M’Cheyne Bible Reading Plan
14 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “ஜனங்களிடம் ஈரோத்துக்கு திரும்பிப் போகும்படியாகக் கூறு. பாகால் செபோனுக்கு அருகேயுள்ள மிக்தோலுக்கும் செங்கடலுக்கும் மத்தியில் அவர்கள் இரவில் தங்கட்டும். 3 இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் காணாமற்போனார்கள் என்று பார்வோன் எண்ணுவான். ஜனங்களுக்குப் போகத்தக்க இடம் எதுவுமில்லை என்று அவன் நினைப்பான். 4 பார்வோனுக்குத் தைரியம் தந்து, அவன் உங்களைத் துரத்தும்படியாகச் செய்வேன். ஆனால் நான் பார்வோனையும் அவனது சேனையையும் தோற்கடிப்பேன். அது எனக்கு கனத்தைக் கொண்டுவரும். அப்போது எகிப்திய ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்” என்றார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர் கூறினபடியே அவர்கள் செய்தார்கள்.
பார்வோன் இஸ்ரவேலரைத் துரத்துதல்
5 இஸ்ரவேல் ஜனங்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி பார்வோனுக்குக் கிடைத்தது. இதைக் கேட்டபோது அவனும், அவனது அதிகாரிகளும் மனம்மாறி முன்பு செய்த தங்கள் செயல்களை மறு பரிசீலனை செய்தனர். பார்வோன், “இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்கு ஏன் அனுமதித்தோம்? அவர்கள் ஓடிப்போவதற்கு ஏன் வகை செய்தோம்? இப்போது நாம் நமது அடிமைகளை இழந்துபோனோம்!” என்றான்.
6 எனவே, பார்வோன் தனது ஆட்களோடு தேரையும் தயார்ப்படுத்தினான். 7 பார்வோன் அவனது சிறந்த 600 ஆட்களையும், அவனது இரதங்கள் அனைத்தையும் கூட்டிச் சென்றான். ஒவ்வொரு தேரிலும் ஒரு அதிகாரி இருந்தான். 8 வெற்றிக் களிப்போடு தங்கள் கைகளை உயர்த்தியவர்களாய் இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் எகிப்திய அரசனாகிய பார்வோன் தைரியம் கொள்ளும்படியாக கர்த்தர் செய்தார். பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களைத் துரத்தினான்.
9 எகிப்திய படையில் இரதங்களோடு கூடிய பல குதிரை வீரர்கள் இருந்தனர். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைப் பின் தொடர்ந்து அவர்கள் செங்கடலின் அருகேயுள்ள பாகால் செபோனுக்குக் கிழக்கேயிருக்கிற ஈரோத்தில் இருக்கும்போது நெருங்கி வந்தனர்.
10 பார்வோனும் அவனது படையினரும் தங்களை நோக்கி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டு மிகவும் பயந்தனர். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினர். 11 அவர்கள் மோசேயை நோக்கி, “நீர் ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? பாலைவனத்தில் சாகும்படியாக ஏன் எங்களை அழைத்துக் கொண்டு வந்தீர்? எகிப்தில் நிம்மதியாக மரித்திருப்போம். எகிப்தில் நிறைய கல்லறைகள் இருந்தன. 12 இவ்வாறு நடக்குமென நாங்கள் உங்களிடம் கூறினோம். எகிப்தில் இருந்தபோது நாங்கள், ‘எங்களைத் தொல்லைப்படுத்தாதீர்கள். நாங்கள் தங்கியிருந்து எகிப்தியருக்கு அடிமை வேலை செய்வோம்’ என்றோம். அங்கிருந்து வெளியேறி பாலைவனத்தில் இங்கு மடிவதைக் காட்டிலும் அங்கு தங்கி அடிமைகளாக இருப்பதே நலமாக இருந்திருக்கும்” என்றனர்.
13 ஆனால் மோசே, “பயப்படாதீர்கள்! ஓடிப் போகாதீர்கள்! சும்மா இருந்து, கர்த்தர் இன்றைக்கு உங்களை மீட்பதைப் பாருங்கள். இந்த எகிப்தியர்களை இனிமேல் பார்க்கமாட்டீர்கள்! 14 நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்” என்றான்.
