Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 40

மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவுதல்

40 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “முதல் மாதத்தின் முதல் நாளில் பரிசுத்தக் கூடாரத்தை, அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தை எழுப்பு. பரிசுத்தக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டியை வைத்துப் பெட்டியைத் திரையால் மூடு. பிறகு மேசையை உள்ளே கொண்டு வா. மேசையின் மேல் வைக்க வேண்டிய பொருட்களை வை. பின்பு கூடாரத்தில் குத்து விளக்குத் தண்டை வை. சரியான இடங்களில் குத்து விளக்கின் அகல்களை வை. கூடாரத்தில் நறுமணப் பொருட்களின் காணிக்கையைப் படைக்க பொன்னாலான நறுமணப் பீடத்தை வை. உடன்படிக்கைப் பெட்டியின் முன்புறத்தில் நறுமணப்பீடத்தை வை. அதன்பின் பரிசுத்தக் கூடாரத்தின் நுழை வாயிலில் திரைகளை இடு.

“பரிசுத்தக் கூடாரத்தின், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் முன்பு தகனபலிக்கான பலிபீடத்தை வை. ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே தொட்டியை வை. தொட்டியில் தண்ணீர் ஊற்றி வை. வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைச் சீலைகளைத் தொங்கவிடு. பிரகாரத்தின் நுழைவாயில் திரையை அதன் ஸ்தானத்தில் தொங்கவிடு.

“பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து பரிசுத்தக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் அபிஷேகம் செய். எண்ணெயை இப்பொருட்களின் மேல் ஊற்றும்போது அவை பரிசுத்தமாகும். 10 தகனபலிக்கான பலிபீடத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து, பலிபீடத்தை பரிசுத்தமாக்கு. அது மிகவும் பரிசுத்தமானதாகும். 11 பின் தொட்டியையும், அதன் அடித்தளத்தையும் அபிஷேகம் செய். அப்பொருட்கள் பரிசுத்தமாவதற்கு இவ்வாறு செய்.

12 “ஆரோனையும், அவனது மகன்களையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அழைத்து வா. அவர்களைத் தண்ணீரால் கழுவு. 13 பிறகு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை உடுத்தி எண்ணெயால் அபிஷேகம் செய்து அவனைப் பரிசுத்தப்படுத்து. அப்போது அவன் ஆசாரியனாகப் பணியாற்ற முடியும். 14 பின் அவனது மகன்களுக்கும் ஆடைகளை அணிவித்துவிடு. 15 அவர்களது தந்தைக்கு செய்தபடியே அவர்கள் மேலும் எண்ணெயை ஊற்றி அவர்களையும் பரிசுத்தப்படுத்து. அப்போது அவர்களும் ஆசாரியப் பணிவிடை செய்யமுடியும். அவர்கள்மேல் அபிஷேக எண்ணெயை ஊற்றும்போது, அவர்கள் ஆசாரியர் ஆவார்கள். வரும் காலங்களில் எல்லாம் அவர்கள் குடும்பத்தினர் ஆசாரியர்களாகவே இருப்பார்கள்” என்றார். 16 மோசே கர்த்தர் கூறியபடியெல்லாம் செய்தான்.

17 எனவே, ஏற்ற காலத்தில் பரிசுத்தக் கூடாரம் எழுப்பப்பட்டது. எகிப்தைவிட்டுப் புறப்பட்ட இரண்டாம் வருடத்தின் முதல் மாதம் முதல் தேதியன்று 18 கர்த்தர் கூறியபடியே மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவினான். முதலில் பீடங்களை வைத்தான். பிறகு பீடங்களின்மீது சட்டங்களை பொருத்தினான். பின்பு தாழ்ப்பாள்களை வைத்து, தூண்களை நிறுவினான். 19 அதன் பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்திற்கு மேல் வெளிக் கூடாரத்தை அமைத்தான். பிறகு பரிசுத்தக் கூடாரத்தின் மேல் மூடியை அமைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இவற்றையெல்லாம் செய்தான்.

