M’Cheyne Bible Reading Plan
புதிய கற்பலகைகள்
34 கர்த்தர் மோசேயை நோக்கி, “உடைந்து போன முதல் இரண்டு பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளைச் செய். முதல் இரண்டு கற்களிலும் எழுதப்பட்ட அதே வார்த்தைகளை நான் இந்தக் கற்களிலும் எழுதுவேன். 2 நாளை காலையில் தக்க ஆயத்தத்துடன் சீனாய் மலைக்கு வா. மலையின்மேல் என் முன்னே வந்து நில். 3 உன்னோடு வேறு யாரும் வரக்கூடாது. யாரும் மலையில் காணப்படக் கூடாது. உங்கள் மிருகங்களோ, ஆட்டு மந்தைகளோ எதுவும் மலையடிவாரத்தில் புல்லை உண்பதற்குக்கூட அனுமதிக்கக் கூடாது” என்றார்.
4 எனவே, முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளை மோசே உருவாக்கினான். மறுநாள் அதிகாலையில் சீனாய் மலையின் மேல் ஏறிச் சென்றான். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தான். மோசே இரண்டு கற்பலகைகளையும் தன்னோடு எடுத்துச் சென்றான். 5 மோசே மலையின்மீது ஏறியவுடன், கர்த்தர் மேகத்தில் அவனிடம் இறங்கி வந்து, தமது பெயரை மோசேயிடம் சொன்னார்.
6 கர்த்தர் மோசேக்கு முன்னர் கடந்து சென்று, “யேகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக்கைக்குரியவர். 7 ஆயிரம் தலைமுறைவரைக்கும் கர்த்தர் தமது இரக்கத்தைக் காட்டுவார். ஜனங்கள் செய்கிற தவறுகளை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் குற்றவாளிகளைத் தண்டிக்க கர்த்தர் மறப்பதில்லை. கர்த்தர் குற்றவாளிகளை மட்டும் தண்டிக்காமல் அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும், அவர்களின் பிள்ளைகளையும், அவர்கள் செய்த தீயகாரியங்களுக்காகத் தண்டிப்பார்” என்றார்.
8 உடனே மோசே கீழே தரையில் குனிந்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். மோசே, 9 “கர்த்தாவே நீர் என்னோடு சந்தோஷமாக இருக்கிறீர் என்பது உண்மையானால் தயவு செய்து எங்களோடு வாரும். இவர்கள் பிடிவாதமான ஜனங்கள் என்பதை அறிவேன். ஆனால் நாங்கள் செய்த தீயசெயல்களுக்கு எங்களை மன்னித்தருளும்! உமது ஜனங்களாக எங்களை ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
10 அப்போது கர்த்தர், “உன் ஜனங்கள் எல்லாரோடும் இந்த உடன்படிக்கையைச் செய்கிறேன். பூமியிலுள்ள வேறெந்த ஜனத்துக்கும் செய்யாத வியக்கத்தக்க காரியங்களை நான் உங்களிடம் செய்வேன். உன்னோடு இருக்கிற ஜனங்கள் நான் மிக உன்னதமான கர்த்தர் என்பதைக் காண்பார்கள். நான் உனக்காகச் செய்யப்போகும் அற்புதங்களை ஜனங்கள் காண்பார்கள். 11 நான் இன்றைக்கு உங்களுக்கு இடும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் நாட்டிலிருந்து உங்கள் பகைவர்கள் போகும்படி செய்வேன். எமோரியரையும், கானானியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும் வெளியேற்றுவேன். 12 எச்சரிக்கையாயிருங்கள், நீங்கள் நுழையும் இந்தத் தேசத்தின் ஜனங்களோடு எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள்! அந்த ஜனங்களோடு ஒப்பந்தம் செய்தால் அது உங்களுக்குத் தொல்லையைத் தரும். 13 ஆகையால் அவர்கள் பலிபீடங்களை அழித்துப்போடுங்கள். அவர்கள் தொழுதுகொள்ளும் கற்களை உடையுங்கள். அவர்கள் விக்கிரகங்களை நொறுக்குங்கள். 14 வேறெந்த தேவனையும் தொழுதுகொள்ளாதீர்கள். நான் ‘யேகோவா’ என்னும் வைராக்கியமுள்ள கர்த்தர். இதுவே என் பெயர். நான் எல்கானா-வைராக்கியமுள்ள தேவன்.
