Revised Common Lectionary (Complementary)
மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்.
32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2 குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
3 தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
4 தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.
5 என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.
6 இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
7 தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.
1 ஆமோத்சின் குமாரனான ஏசாயாவின் தரிசனம். தேவன் யூதேயாவுக்கும், எருசலேமுக்கும் என்ன நிகழப்போகிறது என்பதைப்பற்றி ஏசாயாவுக்குக் காட்டினார். யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா இவர்களின் காலங்களில் ஏசாயா இவற்றைப் பார்த்தான்.
தன் ஜனங்களுக்கு எதிரான தேவனுடைய வழக்கு
2 பரலோகமே, பூமியே, கர்த்தர் சொல்லுவதைக் கேளுங்கள்! கர்த்தர் கூறுகிறார்:
“நான் எனது பிள்ளைகளை வளர்த்தேன்.
நான் எனது பிள்ளைகள் வளர உதவினேன்.
ஆனால் எனது பிள்ளைகள் எனக்கு எதிரானார்கள்.
3 ஒரு பசு தன் எஜமானனை அறியும்.
ஒரு கழுதை தன் எஜமானன் தனக்கு உணவிடும் இடத்தையும் அறியும்.
ஆனால் எனது இஸ்ரவேல் ஜனங்கள் என்னை அறியார்கள்.
என் ஜனங்கள் என்னை புரிந்துகொள்ளவில்லை.”
4 இஸ்ரவேல் நாடு முழுவதும் குற்றங்களால் நிரம்பிற்று. இக்குற்றங்கள் ஜனங்கள் சுமக்கத்தக்க கனமிக்க பாரமாயிற்று. அந்த ஜனங்கள் பொல்லாத குடும்பத்தில் பிறந்த கெட்ட பிள்ளைகளைப்போல் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான தேவனை அவமானப்படுத்திவிட்டனர். அவர்கள் அவரை விட்டுப்போய் அயலானைப்போல் நடந்துகொண்டார்கள்.
5 தேவன் கூறுகிறார்: ஏன் என் ஜனங்களாகிய உங்களைத் தொடர்ந்து தண்டித்து வருகிறேன்? நான் உங்களைத் தண்டித்தேன், ஆனால் நீங்களோ மாறவில்லை. நீங்கள் எனக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் செய்து வருகிறீர்கள். இப்பொழுது ஒவ்வொரு தலையும் இதயமும் நோயுற்றுவிட்டது. 6 உங்கள் காலடியில் இருந்து உச்சந்தலைவரை உங்களது உடலின் ஒவ்வொரு பாகமும் காயமடைந்திருக்கிறது, வெட்டுப்பட்டுள்ளது, புண்ணாகியுள்ளது. நீங்கள் உங்கள் புண்களுக்காகக் கவலைப்படப்படவில்லை. உங்கள் காயங்கள் சுத்தப்படுத்தப்படவில்லை, மூடிவைக்கப்படவில்லை.
7 உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன. உங்கள் நகரங்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன. உங்கள் பகைவர்கள் உங்கள் நிலங்களைக் கைப்பற்றிக்கொண்டனர். படைகளால் அழிக்கப்பட்ட நாடு போன்று உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன.
8 சீயோனின் குமாரத்தி (எருசலேம்), இப்பொழுது, திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்ட காலியான கூடாரம்போல் இருக்கின்றாள். அது வெள்ளரித் தோட்டத்தில் உள்ள ஒரு பழைய வீடு போலவும் காணப்படுகின்றது. அது பகைவர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நகரம்போல் உள்ளது.
9 இது உண்மையானாலும், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சில ஜனங்களைத் தொடர்ந்து வாழ அனுமதித்தார். நாம் சோதோம் மற்றும் கொமோராபோல முழுவதுமாக அழிக்கப்படவில்லை.
39 “எங்கள் பிதா ஆபிரகாம்தான்” என்றனர் யூதர்கள். இயேசு அவர்களுக்கு விடையாக “நீங்கள் உண்மையிலேயே ஆபிரகாமின் பிள்ளைகள் என்றால் அவர் செய்தவற்றையே நீங்களும் செய்ய வேண்டும். 40 நான் தேவனிடமிருந்து கேட்ட உண்மையை உங்களுக்குச் சொல்லுகிற மனிதன். ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இதுபோல் எதுவும் செய்யவில்லை. 41 ஆகையால் நீங்கள் உங்கள் சொந்தப் பிதா செய்ததையே செய்கிறீர்கள்” என்றார்.
ஆனால் யூதர்கள், “எங்கள் பிதா யாரென்று தெரிந்துகொள்ள இயலாத குழந்தைகள் அல்ல நாங்கள். தேவனே எங்கள் பிதா. எங்களுக்குரிய ஒரே பிதாவும் அவரே” என்றனர்.
42 இயேசு அவர்களிடம், “தேவன்தான் உங்களது உண்மையான பிதா என்றால் நீங்கள் என்மீது அன்பு செலுத்தியிருப்பீர்கள். நான் தேவனிடமிருந்து வந்தேன். இப்பொழுது இங்கே இருக்கிறேன். நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. தேவன் என்னை அனுப்பினார். 43 நான் சொல்லுகிறவற்றையெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் என் உபதேசத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 44 பிசாசே உங்கள் பிதாவாயிருக்கிறான். நீங்கள் அவனுக்கு உரியவர்கள். அவனுக்கு விருப்பமானவற்றையே நீங்கள் செய்யவிரும்புகிறீர்கள். தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா.
45 “நான் உண்மையைப் பேசுகிறேன். அதனால்தான் நீங்கள் என்னை நம்புவதில்லை. 46 உங்களில் எவராவது ஒருவர் நான் பாவம் செய்தவன் என்று நிரூபிக்க இயலுமா? நான் சொல்வது உண்மையாக இருக்கும்போது என்னை ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்? 47 தேவனைச் சேர்ந்த எவனும் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் நீங்கள் தேவனைச் சார்ந்தவர்கள் இல்லை” என்றார்.
2008 by World Bible Translation Center