15 கர்த்தர் மோசேயை நோக்கி, “ஏன் இன்னும் நீ என்னிடம் அழுகிறாய்? இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பயணத்தைத் தொடருமாறு கூறு. 16 செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் பிளக்கும். அப்போது ஜனங்கள் அதிலுள்ள உலர்ந்த தரை வழியே நடந்து செல்லலாம். 17 உங்களைத் துரத்தும்படியாக நானே எகிப்தியருக்குத் தைரியம் அளித்தேன். ஆனால் நானே பார்வோனையும், அவனது குதிரைகள் இரதங்களைக் காட்டிலும் வல்லமை பொருந்தியவர் என்று உணரச் செய்வேன். 18 அப்போது எகிப்தியர் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். பார்வோனையும் அவனது இரதம் குதிரை வீரர்களையும் நான் மேற்கொள்ளும்போது அவர்கள் என்னை மதிப்பார்கள்” என்றார்.
கர்த்தர் எகிப்திய சேனைகளை முறியடித்தல்
19 அப்போது கர்த்தருடைய தூதன் ஜனங்களுக்குப் பின்னாகப் போனான். (கர்த்தருடைய தூதன் எப்போதும் ஜனங்களுக்கு முன்னே, அவர்களை வழிநடத்தியபடியே சென்று கொண்டிருந்தான்). அந்த உயரமான மேகம் ஜனங்களுக்கு முன்னே செல்லாமல் அவர்களுக்கு பின்னே சென்றது. 20 இவ்வாறு அம்மேகம் எகிப்தியருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே சென்று நின்றது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வெளிச்சம் இருந்தது. ஆனால் எகிப்தியர்களையோ இருள் சூழ்ந்தது. எனவே அந்த இரவில் எகிப்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை நெருங்கிவர முடியவில்லை.
21 மோசே தனது கரங்களைச் செங்கடலுக்கு நேராக உயர்த்தினான். கர்த்தர் கிழக்கிலிருந்து ஒரு காற்று வீசும்படியாகச் செய்தார். இரவு முழுவதும் காற்று வீசிற்று, கடல் பிளந்தது. காற்று நிலத்தை உலரச் செய்தது. 22 இஸ்ரவேல் ஜனங்கள் உலர்ந்த தலையின் மேல் கடலினூடே போனார்கள். அவர்களுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தண்ணீர் சுவர்போல் உயர்ந்து நின்றது. 23 அப்போது பார்வோனின் குதிரை வீரர்கள் தங்கள் இரதங்களுடன் கடலினுள் இஸ்ரவேலரைப் பின்தொடர ஆரம்பித்தனர். 24 அதிகாலையில் கர்த்தர் உயர்ந்த மேகத்திலிருந்தும், நெருப்புத் தூணிலிருந்தும் எகிப்திய படையை நோக்கிப் பார்த்து அவர்களைத் தோற்கடித்தார். 25 இரதங்களின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன. இரதங்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. எகிப்தியர்கள், “இங்கிருந்து தப்பிப் போவோம்! இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் நம்மை எதிர்த்து போர் செய்கிறார்” என்றார்கள்.
26 அப்போது கர்த்தர் மோசேயிடம், “உன் கைகளைக் கடலுக்கு மேலாக உயர்த்து, தண்ணீர் புரண்டு எகிப்தியரின் இரதங்களையும் குதிரை வீரர்களையும் மூழ்கடிக்கும்” என்றார்.
27 எனவே விடிவதற்குச் சற்றுமுன் மோசே கடலுக்கு மேலாகத் தன் கரங்களை உயர்த்தினான். தண்ணீர் முன்புபோல் சமமாக வந்து நின்றது. எகிப்தியர்கள் தங்களால் முடிந்த அளவு தண்ணீரிலிருந்து தப்பி ஓட முயன்றார்கள். ஆனால் கர்த்தர் அவர்களைக் கடலில் மூழ்கடித்துவிட்டார். 28 தண்ணீர் முன்பு போல் சமமாக வந்ததால் இரதங்களையும், குதிரை வீரர்களையும் மூழ்கடித்து விட்டது. பார்வோனின் படையினர் இஸ்ரவேல் ஜனங்களைத் துரத்தினர், ஆனால் அப்படையோ அழிக்கப்பட்டது, ஒருவரும் பிழைக்கவில்லை!