20 மோசே உடன்படிக்கையை எடுத்து அதை பரிசுத்தப் பெட்டியில் வைத்தான். மோசே பெட்டியின்மீது தண்டுகளை வைத்து பெட்டியின் மூடியை பொருத்தினான். 21 பின்பு மோசே பரிசுத்தப் பெட்டியை பரிசுத்தக் கூடாரத்தில் வைத்தான். அதைப் பாதுகாப்பதற்காக தொங்கு திரையை அதற்குரிய இடத்தில் தொங்கவிட்டான். இவ்வாறு அவன் கர்த்தர் கட்டளையிட்டபடியே தொங்கு திரைகளுக்குப் பின்னே உடன்படிக்கைப் பெட்டியை வைத்து பாதுகாத்தான். 22 பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் மேசையை வைத்தான். அதைக் கூடாரத்தின் வடக்குத் திசையில் இருந்த பரிசுத்தக் கூடாரத்தில் திரைகளுக்கு முன்னே வைத்தான். 23 பிறகு கர்த்தருக்கு முன்னே மேசையின்மீது பரிசுத்த அப்பத்தை வைத்தான். கர்த்தர் சொன்னபடியே அவன் இதைச் செய்தான். 24 பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் குத்துவிளக்குத் தண்டை வைத்தான். கூடாரத்தின் தெற்குப் பகுதியில் மேசைக்கு எதிராக அதனை வைத்தான். 25 அதன் பின் மோசே கர்த்தருக்கு முன் இருந்த விளக்குத் தண்டில் அகல்களை வைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தான்.

26 பின்பு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பொன் நறுமணப்பீடத்தை திரைக்கு முன்னால் நிறுவினான். 27 பின் நறுமணப் பீடத்தில் சுகந்தவாசனையுள்ள நறுமணப் பொருள்களை எரித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இதனையும் செய்தான். 28 பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலில் தொங்குதிரையை தொங்கவிட்டான்.

29 பரிசுத்தக் கூடாரம், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலில் தகன பலிக்கான பலிபீடத்தை மோசே வைத்தான். பின் மோசே அந்தப் பலிபீடத்தின் மேல் ஒரு தகன பலியைச் செலுத்தினான். தானிய காணிக்கைகளையும் கர்த்தருக்குச் செலுத்தினான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இக்காரியங்களைச் செய்தான்.

30 பின்பு ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் மத்தியில் மோசே தொட்டியை வைத்தான். கழுவுவதற்கான தண்ணீரை மோசே, தொட்டியில் நிரப்பினான். 31 மோசே, ஆரோன், ஆரோனின் மகன்கள் ஆகியோர் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு இந்தத் தொட்டியைப் பயன்படுத்தினார்கள். 32 அவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தில் நுழையும்போதெல்லாம் தங்களைக் கழுவிக்கொண்டனர். பலிபீடத்தின் அருகே செல்லும்போதெல்லாம் அவர்கள் தங்கள் கை, கால்களைக் கழுவிக்கொண்டனர். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் இக்காரியங்களைச் செய்தார்கள்.

33 பின்பு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைகளைத் தொங்கவிட்டான். மோசே பலி பீடத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்தான். வெளிப்பிரகாரத்தின் நுழைவாயிலில் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டான். கர்த்தர் செய்யுமாறு கூறிய எல்லா வேலைகளையும் மோசே செய்து முடித்தான்.

கர்த்தரின் மகிமை

34 அப்போது ஆசாரிப்புக் கூடாரத்தை மேகம் வந்து மறைத்துக்கொண்டது. கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியது. 35 ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் மோசே செல்ல முடியவில்லை. ஏனெனில், மேகம் அதன் மீது மூடியிருந்தது. மேலும் கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியிருந்தது.

