Revised Common Lectionary (Complementary)
10 சோதோமின் தலைவர்களாகிய நீங்கள் கர்த்தர் சொல்லும் செய்தியைக் கேளுங்கள்! கொமோராவின் ஜனங்களாகிய நீங்கள், தேவன் சொல்லும் போதனைகளைக் கேளுங்கள். 11 தேவன் கூறுகிறார், “நீங்கள் ஏன் தொடர்ந்து எனக்கு இத்தனை பலி கொடுக்கிறீர்கள்? நான் போதுமான அளவிற்கு உங்களிடமிருந்து ஆடு, காளை, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பின் பலிகளையும் பெற்றுவிட்டேன். 12 என்னைச் சந்திக்க வரும்பொழுது சகலத்தையும் என் பிரகாரத்தில் மிதிக்கிறீர்கள். இப்படி செய்யும்படி உங்களுக்குச் சொன்னது யார்?
13 “தொடர்ந்து எனக்குப் பயனற்ற பலிகளைக் கொண்டுவர வேண்டாம். நீங்கள் எனக்குத் தருகிற நறுமணப் பொருட்களை நான் வெறுக்கிறேன். புது மாதப்பிறப்பின் நாளில், ஓய்வு நாளில், விடுமுறை நாட்களில் நீங்கள் கொடுக்கும் விருந்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பரிசுத்த கூட்டங்களில் நீங்கள் செய்யும் தீமைகளை நான் வெறுக்கிறேன். 14 நான் முழுமையாக உங்கள் மாதக்கூட்டங்களையும் பண்டிகைகளையும் வெறுக்கிறேன். அவை எனக்குப் பெரும் பாரமாக உள்ளன. அப்பாரங்களைத் தாங்கி நான் சோர்ந்து போனேன்.
15 “நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி என்னிடம் ஜெபம் செய்ய வருகிறீர்கள். ஆனால், நான் உங்களை பார்க்க மறுக்கிறேன். நீங்கள் அதிகமதிகமாய் ஜெபங்களை சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களைக் கவனிக்க மறுக்கிறேன். ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தால் கறைப்பட்டுள்ளன.
16 “உங்களைக் கழுவுங்கள். உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தீய செயல்களை நிறுத்துங்கள். நான் அத்தீயச் செயல்களைப் பார்க்க விரும்பவில்லை. தவறுகளை நிறுத்துங்கள்! 17 நல்லவற்றைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர்களோடு நேர்மையாக இருங்கள். மற்றவர்களைத் துன்புறுத்துகிறவர்களைத் தண்டியுங்கள். பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு உதவுங்கள். கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு உதவுங்கள்.”
18 கர்த்தர் மேலும், “வாருங்கள், நாம் இதைப்பற்றி விவாதிப்போம். உங்களது பாவங்கள் இரத்தினக் கம்பளம்போல் சிவப்பாக இருக்கிறது. ஆனால், அவைகள் கழுவப்பட்டு நீங்கள் பனிபோன்று வெண்மையாகலாம். உங்கள் பாவங்கள் பிரகாசமான சிவப்பாக இருக்கின்றன. ஆனால், நீங்கள் வெள்ளை கம்பளியைப்போன்று வெண்மையாக முடியும்.
மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்.
32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2 குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
3 தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
4 தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.
5 என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.
6 இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
7 தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.
1 தெசலோனிக்கேயாவில் இருக்கும் சபைக்கு பவுல், சில்வான், தீமோத்தேயு ஆகியோர் எழுதிக்கொள்வது, பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் நீங்கள் இருக்கிறீர்கள்.
