Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.
3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
யார் அங்கு வழிபட முடியும்?
4 தீயவை செய்யாத ஜனங்களும்,
பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.
5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.
7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
8 யார் இந்த மகிமைமிக்க ராஜா?
கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.
9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
அவரே மகிமை மிக்க ராஜா.
18 இந்த வார்த்தை அரசரிடமிருந்து வந்தது.
அந்த ராஜா சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
“நான் என் ஜீவனில் ஆணையிட்டுச் சொல்கிறேன்.
ஒரு வல்லமைமிக்கத் தலைவன் வருவான்.
அவன் கடலருகில் உள்ள தாபோர்மலை மற்றும் கர்மேல் மலையைப் போன்றும் இருப்பான்.
19 எகிப்திய ஜனங்களே, உங்கள் பொருட்களை கட்டுங்கள்.
சிறைபிடிக்கப்படத் தயாராகுங்கள்.
ஏனென்றால், நோப் காலியான தேசமாக அழிக்கப்பட்டிருக்கிறது.
அந்நகரங்கள் அழிக்கப்படும்.
அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
20 “எகிப்து அழகான பசுவைப் போன்று இருக்கிறது.
ஆனால் குதிரை கொசுவானது அதனைத் துன்புறுத்துவதற்கு வடக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறது.
21 எகிப்தின் படையில் உள்ள கூலிவீரர்கள் கொழுத்த காளை கன்றுகளைப் போன்றிருக்கிறார்கள்.
அவர்கள் திரும்பி ஓடுவார்கள்.
அவர்கள் தாக்குதலை எதிர்த்து பலமாக நிற்கமாட்டார்கள்.
அவர்களின் அழிவுக் காலம் வந்துக்கொண்டிருக்கிறது.
அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்.
22 எகிப்து, தப்பிக்க முயலும்போது
சுபசத்தமிடுகிற பாம்பைப்போல் உள்ளது.
பகைவன் நெருங்கி வந்துக்கொண்டிருக்கிறான்.
எகிப்தியப் படை தப்பித்து ஓட முயன்றுக்கொண்டிருக்கிறது.
எகிப்தைப் பகைவர்கள் கோடரியால் தாக்குவார்கள்.
அது மரங்களை மனிதர்கள் வெட்டுவது போன்றிருக்கும்.”
23 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்:
“அவர்கள் எகிப்திய காடுகளை வெட்டித்தள்ளுவார்கள்.
அந்தக் காட்டில் (படை) ஏராளமான மரங்கள் (வீரர்கள்) இருக்கிறது.
ஆனால் அவை அனைத்தும் வெட்டித்தள்ளப்படும்.
பகை வீரர்கள் வெட்டுக்கிளிகளை விட அதிக எண்ணிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள்.
எவராலும் எண்ண முடியாதபடி அவர்கள் ஏராளமான வீரர்களாக இருக்கிறார்கள்.
24 எகிப்து அவமானப்படும்.
அவளை வடக்கேயிருந்து வரும் பகைவன் தோற்கடிப்பான்.”
25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “தீப்ஸின் தெய்வமான அமோனை நான் விரைவில் தண்டிப்பேன், நான் பார்வோன் எகிப்து மற்றும் அவர்களின் தெய்வங்களையும் தண்டிப்பேன். நான் எகிப்திய ராஜாக்களைத் தண்டிப்பேன். நான் பார்வோனைச் சார்ந்துள்ள ஜனங்களையும் தண்டிப்பேன். 26 நான் எல்லா ஜனங்களையும் அவர்களது பகைவர்களாலும் அவர்களைக் கொல்ல விரும்புகிறவர்களாலும் தோற்கடிக்கப்படச் செய்வேன். நான் அவர்களை நேபுகாத்நேச்சாரான பாபிலோனின் ராஜாவிடமும் அவனது வேலைக்காரர்களிடமும் கொடுப்பேன்.” “நீண்ட காலத்துக்கு முன்னால், எகிப்து சமாதானமாக வாழ்ந்தது. இவ்வெல்லா துன்பங்களுக்கும் பிறகு, அது பழையபடி சமாதானமாக மீண்டும் வாழும்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
வட இஸ்ரவேலுக்கு ஒரு செய்தி
27 “யாக்கோபே, என் ஊழியக்காரனே, பயப்படாதே!
இஸ்ரவேலே! அஞ்ச வேண்டாம்!
அந்தத் தூரமான இடங்களிலிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
சிறைப்பட்டிருக்கிற நாடுகளிலிருந்து நான் உன் பிள்ளைகளை மீட்பேன்.
யாக்கோபு மீண்டும் சமாதானமும் பாதுகாப்பும் பெறுவான்.
அவனை எவரும் பயமுறுத்த முடியாது.”
28 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்,
“யாக்கோபே, என் வேலைக்காரனே! பயப்படாதே.
நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உன்னைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவேன்.
ஆனால் உன்னை நான் முழுவதுமாக அழிக்கமாட்டேன்.
ஆனால் அந்த நாடுகளை எல்லாம் அழிப்பேன்.
நீ செய்த தீயச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.
