
16 மேலும் கர்த்தர், “போய் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒருமித்துக் கூடி வரச் செய்து அவர்களுக்கு, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யேகோவா, எனக்குத் தரிசனமளித்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரின் தேவன் என்னிடம் பேசினார்.’ கர்த்தர், ‘நான் உங்களை நினைவுகூர்ந்து, எகிப்தில் உங்களுக்கு நடந்ததையும் கண்டேன். 17 எகிப்தில் நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து உங்களை விடுவிக்க முடிவு செய்தேன். இப்போது கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற வெவ்வேறு ஜனங்களுக்குச் சொந்தமான தேசத்திற்கு உங்களை அழைத்துச் செல்வேன். பல நல்ல பொருட்களால் நிரம்பிய தேசத்திற்கு உங்களை வழிநடத்துவேன்’ என்று சொன்னார்” என்று சொல்.
18 “மூப்பர்கள் (தலைவர்கள்) உனக்குச் செவி கொடுப்பார்கள். பின்னர் நீயும், அவர்களும் எகிப்திய ராஜாவிடம் செல்லுங்கள். நீ ராஜாவிடம், ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய யேகோவா எங்களிடம் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணப்படும்படியாகக் கூறினார். எங்கள் தேவனாகிய யேகோவாவுக்கு நாங்கள் அங்கு பலி செலுத்தவேண்டும்’ என்று சொல்லுங்கள்.
19 “ஆனால் எகிப்திய ராஜா உங்களைப் போக அனுமதிக்கமாட்டான் என்பதை அறிவேன். மிகப் பெரிய ஒரு வல்லமை மட்டுமே உங்களை அனுப்ப அவனைக் கட்டாயப்படுத்தும். 20 ஆகையால் எனது மிகுந்த வல்லமையை எகிப்துக்கு எதிராகப் பயன்படுத்துவேன். அந்த தேசத்தில் வியக்கும்படியான காரியங்கள் நிகழும்படி செய்வேன். நான் இதைச் செய்தபிறகு, அவன் உங்களைப் போக அனுமதிப்பான்.
யூத அதிகாரிகளின் கேள்வி
(மத்தேயு 21:23-27; மாற்கு 11:27-33)
20 ஒரு நாள் இயேசு தேவாலயத்தில் இருந்தார். அவர் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு மக்களுக்குக் கூறினார். தலைமை ஆசாரியரும், வேதபாரகரும், முதிய யூத அதிகாரிகளும் இயேசுவிடம் பேசுவதற்கு வந்தனர். 2 அவர்கள், “இக்காரியங்களைச் செய்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தவர் யார்?” என்றார்கள்.
3 இயேசு பதிலாக, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்பேன். 4 மக்களுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
5 ஆசாரியரும், வேதபாரகரும், யூத அதிகாரிகளும் இதைக் குறித்துப் பேசினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்தது’ என்று நாம் பதில் சொன்னால் அவர், ‘அப்படியானால் நீங்கள் யோவானை ஏன் நம்பவில்லை?’ என்பார். 6 ஆனால் நாம், ‘யோவானின் ஞானஸ்நானம் மனிதரிடம் இருந்து வந்தது’ என்றுக் கூறினால் எல்லா மக்களும் நம்மைக் கல்லெறிந்து கொல்வார்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பதால் நம்மைக் கொல்வார்கள்” என்று பேசிக்கொண்டனர். 7 எனவே அவர்கள், “எங்களுக்கு விடை தெரியவில்லை” என்று பதில் சொன்னார்கள்.
8 எனவே இயேசு அவர்களை நோக்கி, “இக்காரியங்களை எந்த அதிகாரத்தால் செய்கிறேன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
2008 by World Bible Translation Center