15 “இத்தேசத்து ஜனங்களோடு எந்தவொரு ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் தங்கள் தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்போது நீங்களும் சேர்ந்துகொள்ள அவர்கள் உங்களை அழைப்பார்கள். பிறகு அவர்கள் செலுத்திய பலிகளை நீங்கள் உண்பீர்கள். 16 அவர்களின் மகள்களை உங்கள் மகன்களுக்காக நிச்சயம் செய்யக்கூடும். அப்பெண்கள் பொய்த் தேவர்களை சேவிக்கிறார்கள். உங்கள் மகன்களையும் அவ்வாறே பொய்த் தேவர்களை தொழுதுகொள்ள வழிநடத்தக்கூடும்.
17 “விக்கிரகங்களைச் செய்யாதீர்கள்.
18 “புளிப்பில்லாத ரொட்டியின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். உங்களுக்கு நான் கட்டளையிட்டபடி ஏழு நாட்கள் புளிப்பில்லாமல் செய்த ரொட்டிகளை உண்ணுங்கள். நான் தெரிந்துகொண்டபடி ஆபிப் மாதத்திலேயே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்தைவிட்டு வந்தீர்கள்.
19 “ஒரு பெண்ணிடம் பிறக்கும் முதல் குழந்தை எப்போதும் எனக்குரியது. உங்கள் மிருகங்களின் ஆடுகளின் முதற்பேறானவையும் எனக்குரியவை. 20 கழுதையின் முதல் ஈற்றை நீங்கள் வைத்துக்கொள்ள விரும்பினால் அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்து திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு ஆட்டுக்குட்டியைக் கொடுத்து அக்கழுதையை மீட்காவிட்டால் அப்போது அந்தக் கழுதையின் கழுத்தை முறித்துப் போடவேண்டும். உங்கள் முதற்பேறான மகன்கள் அனைவரையும் நீங்கள் என்னிடமிருந்து மீண்டும் வாங்கவேண்டும். காணிக்கையின்றி யாரும் என் முன்னிலையில் வரக்கூடாது.
21 “நீங்கள் ஆறு நாட்கள் உழையுங்கள். ஏழாம் நாள் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். விதைப்பு, அறுவடை காலங்களிலும் நீங்கள் ஓய்வு நாளில் ஓய்வெடுக்க வேண்டும்.
22 “வாரங்களின் பண்டிகையை (பெந்தெகோஸ்தே) கொண்டாடுங்கள். கோதுமை அறுவடையின் முதல் தானியத்தை அதற்குப் பயன்படுத்துங்கள். இலையுதிர் காலத்தின்போது அறுப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.
23 “ஆண்டில் மூன்று முறை உங்கள் ஜனங்கள் இஸ்ரவேலரின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதானத்திற்குச் செல்ல வேண்டும்.
24 “உங்கள் தேசத்திற்குள் நீங்கள் போகும்போது, அத்தேசத்திலிருந்து உங்கள் பகைவர்களை வெளியேற்றுவேன். உங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி உங்கள் தேசத்தின் அளவை அதிகரிக்கச் செய்வேன். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன் ஓராண்டில் மூன்று முறை செல்லுங்கள் அப்போது, யாரும் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள முயலமாட்டார்கள்.
25 “பலியின் இரத்தத்தை எனக்குப் படைக்கும்போதெல்லாம் புளிப்பை அதனோடு படைக்காதீர்கள்.
“பஸ்கா உணவிலுள்ள இறைச்சியை மறுநாள் காலைவரைக்கும் வைக்காதீர்கள்.
26 “நீங்கள் அறுவடை செய்யும் முதல் தானியங்களைக் கர்த்தருக்குக் கொடுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வீட்டிற்கு அவற்றைக் கொண்டு வாருங்கள்.