36 இந்த மேகமே ஜனங்கள் புறப்பட வேண்டிய நேரத்தை உணர்த்தி வந்தது. பரிசுத்தக் கூடாரத்திலிருந்து மேகம் எழும்பியபோது, இஸ்ரவேல் ஜனங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

37 ஆனால் பரிசுத்தக் கூடாரத்தில் மேகம் மூடியிருந்தபோது ஜனங்கள் பயணத்தைத் தொடர முயலவில்லை. மேகம் கிளம்பும் வரையிலும் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கினார்கள். 38 எனவே பகலில் கர்த்தரின் மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மீது இருந்தது. இரவில் மேகத்தில் நெருப்பு காணப்பட்டது. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணத்தின் போதெல்லாம் மேகத்தைப் பார்க்க முடிந்தது.

யோவான் 19

19 பிறகு பிலாத்து இயேசுவை அழைத்துப்போய் சவுக்கால் அடிக்குமாறு கட்டளையிட்டான். போர்ச் சேவகர்கள் முள்ளினால் ஒரு முடியைப் பின்னினர். அவர்கள் அதை இயேசுவின் தலைமீது அணிவித்தனர். பிறகு சிவப்பான அங்கியை அவருக்கு உடுத்தினார்கள். “யூதருடைய இராஜாவே, வாழ்க” என்று அடிக்கடி பலதடவை அவரிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் இயேசுவை முகத்தில் அறைந்தார்கள்.

மீண்டும் பிலாத்து யூதர்களிடம் போய் “பாருங்கள்! நான் உங்களுக்காக இயேசுவை வெளியே கொண்டு வருகிறேன். நான் இவனிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றான். பிறகு இயேசு வெளியே வந்தார். அவர் தலையில் முள்முடியும் சரீரத்தில் சிவப்பு அங்கியும் அணிந்திருந்தார். “இதோ அந்த மனிதன்” என்று யூதர்களிடம் பிலாத்து சொன்னான்.

பிரதான ஆசாரியரும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கண்டவுடன் “அவனைச் சிலுவையில் அறையுங்கள்” என்று சத்தமிட்டனர்.

ஆனால் பிலாத்துவோ, “நீங்கள் அவனை அழைத்துப்போய் நீங்களாகவே அவனைச் சிலுவையில் அறையுங்கள். நான் தண்டனை தரும்படியாக இவனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் கண்டு பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டான்.

யூதர்களோ, “எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான்” என்றனர்.

பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான். பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், “நீ எங்கே இருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை. 10 அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவன். இதனை நினைத்துக்கொள். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றான்.

11 “தேவனிடமிருந்து அதிகாரம் வந்தால் ஒழிய நீர் என்மீது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாது. எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார்.

12 இதற்குப் பிறகு இயேசுவை விடுதலை செய்யப் பிலாத்து முயற்சி செய்தான். ஆனால் யூதர்களோ, “எவனொருவன் தன்னை அரசன் என்று கூறுகிறானோ அவன் இராயனின் பகைவன். எனவே, நீங்கள் இயேசுவை விடுதலை செய்தால் நீங்கள் இராயனின் நண்பன் இல்லை என்று பொருள்” எனச் சத்தமிட்டார்கள்.

13 யூதர்கள் சொன்னவற்றைப் பிலாத்து கேட்டான். எனவே, அவன் இயேசுவை அரண்மனையை விட்டு வெளியே இழுத்து வந்தான். யூதர்களின் மொழியில் கபத்தா என்று அழைக்கப்பெறும் கல்தள வரிசை அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தான். அங்கே இருந்த நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தான். 14 அப்பொழுது அது பஸ்காவுக்குத் தயாராகும் நாளாகவும் மதியவேளையாகவும் இருந்தது. பிலாத்து யூதர்களிடம் “இதோ உங்கள் இராஜா” என்றான்.

15 அதற்கு யூதர்கள், “அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமிட்டனர்.