29 இஸ்ரவேல் ஜனங்கள் உலர்ந்த தரையில் கடலைக் கடந்தனர். அவர்களது வலது, இடது புறங்களில் மாத்திரம் தண்ணீர் சுவரைப்போல நின்றது. 30 எனவே, அந்நாளில் எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் மீட்டார். செங் கடலின் கரையில் எகிப்தியரின் பிணங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டனர். 31 கர்த்தர் எகிப்தியர்களை வென்றபோது, இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் மிகுந்த வல்லமையைக் கண்டார்கள். எனவே ஜனங்கள் பயந்து கர்த்தரை மதித்தார்கள். அவர்கள் கர்த்தரையும் அவரது தாசனாகிய மோசேயையும் நம்ப ஆரம்பித்தனர்.
பாவமும் மன்னிப்பும்(A)
17 இயேசு தன் சீஷர்களை நோக்கி, “மக்கள் பாவம் செய்யும்படியான காரியங்கள் நிச்சயமாக நடக்கும். ஆனால் இது நடக்கும்படியாகச் செய்கிறவனுக்குத் தீமை விளையும் 2 பலவீனமான மனிதர்கள் பாவம் செய்யும்படியாகச் செய்கிற ஒருவனுக்குத் தீமை விளையும். அவன் கழுத்தில் அரைக்கிற கல்லைக் கட்டி அவனைக் கடலில் அமிழ்த்துவது அவனுக்கு நல்லதாக இருக்கும். 3 எனவே எச்சரிக்கையாக இருங்கள்!”
“உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள். 4 ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்தும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்” என்றார்.
விசுவாசத்தின் மேன்மை
5 சீஷர்கள் இயேசுவை நோக்கி, “இன்னும் மிகுந்த விசுவாசத்தை எங்களுக்கு வழங்குங்கள்” என்றார்கள்.
6 கர்த்தர், “உங்கள் விசுவாசம் ஒரு கடுகளவு பெரியதாக இருந்தால் இந்த முசுக்கட்டை மரத்தைப் பார்த்து, ‘நீ தானாகவே பெயர்ந்து கடலில் விழு’ என்று கூறினால் அந்த மரமானது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
நல்ல ஊழியர்கள்
7 “வயலில் வேலை செய்கிற ஊழியன் ஒருவன் உங்களில் ஒருவனுக்கு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் நிலத்தை உழுது கொண்டோ, ஆடுகளை மேய்த்துக்கொண்டோ இருக்கிறான். அவன் வயலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் அவனிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வந்து சாப்பிட உட்கார் என்பீர்களா? 8 இல்லை. நீங்கள் அந்த ஊழியனிடம், ‘நான் உண்பதற்கு ஏதேனும் தயார் செய். நான் சாப்பிட்டு முடிக்கும்வரை பரிமாறுவதற்கான ஆடைகளை அணிந்துகொள். பிறகு நீ சாப்பிடவும், பருகவும் செய்யலாம்’ என்பீர்கள். 9 தன் வேலையைச் செய்வதற்காக அவனுக்கு விசேஷமாக நன்றி செலுத்த வேண்டியது இல்லை. அவனது எஜமானன் சொல்வதை மட்டும் அவன் செய்துகொண்டிருக்கிறான். 10 அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் செய்யும்படியாக கூறப்பட்ட காரியங்களை நீங்கள் செய்யும்போது நீங்கள், ‘எந்த விசேஷ நன்றியறிதலுக்கும் நாங்கள் தகுதியுடையவர்கள் அல்ல. நாங்கள் செய்யவேண்டிய வேலையையே செய்து முடித்தோம்’ என்று சொல்ல வேண்டும்” என்றார்.
