Revised Common Lectionary (Complementary)
ஆசாபின் பாடல்களில் ஒன்று.
50 தெய்வங்களுக்கெல்லாம் தேவனாகிய கர்த்தர் பேசுகிறார்.
சூரியன் உதிக்குமிடத்திலிருந்து அது மறைகிற இடம் வரைக்குமுள்ள பூமியின் எல்லா ஜனங்களையும் அழைக்கிறார்.
2 சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவன் அழகானவர்.
3 நம் தேவன் வருகிறார், அவர் அமைதியாக இரார்.
அவருக்கு முன்னே நெருப்பு எரியும். அவரைச் சூழ்ந்து புயல் வீசும்.
4 தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு
நமது தேவன் பூமியையும் வானத்தையும் அழைக்கிறார்.
5 தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே,
என்னைச் சூழ்ந்து நில்லுங்கள், என்னைச் சூழ்ந்து நில்லுங்கள்.
என்னை வணங்குகிறவர்களே, வாருங்கள்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம்.”
6 தேவனே நியாயாதிபதி,
வானங்கள் அவரது நன்மைகளைக் கூறும்.
7 “எனது ஜனங்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்!
இஸ்ரவேலின் ஜனங்களே, உங்களுக்கு எதிரான எனது சாட்சியைக் காட்டுவேன்.
நானே உங்கள் தேவன்.
8 உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன்.
எப்போதும் இஸ்ரவேலராகிய நீங்கள் உங்கள் தகனபலிகளை என்னிடம் கொண்டுவந்தீர்கள்.
ஒவ்வொரு நாளும் அவற்றை எனக்கு கொடுக்கிறீர்கள். 9 உங்கள் வீட்டின் எருதுகளையோ
உங்கள் மந்தையின் ஆடுகளையோ நான் எடுத்துக்கொள்வதில்லை.
10 எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை.
காட்டின் மிருகங்கள் எனக்குச் சொந்தமானவை.
மலைகளிலுள்ள பல்லாயிரம் மிருகங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை.
11 உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்.
மலையின்மேல் அசையும் பொருட்களெல்லாம் என்னுடையவை.
12 எனக்குப் பசியில்லை! எனக்குப் பசித்தாலும் உணவுக்காக உன்னைக் கேட்கமாட்டேன்.
உலகமும் அதன் அனைத்துப் பொருள்களும் எனக்குச் சொந்தமானவை.
13 எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை.
ஆடுகளின் இரத்தத்தை நான் குடிக்கமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.
14 எனவே ஸ்தோத்திர பலிகளை தேவனுக்குக் கொண்டுவந்து அவரோடு இருக்கும்படி வாருங்கள்.
நீங்கள் மிக உன்னதமான தேவனுக்கு வாக்குறுதி பண்ணினீர்கள்.
எனவே வாக்களித்த பொருள்களை அவருக்குக் கொடுங்கள்.
15 தேவன், “இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்!
நான் உங்களுக்கு உதவுவேன்.
நீங்கள் அப்போது என்னை மகிமைப்படுத்த முடியும்” என்று கூறுகிறார்.
16 தேவன் தீயோரைப் பார்த்து, “நீங்கள் எனது சட்டங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
எனது உடன்படிக்கையைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
17 ஆனால் நான் உங்களைத் திருத்தும்போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்?
நான் கூறும் காரியங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
18 நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள்.
விபச்சாரமாகிய பாவத்தைச் செய்கிறவர்களோடு நீங்களும் படுக்கையில் குதிக்கிறீர்கள்.
19 நீங்கள் தீயவற்றைப் பேசிப்
பொய்களைச் சொல்கிறீர்கள்.
20 உங்கள் சொந்த சகோதரரையும்
பிறரையும் குறித்து எப்போதும் தீயவற்றையே சொல்கிறீர்கள்.
21 நீங்கள் இத்தீய செயல்களைச் செய்கிறீர்கள், நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
நீங்கள் எதையும் சொல்லாதிருக்கிறீர்கள், நானும் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
ஆனால் நான் அமைதியாக இரேன்!
நீங்கள் அதைத் தெளிவாக உணரும்படி நான் செய்வேன்.
உங்கள் முகத்திற்கெதிராக உங்களை விமர்சிப்பேன்!
22 நீங்கள் தேவனை மறந்திருக்கிறீர்கள்.
உங்களைக் கிழித்தெறியும் முன்னர்
நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்!
அது நிகழ்ந்தால் உங்களை மீட்பவர் எவருமில்லை!
23 எனவே ஒருவன் ஸ்தோத்திர காணிக்கை செலுத்தினால் அவன் என்னை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறான்.
ஒருவன் அவனது வாழ்க்கையை மாற்றியமைத்தால் அப்போது நான் அவனுக்கு தேவனுடைய காக்கும் வல்லமையைக் காட்டுவேன்” என்கிறார்.