அவர்களிடம் பிலாத்து, “உங்களது அரசனை நான் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.

அதற்குத் தலைமை ஆசாரியன், “எங்களது ஒரே அரசர் இராயன் மட்டுமே” என்று பதில் சொன்னான். 16 அதனால் பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவரை அவர்களிடம் ஒப்படைத்தான்.

சிலுவையில் இயேசு(A)

சேவகர்கள் இயேசுவை இழுத்துக்கொண்டுபோனார்கள். 17 இயேசு தனது சிலுவையைத் தானே சுமந்துகொண்டுபோனார். அவர் மண்டை ஓடுகளின் இடம் என்னும் கபாலஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்துக்குப்போனார். (இதனை யூத மொழியில் கொல்கதா என்று அழைப்பர்) 18 கொல்கதாவில் சிலுவையில் இயேசுவை ஆணிகளால் அறைந்தார்கள். அவர்கள் வேறு இருவரையும் சிலுவையில் அறைந்தனர். இயேசுவை நடுவிலும் ஏனைய இருவரை இரு பக்கத்திலும் நட்டு வைத்தனர்.

19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப்பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.

21 யூதர்களின் தலைமை ஆசாரியன் பிலாத்துவிடம், “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. அவன் தன்னை யூதருடைய அரசன் என்று சொன்னதாக எழுதவேண்டும்” என்றான்.

22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.

23 ஆணிகளால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பிற்பாடு, சேவகர்கள் அவரது ஆடையை எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதனை நான்கு பாகங்களாகப் பங்கு வைத்தனர். ஒவ்வொரு சேவகனும் ஒரு பாகத்தைப் பெற்றான். அவர்கள் அவரது அங்கியையும் எடுத்தனர். அது தையலில்லாமல் ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. 24 எனவே சேவகர்கள் தங்களுக்குள், “இதனை நாம் கிழித்து பங்கு போட வேண்டாம். அதைவிட இது யாருக்கு என்று சீட்டுப் போட்டு எடுத்துக்கொள்வோம்” என சொல்லிக் கொண்டனர்.

“அவர்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டனர்.
    என் அங்கியின் மேல் சீட்டுப்போட்டார்கள்” (B)

என்று வேதவாக்கியம் கூறியது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.

25 இயேசுவின் தாயார் சிலுவையின் அருகில் நின்றிருந்தார். அவரது தாயின் சகோதரியும், கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26 இயேசு அவருடைய தாயைப் பார்த்தார். அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீஷனையும் அங்கே பார்த்தார். அவர் தன் தாயிடம், “அன்பான பெண்ணே, அதோ உன் மகன்” என்றார். 27 பிறகு இயேசு தன் சீஷனிடம், “இதோ உன்னுடைய தாய்” என்றார். அதற்குப்பின் அந்த சீஷன் இயேசுவின் தாயைத் தன் வீட்டிற்குத் தன்னோடு அழைத்துச் சென்றான்.

இயேசுவின் மரணம்(C)

28 பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்” [a] என்றார். 29 காடி நிறைந்த பாத்திரம் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. அங்கே நின்ற சேவகர்கள் கடற்பஞ்சைக் காடியிலே தோய்த்தார்கள். அதனை ஈசோப்புத் தண்டில் மாட்டினார்கள். பிறகு அதனை இயேசுவின் வாயருகே நீட்டினார்கள். 30 இயேசு காடியைச் சுவைத்தார். பிறகு அவர், “எல்லாம் முடிந்தது” என்றார். இயேசு தன் தலையைச் சாய்த்து இறந்துபோனார்.