நன்றியுடனிருங்கள்
11 இயேசு எருசலேமுக்குப் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். கலிலேயாவைக் கடந்து அவர் சமாரியாவுக்குப் போனார். 12 அவர் ஒரு சிற்றூருக்கு வந்தார். பத்து மனிதர்கள் அவரை அங்கு சந்தித்தார்கள். அவர்கள் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களாதலால் அவர் அருகே வரவில்லை. 13 ஆனால் அம்மனிதர்கள் இயேசுவை நோக்கி, உரக்கக் கூவி, “இயேசுவே! குருவே! தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றார்கள்.
14 அம்மனிதர்களைப் பார்த்தபோது இயேசு, “போய் ஆசாரியர் முன்பு உங்களை நீங்களே காட்டுங்கள்” என்றார்.
அந்தப் பத்து மனிதர்களும் ஆசாரியரிடம் போய்கொண்டிருக்கையில் அவர்கள் குணமடைந்தார்கள். 15 அவர்களில் ஒருவன் தான் சுகம் பெற்றதைக் கண்டபோது இயேசுவிடம் திரும்பிச் சென்றான். அவன் உரத்த குரலில் தேவனுக்கு நன்றியைத் தெரிவித்தான். 16 அவன் இயேசுவின் பாதங்களில் விழுந்தான். அந்த மனிதன் இயேசுவுக்கு நன்றி கூறினான். (இந்த மனிதன் ஒரு சமாரியன். யூதன் அல்லன்) 17 இயேசு, “பத்து மனிதர்கள் நலமடைந்தனர். மற்ற ஒன்பது பேர் எங்கே? 18 தேவனுக்கு நன்றி சொல்லுவதற்குத் திரும்பி வந்தவன் இந்த சமாரியன் மட்டும் தானா?” என்று கேட்டார். 19 பின்பு இயேசு அவனை நோக்கி, “எழுந்திரு, நீ போகலாம். நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.
உங்களுக்குள் தேவராஜ்யம்(B)
20 பரிசேயர்களில் சிலர் இயேசுவை நோக்கி, “தேவனின் இராஜ்யம் எப்போது வரும்?” என்று கேட்டார்கள்.
இயேசு பதிலாக, “தேவனுடைய இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் கண்களால் பார்க்கும்படியான வகையில் அல்ல. 21 ‘பாருங்கள், தேவனுடைய இராஜ்யம் இங்கே இருக்கிறது’ அல்லது ‘அங்கே இருக்கிறது’ என்று மக்கள் சொல்லமாட்டார்கள். இல்லை, தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது” என்றார்.
22 பின்பு இயேசு அவரது சீஷர்களை நோக்கி, “மனித குமாரனின் நாட்களில் ஒன்றை நீங்கள் காண விரும்பும் காலம் வரும். ஆனால் உங்களால் அதைப் பார்க்க இயலாது. 23 மக்கள் உங்களிடம், ‘பாருங்கள், அது அங்கே இருக்கிறது’ அல்லது ‘பாருங்கள், இங்கே அது இருக்கிறது’ என்பார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் நிலைத்திருங்கள். எங்கேயும் தேடாதீர்கள்” என்றார். 24 “மனித குமாரன் திரும்ப வருவார், என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வரும் நாளில் வானில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு ஒளிவிடும் மின்னலைப்போல அவர் ஒளிவீசுவார். 25 ஆனால் முதலில் மனித குமாரன் பல துன்பங்களைத் தாங்கி இந்தக் காலத்து மக்களால் தள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது.
26 “நோவா வாழ்ந்த காலத்தைப்போலவே மீண்டும் மனித குமாரன் வரும் பொழுதும் நடக்கும். 27 நோவாவின் காலத்தில் நோவா படகில் நுழைந்த தினத்தில் கூட மக்கள் உண்டு, பருகி, மணம் செய்து வாழ்ந்தார்கள். அப்பொழுது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எல்லா மக்களையும் கொன்றது.
