Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 113-115

113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
    கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
    கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
    வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
    தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
    தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
    குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
    அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
    ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!

114 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான்.
    யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள்.
    இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.
செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று.
    யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.
ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.
    ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.
செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?
    யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்?
    மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே
    பூமி நடுங்கி அதிர்ந்தது.
கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார்.
    கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.

115 கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
    மகிமை உமக்கே உரியது.
    உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
எங்கள் தேவன் எங்கே என்று
    ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
    அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
    அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
    அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
    அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
    அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது.
    அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
அச்சிலைகளைச் செய்து,
    அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
10 ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
11 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.

12 கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
    கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார்.
    கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
    உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.
14 கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
    அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!
16 பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
    ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
17 மரித்தவர்களும்,
    கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
18 நாம் கர்த்தரை துதிப்போம்.
    இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம்.

அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.

1 கொரி 6

பிரச்சனைகளைத் தீர்த்தல்

உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்? தேவனுடைய மனிதர்கள் உலகத்திற்கு நீதி வழங்குவர் என்பது கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகத்திற்கு நீதி வழங்கக் கூடுமாயின் இத்தகைய சிறு பிரச்சனைகளையும் நியாயம் தீர்க்கமுடியும். எதிர்காலத்தில் நீங்கள் தேவ தூதர்களையே நியாயம் தீர்ப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் நியாயம் தீர்க்க முடியும். எனவே நியாயம் தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் உங்களிடையே இருக்குமானால், ஏன் அப்பிரச்சனைகளைச் சபையின் அங்கத்தினரல்லாத மனிதர்களிடம் எடுத்துச் செல்கிறீர்கள்? அந்த மனிதர்கள் சபையைப் பொறுத்த அளவில் பொறுப்பற்றவர்கள். நீங்கள் வெட்கப்படும்படியாக இதனைக் கூறுகிறேன். நிச்சயமாய் உங்கள் மத்தியிலேயே இரு சகோதரர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய ஞானமுள்ள சிலர் இருக்கிறார்கள். ஆனால் இப்போதோ ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகிறான். இயேசுவை நம்பாதவர்களான மனிதர்கள் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும்படியாக எதற்காக அனுமதிக்கிறீர்கள்?

உங்களிடையே வழக்குகள் இருக்கிறது என்னும் உண்மை தோல்வியின் ஒரு குறியீடு ஆகும். அதைவிட மற்றொருவன் செய்யும் தவறுகளையும் ஏமாற்றுவதையும் பொறுத்துக்கொள்வதுமே மேலானதாகும். ஆனால் நீங்களே உங்களுக்குள் தவறிழைத்து ஏமாற்றுகிறீர்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் சொந்த சகோதரர்களுக்கே இதைச் செய்கிறீர்கள்.

9-10 தவறிழைக்கும் மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் பங்கு இல்லை என்பது உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஏமாற்றப்படாதீர்கள். பாலுறவில் பாவம் செய்யும் மக்களும், உருவங்களை வழிபடும் மக்களும், பிற பெண்களை நாடும் மனிதர்களும் மற்ற மனிதர்கள் தம்மை பாலுறவுக்காப் பயன்படுத்த அனுமதிக்கும் மனிதர்களும், பிற மனிதர்களோடு பாலுறவு கொள்ளும் மனிதர்களும், களவு செய்வோரும், தன்னலம் உடையோரும், குடிப்பழக்கம் உள்ளவர்களும், தீயவற்றை பிறருக்குச் சொல்லும் மனிதர்களும், ஏமாற்றுவோர்களுமாகிய மனிதர்களும் தேவனுடைய இராஜ்யத்தை அடையமாட்டார்கள். 11 முன்னர் உங்களில் சிலரும் அவ்வாறு வாழ்ந்தீர்கள். ஆனால் நீங்கள் தூய்மையாய்க் கழுவப்பட்டீர்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். கர்த்தரின் பெயரால் தேவனோடு சரியானவர்களாக நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.

சரீரம்-தேவ மகிமைக்கு

12 “எல்லாப் பொருள்களும் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆனால், அனைத்துப் பொருள்களும் நல்லவை அல்ல. “எல்லாப் பொருள்களும் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆனால், எந்தப் பொருளும் எனக்கு எஜமானனாக நான் விடமாட்டேன். 13 “வயிற்றுக்கு உணவு. உணவுக்காக வயிறு” ஆம். ஆனால் தேவன் இரண்டையும் அழிப்பார். சரீரம் பாலுறவு தொடர்பான பாவத்திற்காக அமைந்ததன்று. ஆனால் சரீரம் கர்த்தருக்குரியது. மேலும் கர்த்தர் சரீரத்துக்குரியவர். 14 தேவனுடைய வல்லமையால் தேவன் கர்த்தராகிய இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார். தேவன் நம்மையும் மரணத்தினின்று எழுப்புவார். 15 உங்கள் சரீரமும் கிறிஸ்துவின் பாகங்கள் என்பது உங்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியும். எனவே, நான் கிறிஸ்துவின் பாகங்களை எடுத்து ஒரு வேசியின் பாகங்களோடு சேர்க்கக் கூடாது. 16 “இருவர் ஒன்றாவார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால் வேசியோடு உடலுறவு கொண்ட ஒருவன் அவளோடு ஒன்றாகிறான் என்பது உங்களுக்குத் தெரியும். 17 ஆனால் தேவனோடு தன்னை இணைக்கிற மனிதன் ஆவியில் அவரோடு ஒன்றுபடுகிறான்.

18 உடலுறவிலான பாவத்தை விட்டு விலகுங்கள். ஒரு மனிதன் செய்கிற பிற பாவங்கள் அவன் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவையல்ல. உடலுறவு தொடர்பான பாவம் செய்கிறவன் தன் சரீரத்துக்கு எதிராகப் பாவம் செய்கிறான். 19 பரிசுத்த ஆவியானவர் தங்கும் இடமாக உங்கள் சரீரம் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ளார். தேவனிடமிருந்து பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றீர்கள். நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல. 20 தேவன் விலை கொடுத்து உங்களை மீட்டுக்கொண்டார். உங்களது சரீரத்தால் அவரை மகிமைப்படுத்துங்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center