31 அது ஆயத்தநாளாக இருந்தது. மறுநாள் சிறப்பான ஓய்வு நாள். ஓய்வு நாளில் சரீரங்கள் உயிரோடு சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களைச் சாகடிக்க கால்களை முறித்துக் கொல்ல வேண்டும் என இதற்கான உத்தரவை யூதர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். அதோடு அவர்களின் பிணங்களைச் சிலுவையில் இருந்து அப்புறப்படுத்தவும் அனுமதி பெற்றனர். 32 எனவே, சேவகர்கள் இயேசுவின் ஒருபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களை முறித்தனர். பிறகு அவர்கள் இயேசுவின் மறுபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களையும் முறித்தனர். 33 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். எனவே அவரது கால்களை அவர்கள் முறிக்கவில்லை.

34 ஆனால் ஒரு சேவகன் தனது ஈட்டியால் இயேசுவின் விலாவில் குத்தினான். அதிலிருந்து இரத்தமும் நீரும் வெளியே வந்தது. 35 (இவ்வாறு நிகழ்வதைப் பார்த்தவன் அதைப்பற்றிக் கூறுகிறான். அவனே அதைக் கூறுவதால் அதனை நீங்களும் நம்ப முடியும். அவன் சொல்கின்றவை எல்லாம் உண்மை. அவன் சொல்வது உண்மையென்று அவன் அறிந்திருக்கிறான்.) 36 “அவரது எலும்புகள் எதுவும் முறிக்கப்படுவதில்லை” [b] என்று வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டவை நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.

37 அத்துடன் “மக்கள் தாங்கள் ஈட்டியால் குத்தினவரைப் பார்ப்பார்கள்” [c] என்றும் வேதவாக்கியத்தில் இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இயேசுவின் அடக்கம்(D)

38 பிறகு அரிமத்தியா ஊரானான யோசேப்பு எனப்படும் மனிதன் பிலாத்துவிடம் வந்து இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். (இவன் இயேசுவைப் பின்பற்றினவர்களில் ஒருவன். ஆனால் அவன் யூதர்களுக்குப் பயந்து இதைப்பற்றி இதுவரை மக்களிடம் சொல்லவில்லை). யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துச்செல்ல, பிலாத்து அனுமதி தந்தான். ஆகையால் யோசேப்பு வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துப் போனான்.

39 நிக்கோதேமு யோசேப்போடு சென்றான். இவன் ஏற்கெனவே ஒரு நாள் இரவு இயேசுவிடம் வந்து அவரோடு பேசியிருக்கிறான். அவன் 100 இராத்தல் [d] வாசனைமிக்க கரியபோளமும் வெள்ளைப் போளமும் கலந்து கொண்டுவந்தான். 40 அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுதான் யூதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை.) 41 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கு ஒரு கல்லறை இருந்தது. அதில் இதுவரை எந்த சரீரமும் வைக்கப்படவில்லை. 42 அந்தக் கல்லறையில் இயேசுவை வைத்தார்கள். அன்று யூதருடைய ஆயத்த நாளாக இருந்தது. அத்துடன் அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.

நீதிமொழிகள் 16

16 ஜனங்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் காரியங்களை நிறைவேறச் செய்பவரோ கர்த்தர்.

ஒருவன் தான் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் கர்த்தர் செயல்களின் காரணங்களை நியாயம் தீர்க்கின்றார்.

நீ செய்கிற அனைத்து செயல்களுக்கும் கர்த்தரிடம் உதவிக்கு அணுகினால் நீ வெற்றி அடைவாய்.

ஒவ்வொரு காரியத்திற்க்கும் கர்த்தரிடம் ஒரு திட்டம் உள்ளது. கர்த்தருடைய திட்டத்தில் தீயவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.

மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவர்களை கர்த்தர் வெறுக்கிறார். இவ்வாறு பெருமைகொள்கின்றவர்களை எல்லாம் கண்டிப்பாக கர்த்தர் தண்டிப்பார்.

உண்மையான அன்பும் நேர்மையும் உன்னைப் பரிசுத்தமாக்கும். கர்த்தரை மதித்து தீயவற்றிலிருந்து விலகியிரு.

ஒருவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்து, கர்த்தருக்குப் பிரியமானவற்றைச் செய்தால், அவனது பகைவன்கூட அவனுடன் சமாதானமாக வாழ்வான்.

ஒருவன் பிறரை ஏமாற்றி அதிகப் பொருள் சம்பாதிப்பதைவிட நல்ல வழியில் கொஞ்சம் பொருள் சம்பாதிப்பது நல்லது.

ஒருவன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்வதற்குத் திட்டமிடலாம். ஆனால் எது நடக்க வேண்டுமென முடிவு செய்பவர் கர்த்தரே.

10 அரசன் பேசும்போது, அவனது வார்த்தைகள் சட்டமாகும். அவனது முடிவுகள் எப்பொழுதும் சரியாக இருக்கவேண்டும்.

11 எல்லா அளவுக் கருவிகளும் சரியாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து வியாபார ஒப்பந்தங்களும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகின்றார்.

12 தீமை செய்பவர்களை அரசர்கள் வெறுக்கின்றனர். நன்மை அவனது அரசாங்கத்தை வலுவுள்ளதாக்கும்.

13 அரசர்கள் உண்மையைக் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் பொய் சொல்லாமல் இருப்பதை அரசர்கள் விரும்புகின்றனர்.

14 அரசனுக்குக் கோபம் வந்தால் அவன் ஒருவனைக்கொல்லலாம். அறிவுள்ளவர்கள் அரசனை எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர்களாகச் செய்வார்கள்.

15 அரசன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அனைவரின் வாழ்வும் நன்றாக இருக்கும். உன் காரியங்களால் அரசன் மகிழ்ச்சிகொண்டானெனில், அது மேகத்தில் இருந்து வசந்தகால மழை பொழிவதற்கு ஒப்பாகும்.

16 தங்கத்தைவிட அறிவு மதிப்புமிக்கது. புரிந்துகொள்ளுதல் வெள்ளியைவிட மதிப்புடையது.

17 நல்லவர்கள் தம் வாழ்வைத் தீமையில் இருந்து விலக்கி வைப்பார்கள். தன் வாழ்வில் கவனமாக இருக்கிற ஒருவன், தன் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்கிறான்.

18 ஒருவன் கர்வம் கொண்டவனாக இருந்தால் அவன் அழிவின் ஆபத்தில் இருக்கிறான். மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவன் தோல்வியின் ஆபத்தில் இருக்கிறான்.

19 மற்றவர்களைவிடத் தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்களோடு செல்வத்தைப் பங்கிட்டு வாழ்வதைவிட பணிவாகவும், ஏழை ஜனங்களோடும் சேர்ந்து வாழ்வது சிறந்ததாகும்.

20 ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

21 ஒருவன் அறிவுள்ளவனாக இருப்பதை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கவனமாகப் பேசுபவன் நிரூபிக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கமுடியும்.

22 அறிவானது ஜனங்களுக்கு உண்மையான வாழ்க்கையைத் தரும். ஆனால் அறிவற்றவர்களோ மேலும் முட்டாள் ஆவதையே விரும்புவார்கள்.

23 அறிவுள்ளவர்கள் எப்பொழுதும் பேசுவதற்கு முன்பு சிந்திப்பார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் நல்லவையாகவும் உயர்வானவையாகவும் இருக்கும்.

24 கருணைமிக்க வார்த்தைகள் தேனைப் போன்றவை. அவை ஏற்றுக்கொள்ள எளிமையானவை, உடல் நலத்திற்கும் நல்லது.

25 ஜனங்களுக்குச் சில வழிகள் சரியானதாக தோன்றும். அவ்வழிகள் மரணத்துக்கே அழைத்துச் செல்லும்.

26 உழைப்பாளியின் பசிதான் அவனைத் தொடர்ந்து உழைக்க வைக்கிறது. உண்ணும் பொருட்டு வேலை செய்யும் தூண்டுதலைப் பசியே கொடுக்கிறது.