28 “தேவன், லோத்தின் காலத்தில் சோதோமை அழித்ததைப் போலவே அதுவும் இருக்கும். அந்த மக்கள் உண்டு பருகி, வாங்கி, விற்று, நட்டு, தங்களுக்காக வீடுகளைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். 29 லோத்து தனது ஊரை விட்டுப்போன நாளில் கூட மக்கள் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருந்தார்கள். வானத்தில் இருந்து அக்கினி வந்து அவர்கள் எல்லாரையும் கொன்றது. 30 மனித குமாரன் மீண்டும் வரும்போதும் இதே விதமாக நடக்கும்.
31 “அந்த நாளில் ஒரு மனிதன் கூரையின் மீது இருந்தால், அவன் உள்ளேபோய் தனது பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு அவனுக்கு நேரம் இருக்காது. ஒரு மனிதன் வயலில் இருந்தால், அவன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. 32 லோத்தின் மனைவிக்கு [a] என்ன நேரிட்டது என்பதை நினைவுகூருங்கள்!
33 “தன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள முயலும் ஒருவன் அதை இழந்து போவான். ஆனால் உயிரைக் கொடுக்கிறவனோ அதை மீட்டுக்கொள்வான். 34 இரவில் ஒரே அறையில் இரண்டுபேர் உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான். மற்றவன் விட்டுவிடப்படுவான். 35 இரு பெண்கள் ஒருமித்து தானியங்களை அரைத்துக்கொண்டிருக்கக் கூடும். ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள். மற்றொருத்தி விட்டு விடப்படுவாள்” என்றார். 36 [b]
37 சீஷர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, இது எங்கே நடக்கும்?” என்று கேட்டார்கள். பதிலாக இயேசு, “வட்டமிடுகிற கழுகுகளைப் பார்ப்பதின் மூலம் இறந்த சடலத்தை மக்கள் எப்போதும் கண்டுபிடிக்க முடியும்” என்றார்.
எலிகூ விவாதத்தில் பங்குக்கொள்கிறான்
32 அப்போது யோபுவின் நண்பர்கள் மூவரும் யோபுவுக்குப் பதில் கூற முயல்வதை விட்டுவிட்டார்கள். தான் உண்மையாகவே களங்கமற்றவன் என யோபு உறுதியாக இருந்ததால், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டார்கள். 2 ஆனால், அங்கு எலிகூ என்னும் பெயருள்ள ஒரு இளைஞன் இருந்தான். அவன் பரகெயேலின் மகன். அவன் பூசு என்னும் பெயருள்ள ஒரு மனிதனின் சந்ததியில் வந்தவன். எலிகூ ராம் குடும்பத்தினன். எலிகூ யோபுவிடம் மிகுந்தக் கோபமடைந்தான். ஏனெனில், யோபு தானே சரியாக நடந்துக் கொண்டான் எனச் சொல்லிக் கொண்டிருந்தான். தேவனைக் காட்டிலும் தானே நியாயமானவன் என்று யோபு சொல்லிக் கொண்டிருந்தான். 3 யோபுவின் நண்பர்கள் மூவரிடமும் எலிகூ கோபங்கொண்டான். ஏனெனில், யோபுவின் கேள்விகளுக்கு அம்மூவரும் பதில் கூற முடியவில்லை. யோபு தவறு செய்தானென அவர்களால் நிறுவமுடியவில்லை. 4 எலிகூ அங்கிருந்தவர்களில் வயதில் இளையவனாயிருந்தான். அதனால், பிறர் ஒவ்வொருவரும் பேசி முடிக்கும்வரை காத்திருந்தான். அப்போது அவன் பேசத் தொடங்கலாம் என உணர்ந்தான். 5 யோபுவின் மூன்று நண்பர்களும் சொல்வதற்கு இனி ஏதும் இல்லை என அப்போது எலிகூ கண்டான். அதனால் அவன் கோபமடைந்தான். 6 எனவே, அவன் பேசத்தொடங்கினான். அவன்:
“நான் இளைஞன், நீங்கள் முதியவர்கள்.
ஆகவேதான் நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்ல அஞ்சினேன்.
7 நான் எனக்குள், ‘முதியோர் முதலில் பேச வேண்டும்.
முதியோர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
எனவே அவர்கள் பல காரியங்களைக் கற்றிருக்கிறார்கள்’ என்று சிந்தித்தேன்.