“இளம் ஆட்டை அதன் தாய்ப்பாலில் ஒருபோதும் சமைக்காதீர்கள்” என்றார்.
27 மீண்டும் கர்த்தர் மோசேயிடம், “நான் உங்களுக்குக் கூறிய எல்லாக் காரியங்களையும் எழுதிக்கொள். உன்னோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் நான் செய்த உடன்படிக்கை இதுவேயாகும்” என்றார்.
28 மோசே 40 பகலும் 40 இரவும் கர்த்தரோடு தங்கினான். மோசே எந்த உணவையும் உண்ணவோ, தண்ணீரைப் பருகவோ இல்லை. இரண்டு கற்பலகைகளில் உடன்படிக்கையை (பத்துக் கட்டளைகளை) மோசே எழுதினான்.
மோசேயின் பிரகாசமான முகம்
29 பின் மோசே சீனாய் மலையிலிருந்து உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளையும் எடுத்துக்கொண்டு இறங்கி வந்தான். கர்த்தரோடு பேசியதால் அவன் முகம் பிரகாசித்தது. ஆனால் மோசே அதனை அறியவில்லை. 30 ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களும் மோசேயின் முகம் பிரகாசிப்பதைக் கண்டனர். எனவே அவனிடம் செல்ல பயந்தனர். 31 ஆனால் மோசே அவர்களை அழைத்தான். எனவே, ஆரோனும், ஜனங்களின் தலைவர்களும் மோசேயிடம் சென்றனர். மோசே அவர்களோடு பேசினான். 32 அதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மோசேயிடம் வந்தனர். சீனாய் மலையில் கர்த்தர் அவனிடம் கொடுத்த கட்டளைகளை மோசே அவர்களுக்குக் கொடுத்தான்.
33 ஜனங்களிடம் மோசே பேசி முடித்த பின்பு அவன் தன் முகத்தில் ஒரு முக்காடு போட்டுக்கொண்டான். 34 மோசே கர்த்தருக்கு முன் பேசச் செல்லும்போது அதை அகற்றினான். அப்புறம் கர்த்தர் கூறிய கட்டளைகளை அவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் வந்து கூறினான். 35 மோசேயின், முகம் பிரகாசிப்பதை ஜனங்கள் கண்டனர். மீண்டும் மோசே முகத்தை மூடிக்கொண்டான். மறுமுறை கர்த்தரை சந்தித்துப் பேசுவதற்குச் செல்லும்வரைக்கும் மோசே அவனது முகத்தை மூடி வைத்திருந்தான்.
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
13 இது ஏறக்குறைய பஸ்கா பண்டிகைக்கான நேரம். இதுதான் இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கான நேரம் என்பதை இயேசு அறிந்திருந்தார். இயேசு, தன் பிதாவிடம் திரும்பிப் போவதற்கான காலம் இது. இயேசு அவருடைய மக்களின் மீது பெரிதான அன்பை எப்போதும் வைத்திருந்தார். இப்பொழுது, அவருக்கு அவர்களிடம் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் நேரமாயிற்று.
2 இயேசுவும் அவர் சீஷர்களும் மாலை உணவுக்காக அமர்ந்தனர். ஏற்கெனவே சாத்தான் யூதாஸ்காரியோத்தின் மனதில் புகுந்து அவனை இயேசுவுக்கு எதிராக ஆக்கியிருந்தான். (யூதாஸ் சீமோனின் மகன்) 3 இயேசுவுக்கு அவரது பிதா எல்லாவிதமான அதிகாரத்தையும் கொடுத்திருந்தார். இயேசு இதனை அறிந்திருந்தார். தேவனிடமிருந்து தான் வந்ததாக இயேசு தெரிந்துவைத்திருந்தார். அதோடு அவர் தன் பிதாவிடமே திரும்பிப் போகவேண்டும் என்பதனை அறிந்திருந்தார். 4 அவர்கள் உணவு உண்டுகொண்டிருக்கும்போது, இயேசு எழுந்து ஆடைகளைக் கழற்றி வைத்தார். ஒரு துண்டை எடுத்துத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார். 5 பிறகு இயேசு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினார். அவர் தம் சீஷர்களின் கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்த ஆரம்பித்தார். பின் தன் இடுப்புத் துண்டால் அவர்கள் கால்களைத் துடைத்தார்.
