Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு ஜெபம்.
17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
2 என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
உம்மால் உண்மையைக் காணமுடியும்.
3 நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
4 உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
5 உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
6 தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
7 தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
9 கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.
என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
யூதாவும் தாமாரும்
38 அந்த நேரத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுவிட்டு ஈரா என்ற பெயருடைய மனிதனோடு இருந்தான். ஈரா அதுல்லாம் என்ற நகரிலிருந்து வந்தவன். 2 யூதா ஒரு கானானிய பெண்ணைச் சந்தித்து அவளை மணந்துகொண்டான். அவளது தந்தையின் பெயர் சூவா. 3 அவளுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏர் என்று பெயர் வைத்தனர். 4 அவள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஓனான் என்று பேர் வைத்தார்கள். 5 இன்னொரு குமாரன் அவளுக்கு பிறந்தான். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்தபோது அவர்கள் கெசீபிலே வாழ்ந்தனர்.
6 யூதா தன் மூத்த குமாரனான ஏர் என்பவனுக்கு மணம் முடிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அந்த பெண்ணின் பெயர் தாமார். 7 ஆனால் ஏர் பல தீய செயல்களைச் செய்தான். கர்த்தர் அவனைப்பற்றி சந்தோஷமடையாததால், கர்த்தர் அவனை அழித்துவிட்டார். 8 பிறகு யூதா, ஏரின் சகோதரனான ஓனானிடம், “போய் உன் சகோதரனின் மனைவியச் சேர்த்துக்கொண்டு அவளுக்குக் கணவனாகு. அவளுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவை உன் சகோதரன் ஏருக்கு உரியதாகும்” என்றான்.
9 இந்தச் சேர்க்கையினால் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்காது என்பதை ஓனான் அறிந்தான். ஓனான் தாமாருடன் பாலின உறவுகொள்ளும்போது தனது சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதிருக்கத் தனது வித்துவைத் தரையில் விழச் செய்தான். 10 இது கர்த்தருக்கு மிகவும் கோபம் மூட்டியது. எனவே கர்த்தர் ஓனானையும் அழித்தார். 11 பிறகு யூதா தன் மருமகளான தாமாரிடம், “உன் தந்தை வீட்டிற்குப் போ. என் இளைய குமாரன் வளர்ந்து ஆளாகிற வரை நீ அவனுக்காகக் காத்திரு” என்றான். சேலாவும் அழிந்து போவானோ என்று யூதா அஞ்சினான். தாமார் தன் தந்தை வீட்டிற்குப் போனாள்.
12 பின்னர் சூவாவின் குமாரத்தியான யூதாவின் மனைவி மரித்துப் போனாள். யூதாவின் துக்க காலத்தில் அதுல்லாம் நகரைச் சேர்ந்த தன் நண்பன் ஈராவோடு தன் ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்க திம்னாவுக்குப் போனான். 13 தன் மாமனாராகிய யூதா ஆடுகளின் மயிரைக் கத்தரிக்கும்படி திம்னாவை நோக்கிச் செல்கிறார் என்பதை தாமார் அறிந்துகொண்டாள். அவள் எப்போதும் விதவைக்குரிய ஆடைகளையே அணிந்து வந்தாள். 14 எனவே இப்போது வேறு ஆடைகளை அணிந்து, தன் முகத்தை மூடிக்கொண்டு திம்னா நகருக்கு அருகில் உள்ள ஏனாயிம் என்னும் இடத்துக்குச் செல்லும் பாதைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள். யூதாவின் இளைய குமாரனான சேலா அப்பொழுது வளர்ந்துவிட்டான் என்பதை தாமார் அறிந்தாள். ஆனால் தாமார் அவனை மணப்பதற்கானத் திட்டத்தை யூதா செய்யமாட்டான் என்று அவள் உணர்ந்துகொண்டாள்.