8 ஆனால் தேவனுடைய ஆவி ஒருவனை ஞான முள்ளவனாக்குகிறது.
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மூச்சு ஜனங்களைப் புரிய வைக்கிறது.
9 முதியோர் மட்டுமே ஞானவான்கள் அல்லர்.
சரியானதைப் புரிந்துகொள்வோர் முதியோர் மட்டுமல்லர்.
10 “எனவே தயவுசெய்து எனக்குச் செவி கொடுங்கள்!
நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்வேன்.
11 நீங்கள் பேசும்போது நான் பொறுமையாகக் காத்திருந்தேன்.
யோபுவுக்கு நீங்கள் கூறிய பதில்களைக் கேட்டேன்.
12 நீங்கள் கூறியவற்றை நான் கவனமாகக் கேட்டேன்.
உங்களில் ஒருவரும் யோபுவை குற்றம் கூறவில்லை.
அவனுடைய விவாதத்திற்கு உங்களில் ஒருவரும் பதில் கூறவில்லை.
13 நீங்கள் மூவரும் ஞானத்தைத் கண்டடைந்ததாகக் கூறமுடியாது.
மனிதரல்ல, தேவன் யோபுவின் விவாதங்களுக்குப் பதில் கூறவேண்டும்.
14 யோபு அவனது விவாதங்களை என்னிடம் முன் வைக்கவில்லை.
எனவே நீங்கள் மூவரும் பயன்படுத்திய விவாதங்களை நான் பயன்படுத்தமாட்டேன்.
15 “யோபுவே, இம்மனிதர்கள் தங்கள் விவாதத்தில் தோற்றார்கள்.
அவர்கள் மேலும் கூற எதுவுமில்லை.
அவர்களிடம் வேறு பதில்கள் இல்லை.
16 யோபுவே, இம்மனிதர்கள் உமக்குப் பதில் கூறும்படி நான் காத்திருந்தேன்.
ஆனால் இப்போது அவர்கள் அமைதியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உம்மோடு விவாதிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள்.
17 எனவே இப்போது என் பதிலை நான் உமக்குச் சொல்வேன்.
ஆம், நான் நினைப்பதை உமக்குக் கூறுவேன்.
18 நான் சொல்வதற்கு நிரம்ப இருக்கிறது.
நான் அவற்றைக் கொட்டிவிடப் போகிறேன்.
19 திறக்கப்படாத புது திராட்சைரசம் நிரம்பிய புட்டியைப் போலிருக்கிறேன்.
உடைத்துத் திறப்பதற்கு தயாராயிருக்கிற புது திராட்சைரசம் உடைய தோல்பையை போலிருக்கிறேன்.
20 எனவே நான் பேசவேண்டும், அப்போது நான் நலமடைவேன்.
நான் பேசவேண்டும், நான் யோபுவின் விவாதத்திற்குப் பதில் கூறவேண்டும்.
21 பிறரை நடத்துவதைப்போல், நான் யோபுவையும் நடத்தவேண்டும்.
அவனிடம் நல்லவற்றைச் சொல்ல நான் முயலமாட்டேன்.
நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன்.
22 நான் ஒருவனை மற்றொருவனைக் காட்டிலும் சிறப்பாக நடத்தமுடியாது.
நான் அவ்வாறு செய்தால், அப்போது தேவன் என்னைத் தண்டிப்பார்!
2 எனது அடுத்த சந்திப்பு உங்களைத் துயரப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். 2 நான் உங்களைத் துயரப்படுத்தினால், பின்னர் யார் என்னை மகிழ்ச்சிப்படுத்துவர்? நான் துயரப்படுத்திய நீங்கள்தானே என்னை மகிழ்ச்சிப்படுத்த முடியும்? 3 இந்தக் காரணத்துக்காகத்தான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன். அதனால் உங்களை சந்திக்கும்போது, என்னை மகிழ்ச்சிப்படுத்தப்போகும் உங்களைத் துயரப்படுத்தமாட்டேன். எனது மகிழ்ச்சியை நீங்கள் அனைவரும் பகிர்ந்துகொள்வீர்கள் என்று உறுதியாக எண்ணுகிறேன். 4 நான் இதற்கு முன்பு உங்களுக்கு எழுதும்போது மனதில் தொல்லைகளையும், துயரங்களையும் கொண்டிருந்தேன். நான் என் கண்ணீராலேயே எழுதினேன். உங்களைத் துயரப்படுத்த வேண்டுமென்று அதை எழுதவில்லை. உங்கள் மீதுள்ள என் அளவற்ற அன்பை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவ்வாறு எழுதினேன்.