27 பயனற்றவன் கெட்ட செயல்களைச் செய்யவே திட்டமிடுவான். அவனது அறிவுரை நெருப்பைப்போன்று அழிக்கும்.

28 தொல்லையை உருவாக்குகிறவன் எப்பொழுதும் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறான். பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவன் நெருங்கிய நண்பர்களுக்குள் துன்பத்தை ஏற்படுத்துவான்.

29 தொல்லையை உருவாக்குகிறவன் பல தொல்லைகளுக்குக் காரணமாகிறான். தனது நண்பர்களுக்கு நன்மை தராத வழிகளில் அவர்களை அழைத்துச் செல்கிறான். 30 அவன் தன் கண்களால் ஜாடை செய்து சிலவற்றை அழிக்கத் திட்டமிடுகிறான். தனது பக்கத்து வீட்டுக்காரனைத் துன்புறுத்த சிரித்துக்கொண்டே திட்டமிடுகிறான்.

31 நல் வாழ்க்கை வாழ்பவர்களின் நரை முடியானது கிரீடத்தைப் போன்று உயர்வானது.

32 வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது. ஒரு நகரத்தை அடக்கி ஆள்வதைவிட உன் கோபத்தை அடக்குவது நல்லது.

33 ஜனங்கள் குலுக்கல் சீட்டு மூலம் முடிவெடுக்கின்றனர். ஆனால் அனைத்து முடிவுகளும் தேவனிடமிருந்தே வருகின்றன.

பிலிப்பியர் 3

கிறிஸ்துவே முக்கியமானவர்

இப்போதும் என் சகோதர சகோதரிகளே! கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள். அவற்றையே மீண்டும் எழுதுவதில் எனக்கு எவ்விதமான தொந்தரவும் இல்லை. ஆனால் இது நீங்கள் ஆயத்தமாக இருக்க உதவியாக இருக்கும்.

பாவம் செய்கிற மக்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் நாய்களைப் போன்றவர்கள். அவர்கள் நீங்கள் விருத்தசேதனம் செய்யும்படி பலவந்தப்படுத்துவார்கள். ஆனால் உண்மையில் நாம் விருத்தசேதனம் உள்ளவர்கள். நாம் தேவனை அவரது ஆவியின் மூலம் வழிபட்டு வருகிறோம். நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருப்பதில் பெருமைப்படுகிறோம். நம் மீதோ, நமது செயல்களின் மீதோ நாம் நம்பிக்கை வைப்பதில்லை. என் மீது நான் நம்பிக்கை வைக்க முடியும் என்றாலும் நான் நம்பிக்கை வைப்பதில்லை. வேறு யாராவது ஒருவர் தன் மீது நம்பிக்கை வைக்கக் காரணம் இருக்கும் என்று கருதினால், எனக்கும் என் மீது நம்பிக்கை வைக்க நிறைய காரணங்கள் உள்ளன. நான் பிறந்த எட்டு நாட்களுக்குப் பின் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நான் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். பென்யமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் எபிரேயன். என் பெற்றோர்களும் எபிரேயர்கள். மோசேயின் சட்டங்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனால்தான் பரிசேயனாக ஆனேன். நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை.

ஒரு காலத்தில் எனக்கு இவை முக்கியமாய்த் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னால் அவை பயனற்றுப் போய்விட்டன. அவை மட்டுமல்ல எனது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றேன். இதனால்தான் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். கிறிஸ்துவுக்குள் நான் தேவனுக்கு வேண்டியவனாகிறேன். நான் சட்டங்களைப் பின்பற்றியதால் இப்பேறு பெறவில்லை. தேவனிடமிருந்து விசுவாசத்தின் மூலம் இது எனக்கு வந்தது. நான் கிறிஸ்துவிடம் கொண்ட விசுவாசத்தைப் பயன்படுத்தி தேவன் தனக்கு ஏற்றவனாகச் செய்துகொண்டார். 10 அவரையும் அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையையும் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவரது துன்பத்தில் பங்குகொள்ளவும் மரணத்தில் அவரைப் போல் ஆகவும் விரும்புகிறேன். 11 அவற்றை நான் பெறுவேனேயானால் பிறகு மரணத்தில் இருந்தும் உயிர்த்தெழுந்து வருவேன் என்ற நம்பிக்கை பெறுவேன்.