15 யூதா அவ்வழியாகப் போனபோது அவளைப் பார்த்தான். அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால் அவளை வேசி என்று நினைத்துக்கொண்டான். 16 யூதா அவளிடம் போய், “நான் உன்னோடு பாலின உறவு கொள்ளலாமா” என்று கேட்டான். (அவனுக்கு அவள் தன் மருமகளான தாமார் என்பது தெரியாது) அவளோ, “எனக்கு எவ்வளவு கொடுப்பீர்?” என்று கேட்டாள்.
17 அவனோ, “என் மந்தையிலிருந்து ஓர் இளம் ஆட்டை அனுப்புவேன்” என்றான்.
அவள் அதற்கு, “நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முதலில் ஆடு வரும்வரை அடமானமாக ஏதாவது கொடுத்துவிட்டுப் போகவேண்டும்” என்று கேட்டாள்.
18 அவன், “என்னிடமிருந்து அடமானமாக என்ன பொருளை விரும்புகிறாய்” என்று கேட்டான்.
அவள், “உம்முடைய முத்திரை மோதிரமும், ஆரமும், கைக்கோலும் வேண்டும்” என்று கேட்டாள். யூதாவும் அவ்வாறே கொடுத்துவிட்டு அவளோடு பாலின உறவு கொண்டான். அதனால் அவள் கர்ப்பமானாள். 19 தாமார் தன் வீட்டிற்குப் போய் முக்காட்டை எடுத்துவிட்டாள். பின் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள்.
20 யூதா தான் வாக்களித்தபடி வேசியிடம் ஆட்டுக் குட்டியைக் கொடுக்க தன் நண்பன் ஈராவை அனுப்பினான். அவளிடம் கொடுத்த அடமானப் பொருட்களையும் வாங்கி வருமாறு சொன்னான். ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 21 ஈரா அந்நகர ஜனங்கள் பலரிடம் அந்த வேசியைப்பற்றி விசாரித்தான்.
அவர்கள், “அத்தகைய வேசி இங்கு இல்லை” என்றனர்.
22 எனவே அவன் யூதாவிடமே திரும்பி வந்தான். “என்னால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்குள்ளவர்கள் அத்தகைய வேசி அங்கில்லை எனக் கூறுகின்றனர்” என்றான்.
23 அதனால் யூதா, “அவள் எனது பொருட்களை வைத்திருக்கட்டும். ஜனங்கள் எங்களை நகையாடுவதை நான் விரும்பவில்லை. ஆட்டுக்குட்டியை அவளுக்குக் கொடுக்க முயன்றேன். அங்கே அவளோ இல்லை, இதுபோதும்” என்றான்.
தாமார் கர்ப்பமாகுதல்
24 மூன்று மாதங்கள் ஆனதும் சிலர் யூதாவிடம், “உன் மருமகள் தாமார் ஒரு வேசியைப்போல பாவம் செய்துவிட்டாள். இப்போது அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” என்றனர்.
யூதாவோ, “அவளை அழைத்துப் போய் எரித்துவிடுவோம்” என்றான்.
25 அந்த மனிதர்கள் தாமாரைக் கொல்வதற்காக அவளிடம் சென்றார்கள். ஆனால் அவள் தன் மாமனாருக்கு ஒரு செய்தியை அனுப்பினாள், “என்னைக் கர்ப்பவதியாக்கிய மனிதருக்குரிய பொருட்கள் சில என்னிடம் உள்ளன. இப்பொருட்களைப் பாருங்கள், அவர் யார்? யாருடைய முத்திரையும், ஆரமும் இது? யாருடைய கோல் இது?” என்று கேட்டிருந்தாள்.
26 யூதாவுக்கு எல்லாம் புரிந்து போயிற்று, “அவள் சொல்வது சரி, நானே தவறு செய்து விட்டேன். நான் சொன்னபடி என் குமாரன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்கவில்லை” என்று உணர்ந்தான். அவன் மீண்டும் தாமாரோடு பாலின உறவு கொள்ளவில்லை.
