Add parallel Print Page Options

இயேசுவின் அதிகாரத்தை யூதத்தலைவர்கள் சந்தேகித்தல்

(மாற்கு 11:27-33; லூக்கா 20:1-8)

23 இயேசு தேவாலயத்திற்குச் சென்றார். அவர் அங்கே போதனை செய்துகொண்டிருந்தபொழுது, தலைமை ஆசாரியர்களும், மூத்த தலைவர்களும் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குச் சொல், இவைகளைச் செய்ய உனக்கு என்ன அதிகாரம் உள்ளது? உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று வினவினார்கள்.

24 இயேசு அவர்களுக்கு, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், நானும் இவைகளைச் செய்ய என்ன அதிகாரம் பெற்றிருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன். 25 யோவான் மக்களுக்கு கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் வந்ததா, அல்லது மனிதரால் வந்ததா? சொல்லுங்கள்” என்று மறு மொழி உரைத்தார்.

தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் இயேசுவின் கேள்வியைக் குறித்து விவாதித்தனர். அவர்கள் தங்களுக்குள், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனால் ஆனது’ என்று நாம் கூறுவோமானால், இயேசு நம்மைப் பார்த்து, ‘பின் ஏன் நீங்கள் யோவானை நம்பவில்லை?’ என்று கேட்பார். 26 மாறாக ‘அது மனிதனால் ஆனது’ என்றால் மக்கள் நம்மீது கோபம் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் அனைவரும் யோவானை ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகிறார்கள்” என்று கூறிக் கொண்டார்கள்.

27 எனவே அவர்கள் இயேசுவிடம், “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

பின்பு இயேசு, “அப்படியெனில் இவைகளைச் செய்வதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்று கூறினார்.

Read full chapter