6 இயேசு, சீமோன் பேதுருவிடம் வந்தார். ஆனால் பேதுருவோ இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான்.
7 அதற்கு இயேசு அவனிடம், “நான் என்ன செய்கிறேன் என்று இப்போது உனக்குத் தெரியாது. ஆனால் பிறகு நீ புரிந்துகொள்வாய்” என்றார்.
8 பேதுருவோ, “இல்லை நீர் என் கால்களைக் கழுவவேகூடாது” என்றான்.
இயேசுவோ, “நான் உன் கால்களைக் கழுவாவிட்டால், நீ என்னோடு பங்குள்ளவனாக இருக்க முடியாது” என்றார்.
9 உடனே பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களோடு, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவுங்கள்” என்றான்.
10 “ஒரு மனிதன் குளித்தபிறகு அவனது சரீரம் எல்லாம் சுத்தமாகிவிடுகிறது. அதன் பிறகு அவன் கால்களை மட்டும் கழுவினால் போதும். நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் அல்ல” என்றார் இயேசு. 11 யார் தனக்கு எதிராக மாறியுள்ளவன் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான் இயேசு “நீங்கள் அனைவரும் சுத்தமாக இல்லை” என்று கூறினார்.
12 இயேசு அவர்களின் கால்களைச் சுத்தப்படுத்தி முடித்தார். பிறகு அவர் தன் ஆடைகளை அணிந்துகொண்டு சாப்பாடு மேசைக்குத் திரும்பினார். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குக்காகச் செய்தவற்றை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? 13 நீங்கள் என்னை ‘ஆண்டவரே’ என்று அழைக்கிறீர்கள், இதுதான் சரியானது, ஏனென்றால் உண்மையில் நான் ஆண்டவராகவே இருக்கிறேன். 14 நான் உங்கள் போதகராகவும் ஆண்டவராகவும் இருக்கிறேன். ஆனால் நான் ஒரு வேலைக்காரனைப்போன்று உங்கள் கால்களைக் கழுவினேன். ஆகையால் நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளுங்கள். 15 இதை நான் ஒரு முன்மாதிரியாகவே செய்தேன். நான் உங்களுக்குச் செய்ததுபோலவே நீங்களும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளுங்கள். 16 நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்ல. ஒருவன் என்னதான் பெரிய காரியங்களைச் செய்தாலும் அனுப்பப்பட்டவன் அனுப்பியவரைவிட பெரியவனல்ல. 17 நீங்கள் இவற்றை அறிந்துகொண்டால், அவற்றைச் செய்யும்போது மகிழ்ச்சியடைவீர்கள்.
18 “நான் உங்கள் எல்லாரையும்பற்றிப் பேசவில்லை. நான் தேர்ந்தெடுத்த மக்களைப் பற்றி நான் அறிவேன். ஆனால் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டும். ‘என்னோடு பகிர்ந்துகொண்டு உண்பவனே எனக்கு எதிராகத் திரும்பிவிட்டான்.’ [a] 19 இது நிறைவேறும் முன்னால் நான் உங்களுக்கு இதை இப்பொழுது சொல்லுகிறேன். இது நடக்கும்போது நானே அவர் என நம்புவீர்கள். 20 நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். என்னை ஏற்றுக்கொள்பவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
காட்டிக் கொடுப்பவன்(A)
21 இவற்றைச் சொன்னபிறகு இயேசு மிகவும் கலக்கம் அடைந்தார். வெளிப்படையாக அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.
22 இயேசுவின் சீஷர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இயேசுவால் குறிப்பிடப்பட்டவன் எவனென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. 23 சீஷர்களில் ஒருவன் இயேசுவுக்கு அடுத்து அமர்ந்திருந்தான். அவனைத்தான் இயேசு பெரிதும் நேசித்தார். 24 சீமோன் பேதுரு அவனிடம் இயேசுவிடம் கேட்கும்படி சாடையாகத் தெரிவித்தான்.