பவுல் தனக்காக பெலிக்ஸின் முன்பு வழக்காடுதல்
10 பவுல் பேசுமாறு ஆளுநர் குறிப்பிட்டார். எனவே பவுல் பதிலாக, “ஆளுநர் பெலிக்ஸ் அவர்களே, இந்தத் தேசத்தின் நியாயாதிபதியாக, நீண்ட காலமாக நீங்கள் இருந்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் உங்கள் முன்பு எனக்காக வழக்காடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். 11 பன்னிரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் எருசலேமுக்கு வழிபடச் சென்றேன். இது உண்மையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 12 என்னைப் பழிக்கிற இந்த யூதர்கள் நான் ஆலயத்தில் யாரோடும் விவாதிப்பதைப் பார்க்கவில்லை. நான் மக்களிடம் தொல்லையையும் விளைவிக்கவில்லை. ஜெப ஆலயங்களிலோ, நகரத்தின் வேரிடங்களிலோ நான் விவாதிக்கவோ, தொல்லை விளைவிக்கவோ செய்யவில்லை. 13 இப்போது எனக்கெதிராக அவர்கள் கூறும் குற்றச் சாட்டுகளை அவர்கள் நிரூபிக்க முடியாது.
14 “ஆனால் நான் உங்களுக்கு இதைச் சொல்வேன். இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடனாக நான் நமது முன்னோரின் தேவனை வணங்குகிறேன். 15 இந்த யூதர்கள் தேவனிடம் கொண்டுள்ள நம்பிக்கை, அதாவது நல்லோராயினும் தீயோராயினும் சரி எல்லா மக்களும் மரணத்தினின்று எழுப்பப்படுவர் என்ற அதே நம்பிக்கை எனக்கும் உள்ளது. 16 எனவே தான் தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நான் சரியென்று நம்புவதை எப்பொழுதும் செய்ய முயல்கிறேன்.
17 “பலகாலம் எருசலேமிலிருந்து தொலைவில் வாழ்ந்து வந்தேன். என் மக்களுக்குப் பணம் கொண்டு வரவும் காணிக்கை செலுத்தவும் நான் அங்குத் திரும்பிச் சென்றேன். 18 தேவாலயத்தில் நான் இதைச் செய்துகொண்டிருந்தபோது சில யூதர்கள் என்னைக் கண்டனர். சுத்தப்படுத்தும் பண்டிகையை[a] முடித்தேன். நான் எந்தக் தொல்லையையும் ஏற்படுத்தவில்லை. என்னை சுற்றி எந்தக் கூட்டமும் சேரவில்லை. 19 ஆசியாவிலுள்ள சில யூதர்கள் அங்கிருந்தார்கள். இங்கும் உங்கள் முன் அவர்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும். நான் ஏதேனும் தவறாகச் செய்திருந்தால் என்னைக் குற்றம் சாட்டவேண்டியவர்கள் அவர்களே. 20 எருசலேமிலுள்ள யூத சங்கத்தின் முன் நான் நின்றபோது என்னில் ஏதேனும் பிழையை அவர்கள் கண்டார்களா என்பதை இந்த யூதர்களிடம் விசாரியுங்கள். 21 நான் அவர்கள் முன்னிலையில் நின்றபோது ஒன்றை மட்டும் கூறினேன். ‘மரணத்தினின்று மக்கள் எழும்புவர் என்பதை நான் நம்புவதால் இன்றைக்கு நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள்’ என்றேன்” என்று கூறினான்.
22 இயேசுவின் வழிகளைக் குறித்து ஏற்கனவே பெலிக்ஸ் நிரம்பத் தெரிந்துவைத்திருந்தான். அவன் வழக்கை இந்த இடத்தில் நிறுத்தியவனாக, “அதிகாரி லீசியா இங்கு வருகிறபோது, இவற்றைக் குறித்து முடிவெடுப்பேன்” என்றான். 23 பெலிக்ஸ் படை அதிகாரியிடம் பவுலைக் காவலில் வைக்குமாறு கூறினான். அவன் படை அதிகாரியிடம் பவுலுக்குச் சற்றுச் சுதந்திரம் அளிக்குமாறும், பவுலின் நண்பர்கள் அவனுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து உதவுவதற்கு அனுமதி அளிக்குமாறும் கூறினான்.
2008 by World Bible Translation Center