தவறு செய்தவனை மன்னியுங்கள்
5 உங்கள் கூட்டத்திலுள்ள ஒருவனே துயரத்துக்குக் காரணமாக இருந்தான். எனக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவரின் துயரத்துக்கும் அவனே காரணமாக இருந்தான். அதாவது, ஏதாவது ஒரு வழியில் (நான் மிகைப்படுத்த விரும்பவில்லை) எல்லாருக்கும் துயரமுண்டாக அவன் காரணமாக இருந்தான். 6 உங்களில் பலர் அவனுக்குத் தந்த தண்டனையே போதுமானது. 7 ஆனால் இப்பொழுது அவனை மன்னித்து ஆதரவு அளிக்க வேண்டும். அது அவனை அதிக துயரத்தில் ஆழ்ந்து போகாதபடி காக்கும். 8 நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதனால்தான் நான் உங்களுக்கு எழுதினேன். 9 நீங்கள் எல்லாவற்றிலும் பணிவுடன் இருக்கிறீர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன். 10 நீங்கள் யாரையாவது மன்னித்தால் அவர்களை நானும் மன்னித்துவிடுகிறேன். நான் மன்னிப்பவை அனைத்தும் (மன்னிக்கப்பட ஏதேனும் இருக்கும் பட்சத்தில்) உங்கள் பொருட்டே ஆகும். கிறிஸ்து எங்களோடு இருக்கிறார். 11 சாத்தான் என்னிடமிருந்த எதையும் வெல்ல முடியாதவகையில் இதைச் செய்தேன். சாத்தானின் சதிதிட்டங்களையும் நாம் நன்றாக அறிவோம்.
துரோவாவில் பவுலின் பணி
12 கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதற்காக நான் துரோவாவிற்குப் போனேன். கர்த்தர் அங்கு எனக்கு நல்ல வாய்ப்பினைத் தந்தார். 13 அங்கே எனது சகோதரன் தீத்துவைப் பார்க்காததால் நான் அமைதியற்று இருந்தேன். எனவே நான் அங்குள்ளவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கதோனியாவிற்குப் போனேன்.
14 தேவனுக்கு நன்றி. தேவன் எப்பொழுதும் எங்களைக் கிறிஸ்துவின் மூலம் வெற்றி பெறும்படி வழி நடத்துகிறார். இனிய மணமுள்ள வாசனைப் பொருளைப் போன்று எல்லா இடங்களிலும் தேவன் தனது அறிவைப் பரப்ப நம்மைப் பயன்படுத்துகிறார். 15 இரட்சிக்கப்படுகிறவர்களுக்கிடையிலும் கெட்டுப்போவோரிடையேயும் நாங்கள் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம். இதுவே நாங்கள் தேவனுக்குத் தரும் காணிக்கை. 16 கெட்டுப்போவோரிடையே இறப்புக்கு ஏதுவான மரணத்தின் வாசனையாக இருக்கிறோம். இட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே வாழ்க்கைக்கு ஏதுவான ஜீவ வாசனையாக இருக்கிறோம். இவைகளை செயல்படுத்தத் தகுதியானவன் யார்? 17 மற்றவர்களைப் போன்று, நாங்கள் தேவனுடைய வார்த்தையை இலாபத்துக்காக விற்பதில்லை. ஆனால் தேவனுக்கு முன்னால் கிறிஸ்துவுக்குள் உண்மையையே பேசுகிறோம். தேவனால் அனுப்பப்பட்டவர்களைப் போல் நாங்கள் பேசுகிறோம்.
2008 by World Bible Translation Center