25 அவன் இயேசுவின் அருகில் சாய்ந்து, “ஆண்டவரே, உங்களுக்கு எதிரானவன் யார்?” என்று கேட்டான்.
26 இயேசு அதற்கு, “நான் இந்தத் தோய்த்தெடுத்த அப்பத்துண்டை எவனுக்குக் கொடுக்கிறேனோ அவனே எனக்கு எதிரானவன்” என்றார். பின்னர் அவர் அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். இயேசு யூதாஸிடம், “நீ செய்யப் போவதைச் சீக்கிரமாகக் செய்” என்றார். 28 அந்த மேஜையைச் சுற்றியிருந்த எவருக்கும் இயேசு யூதாஸிடம் ஏன் அவ்வாறு சொன்னார் என்பது புரியவில்லை. 29 அவர்களில் யூதாஸ் மட்டும் தான் பணப்பெட்டியைப் பாதுகாப்பவன். எனவே அவர்கள், இயேசு யூதாஸிடம் விருந்துக்கான பொருட்களை வாங்கி வரும்படியாக ஏதோ கூறுவதாக எண்ணிக்கொண்டார்கள். அல்லது யூதாஸ் ஏழைகளுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்குமாறு இயேசு கூறுவதாக நினைத்துக்கொண்டனர்.
30 இயேசு கொடுத்த அப்பத்துண்டை யூதாஸ் பெற்றுக்கொண்டான். பிறகு அவன் வெளியேறினான். அப்போது இரவு நேரமாயிருந்தது.
தம் மரணத்தைப்பற்றி முன்னறிவிப்பு
31 யூதாஸ் போனபிறகு இயேசு, “இப்பொழுது மனித குமாரன் தன் மகிமையை அடைகிறார். தேவன் தன் குமாரன் மூலமாக மகிமையைப் பெறுகிறார். 32 அவர் மூலம் தேவன் மகிமையை அடைந்தால், பிறகு தேவன் தன் மகனுக்கு அவர் மூலமாகவே மகிமை அளிப்பார். தேவன் விரைவில் அவருக்கு மகிமை தருவார்.
33 “எனது பிள்ளைகளே, நான் இன்னும் கொஞ்சக் காலம் மட்டும்தான் உங்களோடு இருப்பேன். என்னை நீங்கள் தேடுவீர்கள். நான் யூதர்களுக்கு சொன்னவற்றையே இப்பொழுது உங்களுக்கும் சொல்கிறேன். நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரமுடியாது.
34 “நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைத் தருகிறேன். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நான் உங்களை நேசித்ததுபோன்று நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். 35 நீங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தால் அனைத்து மக்களும் உங்களை என் சீஷர்களென அறிந்துகொள்வர்” என்றார்.
பேதுரு மறுதலிப்பது பற்றி(B)
36 சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நான் எங்கே போனாலும் உன்னால் அங்கே பின்தொடர்ந்து இப்போது வர முடியாது. ஆனால் நீ பிறகு என் பின்னே வருவாய்” என்றார்.
37 பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நான் இப்பொழுது ஏன் உங்களைப் பின்தொடர முடியாது? நான் உங்களுக்காக உயிர் தரவும் தயார்” என்றான்.
38 இயேசு அதற்கு, “நீ உண்மையிலேயே எனக்காக உன் உயிரையும் தருவாயா? நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். நீ என்னை அறியாதவன் என்று சேவல் கூவுவதற்கு முன்னால் மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார்.
சாலொமோனின் நீதிமொழிகள்
10 இவை அனைத்தும் சாலொமோனின் நீதிமொழிகள் (ஞானவார்த்தைகள்):
ஒரு ஞானமுள்ள மகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் ஒரு முட்டாள் மகனோ தன் தாயைத் துன்பப்படுத்துகிறான்.
2 ஒருவன் தீயச் செயல்கள் மூலம் பொருள் சம்பாதித்திருந்தால் அவை பயனற்றவை. ஆனால் நல்ல செயல்களைச் செய்வது உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும்.