கர்த்தர் இரக்கத்தையும் கருணையையும் விரும்புகிறார்
7 தரியுவின் நான்காவது ஆட்சியாண்டில் கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது ஒன்பதாவது மாதத்தின் நான்காம் நாள். (அது கிஸ்லே எனப்படும்) 2 பெத்தேல் ஜனங்கள் சரேத்சேரையும், ரெகெம்மெலேகும், அவனது ஆட்களையும் சில கேள்விகள் கேட்க கர்த்தரிடம் அனுப்பினார்கள். 3 அவர்கள் தீர்க்கதரிசிகளிடமும், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள ஆசாரியர்களிடமும் சென்றனர். அம்மனிதர்கள் அவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டனர்: “பல ஆண்டுகளாக ஆலயத்தின் அழிவுக்காக நாங்கள் துக்கம் கொண்டோம். ஒவ்வொரு ஆண்டின் ஐந்தாவது மாதத்திலும் நாங்கள் அழுவதற்கும், உபவாசிப்பதற்கும் தனியான காலத்தை நியமித்திருந்தோம். நாங்கள் இதனைத் தொடரவேண்டுமா?”
4 நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றேன் 5 “ஆசாரியர்களுக்கும் இந்த நாட்டிலுள்ள பிறருக்கும் இதனைக் கூறு. நீங்கள் ஐந்தாவது மாதத்திலும், ஏழாவது மாதத்திலும், உபவாசம் இருந்து 70 வருடங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டினீர்கள். ஆனால் அந்த உபவாசம் எனக்காகவா? 6 இல்லை. நீங்கள் உண்ணுவதும், குடிப்பதும் எனக்காகவா? இல்லை. இது உங்கள் சொந்த நலனுக்காக. 7 தேவன் முற்கால தீர்க்கதரிசிகளைக் கெண்டு இதே செய்தியைச் சொல்லியிருக்கிறார். எருசலேம் ஒரு வளமான நகரமாக ஜனங்களால் நிறைந்திருந்தபோது அவர் இவற்றைச் சொன்னார். எருசலேமைச் சுற்றியுள்ள நகரங்களிலும் நெகேவ், மேற்கத்திய மலை அடிவாரங்களிலும் ஜனங்கள் வாழ்ந்த காலத்தில் தேவன் இவற்றைச் சொன்னார்.”
8 இதுதான் சகரியாவுக்கான கர்த்தருடைய செய்தி.
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“எது நன்மையும் நேர்மையும் கொண்டதோ அவற்றை நீ செய்ய வேண்டும்.
நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையும் இரக்கமும் கொள்ளவேண்டும்.
10 விதவைகளையும், அநாதைகளையும்,
அயல் நாட்டாரையும், ஏழைகளையும் துன்புறுத்தாதேயுங்கள்.
ஒருவருக்கொருவர் தீமைச் செய்ய எண்ணவும் வேண்டாம்!” என்றார்.
11 ஆனால் அந்த ஜனங்கள் கேட்க மறுத்தனர்.
அவர்கள் அவர் விரும்பியதை செய்ய மறுத்தனர்.
அவர்கள் தங்கள் காதுகளை மூடினார்கள்.
எனவே, தேவன் என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியவில்லை.
12 அவர்கள் மிகவும் கடின மனமுடையவர்கள்.
அவர்கள் சட்டங்களுக்கு அடிபணிவதில்லை.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆவியைக்கொண்டு
தனது ஜனங்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாக செய்திகளை அனுப்பினார்.
ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை.
எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மிகவும் கோபமுற்றார்.
13 ஆகவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“நான் அவர்களைக் கூப்பிட்டேன்.
அவர்கள் பதில் சொல்லவில்லை.
இப்பொழுது அவர்கள் என்னைக் கூப்பிட்டால்,
நான் பதில் சொல்லமாட்டேன்.
14 நான் மற்ற நாடுகளை, ஒரு புயலைப்போன்று அவர்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன்.
அவர்கள் அந்த நாடுகளை அறியமாட்டார்கள்.
ஆனால், இந்த நாடு பிற நாடுகள் வந்து போன பிறகு அழிக்கப்படும்.
இந்த செழிப்பான நாடு அழிக்கப்படும்” என்றார்.
5 நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ளவற்றை நினைவுகூருவதற்கு உங்களுக்கு உதவ நான் விரும்புகிறேன். ஒரு காலத்தில் எகிப்து நாட்டுக்கு வெளியே தம் மக்களை அழைத்து வந்ததன் மூலம் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். பிற்காலத்தில் விசுவாசமற்ற எல்லா மக்களையும் கர்த்தர் அழித்தார். 6 தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார். 7 சோதோம், கொமோரா, நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களையும்கூட நினைவுகூருங்கள். அந்த தேவதூதர்களைப் போன்றே அவையும் பாலியல் நீதிகளை இழந்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளில் மூழ்கின. நித்திய அக்கினியாகிய தண்டனையில் இப்பொழுது அவை துன்புறுகின்றன. நாம் பார்த்தறிவதற்கு தேவனுடைய தண்டனைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அவை இருக்கின்றன.
