Revised Common Lectionary (Complementary)
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.
141 கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன்.
நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும்.
விரைவாக எனக்கு உதவும்!
2 கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும்.
எரியும் நறுமணப் பொருள்களின் பரிசைப் போலவும், மாலையின் பலியாகவும் அது இருக்கட்டும்.
3 கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப்பாட்டோடிருக்க எனக்கு உதவும்.
நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும்.
4 தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும்.
தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும்.
தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும்.
5 நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும்.
அது அவன் நற்செயலாகும்.
உம்மைப் பின்பற்றுவோர் என்னை விமர்சிக்கட்டும்.
அது அவர்கள் செய்யத்தக்க நல்ல காரியமாகும்.
நான் அதை ஏற்றுக்கொள்வேன்.
ஆனால் தீயோர் செய்யும் தீயவற்றிற்கெதிராக நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன்.
6 அவர்களின் ராஜாக்கள் தண்டிக்கப்படட்டும்.
அப்போது நான் உண்மை பேசினேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
7 ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள்.
அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும்.
8 என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன்.
நான் உம்மை நம்புகிறேன்.
தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும்.
9 தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும்.
அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும்.
10 நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட
ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.
கர்த்தர் தமது ஜனங்களுக்கு மத்தியில் வாழ்வார்
43 அம்மனிதன் என்னைக் கிழக்கு வாசலுக்கு அழைத்துக்கொண்டு போனான். 2 அங்கே இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது. தேவனுடைய சத்தம் கடலின் இரைச்சலைப் போன்றிருந்தது. தேவ மகிமையால் பூமி பிரகாசித்தது. 3 நான் பார்த்த தரிசனம் கேபார் ஆற்றங்கரையில் கண்ட தரிசனத்தைப்போன்று இருந்தது. நான் தரையில் முகங்குப்புற விழுந்தேன். 4 கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாக ஆலயத்தின் உள்ளே நுழைந்தது.
5 அப்பொழுது என்னை ஆவியானவர் எடுத்துக்கொண்டு போய் உட்பிரகாரத்தில் விட்டார். கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது. 6 என்னிடம் யாரோ ஆலயத்திற்குள்ளிருந்து பேசுவதைப்போன்று கேட்டேன். இன்னும் அந்த மனிதன் என்னுடன் இருந்தான். 7 ஆலயத்திற்குள்ளிருந்து வந்த குரல் என்னிடம் சொன்னது, “மனுபுத்திரனே, இந்த இடத்தில்தான் எனது சிங்காசனமும் பாதபீடமும் உள்ளன. நான் என்றென்றும் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இந்த இடத்தில் வாழ்வேன். இஸ்ரவேல் வம்சத்தார் இனிமேல் என் நாமத்தைப் பாழாக்கமாட்டார்கள். ராஜாக்களும் அவரது ஜனங்களும் தங்கள் வேசித்தனங்களாலும் இங்கே தங்கள் ராஜாக்களின் உடல்களைப் புதைப்பதின் மூலமும் எனது நாமத்தைத் தீட்டுப்படுத்துவதில்லை. 8 அவர்கள், என் கதவு நிலைக்கு அடுத்து அவர்கள் கதவு நிலையை வைத்தும் தங்கள் வாசற்படியை என் வாசற்படியருகில் கட்டியும் என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவரமாட்டார்கள். முன்பு ஒரு சுவர் என்னை அவர்களிடமிருந்து பிரித்தது. எனவே அவர்கள் ஒவ்வொரு முறை பாவம் செய்யும்போதும் அருவருப்பான செயல்களைச் செய்யும்போதும் என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்காகத்தான் நான் கோபம்கொண்டு அவர்களை அழித்தேன். 9 இப்பொழுது அவர்கள் தங்கள் பாலின உறவு பாவங்களையும், தங்கள் ராஜாக்களின் மரித்த உடல்களையும் என்னைவிட்டுத் தூரமாய் எடுத்துச் செல்லட்டும். பிறகு, நான் அவர்கள் மத்தியில் என்றென்றும் வாழ்வேன்.