3 கர்த்தர் நல்லவர்களைப்பற்றியே அக்கறைகொள்கிறார். அவர் அவர்களுக்குத் தேவையான உணவைக்கொடுக்கிறார். தீய ஜனங்கள் விரும்புகிறவற்றை கர்த்தர் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறார்.
4 ஒரு சோம்பேறி ஏழ்மையாக இருப்பான். ஆனால் கடினமாக உழைக்கிற ஒருவன் செல்வந்தனாகிறான்.
5 சுறுசுறுப்பானவன் சரியான நேரத்தில் அறுவடை செய்துகொள்கிறான். ஆனால் அறுவடைக் காலத்தில் தூங்கிவிட்டு, பயிர்களைச் சேகரிக்காமல் இருப்பவன், வெட்கத்திற்குரியவனாவான்.
6 நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப்பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களின் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்.
7 நல்லவர்கள் நல்ல நினைவுகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர். தீயவர்கள் விரைவில் மறக்கப்படுகின்றனர்.
8 யாராவது நல்லவற்றைச் செய்யவேண்டும் எனக்கூறினால் அறிவாளி அதற்குக் கீழ்ப்படிகிறான். ஆனால் அறிவில்லாதவனோ வீண்விவாதம் செய்து தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்கிறான்.
9 ஒரு நல்ல நேர்மையான மனிதன் பாதுகாப்பாக இருக்கிறான். ஆனால் கோணல் வழியில் செல்பவன் பிடிபடுவான்.
10 உண்மையை மறைக்கிறவன் துன்பங்களுக்குக் காரணமாகிறான். வெளிப்படையாகப் பேசுபவன் சமாதானத்தை உருவாக்குகிறான்.
11 நல்லவனின் வார்த்தைகள் வாழ்வைச் சிறப்புள்ளதாக்கும். ஆனால் தீயவனின் வார்த்தைகள் அவனுக்குள்ளிருக்கும் தீயவற்றையே வெளிக்காட்டும்.
12 வெறுப்பு விவாதங்களுக்குக் காரணமாகும். ஆனால் அன்பானது ஜனங்கள் செய்கிற தவறுகளை மன்னித்து விடும்.
13 அறிவுள்ளவர்கள் கேட்கத்தக்கவற்றைப் பேசுகிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ பாடம் கற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே தண்டிக்கப்படவேண்டும்.
14 அறிவுள்ளவர்கள் அமைதியாக இருந்து புதியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்கள் வீணாகப் பேசி தமக்குத்தாமே துன்பத்தை வரவ ழைத்துக்கொள்கிறார்கள்.
15 செல்வமானது செல்வந்தர்களைக் காப்பாற்றுகிறது. வறுமையோ ஏழைகளை அழிக்கிறது.
16 ஒருவன் நன்மை செய்தால் அதற்காகப் பாராட்டப்படுவான். அவனுக்கு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது. தீமையோ தண்டனையை மட்டுமே பெற்றுத்தருகிறது.
17 ஒருவன் தனது தண்டனைகளிலிருந்து கற்றுக்கொண்டால் அது மற்றவர்களின் வாழ்க்கைக்கு உதவும். ஆனால் கற்றுக்கொள்ள மறுக்கிறவன் ஜனங்களைத் தவறான வழியிலேயே அழைத்துச்செல்வான்.
18 வெறுப்பை மறைக்கிறவனால் பொய் சொல்ல முடியும். ஆனால் ஒரு முட்டாளால் வதந்தியை மட்டுமே பரப்ப முடியும்.
19 அதிகமாகப் பேசுகிற ஒருவன் துன்பத்திற்கு ஆளாகிறான். ஞானம் உள்ளவன் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான்.
20 நல்லவனின் வார்த்தைகள் சுத்தமான வெள்ளியைப் போன்றவை. தீயவனின் எண்ணங்களோ பயனற்றவை.
21 நல்லவனின் வார்த்தைகள் பலருக்கு உதவியாக இருக்கும். ஆனால் முட்டாள்களோ அறிவீனத்தால் அழிந்துபோவார்கள்.
22 கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு உண்மையான செல்வத்தைக்கொண்டுவரும். அது துன்பத்தைக்கொண்டு வராது.