8 உங்கள் கூட்டத்தில் நுழைந்திருக்கிற மக்களின் வழியும் இதுவே. அவர்கள் கனவுகளால் வழிகாட்டப்படுகிறார்கள். அவர்கள் தம் பாலியல் பாவங்களால் தம்மை அசுத்தப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தரின் அதிகாரத்தைத் தள்ளி விட்டு, மகிமைபொருந்திய தேவதூதர்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். 9 ஆனால் பிரதான தேவதூதனாகிய மிகாவேல் மோசேயின் உடலுக்காகப் பிசாசோடு விவாதித்தபொழுது, பழியுரைத்ததற்காக பிசாசைத் தண்டிக்க வேண்டுமென மிகாவேல் முடிவு கட்டவில்லை. (கர்த்தரின் தீர்ப்புக்காக மிகாவேல் கோரிக்கை விடுத்தான்.) “கர்த்தர் உன்னைத் தண்டிக்கட்டும்” என்று மட்டும் அவன் சொன்னான்.
10 ஆனால் புரிந்துகொள்ளாத காரியங்களை இம்மக்கள் விமர்சிக்கிறார்கள். பகுத்தறிவற்ற சில மிருகங்களைப்போல, தாமாகவே சிலவற்றைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ஆனால் இவற்றாலேயே அவர்கள் அழிக்கப்படுகிறார்கள். 11 அது அவர்களுக்கு மிக மோசமானதாக இருக்கும். காயீன் சென்ற பாதையை இந்த மக்களும் பின்பற்றுகிறார்கள். பணம் பெறுவதற்காக பிலேயாமின் தவறான வழியைப் பின்பற்ற இவர்கள் தம்மைத்தாமே ஒப்படைத்திருக்கிறார்கள். கோரா செய்ததைப்போல இந்த மக்களும் தேவனுக்கு எதிராக மோதுகிறார்கள். அவர்களும் கோராவைப்போல அழிக்கபடுவார்கள்.
12 உங்கள் அன்பின் விருந்துகளில் உங்களோடு அச்சமின்றி விருந்துண்ணும் இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பாறைகள்போல இருக்கிறார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் மேய்ப்பர்களாவார்கள். அவர்கள் காற்றால் அடித்துச்செல்லப்படுகிற மழை பொழியாத மேகங்களைப் போன்றவர்கள். அவர்கள் அறுவடைக் காலத்தில் கனி கொடுக்காத மரங்களைப் போன்றவர்கள். எனவே பூமியில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இருமுறை மரணம் அடைகிறார்கள். 13 அவர்கள் கடலின் பெரும் அலைகளைப் போன்றவர்கள். கடலலைகள் தம் நுரைக்கழிவுகளை வீசியடித்து கரையில் ஒதுக்குவதுபோல அவர்கள் தம் வெட்கத்துக்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். எங்கெங்கும் அம்மக்கள் வானில் திரியும் விண்மீன்களைப் போன்றவர்கள். மிகுந்த கரிய இருளில் ஓர் இடம் அம்மக்களுக்காக நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
14 ஆதாமின் ஏழாம் தலைமுறையினனான ஏனோக்கு இம்மக்களைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினான். “பாருங்கள், பல்லாயிரக்கணக்கான தம் தூய தேவதூதர்களோடு கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார். 15 எல்லா மக்களையும் நியாயந்தீர்ப்பதற்காகவும், தம் தீய செயல்களாலும், பாவம் நிறைந்த இம்மக்கள் தேவனுக்கு எதிராகச் சொன்ன முரட்டுத்தனமான வார்த்தைகளாலும் தேவனை எதிர்த்தவர்களை தண்டிக்கவும் கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினான்.
16 இம்மக்கள் எப்போதும் குறை கூறிக் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் செய்யவிரும்பும் தீய காரியங்களை அவர்கள் எப்போதும் செய்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றிப் பெருமையாய் பேசுகிறார்கள். தாங்கள் விரும்புவதைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் பிறரைக் குறித்து நல்லவை கூறுவர்.
ஓர் எச்சரிக்கையும் செய்யவேண்டிய காரியங்களும்
17 அன்பான நண்பர்களே, முன்னர் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் கூறியவற்றை நினைவுகூருங்கள். 18 சீஷர்கள் உங்களிடம், “கடைசி நாட்களில் தேவனைக் குறித்து நகைக்கிறவர்களும், தேவனுக்கு எதிரான தம் தீய ஆசைகளைப் பின்பற்றுகிறவர்களும் இருப்பார்கள்” என்றனர். 19 அவர்களே உங்களைப் பிரிக்கிறவர்கள். பாவம் மிகுந்த, சுயம் விரும்புகின்ற காரியங்களை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் ஆவியானவர் இல்லை.
20 ஆனால் அன்பான நண்பர்களே, மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்களே பலமுள்ளவர்களாக வளர்த்துக்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு கூட பிரார்த்தனை செய்யுங்கள். 21 தேவனுடைய அன்பில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணைக்காகக் காத்திருங்கள்.
2008 by World Bible Translation Center