10 “இப்பொழுது, மனுபுத்திரனே, ஆலயத்தைப்பற்றி இஸ்ரவேல் வம்சத்தாரிடம் சொல். பிறகு, அவர்கள் தம் பாவங்களுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் ஆலயத்துக்கான திட்டங்களைப்பற்றி அறிந்துகொள்வார்கள். 11 அவர்கள் தாம் செய்த தீமைகளுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் ஆலயத்தின் வடிவத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளட்டும். அவர்கள் ஆலயத்தை எவ்வாறு கட்டுவது என்பதைத் தெரிந்துகொள்ளட்டும். எங்கே அதன் நுழைவாசல்களையும் எங்கே அதன் பின் வாசல்களையும் வைப்பது என்பதுபற்றி அறியட்டும். அதன் எல்லா சட்டதிட்டங்களையும் கற்றுக்கொடு. இவற்றையெல்லாம் எழுதிவை. அவர்கள் பார்த்து ஆலயத்தின் எல்லா விதிகளையும் கைக்கொள்ளுவார்கள். பிறகு அவர்களால் அவற்றைச் செய்ய முடியும். 12 இதுதான் ஆலயத்தின் சட்டம்: மலை உச்சியின் மேல் சுற்றிலும் அதன் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாக இருக்கும். இதுவே ஆலயத்தின் சட்டம்.
எருசலேம் மக்களுக்கு எச்சரிப்பு
(லூக்கா 13:34-35)
37 “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. 38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். 39 நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’(A) என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.
ஆலயத்தின் எதிர்கால அழிவு
(மாற்கு 13:1-31; லூக்கா 21:5-33)
24 இயேசு தேவாலயத்தை விட்டு சென்று கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவர் அருகில் வந்து, தேவாலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள். 2 இயேசு சீஷர்களை நோக்கி, “இந்தக் கட்டிடங்களைப் பார்த்தீர்களா? உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். இக்கட்டிடங்கள் அனைத்தும் நாசமாக்கப்படும். ஒவ்வொரு கல்லும் கீழே தள்ளப்படும். ஒரு கல் இன்னொரு கல்மீது இராதபடி ஆகும்” என்று கூறினார்.
3 பின்னர், இயேசு ஒலிவ மலையின்மீது ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். இயேசுவுடன் தனிமையில் இருக்க வந்த சீஷர்கள், அவரிடம், “இவை எப்பொழுது நடக்கும் என்று எங்களுக்குக் கூறுங்கள். நீர் மீண்டும் தோன்றப் போகிறதையும் உலகம் அழியும் என்பதையும் எங்களுக்கு உணர்த்த எம்மாதிரியான செயல் நடக்கும்?” என்று கேட்டார்கள்.
4 அவர்களுக்கு இயேசு, “எச்சரிக்கையுடன் இருங்கள்! யாரும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். 5 பலர் என் பெயரைக் கூறிக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ‘நான்தான் கிறிஸ்து’ என அவர்கள் சொல்வார்கள். பலரையும் அவர்கள் ஏமாற்றுவார்கள். 6 போர்களைப்பற்றியும் போர்களைப்பற்றிய செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள். ஆனால் பயப்படாதீர்கள். முடிவு வருவதற்கு முன்பு இச்செயல்கள் நடக்க வேண்டும். 7 நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவு கிடைக்காத காலம் வரும். வெவ்வேறு இடங்களில் பூகம்பங்கள் தோன்றும். 8 இவை அனைத்தும் பிரசவ வேதனையின் தொடக்கம் போன்றவை” என்று பதில் கூறினார்.
9 “பின்னர் மக்கள் உங்களை மோசமாக நடத்துவார்கள். துன்புறுத்தப்படவும் கொல்லப்படவும் ஆட்சியாளர்களிடம் உங்களை ஒப்படைப்பார்கள். அனைவரும் உங்களை வெறுப்பர். நீங்கள் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் இவை அனைத்தும் உங்களுக்கு நிகழும். 10 அக்காலக் கட்டத்தில், பலர் தாம் கொண்ட விசுவாசத்தை இழப்பார்கள். அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் திரும்பி ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். 11 பல போலித் தீர்க்கதரிசிகள் வருவார்கள். மக்களைக் தவறானவற்றின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள். 12 உலகில் மேலும், மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள். 13 ஆனால் தொடர்ந்து இறுதிவரை உறுதியாய் இருப்பவர்களே இரட்சிக்கப்படுவார்கள். 14 தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்திகள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும். அது ஒவ்வொரு தேசத்துக்கும் சொல்லப்படும். அதன் பின்பே முடிவு வரும்.
2008 by World Bible Translation Center