23 அறிவில்லாதவர்களோ தவறு செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். அறிவுள்ளவனோ ஞானத்தால் மகிழ்ச்சி அடைகிறான்.
24 தீயவர்கள் தாங்கள் அஞ்சுகிறவற்றாலேயே தோற்கடிக்கப்படுவார்கள். ஆனால் நல்லவர்களோ தாங்கள் விரும்புவதைப் பெறுவார்கள்.
25 தங்களுக்கு நேரும் பிரச்சனைகளாலேயே தீயவர்கள் அழிவார்கள். ஆனால் நல்லவர்களோ எல்லாக் காலங்களிலும் உறுதியாக நிற்பார்கள்.
26 ஒரு சோம்பேறியை உனக்காக எதுவும் செய்ய அனுமதிக்காதே. ஏனென்றால் அவர்கள் பற்களுக்குக் காடியைப் போன்றும் கண்களுக்குப் புகையைப் போன்றும் இருப்பார்கள்.
27 நீ கர்த்தரை மதித்தால் நீண்டகாலம் வாழலாம். ஆனால் தீயவர்களோ தம் வாழ்நாளில் பல ஆண்டுகளை இழப்பார்கள்.
28 நல்லவர்கள் நம்புகிறவை மகிழ்ச்சியைக்கொண்டுவரும். கெட்டவர்கள் நம்புகிறவையோ அழிவைக்கொண்டுவரும்.
29 கர்த்தர் நல்லவர்களைப் பாதுகாக்கிறார். ஆனால் தவறு செய்பவர்களையோ கர்த்தர் அழிக்கிறார்.
30 நல்ல மனிதர்கள் எப்பொழுதும் பாதுகாக்கப்படுவார்கள். தீயவர்கள் தேசத்தைவிட்டுப் போகக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆண்டவர் நல்ல ஜனங்களை பாதுகாப்பார். அவர் தீய செயல்களைச் செய்யும் ஜனங்களை அழிப்பார்.
31 நல்லவர்கள் ஞானமுள்ளவற்றைப் பேசுவார்கள். தொல்லை உண்டாக்கும் காரியங்களைப் பேசுபவர்களின் வார்த்தைகளை ஜனங்கள் கேட்காமல் நிறுத்திவிடுவார்கள்.
32 நல்லவர்கள் சரியானவற்றைச் சொல்ல அறிந்துள்ளனர். ஆனால் கெட்டவர்களோ தொல்லை தருவதையே பேசுகின்றனர்.
பவுலின் பணி
3 நான் இயேசு கிறிஸ்துவின் கைதியாக இருக்கிறேன். யூதர் அல்லாத உங்களுக்காகவே நான் அவ்வாறு இருக்கிறேன். 2 தேவன் தம் இரக்கத்தாலேயே இந்த வேலையை எனக்குக் கொடுத்தார் என்பது உறுதியாக உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு உதவி செய்வதற்காகவே தேவன் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தார். 3 தேவன் தனது இரகசிய திட்டத்தை எனக்குத் தெரியும்படி செய்தார். அதை எனக்கு காட்டினார். நான் ஏற்கெனவே அதைப்பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன். 4 நான் எழுதினதையெல்லாம் நீங்கள் படிப்பீர்களேயானால் பின்னர் கிஸ்துவைப் பற்றிய இரகசிய உண்மையை நான் புரிந்திருக்கிறேன் என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். 5 முற்காலங்களில் வாழ்ந்த மக்களுக்கு இந்த இரகசியம் சொல்லப்படவில்லை. ஆனால் இப்போது ஆவியின் மூலம் தேவன் அந்த இரகசிய உண்மையை அவரது அப்போஸ்தலர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கு புலப்படுத்தினார். 6 இது தான் அந்த உண்மை. தேவன் தனது மக்களுக்குக் குறிப்பாக யூத மக்களுக்குக் கொடுத்த அத்தனையும் யூதர் அல்லாதவர்களுக்கும் கொடுப்பார். ஒரே குழுவில் யூதர்களோடு யூதர் அல்லாதவர்களும் சேர்ந்து இருப்பார்கள். தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் செய்த வாக்குறுதியில் அவர்கள் யாவரும் பங்கு பெறுவர். யூதர் அல்லாதவர்களும் நற்செய்தியினாலேயே இவற்றை அடைகிறார்கள்.