2 உங்களுக்கு நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 உங்களுக்காக எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதுவே செய்வதற்கு உரியது என்பதால் நாங்கள் அதனைச் செய்கின்றோம். உங்கள் விசுவாசம் மேலும், மேலும் வளருவதால் அப்படிச் செய்கிறோம். உங்களில் ஒருவருக்கொருவரிடம் உள்ள அன்பும் வளர்கின்றது. 4 தேவனுடைய ஏனைய சபைகளில் உங்களைப்பற்றி நாங்கள் பெருமையாய்ப் பேசிக்கொள்கிறோம். விசுவாசத்திலும், பலத்திலும் நீங்கள் தொடர்ந்து இருப்பது குறித்து மற்ற சபைகளுக்கு நாங்கள் கூறுகிறோம். நீங்கள் பல உபத்திரவங்களையும். துன்பங்களையும் அடைந்தீர்கள். எனினும் தொடர்ந்து விசுவாசமும் பலமும் உடையவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள்.
11 அதற்காகத்தான் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். உங்களை நல்வழியில் வாழச் செய்யுமாறு நாங்கள் தேவனை வேண்டுகிறோம். இதற்காகவே தேவனால் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்னும் ஆவல் உங்களிடம் இருக்கிறது. உங்களது விசுவாசம் உங்களைப் பணியாற்ற வைக்கும். மேலும், மேலும் இத்தகைய செயலைச் செய்ய தேவன் உங்களுக்கு உதவுமாறு நாங்கள் அவரை வேண்டுகிறோம். 12 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உங்களில் மகிமை அடையும் பொருட்டே இவை அனைத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உங்களில் அவர் மகிமையடைவார். அவரில் நீங்கள் மகிமையடைவீர்கள். அம்மகிமை நம் தேவனும், கர்த்தருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையிலிருந்து வருகிறது.
சகேயு
19 எரிகோ பட்டணத்தின் வழியாக இயேசு சென்றுகொண்டிருந்தார். 2 எரிகோவில் சகேயு என்னும் பெயருடைய மனிதன் இருந்தான். அவன் செல்வந்தனும், முக்கியமானவனுமான ஒரு வரி வசூலிப்பவனாவான். 3 அவன் இயேசுவைக் காண விரும்பினான். இயேசுவைக் காண விரும்பிய இன்னும் பலரும் அங்கு இருந்தார்கள். மக்களுக்குப் பின்னே நின்றபடி இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான். 4 எனவே, அவன் இயேசு கடந்து செல்லும் இடத்தையடைய வேகமாக ஓடிச் சென்றான். இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது சகேயு ஏறினான்.
5 இயேசு அவ்விடத்துக்கு வந்தபோது, மேலே ஏறிட்டுப் பார்த்து சகேயு மரத்தின்மீது இருப்பதைக் கண்டார். இயேசு அவனை நோக்கி, “சகேயுவே, விரைந்து வா. கீழே இறங்கு. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்கவேண்டும்” என்றார்.
6 சகேயு விரைந்து கீழே இறங்கினான். தன் வீட்டில் இயேசுவை வரவேற்பதில் அவன் மிகவும் மகிழ்ந்தான். 7 எல்லா மக்களும் இதைக் கண்டனர். அவர்கள், “எத்தகைய மனிதனோடு இயேசு தங்குகிறார் என்பதைப் பாருங்கள். சகேயு ஒரு பாவி” என்று புகார் கூறினார்கள்.
8 சகேயு கர்த்தரை நோக்கி, “நான் நல்லதைச் செய்ய விரும்புகிறேன். என் பணத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பேன். நான் யாரையாவது ஏமாற்றி இருந்தால் அவனுக்கு நான்கு மடங்கு பணத்தைத் திரும்பக் கொடுப்பேன்” என்றான்.
9 இயேசு, “இந்த மனிதன் நல்லவன். உண்மையில் ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்றைக்கு சகேயு அவனது பாவங்களில் இருந்து மீட்கப்பட்டான். 10 மனித குமாரன் இழந்துபோன மனிதர்களைக் கண்டு அவர்களை மீட்கவே வந்தார்” என்றார்.
2008 by World Bible Translation Center