எனவே நான் உன்னைத் தண்டனையிலிருந்து தப்பிக்கும்படி விடமாட்டேன்.
நான் உன்னை ஒழுங்குப்படுத்துவேன் ஆனால் நான் நியாயமாக இருப்பேன்.”
5 சிம்மாசனத்தில் இருந்தவர், “பார்! நான் எல்லாவற்றையும் புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். “பிறகு இதனையும் எழுதிக்கொள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் உண்மையானவை. நம்பிக்கைக்குரியவை” என்றார்.
6 சிம்மாசனத்தில் இருந்தவர் என்னிடம், “இது முடிந்து விட்டது. நானே அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். அதாவது நானே துவக்கமும் முடிவுமாக இருக்கிறேன். நான் தாகமாய் இருக்கிறவனுக்கு ஜீவ நீரூற்றிலிருந்து நீரைக் கொடுப்பேன். 7 எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு இவை எல்லாம் கொடுக்கப்படும். அவனுக்கு நான் தேவனாகவும் அவன் எனக்கு குமாரனாகவும் இருப்பான். 8 ஆனால் கோழைகளாக இருப்பவர்களும், நம்ப மறுப்பவர்களும், பயங்கரமான காரியங்களைச் செய்பவர்களும், கொலைகாரர்களும், பாலியல் குற்றங்கள் செய்பவர்களும், மந்திர சூன்ய வேலை செய்பவர்களும், உருவ வழிபாடு செய்பவர்களும், பொய்யர்களும் கந்தகம் எரியும் நெருப்புக் கடலுள் தள்ளப்படுவார்கள். இதுவே இரண்டாம் மரணம்” என்றார்.
9 ஏழு தேவதூதர்களுள் ஒருவன் என்னிடம் வந்தான். இவன் ஏழு இறுதி வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த தூதர்களில் ஒருவன். அத்தூதன் என்னிடம், “என்னுடன் வா. நான் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுவேன்” என்றான். 10 அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது.
11 அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது. 12 அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 13 கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. 14 நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
15 என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனின் கைகளில் நகரையும் அதன் வாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்காகப் பொன்னாலான ஒரு அளவு கோல் இருந்தது. 16 அந்நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீளம் அகலத்துக்குச் சமமாக இருந்தது. அத்தூதன் நகரத்தைத் தன் கோலால் அளந்தான். அது 12,000 ஸ்தாதி[a] நீளமும் 12,000 ஸ்தாதி அகலமும் கொண்ட அளவுடையதாய் இருந்தது. அதன் உயரமும் அவ்வாறே 12,000 ஸ்தாதி அளவுடையதாயிருந்தது. 17 அத்தூதன் மதிலையும் அளந்தான். அது மனித அளவின்படி அதாவது தூதனுடைய முன்னங்கையால் 144 முழ உயரம் இருந்தது. 18 அச்சுவர் வைரக்கல்லால் ஆனது. நகரம் தூய பளிங்கு போன்ற தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
19 நகரத்தின் சுவர்களுக்கான அஸ்திபாரக் கற்கள் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் அஸ்திபாரக்கல் வைரக்கல். இரண்டாவது கல் இந்திரநீலம். மூன்றாவது சந்திர காந்தம். நான்காவது மரகதம். 20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம். ஏழாவது சுவர்ணரத்தினம். எட்டாவது படிகப்பச்சை. ஒன்பதாவது புஷ்பராகம். பத்தாவது வைடூரியம். பதினோராவது கல் சுநீரம். பன்னிரண்டாவது சுகந்தி. 21 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாய் இருந்தது. அந்த நகரத் தெரு தூய பொன்னால் ஆக்கப்பட்டது. கண்ணாடியைப்போல அந்தப் பொன் சுத்தமாயிருந்தது.
22 அந்நகரத்தில் ஆலயம் எதையும் நான் காணவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதன் ஆலயமாக இருக்கின்றனர். 23 அந்நகரத்துக்கு ஒளி தர சூரியனோ சந்திரனோ தேவையில்லை. தேவனுடைய மகிமை அங்கு ஒளி வீசுகிறது. ஆட்டுக்குட்டியானவரே அங்கு ஒளியாக இருக்கிறார்.
24 இரட்சிக்கப்படுகிற மக்கள் அனைவரும் அதின் ஒளியில் நடப்பார்கள். உலகில் உள்ள ராஜாக்கள் தம் மகிமையை அந்நகருக்குள் கொண்டு வருவார்கள். 25 எந்நாளிலும் நகரத்தின் வாசல் கதவுகள் அடைக்கப்படாமல் இருக்கும். ஏனென்றால் அந்நகரில் இரவு என்பதே இல்லை. 26 அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும். 27 சுத்தமற்ற எதுவும் அந்நகருக்குள் நுழைவதில்லை. வெட்கப்படத்தக்க செயல்களைச் செய்பவர்களும் பொய் சொல்பவர்களும் அந்நகருக்குள் பிரவேசிப்பதில்லை. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் எவருடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளனவோ அவர்கள் மட்டுமே அங்கு போகமுடியும்.
2008 by World Bible Translation Center