குறிக்கோளை எட்டுவதற்கான முயற்சி

12 நான் எப்படி இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறாரோ அப்படி நான் ஏற்கெனவே இருக்கிறேன் என்று எண்ணவில்லை. நான் இன்று வரை கூட எனக்காக கிறிஸ்துவால் ஆக்கப்பட்ட அந்த குறிக்கோளை அடையவில்லை. ஆனால் தொடர்ந்து அந்தக் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். 13 சகோதர சகோதரிகளே! இன்னும் அந்த இலக்கை நான் அடையவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் எப்பொமுதும் நான் ஒன்றை மட்டும் செய்து வருகிறேன். அதாவது கடந்த காலத்தில் உள்ளவற்றை நான் மறந்துவிடுகிறேன். என முன்னால் உள்ள குறிக்கோளை அடைய எவ்வளவு முயல முடியுமோ அவ்வளவு முயலுகிறேன். 14 குறிக்கோளை அடைந்து பரிசு பெறுவதற்கான முயற்சியையும் விடாமல் தொடர்ந்து நான் கைக்கொண்டு வருகிறேன். அது என்னுடையது. ஏனென்றால் அத்தகைய வாழ்வுக்குத்தான் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் என்னை அழைத்திருக்கிறார்.

15 ஆன்மீகத்தில் வளர்ந்து முழுமை அடைந்துள்ள நாம் அனைவரும் இத்தகைய வழியில் எண்ண வேண்டும். நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மேற்கூறிய விஷயங்களில் ஏதேனும் இருந்தால் தேவன் அதை உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். 16 ஆனாலும் நாம் ஏற்கெனவே செய்வது போல நாம் அடைந்த உண்மையைப் பின் தொடர்வதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

17 சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் என்னைப் போன்று வாழ முயல வேண்டும். நாங்கள் காட்டிய சட்டங்களை மேற்கொண்டு வாழ்பவர்களை அப்படியே பின்பற்ற முயலுங்கள். 18 இயேசுவின் சிலுவைக்கு விரோதமாகப் பலர் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையவர்களைப் பற்றி நான் அடிக்கடி கூறி வருகிறேன். இப்பொழுதும் அவர்களைப் பற்றிக் கூறுவதை எண்ணும்போது எனக்கு அழுகையே வருகிறது. 19 இத்தகையோரின் வாழ்க்கை முறை இவர்களை அழிவின் பாதைக்கே அழைத்துச் செல்லும். அவர்கள் தேவனுக்குச் சேவை செய்வதில்லை. அவர்கள் தம்மைத் திருப்திப்படுத்திக்கொள்வதற்காகவே வாழ்கிறார்கள். அவர்கள் வெட்கப்படத்தக்க செயல்களை செய்வதோடு அதைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் பூமியில் உள்ளவற்றைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 20 ஆனால், நம் குடியிருப்போ பரலோகத்தில் உள்ளது. நம்முடைய இரட்சகர் பரலோகத்தில் இருந்து வருவார். அவருக்காகவே நாம் காத்திருக்கிறோம். நமது இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. 21 அவர் இத்தகைய நமது அற்பமான சரீரங்களை மாற்றி தம்முடைய மகிமை மிக்க சரீரம்போல ஆக்கிவிடுவார். அவர் இதனைத் தம் வல்லமையால் செய்வார். அந்த வல்லமையால் அவர் எல்லாவற்றையும் ஆளத்தக்கவர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center