7 தேவனின் சிறப்புப் பரிசாகிய அவரது கிருபையால் நற்செய்தியைக் கூறுகிற தொண்டனானேன். தேவன் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்தி அந்தக் கிருபையை எனக்குத் தந்தார். 8 தேவனின் பிள்ளைகளில் நானே முக்கியத்துவம் மிககுறைந்தவன். ஆனால் யூதர் அல்லாதவராகிய உங்களுக்கு நான் கிறிஸ்துவின் உயர்வு பற்றிய நற்செய்தியைச் சொல்லும் வாய்ப்பு பெற்றேன். அவரது உயர்வு சொல்ல முடியாத அளவுக்கு மிகப் பெரியது. 9 தேவனைப் பற்றிய இரகசிய உண்மையை அனைத்து மக்களிடமும் சொல்கின்ற அரிய பணியை தேவன் எனக்குக் கொடுத்திருக்கிறார். தொடக்க காலத்திலிருந்தே இந்த இரகசிய உண்மை தேவனிடம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் படைத்தது தேவன் ஒருவரே, 10 பரலோகத்தில் உள்ள ஆளுகைகளும், அதிகாரங்களும் தேவனின் அளவற்ற பலவகை ஞானத்தையும் சபையின் மூலம் தெரியவரும்படிச் செய்வதே தேவனுடைய நோக்கமாகும். 11 தொடக்க காலத்திலிருந்தே இது தேவனின் திட்டம். தேவன் தன் திட்டப்படியே செய்து வருகிறார். 12 கிறிஸ்துவால் நாம் தைரியத்தோடும் முழு விசுவாசத்தோடும் தேவன் முன் வந்து சேரமுடியும். நாம் இவற்றை கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தால் செய்ய முடியும். 13 நான் உங்களுக்காக பட்ட துன்பங்களால் நீங்கள் நம்பிக்கையில் தளர வேண்டாம் என்றும் தைரியம் இழக்க வேண்டாம் என்றும், உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனது துயரங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரும்.
கிறிஸ்துவின் அன்பு
14 ஆகையால் நான் பிதாவாகிய தேவன் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறேன். 15 அவரிடத்தில் இருந்து பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாக் குடும்பங்களும் தம் உண்மையான பெயரைப் பெறும் 16 உங்கள் ஆவிக்குள் நீங்கள் வல்லமையுடைவர்களாக இருக்க விரும்புகிறேன். நான் பிதாவை அவரது உயர்ந்த மகிமையின் நிமித்தம் கேட்கிறேன். அவர் தமது ஆவியின் மூலமாக அந்த வல்லமையைத் தருவார். 17 கிறிஸ்து உங்கள் இதயத்தில் விசுவாசத்தின் மூலம் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் வாழ்க்கை அன்பால் கட்டப்படவும், அன்பில் வல்லமையாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். 18 நீங்களும் தேவனின் பரிசுத்தமான மக்களும் உயர்ந்த கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துக்கொள்ளும் சக்தியைப் பெறவேண்டும். 19 அவரது அன்பு எவ்வளவு அகலமானது, எவ்வளவு நீளமானது, எவ்வளவு உயரமானது, எவ்வளவு ஆழமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.
20 இவ்வாறு தேவனின் சகல முழுமையிலும் நீங்கள் நிறைக்கப்படுவீர்கள். நாம் கேட்பதைவிடவும், நினைப்பதைவிடவும் தேவன் நமக்கு மிகுதியாகச் செய்யத்தக்கவர். தேவனின் வல்லமை நமக்குள் உள்ளது. 21 சபையிலே இயேசு கிறிஸ்துவின் மூலமாக எப்போதும் தலைமுறை தலை முறைக்கும் எல்லாக் காலங்களிலும் தேவனுக்கு மகிமையுண்டாவதாக. ஆமென்.
2008 by World Bible Translation Center