லூக்கா 20:1-8
Tamil Bible: Easy-to-Read Version
யூத அதிகாரிகளின் கேள்வி
(மத்தேயு 21:23-27; மாற்கு 11:27-33)
20 ஒரு நாள் இயேசு தேவாலயத்தில் இருந்தார். அவர் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு மக்களுக்குக் கூறினார். தலைமை ஆசாரியரும், வேதபாரகரும், முதிய யூத அதிகாரிகளும் இயேசுவிடம் பேசுவதற்கு வந்தனர். 2 அவர்கள், “இக்காரியங்களைச் செய்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தவர் யார்?” என்றார்கள்.
3 இயேசு பதிலாக, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்பேன். 4 மக்களுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
5 ஆசாரியரும், வேதபாரகரும், யூத அதிகாரிகளும் இதைக் குறித்துப் பேசினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்தது’ என்று நாம் பதில் சொன்னால் அவர், ‘அப்படியானால் நீங்கள் யோவானை ஏன் நம்பவில்லை?’ என்பார். 6 ஆனால் நாம், ‘யோவானின் ஞானஸ்நானம் மனிதரிடம் இருந்து வந்தது’ என்றுக் கூறினால் எல்லா மக்களும் நம்மைக் கல்லெறிந்து கொல்வார்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பதால் நம்மைக் கொல்வார்கள்” என்று பேசிக்கொண்டனர். 7 எனவே அவர்கள், “எங்களுக்கு விடை தெரியவில்லை” என்று பதில் சொன்னார்கள்.
8 எனவே இயேசு அவர்களை நோக்கி, “இக்காரியங்களை எந்த அதிகாரத்தால் செய்கிறேன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
Read full chapter2008 by Bible League International